தந்தை பெரியார் அவர்கள் தமது 95ஆம் வயதில் மறைவுற்ற பின்பு, திருச்சி – பெரியார் மாளிகையில் 6.1.1974-இல் நடைபெற்ற மாநில திராவிடர் கழக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கழகத் தலைமைப் பொறுப்பேற்று அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிமிகு உறுதி – உரை வரிகள்:
“இப்போது நான் மன உறுதியோடும், தைரியத்தோடும் இருக்கிறேன்.
அய்யா அவர்கள் இதுவரை செய்து வந்த காரியங்கள், பிரச்சாரம் இவற்றைச் சந்தேகத்திற்கு இடமின்றிச் செய்யக் காத்திருக்கிறேன்.
எந்த அளவிற்கு முழு மூச்சாகச் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு அய்யா அவர்களின் கொள்கைகளுக்காக என் இறுதி மூச்சு’’ உள்ளவரை பாடுபடக் காத்திருக்கிறேன் என்றார். அதற்கேற்ப கோயில் கருவறை நுழைவுப் போராட்ட முன்னோட்டமாக அஞ்சலகம் முன் இழிவு ஒழிப்புக் கிளர்ச்சியையும், அமைச்சர்களுக்கு எதிரான கருப்புக் கொடி போராட்டமும் 03.04.1974இல் நடத்தினார். இரண்டாவதாக, இராவணலீலா நடத்தி இராமன் உருவ பொம்மையைக் கொளுத்தினார். அதற்காகக் கைது செய்யப்பட்டார்.
இராமன் முதலியோரின் உருவப் படங்களை எரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கழகத் தலைவர் அம்மா உட்பட 14 தோழர்கள் மீது அரசினரால் வழக்குத் தொடரப் பட்டது.
அந்த வழக்கில் தீர்ப்பு நெருக்கடி நிலை ஆட்சியில் 9.9.1976-ஆம் நாள் வழங்கப்பட்டு, 6 மாதச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டில் விடுதலை ஆனார்கள்.
இந்திராகாந்தி அவர்களால் அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டு, விடுதலை தணிக்கைக்கு உள்ளானது. தணிக்கை என்றால் திரைப்படத் தணிக்கை போன்றதல்ல. தந்தை பெரியார் என்று எழுதப்படக் கூடாது என்றனர். பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்த அந்தக் காலகட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் நெருக்கடி காலக் கொடுமைகளுக்கு ஆட்பட்டிருந்த நிலையில் _- அன்னை மணியம்மையார் அவர்கள் ஆங்காங்கே சுற்றுப் பயணம் மேற்கொண்டு கழகத் தோழர்களுக்கு ஊக்கமூட்டி இயக்கத்தைத் தொய்வடையாமல் காத்த வரலாறு தனிச் சிறப்புடையது. பார்ப்பன ஆலோசகர்களின் ஆட்சியில் ஆரியம் என்னும் நச்சரவம் ஆணவத்தின் உச்சிக்கே சென்று படமெடுத்து ஆடியது. கழகத்தின் சொந்த இடமாகிய பெரியார் திடலிலே கூடச் செப்டம்பர் 17இல் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டது.
இந்திரா காந்தி. 1977 அக்டோபர் 30-ஆம் நாள் சென்னைக்கு வரப்போவதாக அறிவித்தார்.
தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பு உணர்ச்சியை அவசர கால அரசிக்குக் காட்ட வேண்டும் என்று கருதிய அன்னை மணியம்மையார் அவர்கள், தாம் உடல் நலமற்று இருந்த நிலையிலும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார்கள். அப்போது அன்னையார் அவர்கள் விடுத்த அறிக்கை வரலாற்று சிறப்புமிக்கது; அழுத்தமானது; ஆணித்தர மானது; தன்மானம் மிக்க தமிழ் மக்கள் நெஞ்சங்களில் பசுமையாய்ப் பதிந்து நிற்பது.
“கடந்த 60 ஆண்டுக்காலமாக நமது தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எந்த இனநல உணர்வைத் தோற்றுவிக்க இடையறாது பாடுபட்டார்களோ அந்த இன உணர்வினையும், அதன் தொடர்பான இயக்கங்களையும் அழிக்கத் தமிழ்நாட்டில் தன் அடக்குமுறை அதிகார தர்பாரினை அவசர நிலை என்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி ஏவிய இந்திரா அம்மையார் அவர்கள் தமிழ்நாட்டுக்கு இம்மாதம் 30ஆம் தேதி வர இருக்கிறார்களாம்.
அவரது சொந்த மாநிலத்து மக்களேகூட சொரணை யோடு இருந்து, அந்த அம்மையாரின் வடிகட்டிய சுயநலப் போக்குக்கும் ஆணவ அதிகாரக் கொடுமைக்கும் தகுந்த பாடம் கற்பித்து எதிர்ப்புக் காட்டும் நிலையில், தமிழ்நாட்டில் அவருக்கு வரவேற்பு என்ற பெயரால் இங்குள்ள காங்கிரஸ்காரர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளைத் துச்சமாகக் கணக்குப் போட்டு அரசியல் நடத்துகிறார்கள்.
தமிழ்நாட்டை ஒழுங்கற்ற தனித் தீவு என்று வர்ணித்து, தேசிய நீரோட்டத்துடன் இணைக்கிறேன் என்ற பெயரால் அவரது இரு பார்ப்பன ஆலோசகர்களாக ஆர்.வி.சுப்பிர மணியம், தவே ஆகியவர்களைக் கொண்டும் அவரது மற்றொரு ஆமாம் சாமியான ஓம் மேத்தா அய்யரைக் கொண்டும் இந்திரா அம்மையார் நடத்திய தமிழர் ஒழிப்புக் காரியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல; எழுத ஏட்டில் அடங்காத கொடுமைக் குவியல்கள் அல்லவா அவை?
காரண காரியமின்றி பல்லாயிரக்கணக்கான மக்களைச் சிறையிலடைத்து சித்திரவதை செய்து, பத்திரிகைத் தணிக்கை என்ற பெயரால் செய்த கொடுமைகள் கொஞ்சமா? இந்த அக்கிரமங்-களை – அநீதிகளை – கட்டவிழ்த்துவிட்டு, தமிழ் நாட்டை, சிறை பிடித்த வேற்று நாட்டைப் போல நடத்திய இந்திரா அம்மையார், அந்தக் கொடுமை ஆட்சிக்குப் பதில் சொல்லத் தயங்கி, நாட்டின் மற்ற பகுதிகளுக்குச் செல்லத் தயங்கிய போதிலும், முதல்முறையாக இங்கு வருகிறார். தமிழ் மக்கள் தங்கள் அதிருப்தியும் வெறுப்பும் எவ்வளவு என்பதைக் காட்டவே, நமது இயக்க சார்பில் கருப்புக் கொடிகள் கடலலைகள் போல் காட்ட முன்வர வேண்டும்.
கழகத் தோழர்களை மட்டுமல்ல; தமிழ் உணர்ச்சி உள்ள எல்லா தமிழின இளைஞர்களும், தாய்மார்களும், தோழர்களும் கட்சி வேறுபாடின்றி அருள்கூர்ந்து கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும். நானே கலந்து கொள்ள இருந்தும் எனது உடல்நிலை காரணமாக டாக்டர்கள் அனுமதிக்க மறுப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை.
கட்டுப்பாட்டுடன் கடமையாற்றுவது, கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும்.
நமது கழகத் தோழர்களும், தமிழர் உணர்வுள்ள பெரு மக்களும் அமைதியாக நமது வெறுப்பை – எதிர்பார்ப்பைக் காட்ட சென்னை-யில் கடல்போல் திரள வேண்டுகிறேன்.’’ என்றார்.
(விடுதலை 22.10.1977)
எம்.ஜி.ஆர். தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசு இவ்வாறு இந்திரா காந்திக்குக் கறுப்புக் கொடி காட்டுவதற்கு முதலில் அனுமதியளித்து, இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்தது. பின்னர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தைத் தடை செய்து மாநில அரசு அறிவித்தது.
இத்தடையை அறிந்த அன்னை மணியம்மையார் அவர்கள் பொங்கி எழுந்தார்கள். உடல் நலம் குன்றித் திருச்சி மருத்துவமனையில் இருந்த அன்னையார் உடனே சென்னைக்கு விரைந்தார்கள். விளைவு? “தடையை மீறுவோம்’’ என்ற தலைப்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்ட நாளாகிய 30.10.1977 விடுதலையில் வெளியாகிய வீரஞ்செறிந்த அறிக்கையில்,
“அய்யா… அண்ணா உணர்வினை அழிக்க, தனதாட்சியை முழுமையாகப் பயன்படுத்திய ஒருவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டக் கூட இன்று இங்கே உரிமை இல்லை என்பதை நினைக்கும்போது, தமிழ்நாட்டில் இன்னமும் ஆர்.வி.சுப்பிர மணியம், தவே ஆட்சி நடக்கிறதே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு திராவிட இயக்கப் பாரம்பரியம் உள்ள ஆட்சி நடைபெறவில்லை என்றுதான் வெட்கத்துடனும், வேதனையுடனும் சுட்டிக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
இந்த நிலையில், இத்தடை கருதி, அய்யா – அண்ணா வழியில் வந்த நாம் வாளா இருக்க முடியாது. எனவே, நமது ஜனநாயக உரிமையை நிலை நாட்டவும், தமிழ் மக்கள் அருவருப்பை வெளிப்படுத்தவும் கறப்புக் கொடி காட்டுவது நமது பிறப்புரிமை என்பதை நிலை நாட்ட தடையை மீறுவது என்ற முடிவுக்கு வருவதுடன், சென்னையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கும் நமது கழகப் பொதுச் செயலாளர் திரு.கி.வீரமணி அவர்கள் கைது செய்யப்பட்டால், கருப்புக் கொடிப் போராட்டத்திற்கு நானே தலைமை தாங்குவேன்.
உடல் நலிவுற்று, திருச்சி மருத்துவமனையி-லிருந்து இன்றுதான் சென்னை திரும்பிய நான், அமைதி வழியில் அறப்போர் நடத்த நண்பர்களுக்கு அறிவுரை கூறவே வந்தேன். வாய்ப்பு இப்படி எனக்கும் கிட்டும் நிலை ஏற்பட்டதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.’’ என்று கூறியிருந்தார்.
(விடுதலை 30.10.1977.)
அன்னை மணியம்மையார் அவர்களும், மிசாவின் கீழ் கைது செய்யப்பட்டு 358 நாட்கள் சிறை வாசமும், கொடுமைகளும் அனுபவித்து (சனவரி 23-இல்) விடுதலையாகி வந்திருந்த கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களும், இந்திரா காந்திக்குக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்-பட்டார்கள். அனைவரும் ஜாமீனில் வெளி வர மறுத்துச் சென்னை மய்யச் சிறை ஏகினர்.
சில நாட்களுக்குப் பின்னர், திடீரென மாநில அரசு அறிவிப்பொன்று வெளியாயிற்று. உடல் நலம் கருதியும், இரக்கத்தின் அடிப்படையிலும் மணியம்மையார் மீது போடப்பட்டு இருந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டு அவர்களை விடுதலை செய்வதாக 14.11.1977-இல் வெளிவந்த அவ்வறிக்கை தெரிவித்தது.
இதுபற்றி அன்னை மணியம்மையார் அவர்கள் மறுநாள் (15.11.1977) வெளியிட்ட ஓர் அறிக்கையில், “என் மீது இரக்கம் கொண்டும் தமிழக அரசு விடுதலை செய்து விட்டதாகவும், என் மீது போடப்பட்டிருந்த வழக்கை மட்டும் வாபஸ் வாங்கப் பெற்றதாகவும் கேட்டு, நான் மிகுந்த வேதனையும், சங்கடமும், மேலும் அதிர்ச்சியும் தான் அடைந்தேன். என் எதிரிலேயே தோழர்கள் இரத்தம் பீறிட அடிக்கப்பட்டதைப் பார்த்தபோது, ஏற்பட்டதைவிடப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளேன்’’ என்று அழுத்தந் திருத்தமாகக் குறிப்பிட்டார்கள்.
இத்தகைய துணிவும் வீரமும் தாங்கிய அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளில்
(மார்ச் 16) நாமும் அவர்கள் வழியில் நடை போடச் சூளுரை ஏற்க வேண்டும். அய்யா அவர்கள் மறைவுக்குப் பின் அன்னையார் அவர்கள் இருந்தவரை தமிழகத்தை ஆண்ட எல்லா ஆட்சியிலும் போராட்டம் மேற்கொண்டு கைதாகி, (1) கலைஞர் ஆட்சியில் இராவண லீலா நடத்தியதற்காக (2) ஆளுநர் ஆட்சியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக் கொண்டாட முனைந்ததற்காக (3) எம்.ஜி.ஆர். ஆட்சியில் நெருக்கடி நிலை அரசி இந்திரா காந்திக்குத் தடையை மீறிக் கருப்புக் கொடி காட்டியதற்காகச் சிறையேகிய வரலாற்றுச் சிறப்பையும் நெஞ்சில் நிறுத்துவோம்.