கோடையில் இளநீரின் விலை ரூ.40, ரூ.50 என சென்னையில் எகிறி விற்கும் நிலையில், எந்த இளநீர் எடுத்தாலும், விலை ரூ.22 ரூபாய்க்கு மேல் கிடையாது. சென்னையில் ஆங்காங்கே தள்ளுவண்டிகளில், ஒரு அட்டையில், ‘இந்தக் கடையில்சிறியது, பெரியது என அனைத்து இளநீரும் 22 ரூபாய்தான். அதற்கு மேல் விற்றால் நீங்கள் இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்’ என ஒரு மொபைல் நம்பரையும் (9382725035) எழுதி வைத்திருக்கிறார்கள்.
இப்படியொரு மக்கள் தொண்டு செய்பவர் சென்னையிலும் உள்ளார் என்பதுதான் வியப்பு.
அவர் பெயர் ஜெஃப்ரி ஜெயக்குமார். அவர் கூறுகையில், “நான் ஒரு எம்.காம். பட்டதாரி. நானும் என் மனைவியும் சேர்ந்து இந்த வியாபாரம் செய்யறோம். அவங்க ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட். பேரு பெட்சி இவாஞ்சிலின். ஒரு தடவை நாங்க வெளியூர் சுற்றுலா போகும்போது வழியில் இளநீர் தோப்பு அருகில் கடை வைத்திருந்த ஒருவரிடம் 20 ரூபாய்க்கு இளநீர் வாங்கிக் குடித்தோம். சென்னையில் 40 ரூபாய் இல்லாமல் இளநீர் குடிக்க முடியாது என்ற சூழ்நிலையில் எங்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. உடனே என் மனைவி, ‘இப்படி தோப்புகளில் வாங்கி நாமும் குறைந்த விலைக்கு சென்னையில் இளநீர் விற்றால் என்ன?’ என்றார். அவரது ஐடியாவ அப்படியே பிஸினஸாக்கி விட்டேன். ‘சென்னை இளநீர்’ என்ற பெயரில்.
கடந்த நான்கு வருடங்களாக இந்த வியாபாரம் நடத்தி வருகிறேன். இன்று சென்னை முழுக்க சுமார் 50 இளநீர் கடைகள் ஆரம்பித்து விட்டேன். கடைகள் என்றால், தள்ளுவண்டிகள்தான். இதில்மயிலாப்பூரில் மட்டும் 14 கடைகள் நடத்துகிறேன். தவிர, ராயபுரம், அடையாறு, பெரம்பூர், நுங்கம்பாக்கம் என்று சென்னையின் அத்தனை முக்கியமான இடங்களிலும் என் இளநீர் கடைகள் இருக்கின்றன. பொள்ளாச்சி, பண்டிச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து இளநீரை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு பிரித்துக் கொடுக்கிறோம்.
இதன் மூலமாக இளநீர் வெட்டுபவர்கள் 50 பேரும் அலுவலக பணிக்கென 19 பேரும் எங்களிடம் வேலை பார்க்கிறார்கள். காய் வெட்டுபவருக்கு மாதம் 10,000 ரூபாய் சம்பளம். தவிர, ஒரு காய்க்கு 2 ரூபாய் கமிஷனும் தருகிறோம். இதனால் சராசரியாக ஒருவர் மாதம் 20,000 சம்பாதிக்கலாம். யாருக்காவது வேலை வேண்டுமென்றால், அவர் எந்த ஏரியாவாக இருந்தாலும், படிப்பறிவெல்லாம் வேண்டாம். கடின உழைப்பாளியாக இருந்தாலே போதும். நாங்களே அவருக்கு காய் வெட்ட கற்றுக்கொடுத்து, வண்டியும் கொடுத்து, இளநீரும் சப்ளை செய்துவிடுவோம். தற்போதைய நிலையில் எத்தனை ஆட்கள் வந்தாலும் வேலை தருவேன்.
இந்தக் கோடைக்காலத்தில் வெயில் தாக்கத்தால் இளநீரின் விலை 60 ரூபாய் வரை அதிகமாக வாய்ப்பிருக்கிறது. அப்போது எங்களிடமும் விலை சற்று அதிகமாகுமே தவிர, மற்ற கடைகளைப் போன்று நாங்கள் அதிக விலை வைத்து விற்கமாட்டோம்.
‘ஏன் இவ்வளவு குறைவாக விற்பனை செய்கிறீர்கள்?’ என மற்ற இளநீர் கடைக்காரர்கள் அவ்வப்போது கேட்பார்கள். உடலுக்குத் தீமையில்லாத இளநீரை அனைவரும் தினமும் அருந்த வேண்டும். நான் மாட்டியுள்ள இந்த 22 ரூபாயை வெறும் 5 ரூபாய்க்கு இளநீர் என்று மாற்ற வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்!’’ என்கிறார் அந்த மக்கள் தொண்டர். ஸீ