மகளிர் பாலிடெக்னிக் தொடங்கியது ஒரு முக்கிய வரலாற்றூச் சாதனை!
15.08.1980 அன்று தஞ்சையில் “பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்” துவக்க விழா தஞ்சை கா.மா.குப்புசாமி, தனி அதிகாரி திருமதி சுலோசனா, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சிவஞானம், துரை-சுந்தரேசர் அய்.ஏ.எஸ்., மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சிவஞானம், அறக்கட்டளைத் தலைவர் கி.வீரமணி ஆகியோர்.
03.08.1980 அன்று சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்பொழுது, இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்வதற்கான முக்கியமான நோக்கத்தையும் நெல்லையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்த பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடு குறித்தும் தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள்பற்றியுமெல்லாம் பேசினேன்.
பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டினைத் தொடர்ந்து “பார்ப்பன ஆதிக்கக் கொடுமைகள் பாரீர்’’ என்ற தலைப்பில் ‘சர்ச்லைட்’ என்ற பெயரில் தொடர்ந்து கருத்துகளை ‘விடுதலை’யில் வெளியிட்டு வந்தேன்.
அதில், இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பார்ப்பன ஆதிக்கத்தை, சில புள்ளி விவரங்களுடன், 05.08.1980 அன்று ‘விடுதலை’யில் எடுத்துக்காட்டியிருந்தேன்.
இராயப்பேட்டை மருத்துவமனைக்கான “மரப்பொருள் கிடங்கு பாதுகாப்பாளர்’’ (Furniture stoe-keeper) பதவியொன்றுக்கு தனக்கு விருப்பமான பார்ப்பனரை அமர்த்துவதில் கண்காணிப்பாளர் காட்டிய சலுகையும் ஆர்வமும் அற்புதமானது. தற்போது அப்பதவியிலிருக்கும் பார்ப்பனருக்கு முன்பாக அப்பதவியிலிருந்த பார்ப்பனரல்லாதவரை திடீரென அப்பதவியிலிருந்து நீக்கிய இவர், அப்பதவிக்கு திரு.கே.எஸ்.ரவிச்சந்திரன் என்ற பார்ப்பனப் பையனை நியமித்தார். இந்த பார்ப்பனப் பையன் நியமிக்கப்பட்ட இப்பதவி மிகவும் அனுபவசாலிகளாக, அதாவது குறைந்தது அய்ந்து (அ) ஆறு வருடம் பணிபுரிந்த அனுபவசாலிகளால் நிர்வகிக்கப்பட வேண்டியப் பதவியாகும். இது குறித்து, இதே கண்காணிப்பாளரின் காலத்தில் இப்பதவிக்கு யிuஸீவீஷீக்ஷீ கிsstக்கு பதிலாக கிssவீstணீஸீt என்ற உயர் பதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, அது குறித்த கடிதப் போக்குவரத்து இன்னும் நடந்து வருகின்றது.
பார்ப்பன முறைகேடு
இதன் சாராம்சம் என்னவெனில் இப்பதவியானது “Assistant” ” என்ற நிலைக்கு உயரத்தக்க, குறைந்தது 12 முதல் 15 வருடங்கள் பணிக்கால அனுபவம் உடையவர்களாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால், பார்ப்பனருக்கு பதவி தர வேண்டுமென்ற ஆர்வத்தில் இந்தக் கண்காணிப்பாளர், திரு.ரவிச்சந்திரன் என்ற பார்ப்பனப் பையன் முழுவதுமாக 2 ஆண்டு பணி அனுபவம்கூட இல்லாதிருந்தபோதேஅவரை அப்பதவிக்கு நியமித்தார். அந்த நியமனத்தின்போது அப்பார்ப்பனப் பையன் தேவையான Departmental testகள்கூட எழுதியிருக்கவில்லை. மேலும், மேற்படி நியமன நேரத்தில் இராயப்பேட்டை மருத்துவமனையிலேயே தேர்வுகள் எழுதி முடித்து அய்ந்து வருடம், பத்து வருடம் பணி அனுபவமிக்க நபர்கள் இருந்தும்கூட அவர்கள் அப்பதவிக்கு நியமிக்கப்படவில்லை.
பெரியார் மகளிர் பாலிடெக்னிக்
பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் (தஞ்சாவூர்) துவக்க விழா 15.08.1980 காலை 10.30 மணி அளவில் தஞ்சை மேலவீதி பாலிடெக்னிக் கட்டிடத்தில் சிறப்பாக நடந்தது.
