மதவெறியர்கள் மனதிற்கொள்ள வேண்டும்!
ஓர் இஸ்லாமியர் தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, கடவுள் மறுப்பாளராய், கருப்புச் சட்டைக்காரராய் மாறி, மக்களுக்கு அறிவூட்டி, அவர்களின் இழிவு நீக்கவும், உரிமை மீட்கவும், தன்னலமின்றி, தன்செலவில் மக்களுக்குப் பணியாற்ற வந்தார்.
இஸ்லாமியராகப் பிறந்த அவர், மதம் மறுத்து, கடவுளை மறுத்துப் பிரச்சாரம் செய்தார் என்பதற்காக, இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தரும் செய்தி நம்மைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கியது.
கடவுள் இல்லை என்று சொல்ல முதலில் அறிவுத் தெளிவு வேண்டும்; துணிவு வேண்டும்; சுயநலமில்லா பொதுநல முனைப்பு வேண்டும். சுருங்கச் சொன்னால் அவன் ஓர் சமூகத் தொண்டனாய், தியாகியாய் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஓர் அப்பழுக்கற்ற மக்கள் தொண்டரை மதவெறியின் மயக்கத்தில் மாய்த்தல் என்பது ஆத்திரம், அறியாமை, ஆவேசம் இவற்றின் உச்சம்.
மதவெறிக் கொலையாளிக்குச் சில கேள்விகள்!
கத்தியைத் தூக்கும் முன்புத்திக்கு வேலை கொடுக்க வேண்டாமா?
ஃபாரூக் என்ற அந்த நாத்திகர் செய்த குற்றமென்ன? கடவுளை மறுப்பது குற்றம் என்று எவன் சொன்னான்? கடவுளை மறுப்பதும் ஏற்பதும் அவனவன் அறிவுத் தெளிவை; சிந்தனைக் கூர்மையைப் பொறுத்தது.
இந்துக்கள் வணங்கும் உருவமுள்ள கடவுளை இஸ்லாமியர் மறுக்க உரிமை உள்ளபோது, இஸ்லாமியர் நம்பும் கடவுளை மறுக்க இன்னொருவனுக்கு உரிமை உண்டல்லவா? இந்த சிற்றறிவுகூட இல்லாமல் சினம் கொண்டு கொலை செய்வது அல்லா போதித்த கொள்கைக்குச் சரியா?
அவனவன் கொள்கை அவனவனுக்கு என்று அறிவுறுத்திய நபியின் பெயரால் கொலை செய்வது இஸ்லாத்திற்கே துரோகமல்லவா?
இப்படுகொலையை, மதவெறியை இஸ்லாமிய அமைப்புகளே ஏற்கவில்லையே!
“திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் போன்ற சமூகநீதி இயக்கங்களில் செயலாற்றுவது குற்றமெனில், நான் உறுதிபடக் கூறுவேன்; நானும் ஒரு தி.க._ தி.வி.க. _த.பெ.தி.க.காரன்தான்.
அவரைக் கொடூரப் படுகொலை செய்த வெறியனுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்’’ என்று ஆளூர் ஷாநவாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
“கடவுளை மறுக்கக் கூடியவர்களை கொல்லச் சொல்லி குர்ஆன் சொல்வில்லை. இப்படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’’ என்று ஜெயினுல் ஆபுதின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இரண்டு பச்சிளம் பிள்ளைகளின் தகப்பனான ஃபாருக்கைக் கொன்றபோது அதைத் தடுக்க கடவுள் வராதபோதே கடவுள் இல்லை என்பது உறுதியாகிவிட்டதே. அப்படி வந்து தடுக்காதது எப்படி கடவுளாக இருக்க முடியும்? மதவெறியர்கள் சிந்திக்க வேண்டாமா?
கடவுள் ம-க்களைக் காக்கும் என்கிறீர். ஆனால், நீங்கள் கடவுளைக் காக்க முற்படுவது, அதற்காகக் கொலைகூட செய்வது முட்டாள்தனத்தின், மூடநம்பிக்கையின் உச்சம் அல்லவா?
இந்தியாவில் இஸ்லாமியர் எல்லாம் ஏற்கனவே இந்துக்களாய் இருந்து மாறியவர்கள்தானே!
இஸ்லாமியர் ஒருவர் கடவுளை மறுத்தது குற்றம் அதற்காகக் கொலை செய்வாய் என்றால், இந்து மதத்தை விட்டு இஸ்லாத்தை ஏற்றது குற்றம் என்று இந்துமதவெறியன் ஆர்.எஸ்.எஸ். வெறியன், இஸ்லாமியரைக் கொலை செய்வானே! உன் முடிவுப்படி அது சரியாகிவிடுமே?
கடவுளை நம்புகிறவன் மசூதியை இடித்தான். இல்லையென்பவன்தானே அதைக் கண்டித்தான்? சிந்திக்க வேண்டாமா?
பல நூற்றாண்டுகாலமாய் எத்தனையோ இஸ்லாமியர்கள் நாத்திகர்களாய் வாழ்ந்து பணியாற்றியுள்ளனர். அண்மையில் மறைந்த கவிஞர் இன்குலாப் உட்பட. அப்படிப்பட்ட மண்ணில் இப்படிப்பட்ட வெறிச் செயல் நடப்பது ஏதோ தவறான வழிகாட்டல், மூளைச்சாயம் ஏற்றல் இங்கு நுழைந்திருப்பதைக் காட்டுகிறது. இது முளையிலே பறித்து எறியப்பட வேண்டும்!
– ஒளிமதி