மேற்கு வங்கத்தில் பி.ஜே.பி. காலூன்ற ஆயுதம் தாங்கிய ஆர்.எஸ்.எஸ், பேரணிகள்! எச்சரிக்கை! எச்சரிக்கை!

ஏப்ரல் 16-30

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க.வை மேற்கு வங்காளத்தில் கால் ஊன்றச் செய்ய தற்போது பகீரதப்  பிரயத்தனத்தில் இறங்கியுள்ளனர். அதற்கான முன்னோடியாக இராமனைத் துணை கொண்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். என்ற ஆரிய சனாதன ஹிந்துத்துவாவை பரப்ப, அது எதை எளிமையான ஊடுருவல் முறையில் செய்யும் தெரியுமா?

விநாயகர் ஊர்வலத்தின் நோக்கம்

பாமர மக்களிடம் படிந்துள்ள பக்திப் போதையை _ கடவுள் போதையை _ திருவிழாக்கள் _ வழிபாடு இவைகளைக் கொண்டாடி, அங்கே ஆர்.எஸ்.எஸ். _ ஹிந்து முன்னணியின் கொடியைப் பரப்பி, கால் ஊன்ற முயலுவது அவர்களது வழமையான முறை (Modus Operandi).

மகராஷ்டிரத்தில் _ முந்தைய பம்பாயில் _ விநாயகர் ஊர்வலம் சதுர்த்தி என்ற பெயரில், தங்களது இயக்கமான ஹிந்து மகாசபையை, பிறகு அதன் வழி ஆர்.எஸ்.எஸைக் கட்டும் வேலைக்கு பிள்ளையார் பக்தியை ஒரு கருவியாக்கிக் கொண்டனர். தமிழ்நாட்டிலும் கூலிக்கு ஆள் பிடித்து பிள்ளையார் ஊர்வலம் _ அதன்மூலம் ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதற்கேற்ப, மசூதிகள் பக்கம் பிள்ளையார் ஊர்வலத்தைத் திருப்பச் செய்து கலவரத் தூண்டல்மூலம் தமது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வளர்த்தது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு என்னாயிற்று?

அதுபோலவே ஒன்றுமில்லா மூன்றடி உயரமுள்ள ‘இராமலல்லா’ (சிறிய இராமர் குழந்தை) உருவத்தை வைத்துப் படிப்படியாக, காங்கிரசு பார்ப்பனராகிய பண்டித வல்லப பந்த் என்பவர் உ.பி. முதல்வராக இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வளர்த்து, ‘இராம ஜன்ம பூமியாக்கி’  _ இராமன் பிறந்த இடத்தை இடித்து, பாபர் மசூதி கட்டினர் என்று கூறி, 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்ற பாபர் மசூதியை இடித்தனர் (அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய்கட்டியார் போன்றவர்கள்மீது 1992ஆம் ஆண்டு தொடங்கிய வழக்கு இன்னமும் கிரிமினல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது).

இராமன்  பிரச்சாரம் _ டில்லியில் இராமலீலா _ பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும் _ மதச்சார்பின்மையைக் காலில் போட்டு மிதித்துக்கொண்டே _ இராவணன் எரிப்பை இராமலீலா பண்டிகைமூலம் கொண்டாடுவதா? என்று தென்னாட்டில் எழும்பிய கேள்வியைப் புறக்கணித்து அதனை உ..பி. ஆட்சியைப் பிடிக்கும் உபாயமாக்கினர் _ கோவில் பக்தி அரசியலுக்கு நீர்ப் பாய்ச்சிட அது உதவியது.
மேற்கு வங்கத்தில் காலூன்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சி!

இப்போது மேற்கு வங்கத்தில் அடுத்து நடைபெறவிருக்கும் தேர்தலை மனதிற் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். _ பா.ஜ.க. கூட்டு என்ன மாதிரி முயற்சியில் ஈடுபட்டுள்ளன தெரியுமா?

‘துர்கா பூஜை’, ‘காளிபூஜை’ என்றே பிரபலமான பண்டிகையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது மேற்கு வங்கத்தில். (கம்யூனிஸ்டுகளின் நீண்டகால ஆட்சிகூட இதனை எதிர்த்து எந்தப் பகுத்தறிவுப் பிரச்சாரமும் செய்யவில்லை _ வாக்கு வங்கிக் கண்ணோட்டத்தின் காரணமாக இருக்கலாம்).

இப்போது ஆர்.எஸ்.எஸ். அங்கே அதிகமான மக்கள் கொண்டாடாத இராம நவமியைக் கொண்டாட வைக்கும் வேலை, அரசியல் தூண்டிலில் இராமனை மாட்டி பெரிய அளவில் வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் முழுவதிலும் 350 பேரணிகளை; 22 மாவட்டங்களிலும் கொண்டாட மெகா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனராம்.

கொல்கத்தாவில் 6 முக்கிய இடங்களிலும், வெளிமாவட்டங்களில் 5 இடங்களில் ஆயுதங்களுடன் பேரணி நடத்த ஆயத்த மாகின்றனர்.

1000 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஏற்பாடு; 10 ஆயிரம் மக்கள் கொல்கத்தா நகரத்தில் திரள வைக்கத் திட்டம்.
ஆயுதம் தாங்கிய ஊர்வலமாம்!