விழாவிற்கு தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.துரை சுந்தரேசன் அய்.ஏ.எஸ். மாவட்ட வருவாய் அலுவலர் சிவஞானம், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், கழக அமைப்புச் செயலாளர் கோ.சாமிதுரை எம்.ஏ., பி.எல், மற்றும் மகளிர் கல்லூரி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன கல்வி நிறுவனர் தாளாளர் புலவர் கோ.இமயவரம்பன், முதல்வர், பேராசிரியர்கள், தஞ்சை நகர பத்திரிகையாளர்களும், நகர திராவிடர் கழக தலைவர், செயலாளர், மற்றும் நகர கழகப் பிரமுகர்களும் அதிகாரிகளும் வந்திருந்தார்கள்.
மணமகளின் தந்தை மா.கந்தசாமி, பேராசிரியர் இறையனார், பொருளாளர் கா.ம.குப்புசாமி, திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி, மணமக்கள் மா.அருள்ஜோதி – க.கலைச் செல்வி, மணமகளின் சகோதரர் கவிஞர் கலி.பூங்குன்றன். (01.09.1980)
வந்திருந்தோர் அனைவரையும் கழகப் பொதுச்செயலாளரும், கழகப் பொருளாளரும் வரவேற்றார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கட்டிட நுழைவாயில் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் , அன்னை மணியம்மையார் படத்திற்கு சந்தன மாலையை அணிவித்தார்கள்.
“தந்தை பெரியார், ஒரு வீட்டிலே இரண்டு குழந்தைகள்; ஒரு ஆண், ஒரு பெண் இருந்தால் அதிலே ஆண் பிள்ளை படிக்காவிட்டாலும் பரவாயில்லை. பெண்களை அவசியம் படிக்க வைத்தே ஆக வேண்டும் என்று சொல்லுவார்கள்.
காரணம், ஒரு பெண் படிப்பது என்பது அறியாமையிலிருந்து விடுபடுவது என்பது ஒரு தலைமுறை விடுதலை பெறுவதற்குச் சமம் என்பார்கள்.
இந்த விழாவிலே மிக முக்கியமாக நாங்கள் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். மேலும், கல்வியமைச்சர் அவர்களுக்கும், கல்வி இலாகா அதிகாரிகளுக்கும் எங்கள் நன்றி’’ என்று கூறி, பாலிடெக்னிக் உருவாக்கப்பட உறுதுணையாய் நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். கழக வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் இக்கல்லூரி தொடங்கப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வும் பதிவுமாகும்.
18.08.1980 அன்று மறைந்த சுயமரியாதை வீரர் கே.எம்.ராஜகோபால் அவர்கள் பற்றி இரங்கல் வெளியிட்டிருந்தேன். “மலை குலைந்தாலும் மனங்குலையாத மாவீரர், சுயமரியாதைச் சுடரொளி, தந்தை பெரியார் தம் பகுத்தறிவுக் கொள்கைகளையும், அண்ணாவின் அரசின் திட்டங்களையும் ஏற்றுச் செயல்பட்ட, பண்பட்ட லட்சியச் சுடர் அருமை நண்பர் அவர்கள் மறைவு சுயமரியாதை குடும்பங்கட்கும் மிகப் பெரிய அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.
சட்டமன்ற உறுப்பினராக இருமுறை இருந்த காலத்திலும் சரி, இன்னும் பல பதவிகளை பெற்றிருந்தும்; அவர் கொஞ்சமும் கொள்கைகளை விட்டுக்கொடுக்காத மாவீரராகவே காட்சியளித்தார்.
கடவுள், புராணம், இதிகாச ஆபாசங்களை விளக்க ஆரம்பித்துவிட்டால் சுழன்றடிக்கும் சூறாவளியாக நண்பர் கே.எம்.ஆர். அவர்கள் மாறிவிடுவார். இதோ ஒரு கருப்புச் சட்டை எம்.எல்.ஏ. என்றுதான் கருதுவர். நெஞ்சுரத்துடன் இறுதி மூச்சுள்ளவரை எழுச்சியுள்ளம் கொண்ட சுயமரியாதைக் காரனாகவே வாழ்ந்து வரலாறு படைத்தார்கள்.
இப்படிப்பட்ட கொள்கை மாவீரர்கள் என்றும் சாவதில்லை. ‘சாகாத வரம்’ பெற்ற சரித்திர நாயகர்களின் பட்டியலில் இடம் பெற்று வருகின்றனர். சுற்றுப் பயணத்தில் இருந்த காரணத்தால் அன்று அவரது உடல் அடக்கத்தின்போது கலந்துகொள்ள இயலாத நிலை எனினும், அவரது நினைவு நாளில் சென்று கலந்துகொள்ளவிருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தேன்.
திராவிடர் கழகத்தின் சார்பில் தில்லை இருபெரும் மாநாடுகள் நடைபெற இருந்த நிலையில், அதனைக் குறித்து, 18.08.1980 அன்று, “தில்லை மாநாடுகள்! திருப்புமுனை களங்கள்!’’ என்று தலைப்பிட்டு முக்கிய அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். அதில், தில்லையில் முதல் நாள் பெண்கள் விடுதலை மாநாடு வகுப்புரிமை மாநாடு நடைபெறவிருப்பது பற்றியும் கூறியிருந்தேன்.
இரண்டாவது நாள் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடு நடத்தவிருப்பதுபற்றியும் தில்லையில் நடைபெற இருக்கும் அம்மாநாடு குறித்து பார்ப்பனர்கள் இப்போதே வானத்துக்கும் பூமிக்குமாகத் துள்ளிக்குதிக்க ஆரம்பித்துவிட்டனர்.
“இப்போது எங்கே பார்ப்பன ஆதிக்கம் இருக்கிறது?’ என்று கேட்கிறார்கள்.
பார்ப்பன ஆதிக்கம் இல்லாத நிலையில் திராவிடர் கழகம் மாநாடு நடத்துவதை இவர்கள் ஏன் பொருட்படுத்த வேண்டும்? தேவையில்லையே! இல்லாத ஒன்று என்று அலட்சியப்படுத்தி விடலாமே’’ என்று குத்திக்காட்டி எழுதினேன்.
20.08.1980 அன்று “ரெவின்யூ போர்டு ஒழிப்பு: ஓர் மாபெரும் சாதனை!’’ என்ற தலைப்பில் அ.இ.அ.தி.மு.க. அரசு இச்சாதனையைச் செய்திருப்பது, மிகவும் வரலாற்று ரீதியான சாதனையாகும். இதனை வரவேற்று, முக்கிய செய்திகளை வெளியிட்டிருந்தோம்.
நிர்வாக வட்டாரங்களில் நீண்டகாலமாக, வழக்கில் ஓர் பழமொழி உண்டு, “ஏதாவது ஒரு பிரச்சினையை விரைவில் தீர்க்க விரும்பா விட்டால், அதை ரெவின்யூ போர்டுக்கு அனுப்புங்கள்’’ என்பதே அப்பழமொழியாகும்.
பிரிட்டிஸ்காரர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரெவின்யூ போர்டு கடந்த சுமார் 200 ஆண்டுகளாக நிர்வாகத் துறையில் ஓர் நந்தி போல் இருந்தே வந்திருக்கிறது!
அ.இ.அ.தி.மு.க. அரசு நிர்வாகத் துறையில் இப்படி ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியதை வரவேற்று முதலமைச்சர் அவர்களையும், வருவாய்த் துறை அமைச்சர் அவர்களையும் நான் மனதாரப் பாராட்டி குறிப்பிட்டிருந்தேன்.
தில்லை மாநாடு
தில்லையிலே திராவிடர் கழகத்தின் முப்பெரும் மாநாடுகள் நடைபெறும் நாள்கள் நெருங்கிவந்த நிலையில், தில்லை (சிதம்பரம்) வாழ் பார்ப்பனர்கள், “நாத்திகப் பிரச்சாரத்திற்கு அரசு’’ கொடுக்கும் ஆதரவிற்கு எதிர்ப்பு வேண்டுகோள் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் இந்து பாதுகாப்புச் சங்கம் என்ற பெயரில் வெளியிட்டனர்.
1. ஈ.வெ.இராமசாமியின் சமுதாயத் தொண்டை மறுக்க இயலாது. ஆனால், அவரது நாத்திகப் பிரச்சாரம் பக்தர்களைப் புண்படுத்துகிறது.
2. அரசு பெரியார் சிலையிலுள்ள நாத்திக வாசகங்களை நீக்க வேண்டும்.
3. அரசு கல்வி நிறுவனங்களில் காலை தொடங்கும் முன் இந்துமதப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
4. இந்து கோயில் உண்டியல் வசூலை கோயில் நிர்வாகத்திற்கே செலவிட வேண்டும்.
5. அரசின் குறிப்புகளில் தந்தை பெரியார் என்ற வாசகத்தை நீக்கிவிட வேண்டும்.
6. சிதம்பரம் பேருந்துநிலையம் பெரியார் பெயரில் இருப்பதை மாற்றி இந்து சமயப் பெயரால் அழைக்க வேண்டும் என்று அந்தத் துண்டறிக்கையில் அரசைக் கேட்டுக்கொண்டனர்.
அடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த பாலு அய்யர் என்ற பார்ப்பனர் 19.08.1980ஆம் தேதியிட்டு கடிதம் ஒன்றை எனக்கு எழுதியிருந்தார். அதில்,
1. பார்ப்பனர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் அதிக மதிப்பெண் பெற்றாலும் வாய்ப்பில்லை.
2. பார்ப்பனர் ஆதிக்கம் எங்கே நடைபெறுகிறது?
3. பிள்ளை, வன்னியர் போன்றோர்தான் தாழ்த்தப்பட்டோரை ஒடுக்குகின்றனர். எங்களால் அவர்களுக்கு பாதிப்பு இல்லை.
4. வன்னியர், சங்கம் வைத்தால் நீங்கள் எதிர்ப்பதில்லை.
5. சுயமரியாதைத் திருமணத்தை நாங்கள் எதிர்க்கவில்லையே என்று அவர் அக்கடிதத்திலே எழுதியிருந்தார்.
இதற்கு நான் பதில் கடிதம் எழுதாமல் சிதம்பரம் மாநாட்டில் பதில் தருகிறோம். வந்து கேளுங்கள் என்றும், கடிதம் எழுதியவர்கள் மாநாட்டுக்கு வந்து உரையைக் கேட்பார்கள் என்று நம்புகிறோம் என்றும் பதிலாக ‘விடுதலை’யில் 22.08.1980 அன்று வெளியிட்டிருந்தேன்.
சிதம்பரத்தில் 24.08.1980 அன்று பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடு, ‘புதுவை கனகலிங்கனார் நினைவுப் பந்தலில்’ வெகு விமரிசையாக எழுச்சியுடன் கூடியது. பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் (சேலம் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர்) தலைமையில் நடைபெற்றது. விழாவில், நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.
தந்தை பெரியார் அவர்கள், ஒரு பெரிய திருப்பத்தை இங்கு சமுதாயத்திலே ஏற்படுத்தி வைத்ததோடு, ராணுவக் கட்டுப்பாடு உடைய ஓர் இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த கருஞ்சட்டைப் பட்டாளத்துக்கு கடைசியாக சமுதாயத்திலே இருக்கிற இழிவை ஒழிக்க வேண்டும். அதற்கு நாள் குறித்தாக வேண்டும்.
தந்தை பெரியாருடைய இந்த இயக்கத்துக்கு எவ்வளவு மரியாதை என்பதை ஊர்வலத்தில் நாங்கள் காண்போம். இவ்வளவு எதிர்ப்பு காட்டிய சிதம்பரத்திலே இருக்கிற பார்ப்பனரும், பார்ப்பன வீட்டுப் பெண்களும் தைரியமாக துணிச்சலாக பூணுலைப் போட்டுக்கொண்டு சட்டைப் போடாமல் வெளியே நின்றுகொண்டு, ஊர்வலத்துக்கு அருகிலே நின்றுகொண்டு பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு கோஷங்களை எல்லாம் நமது தோழர்கள் எரிமலை என முழங்கிக் கொண்டு வந்த நேரத்திலே அமைதியாக நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்களே, ஒரு சம்பவமும் நடக்கவில்லையே, இது இந்த தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்காவது நடக்குமா? தமிழ்நாட்டிலே எங்கள் இயக்கத்தைத் தவிர வேறு எந்தக் கட்சி நடத்தினாலும் இது நடக்குமா? என்று வினவினேன்.
நாங்கள் அத்தனை பேரும் தெளிவாக இருக்கின்றோம். இந்தச் சமுதாயத்திற்காக நாங்கள் பொறுத்துக் கொண்டு போராடுகிறோம். இதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் எடுத்துரைத்து பிரச்சாரம் செய்வோம். நெல்லையிலே தொடர்ந்து உணர்ச்சி தில்லையிலே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. கருஞ்சட்டைக் கடலாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. பெரியார் மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற கைத்தடி எங்களிடத்திலே இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
பெரியார் சொல்லிச் சென்ற வழிமுறை எங்கள் நினைவிலே உறுதியாக்கப் பட்டிருக்கிறது. அவசியம் வந்தால், அவசியம் வருமேயானால், அவசியத்தை நீங்களே உருவாக்குவீர்களேயானால், அந்தக் கைத்தடிக்கு வேலை கொடுக்க வேண்டிவரும் என்பதை பார்ப்பனர்களே மறந்துவிடாதீர்கள் என்று அன்றே எச்சரித்தேன்.
மாநாட்டில், திருமதி சக்குபாய் நெடுஞ்செழியன், புலவர் கண்மணி தமிழரசன், பேரா.இராமநாதன், கே.டி.கே.தங்கமணி, வழக்கறிஞர் கோ.சாமிதுரை, சிவகங்கை இரா.சண்முகநாதன், பொத்தனூர் க.சண்முகம், சேலம் மாவட்ட தலைவர், திருமதி பார்வதி கணேசன் உள்ளிட்ட ஏராளமான கழக முக்கிய பொறுப்பாளர்களும், கழக தோழியர்கள், தோழர்கள் உள்ளிட்ட பலரும் பொதுமக்களும் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் கலிபூங்குன்றன் இல்லத் திருமணம்
மாயூரம் மா.கந்தசாமி_தனம் ஆகியோர்-களின் மகளும் கலி.பூங்குன்றன், ‘விடுதலை’ இராசேந்திரன் ஆகியோரின் தங்கையுமான கலைச்செல்வி பி.ஏ.க்கும், மாயூரம் வட்டம் நல்லுச்சேரி மாணிக்கவேலு_ ஜானகி ஆகியோரின் செல்வன் அருள்ஜோதி பி.ஏ.க்கும் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம், எனது தலைமையில் 01.09.1980 திங்கள் காலை 10 மணியளவில் மாயூரம் ஏ.ஆர்.சி. காமாட்சி திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. பெண்ணடிமைச் சின்னமான தாலி தவிர்க்கப்பட்டது. விழாவுக்கு ஏராளமான கழகத் தோழர்களும் நண்பர்களும் வருகை தந்திருந்தனர்.
மணமகளின் சகோதரர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
“இன்றைய சுயமரியாதைத் திருமணம் என்பது விளக்கங்கள் கூறப்பட வேண்டிய திருமணமாக இல்லாமல் யாராக இருந்தாலும் முறையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம். சுயமரியாதைத் திருமணம் என்று சொன்னால் ஏதோ ஒரு மேடை, ஒரு தலைவர், இரண்டு மாலைகள் என்ற புறத்தோற்றங்களல்ல; பொருள்கள் அல்ல. சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லுகின்றபோது அது ஒரு வாழ்க்கை நெறி. அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். உலகம் தோன்றிய காலம்தொட்டு உண்டாக்கிய தத்துவங்களில் மிக உயர்ந்த தத்துவம். அத்தகைய தத்துவத்தை மனித குலத்திற்குத் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். பெரியார் என்று சொன்னால் ஒழிக ஒழிக என்று சொல்லக் கூடியவர். அவருடைய கண்ணோட்டமெல்லாம் Negative Approach என்று சொல்லிக் கொண்டிருக்கிற படித்த, பாமர மக்கள் உண்டு. ஆனால், அவர்களுக்கெல்லாம் இந்த மேடையின் வாயிலாக சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் பெரியார் ஒரு ஆக்கரீதியான அறிவு வேலைக்காரர் என்பதை உணர்த்த கடமைப்பட்டிருக்கிறோம்.
தந்தை பெரியார் அவர்களைப் போல பொது வாழ்க்கையில் துன்பம் அனுபவித்தவர்களைத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. அதே நேரத்திலே தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாயத்துக்குக் கொடுத்துள்ள இன்பத்தைப் போல வேறு எந்தத் தலைவரும் கொடுத்தது கிடையாது’’ என்று உரையாற்றினார்.
எனது உரையில், “வரவேற்புரையில் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சொன்னதுபோல, இது முழுக்க முழுக்க நமது இல்லத்து உரிமை வாய்ந்த திருமணமாகும். இந்த வாழ்க்கை ஒப்பந்தம் நடத்தி வைப்பது, அதிலே பங்கேற்பதெல்லாம் சம்பிரதாயமான நிகழ்ச்சி அல்ல. ஆற்றவேண்டிய குடும்ப கடமைகளில் ஒன்று என்று கருதக்கூடிய வண்ணம் அவ்வளவு பேரும் இங்கே கலந்து கொண்டிருக்கிறோம். தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய லட்சோப லட்ச குடும்பங்கள் அவரது கொள்கை ஈர்ப்பால் தந்தையினுடைய தன்மான உணர்வுச் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கின்றோம்.
உணர்வால் ஒன்றுபட்டவர்களாக உள்ளத்தால் ஒன்றுபட்டவர்களாக இன்றைக்கு நாம் காட்சியளித்துக் கொண்டிருக்கிறோம். யார் யாரோ ஒருமைப்பாட்டைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் பேசிய ஒருமைப்பாடு இருக்கிறதே அது மனித ஒருமைப்பாடு. பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒருமைப்பாடு.
மிகச் சுருக்கமாக ஒரே வரியிலே சொல்ல வேண்டுமானால் ஒருமுறை டாக்டர் குழந்தைசாமி சொன்னதைப்போல இந்த தமிழ்ச் சமுதாயம் விடுகின்ற மூச்சுக்காற்று பெரியார் தந்த பிச்சை என்பதை எவரும் மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட சமுதாயத்தினுடைய பரவலான நிலை காரணமாக இன்றைக்கு நாமெல்லாம் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய ஒரு நிலையினைப் பெற்றிருக்கின்றோம்.
ஒவ்வொரு துறையிலும் நாம் வளர்ச்சி பெற்றாக வேண்டும். அய்யா அவர்கள் எதை விரும்பினார்களோ அதை சுயமரியாதைக் காரர்கள்தான் செய்து காட்டமுடியும், பதவி ஆசைக்கு _ சுயநல ஆசைக்கு அப்பாற் பட்டவர்களாக இருக்கிற சுயமரியாதைக் காரர்களால்தான் இந்தச் சாதனை செய்ய முடியும். ஒவ்வொருவரும் முயலவேண்டும்.
ஒரு சுயமரியாதைத் திருமணத்துக்கும் மற்றொரு சுயமரியாதைத் திருமணத்துக்கும் இடையிலே இருக்கிற வளர்ச்சியைக் கணக்குப் போட்டுக் காட்டவேண்டும்.
சுயமரியாதைத் திருமணம் என்பது ஆண் எஜமானன் அல்ல. பெண் அடிமை அல்ல. இதுதான் இத்திருமணத்தின் முக்கியத் தத்துவம்.
“மாதர்கள் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நட்பு இன்மையும் இயற்கையாக உடையவராதலால் கணவனால் காக்கப்-பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்-கின்றார்கள் என்று கூறும் மனுதர்மத்தை எரிக்க வேண்டும்’’ என்பன போன்ற முக்கியச் செய்திகளை எடுத்துக் கூறி உரையாற்றினேன்.
மாநில உரிமைக்காக எம்.ஜி.ஆர். குரல்
மாநில உரிமைகள் குறித்து திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் டில்லியில் உள்ள தேசிய வளர்ச்சிக் குழுக் (National Development Council)கூட்டத்தில் கலந்துகொண்டு மாநில உரிமைகள் குறித்துக் கூறிய கருத்தினை கழகத்தின் சார்பில் நெஞ்சாரப் பாராட்டி அன்று நான் விடுதலையில் (04.09.1980) “மாநில உரிமைகளும் முதல்வர் அறிவிப்பும்’’ என்ற தலைப்பில் வரவேற்று முக்கிய அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில்,
“கலவரப் பகுதிகள் விசேஷக் கோர்ட் சட்டத்தைத் திருத்த மத்திய அரசு செய்துள்ள முடிவு சரியானதல்ல; சட்டம், ஒழுங்கு முற்றிலும் மாநிலப் பொறுப்பின் கீழ்வரும் விஷயம் (State List Subject) ஆனபடியால் அந்த முடிவு மாநிலத்தின் சுயாட்சியை மீறுவதாகும் என்று முதலமைச்சர் அவர்கள் நறுக்குத் தெறித்தாற்-போல் குறிப்பிட்டுள்ளதை தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் வரவேற்கவே செய்வர். கட்சிக் கண்ணோட்டத்திற்கு இடமின்றி மாநிலங்களின் உரிமைகள் பறிமுதல் செய்யக் கூடாது என்பதில் அக்கறையுள்ள அத்தனை பேரும் முதல்வரின் இந்தக் கருத்தினை தமிழ்நாட்டு மக்களின் உரிமை முழக்கமாகவே கொள்ளச் செய்வார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இதுபோன்ற பிரச்சினைகளில் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்’’ என்று கூறி வரவேற்றிருந்தேன்.
(நினைவுகள் நீளும்)