தேர்வு எழுதுவோர் தெரிந்துகொள்ள வேண்டியவை!

மார்ச் 16-31

¨    தேர்வு நெருங்க நெருங்க பதற்றம் வருவது இயல்பு. ஆனால், பதற்றம் தேவையற்றது. பதற்றத்தால் எப்போதும் பாதிப்புதானே ஒழியப் பயன் இல்லை. பதற்றமில்லாமல், நம்பிக்கையோடு நிதானமாக எச்செயலையும் செய்ய முற்படுவதே வெற்றியின் முதல்படி. தேர்வைக் கண்டு அஞ்சாமல் நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும்.

¨    படித்த பாடங்களை மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து இடைவிடாமல் படித்துக் கொண்டிருப்பதை தவிர்த்து, சிறிய இடைவெளிவிட்டு, அந்த நேரத்தில் மனமகிழ்வான செயல்களைச் செய்து, மீண்டும் படிப்பது நல்லது. பாடங்கள் மனதில் நன்கு பதியும்.

¨    தேர்வு நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அதிக நேரம் செலவழித்து, உங்களது படிப்புக் கவனத்தைச் சிதறடிக்கக் கூடாது. மனமாற்றத்திற்குச் சிறிது நேரம் பார்க்கலாம்.

¨    எந்தெந்தத் தேதிகளில் தேர்வுகள் நடை-பெறுகின்றன என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

¨    தேவையான ஹால்டிக்கெட், பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை தேர்வுக்கு முதல் நாளிலேயே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

¨    கண்விழித்துப் படிக்க வேண்டாம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால் அடுத்த நாள் சோர்வாக இருக்கும். தேர்வு நாள்களில்கூட இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை தூங்குங்கள்.

¨    தேர்வுக்குச் செல்லும்போது பட்டினி வேண்டாம். அளவோடு சாப்பிட்டுச் செல்லவும்.

¨    தேர்வு தொடங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு நடைபெறும் இடத்திற்குச் சென்று விடுங்கள். கடைசி நேரப் பரபரப்பை இதனால் தவிர்க்க முடியும்.

¨    தேர்வு மைய வளாகத்தல் உங்களிடம் உள்ள பாடக் குறிப்புகளை சிறிது நேரம் திருப்பிப் பார்த்துவிட்டு அமைதியாக இருக்கவும். மற்றவர்களுடன் தேவையில்லாத அரட்டை வேண்டாம். புதிதாக எதையும் படிக்க வேண்டாம்.

¨    தேர்வு அறைக்குச் செல்லும் முன், உங்களது புத்தகங்களையும் உங்களது சட்டைப் பையில் ஏதாவது பாடக் குறிப்புகளோ, காகிதங்களோ இருந்தால், அதையும் சேர்த்து தேர்வு அறைக்கு வெளியில் வைத்துவிட்டு அறையுள் உங்கள் எண்ணுள்ள இருக்கையில் அமரவும்.

¨    உங்களுக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டதும், பரபரப்பாக உடனே விடைகளை எழுதத் தொடங்காமல், தெரியாத அல்லது கடினமான வினாக்களைப் பார்த்து நம்பிக்கை தளராமல், வினாத்தாளை விரைவாக முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடை எழுதுங்கள்.

¨    விடைத்தாளில் தேர்வு எண்ணை சரியாக எழுதியிருக்கிறோமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.

¨    ஒவ்வொரு வினாவுக்கும் விடை அளிக்க எவ்வளவு நேரம் என்று திட்டமிட்டுக் கொண்டு விடைகளை எழுதவேண்டும். இதனால், சில வினாக்களுக்குப் பதில் தெரிந்தும் நேரம் இல்லாமல் போய், விடை எழுதாமல் விட்டுவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.

¨    எந்த வினாவுக்கும் தேவையான அளவு சுருக்கமாக முழுமையாக விடை எழுதுங்கள்.  நன்கு தெரிகிறதே என்று நீட்டி எழுதிக் கொண்டிருக்காதீர்கள். அதனால், மற்ற வினாக்களுக்கு விடை எழுத நேரம் இல்லாமல் போய்விடும்.

¨    தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுதி முடித்துவிட்டு, எழுதிய விடைகளைச் சரிபார்ப்பது நல்லது. தெரியாத வினாக்களுக்கு விடைகளை எழுதவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

¨    எழுதி முடித்துவிட்டு, பின்னர் தெரியாத வினாக்களுக்கான விடைகளை நினைவுக்குக் கொண்டுவந்து எழுதவும்.

¨    விடைத்தாளை, தேர்வுக் கூடக் கண்காணிப்பாளரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *