நூல் மதிப்புரை

ஏப்ரல் 01-15

 

ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைச் சாசனமாக வந்த மண்டல் குழு அறிக்கை அமலாக்கப்பட்டபோது, அதனை எதிர்த்த இந்துத்துவா கும்பலின் போராட்டங்களையும் அதன் பின்னணியையும் விளக்கும் நூல்.

திராவிடர் இயக்க ஆய்வாளரும், சமூகநீதி எழுத்தாளருமான வெ.சிவப்பிரகாசம் அவர்களால் எழுதப்பட்டது.

பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை செய்தவுடன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கூடி சதி செய்வதில் தொடங்கும் நூல், மண்டல்குழு அறிக்கை அமலாவதன் மூலம் பார்ப்பனர்களின் மேலாதிக்கம் எவ்வாறு சரியும் என்பதையும், அதனைக் காக்க பாரதீய ஜனதா எடுக்கும் இழிவான நடவடிக்கையையும் படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.

மண்டல் பரிந்துரை குறித்த சனாதனிகளின் பார்வை, காங்கிரஸ் கட்சியின் துரோகம், மண்டலைத் தடுக்க அத்வானியின் ரத யாத்திரை மண்டல் பரிந்துரையைத் தடுப்பதில் சனாதனிகள் மற்றும் பணக்காரர்கள் கூட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக விளக்குகிறார் நூலாசிரியர்.

மேலும் மண்டல் குழு பரிந்துரை அமலாக்கத்திற்குப் பின் நடந்த அரசியல் சதிகளைத் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.  மண்டல் குழு பரிந்துரை அமலாக்கப்பட்டபின் அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதன் பின்னணி, அரசாங்க வழக்குரைஞர், மண்டல் பரிந்துரைகளுக்கு ஆதரவாகத் தமது வாதத்தினை வைக்காமல் கடமை தவறியது  இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டியத் தகவல்களையும், இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் எனும் ஆலோசனையையும் இந்நூல் வழங்குகிறது.

வகுப்புரிமை வரலாறு தொடர்பாக சில முக்கிய ஆவணங்களும் இதன் பின் இணைப்பாக உள்ளன.

இத்துடன் மதவாத சக்திகளின் முகமூடியைக் கிழிக்கும்விதமாக ‘இராமஜென்ம பூமி’ என்று மோசடியாக முன்வைக்கப்பட்டு வரும் அயோத்தி குறித்த தொல்லியல் அறிக்கைகளுடன் கூடிய உண்மைத் தகவல்களைத் தந்து அங்கு அதற்குமுன் இராமன் கோயில் என்று எதுவும் இல்லை எனவும், பாபர் எந்தக் கட்டடத்தையும் இடித்துவிட்டு மசூதியைக் கட்டவில்லை எனவும் விளக்குகிறார். அனைவரும் படித்துத் தகவல்களைப் பரிமாறி தெளிவுபெற இந்நூல் ஆக்கப்பூர்வமாக உதவும்.

– படித்து உவந்தவன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *