உருளைக்கிழங்கு வேகவைத்த நீரில் பொதிந்திருக்கும் பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரைட் ஆகிய சத்துக்கள் சருமத்துக்கு ஆரோக்கியம் தருவதோடு மிக்க பொலிவையும் தருகிறது. இத்துடன் மேற்பூச்சாக உருளையின் வேகவைத்த நீரைப் பூசுவதால் சருமத்தின் இறந்த செல்கள் அகற்றப்பட்டு, புதிய செல்கள் வளரச் செய்யும் வாய்ப்பு உண்டாகும். பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவையும் காணாமல் போகும்.
உருளைக்கிழங்கின் சாறு பருகுவதனாலும், மேற்பற்றாகப் போடுவதனாலும் கண்களின் கீழே நீர் கோர்த்துக்கொண்டு நீர்ப்பை போல தோன்றுகிற வீக்கம் வற்றிப் போகும். கண்களுக்குச் குளிர்ச்சியும் புத்துணர்வும் ஏற்படும்.
வைட்டமின் சி சத்துக் குறைபாட்டால் ஏற்படும் ஸ்கர்வி நோய்க்கு உருளைக்கிழங்கு மிகச் சிறந்த தீர்வு ஆகும். இதனால் ஈறுகளிலிருந்து எளிதில் ரத்தம் வெளியேறுதல் அல்லது எங்கேனும் அடிபட்டபோது அதிக ரத்தப் போக்கு ஆகியன தவிர்க்கப்படும்.
ஒவ்வொரு வேளையும் உணவு உண்பதற்கு முன்பாக பச்சை உருளைக்கிழங்கு சாறு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு பருகிவிட்டு சாப்பிடுவதால் வயிற்றில் தோன்றும் அமிலச் சுரப்பு தவிர்க்கப்படும். மேலும் மூட்டு வலியினை விரட்டுவதாகவும் உருளைக் கிழங்கு சாறு அமைகிறது.
உருளைகிழங்கு தோலைக் கொண்டு நீர் செய்து சாப்பிடுவதால் பித்தப்பை சம்பந்தமான தொல்லைகள் நீங்கி, ஈரல் பலப்படுவதுடன் உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
இதுபோல் உருளைக்கிழங்கின் மருத்துவப் பயன்களை இன்னும் விரிவாக எழுதிக்கொண்டே போகலாம். உருளைக்கிழங்கு சாப்பிட்டால் பருமனாகிவிடுவோம் என்பதுபோல் தவறான எண்ணங்கள் நிறைய இருக்கின்றன. அதுபோன்ற மூடநம்பிக்கைகளை மாற்றவே இந்தக் கட்டுரை.