கடந்த ஒரு மாதமாக 70 ஆயிரம் தொண்டர்களை கொல்கத்தா _ மேற்கு வங்கம் மற்ற பகுதிகளிலிருந்து அழைத்து வந்து அணிவகுக்கச் செய்வதோடு, ஆயுதம் தாங்கி வரவும் ஏற்பாடு.

இராமன் பயன்படுத்திய வாள்கள், திரிசூலங்கள், அம்பு, வில்களுடன் இந்தப் பேரணிகள் இருக்குமாம்! _ அவர்கள் பகிரங்கமாக அறிவிக்கின்றனர்!!

ஆயுதந்தாங்கிய இந்தப் பேரணிகள்மூலம் புதிய கால் ஊன்றுதலில் (அரசியலை மனதிற்கொண்டே) இறங்கியுள்ளனர்!

தமிழ்நாட்டிற்கு முன் அதற்கு இப்படி ஒரு முயற்சி _ ஒருபுறம் மம்தாவின் ஆட்சி, மற்றொருபுறம் கம்யூனிஸ்ட், காங்கிரசு அரசியல் எதிர்க்கட்சிகள்.

எல்லோரையும் “ஒழிக்க’’ இராமனை அங்கு பயணம் பண்ண, கலவரங்களுக்கு வித்தூன்ற _ பண்டிகைமூலம் (ஹிந்துத்துவ) கொடியேற்ற முனைகின்றனர்!

மேற்கு வங்க அரசும் – கம்யூ., காங்கிரசும் என்ன செய்யப் போகின்றன?

மேற்கு வங்க அரசும், மம்தாவும், கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் _ மதச்சார் பற்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள வர்களும் _ இதனை எப்படி எதிர்கொள்ள விருக்கின்றனர் என்பதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வியாகும்!

‘இராவணனைக் கொல்ல இராமன் இப்படி கலவரங்களைத் தூண்டும் முயற்சியிலா ஈடுபட்டான்?’ என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி கேட்டுள்ளார். அதுமட்டும் போதுமா?

இராமநவமி கொண்டாடும் பக்தர்களுக்குச் சில கேள்விகள்!

இராம நவமி கொண்டாடும் பக்தர்களே, இக்கேள்விகளுக்கு விடையென்ன?

1. இராமன் எப்படி பிறந்தான்? அசுவமேதம் புத்ரகாமேஷ்டி யாகம்மூலம் புரோகிதப் பார்ப்பனர்கள், குதிரை இவைகள் மூலம்தானே இராமன் பிறந்தான்  என்று வரலாற்று ஆசிரியர் தத் மற்றும் ஆய்வாளர் அமிர்தலிங்க அய்யர் வால்மீகி இராமாயணத்தில் உள்ளதைச் சொல்லுகிறார்கள் _ அதற்குப் பதில் என்ன?

2. கதைப்படி ‘அவதாரக் கடவுளான’ இராமன் தன் மனைவி சீதையின் கற்பைச் சந்தேகப்படலாமா? ஞானதிருஷ்டியில் உண்மையை அறிந்திருக்க வேண்டாமா? சலவைத் தொழிலாளியின் கூற்றுதான் ஆதாரமா?

3. இன்று எந்த மனைவியையாவது நெருப்பில் குளித்து, கற்பை   நிருபிக்க எந்த கணவனாவது வற்புறுத்தினால் இந்திய தண்டனைச் சட்டமும், காவல்துறையும் அனுமதிக்குமா?  நியாயமா?

மனைவிகளை _ பெண்களை நடத்தும் முறையா இது?

பெண்ணுரிமை இயக்கவாதிகளே, இதைக் கண்டிக்க முன்வர வேண்டாமா?

4. மரத்திற்குப் பின் ஒளிந்து நின்று வாலியைக் கொன்ற இராமன் வீரனா? அது யுத்த தர்ம நேர்மையா?

5. தனது ‘இராம ராஜ்ஜியத்தில்’  பார்ப்பனச் சிறுவன் உயிர் பிழைக்க, தவஞ்செய்த சூத்திர சம்பூகன் தலையை விசாரணையே இன்றி வெட்டி வீழ்த்தியது ஏன்? அது தர்மமா, நியாயமா?

கேட்டால், ‘உத்திரகாண்டமே இல்லை’ என்று ஒரே அடியாகக் கூறுவோர், இராமாயணத்தில் மற்ற காண்டம் மட்டும் உண்டு (அதில் உள்ளவைகளுக்குப் பதில் இல்லையே) என்பது முரண் அல்லவா?

6. நிறைமாதக் கர்ப்பிணி சீதையை காட்டிற்கு அனுப்பியவன் “புருஷ உத்தமனா? நடுநிலையாளர்களே, இராம பக்தர்களே, அறிவுக்கு வேலை கொடுங்கள் _ பக்தி வந்தால் புத்தி போய்விடும்’’ என்று பெரியார் சொன்னதை நிரூபித்துக் காட்டுகிறீர்களே!

‘இராம நவமி’யின் பின்னால் உள்ள ஆபத்து புரிகிறதா?

அது சர்க்கரைப் பூச்சுள்ள விஷ உருண்டை _ ஆபத்து புரிந்திடுவீர்!
  

 கி.வீரமணி
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *