செய்யக்கூடாதவை

ஏப்ரல் 16-30

சிக்கலைப் பகுக்காமல் தீர்க்க முயலக் கூடாது

சிக்கல் வரும்போது, ஒட்டுமொத்தச் சிக்கலையும் எண்ணி மலைக்கவோ, மருளவோ, தயங்கவோ கூடாது. சிக்கலைப் பகுதிகளாகப் பிரித்துப் பகுத்து, காரணமறிந்து, ஒவ்வொன்றாகத் தீர்வு கண்டால் ஒட்டுமொத்த சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும்.

சிக்கலுக்கான காரணம் கண்டறியப்பட்டு அதன் வழி தீர்வுக்கு வரவேண்டும். நூற்கண்டு சிக்கலாகிவிட்டால் ஒட்டுமொத்தமாகப் பிடித்து இழுத்தால் இன்னும் சிக்கலாகி விடும். நூலின் தலைப்பைக் கண்டறிந்து அதன் வழி சிக்கலைத் தீர்த்தால் சிக்கல் தீர்ந்துவிடும்.

கொழுக்கட்டையை அப்படியே விழுங்க முயற்சிப்பதும், சிக்கலை ஒட்டுமொத்தமாக அணுகுவதும் ஒன்றே. பிட்டு கொஞ்சம் கொஞ்சமாக உண்பதுபோல, சிக்கல் பகுதியை பகுதி பகுதியாகத் தீர்க்க வேண்டும்.
ஊனத்திற்காக உளம் தளரக் கூடாது

கால் இல்லையே, கண்ணில்லையே, கருப்பாக இருக்கிறோமே, குள்ளமாக இருப்பது பிடிக்கவில்லை என்று தாழ்வு கொள்வதும், வேதனை கொள்வதும் சரியல்ல. இயற்கையில் நிகழ்ந்துவிட்டது, பிறந்து விட்டோம், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே மனிதராகப் பிறந்த நமக்கு அழகு.

உலகே குறையுள்ளதுதானே. நிலவு எல்லா நாளிலும் முழுமையாகத் தெரிவதில்லை. தண்ணீர் எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை. நிலத்திலே களர் நிலம், சதுப்பு நிலம் உண்டு; வளமானது, வறண்டது உண்டு. அவற்றை-யெல்லாம் வைத்துக்கொண்டுதானே வாழ்கிறோம், வளர்கிறோம். இரண்டு கையும் இன்றிக் காலுமின்றி பிறந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் வுஜிசிக் (ழிவீநீளீ க்ஷிuழீவீநீவீநீ) என்பவர் உலகின் தலைசிறந்த நம்பிக்கையூட்டும் பேச்சாளர். சாதித்துக் காட்டுகிறார். உள்ளத்தில் ஊனம் இல்லையென்றால் எதையும் சாதிக்கலாம்.

இயற்கைக் குறையைக் கேலி செய்யக் கூடாது

நொண்டி, குருடு, ஊமை, மாறுகண், திருகுகால், குள்ளம், வத்தல், குண்டு, வழுக்கை என்று இயற்கைக் குறைகளை ஏளனம் செய்வது சரியல்ல. இயற்கையாய் வருவதற்கு அவர்கள் எப்படி பொறுப்பாவர்? அப்படிப்பட்டவர்களை நம்முடைய கேலிகள் மேலும் வேதனைப்-படுத்தும்.

எல்லாம் சரியாக இருந்தும் ஏமாற்றிப் பிழைப்பவனையும், திருடுகின்றவனையும், கொலை செய்கின்றவனையும், மோசடிப் பேர்வழி-களையும் இழிவாக எண்ணுவதற்கு மாறாய், அவனிடம் பயந்து மரியாதை செலுத்திவிட்டு, அப்பாவிகளான இவர்களை ஏளனம் செய்தல் மனிதர்க்கு அழகாகுமா? அவர்களுக்கு முடிந்த உதவியை வழங்குவதே மனிதர்க்கு அழகு!

கொள்கை, சட்டம் என்று மனித எதிர்ச்செயல் கூடாது

நாட்டின் கொள்கை, சட்டம், விதியென்று மனித எதிர்ச்செயல்களை நியாயப்படுத்தக் கூடாது. சட்டமும், கொள்கையும் மனிதனுக்காக வேயன்றி மனிதன் அவற்றிற்காக அல்ல. இதை அடிப்படையாகக் கொண்டே சட்டமும் கொள்கையும் பின்பற்றப்பட வேண்டும்.

பொருந்தாச் சட்டமும், கொள்கையும் புறக்கணிக்கப்பட வேண்டும்.

5 வயதில் போட்ட செருப்பை 20 வயதில் நுழைக்கக் கூடாது. வளர்ச்சிக்கு ஏற்ற மாற்றம் வேண்டும். சட்டமும் கொள்கையும் சட்டையும், செருப்பும் போன்றது. வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அவை மனிதர்க்கு எதிராய் இருத்தல் கூடாது. தப்புக்கு எதிராய், சரிக்குத் துணையாக இருக்க வேண்டும்.

வழக்கங்களைச் சூழலுக்கு, வசதிக்கேற்ப மாற்றத் தயங்கக் கூடாது

ஓர் ஊரில் வயலுக்கு நடுவில் சேற்றில் பிணத்தைத் தூக்கிக் கொண்டு சென்றார்கள். அருகில் நல்ல பாதையுள்ளதே, அப்படியே செல்லலாமே என்றால், வழக்கமாக இப்படித்-தான் செல்வார்கள். அ¬யெப்படி மாற்றுவது என்கிறார்கள். வழக்கத்திற்காகச் சேற்றிலா செல்வது? அன்றைக்குப் பாதையில்லை. இன்றைக்கு பாதை உள்ளது. மாற்றிக் கொள்வதுதானே அறிவுடமை!

வந்த விருந்தினரை வாய்க்காலுக்கு இப்புறமிருந்து அனுப்பிவிட்டு வந்தனர். ஏன் அந்தப் பக்கம் சென்று பேருந்தில் ஏற்றிவிட்டு விடைபெறலாமே என்றால், வாய்க்காலுக்கு இப்புறம் இருந்து வழியனுப்புவதே வழக்கம் என்றனர். பாலம் இல்லாதபோது, இக்கரையில் இருந்து வழியனுப்பினர் என்பதற்காகப் பாலம் கட்டிய பின்பும் அப்படியே செய்வது அறிவிற்கு அழகா? 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *