மன்னர்குடியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்து தனக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையில் தியாகராய நகரில் உள்ள கே.பி.ஜீவல்லரியில் 13,600 ரூபாய்க்கு அதிர்ஷ்டக் கல் பொருத்திய ஒரு தங்க மோதிரம் வாங்கினார்.
ஆசை ஆசையாய் வாங்கி விலை உயர்ந்த கற்கள் பற்றி முழுமையாக அறிந்த வேறு சிலரிடம் அதிர்ஷ்டக் கல்லின் தரத்தைப் பரிசோதித்தார். அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அதிர்ச்சிதான் கிடைத்தது. ஆம்! அந்தக் கல் 300 ரூபாய் மதிப்புகூட இல்லாத சாதாரண கல். இதுபற்றி உடனே கே.பி.ஜீவல்லரியில் விபரம் கேட்டார். அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வெளியே துரத்தி விட்டனர்.
அவர் வேறு வழியின்றி உடனே ஒரு சட்டப்பூர்வமான புகார் கடிதத்தை அனுப்பினார். இதற்கு நிறைய சமாதானங்-களைச் சொல்லி ஒரு பதில் கடிதத்தை அந்த நகைக்கடை அனுப்பியது.
பலமுறை முயற்சித்தும் பலன் இல்லாமல் போகவே தனக்கு ஏற்பட்ட பண நஷ்டம், வீண் அலைச்சல், அவமானம் இவைகளின் அடிப்படையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடாக 1 இலட்சம் ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு கே.பி.ஜீவல்லரியின் வாதம்
வழக்குப் பதிவு செய்துள்ள குணசேகரன் தங்கள் கடைக்கு வந்து அதிர்ஷ்டக் கல் பதிந்த தங்க மோதிரத்தை எல்லா வகையிலும் பரிசோதித்து விட்டு திருப்தி அடைந்த பிறகே வாங்கி உள்ளார். அவர் முழுத் திருப்தியுடன் வாங்கியதாக தங்களின் நிறுவனத்தின் (சிணீsலீ ஙிவீறீறீ) எல்லாவித நிபந்தனைகளுக்கும் ஒத்துக் கொண்டு கையெழுத்திட்டுள்ளார்.
25.7.2005 அன்று வாங்கிய புகார்தாரர் 3 மாதம் அதை உபயோகப்படுத்திவிட்டு 25.10.2005 அன்று மோதிரத்தை திருப்பிக் கொடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. மேலும் தாங்கள் விற்ற ராசிக்கல் நல்ல தரமானதுதான்
என்று வாதாடினார்.
இரு தரப்பினர் வாதங்களையும் கேட்ட நீதிஅரசர் ஒரு அற்புதமான தீர்ப்பை அளித்திட்டார்.
அதாவது கே.பி.ஜீவல்லரி புகார்தாரர் முத்துகிருஷ்ணன் தங்களிடம் அதிர்ஷ்டக் கல் மோதிரம் வாங்கியதற்கு ஆதாரமாக தங்களின் கணக்குப் புத்தக ரசீதை சமர்பித்து இருக்கிறார்கள். 3 மாத கால தாமதத்திற்குப் பிறகே அதிர்ஷ்டக் கல் மோதிரம் பற்றிய புகார் மனு கொடுத்துள்ளார் என்பதையும், ஆதாரப்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சட்டப்படி கொடுக்க வேண்டிய முக்கியமான ஆதாரத்தைத் தரவில்லை. ஆம், அவர்கள் விற்ற அதிர்ஷ்டக் கல் தரமானதுதான் என்பதைப் பற்றி ஒரு சிறிய ஆதாரத்தைக்கூட சமர்ப்பிக்கவில்லை.
எனவே, மனுதாரரின் நியாயமான கோரிக்கையை ஏற்றுமன உளைச்சல், தேவை-யில்லாத அலைச்சல் கொடுத்த கே.பி.ஜீவல்லரி 10,000 ரூபாயை முத்துகிருஷ்ணனுக்கு நஷ்டஈடாக கொடுத்திட வேண்டும். மேலும் வழக்கு சம்பந்தமான செலவுக்கு 5000 ரூபாய் தொகையை மனுதாரருக்கு கொடுத்திட வேண்டும் என அதிரடியான, அற்புதமான தீர்ப்பை நுகர்வோர் நீதிமன்றம் அளித்தது.
இது நிச்சயம் பாதிக்கப்பட்ட திரு.முத்துக்கிருஷ்ணனுக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல. நம் எல்லோருக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. பொதுமக்களின் துயரங்களைப் பயன்படுத்தி அநியாயமாக ஏமாற்றி ஏப்பம் விடும் சதிகாரர்களுக்கு சரியான சம்மட்டியடி இத்தீர்ப்பு.