செய்யக் கூடாதவை

மார்ச் 16-31

மயங்கிக் கிடக்கும் நோயாளியை அடித்து அல்லது உலுக்கி எழுப்பக் கூடாது

மூர்ச்சையாகிக் கிடக்கின்றவரை அடித்து, உலுக்கி, கன்னத்தில் தட்டி எழுப்பக் கூடாது.  எதனால் மயக்கமுற்றார் என்று தெரியாமல் முதலுதவி செய்யக் கூடாது. அவர் வீட்டுக்குத் தொடர்பு கொண்டு அவர் உடல்நலப் பாதிப்பு அறிந்து செயல்பட வேண்டும்.

பாம்புக் கடிவாயில் அய்ஸ் வைக்கக் கூடாது

பாம்பு கடித்தால் கடிவாயில் அய்ஸ் வைக்கக் கூடாது. கடிவாய்க்கு மேல் 2 அல்லது 3 அங்குலத்திற்கு மேல் கட்டுப் போட வேண்டும். கட்டு மிக இறுக்கமாக இருக்கக் கூடாது. கடிவாயைச் சோப்பால் கழுவ வேண்டும். வலி நீக்கும் பாரஸிட்டமால் அல்லது ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்கலாம். மற்றபடி கண்ட மருந்துகள் கொடுக்கக் கூடாது. கை, தலை, கால், கழுத்து இணையும் பகுதிகளில் கட்டுப் போடக் கூடாது. கடித்தது என்ன பாம்பு என்று நன்றாகத் தெரிந்தால் அதை மருத்துவரிடம் சொல்ல வேண்டும். தேனி, குளவி கொட்டினால் கடிவாயில் அய்ஸ் வைக்கலாம்.

கடித்துக் கொண்டிருக்கும் உண்ணியைக் கையால் எடுக்கக் கூடாது

இரத்தம் குடிக்கும் உண்ணி அல்லது அட்டை உறிஞ்சிக் கொண்டிருக்கும்போது கையால் இழுக்கக் கூடாது. இடுக்கியால் கவ்வி இழுக்க வேண்டும்.

விபத்தில் இரத்தம் வெளிவந்தாலே அஞ்சக்கூடாது

நலமான உடல் உடைய இளைஞர் உடலிலிருந்து 850 மில்லி இரத்தம் வரை வெளியேறினால் அவருக்கு எந்தப் பாதிப்பும் வராது. எனவே, இரத்தம் வெளியேறியவுடன் அஞ்ச வேண்டியதில்லை. அதிக இரத்தம் வெளியேறாமல் ஈரத் துணியை நன்றாகப் பிழிந்து கட்ட வேண்டும். அல்லது பஞ்சு வைத்துக் கட்ட வேண்டும். காயத்தின் மேல்பகுதியை அழுத்திப் பிடித்து,. காயப்பட்ட பகுதியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

காயத்தின் மீது சுத்தமில்லாத துணி, பஞ்சு போன்றவற்றை வைத்துக் கட்டக் கூடாது. அதிலுள்ள கிருமிகள் தொற்ற வாய்ப்புண்டு. முதலில் கட்டிய கட்டு இரத்தத்தால் நனைந்தால் அதை அவிழ்க்காமலே அதன்மீது மேலும் துணி சுற்ற வேண்டும். வெட்டுக் காயத்தில் பதிந்துள்ள பொருளை உடனே பிடுங்கக் கூடாது. அவ்வாறு பிடுங்கினால் மேலும் இரத்தம் வெளியேறும். எனவே, மருத்துவர் உதவியுடன் அகற்ற வேண்டும்.

இரத்தம் அதிகம் போனால் அதை நோயாளியிடம் சொல்லக் கூடாது. அதிர்ச்சியடைந்தால் கூடுதலாக இரத்தம் வெளியேறும். வாயில் அடிபட்டு இரத்தம் வந்தால் 12 மணி நேரத்திற்குச் சூடான பானம் அருந்தக் கொடுக்கக் கூடாது. கண்ணில் காயம் பட்டால் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

எலும்பு முறிந்தவருக்குச் செய்யக் கூடாதவை

1.    முறிந்த எலும்பின் முனையையும், அதன் அருகிலுள்ள மூட்டையும் அசைக்கக்கூடாது. அசையாமல் இருக்க மெல்லிய சட்டம் வைத்துக் கட்டலாம்.

2.    தண்டுவடத்தில் அடிபட்டிருந்தால் அசைக்கக் கூடாது.

3.    இரத்தக் கசிவை தடுக்காமலிருக்கக் கூடாது. கட்டுப் போட்டுத் தடுக்க வேண்டும்.

4.    முறிந்த எலும்பு நீட்டிக் கொண்டிருந்தால் அதை உள்ளே தள்ளக்கூடாது.

5.    விலகிய மூட்டைச் சரி செய்ய முயலக்கூடாது. மருத்துவரே அதைச் செய்ய வேண்டும்.

6.    எலும்புப் பகுதியில் கட்டப்படும் கட்டு இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் அளவிற்கு இறுக்கமாக இருக்கக் கூடாது.

சுளுக்கு விழுந்த பகுதியைச் சரி செய்ய முயலக்கூடாது

கழுத்து, கை அல்லது கால்பகுதி சுளுக்கிக் கொள்ளும்போது, அதச் சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது சுளுக்கை மேலும் அதிகப்படுத்தும். மருத்துவரிடம் காட்டி முறைப்படி சுளுக்கு நீக்க வேண்டும். ஊர்ப்புறங்களில் சுளுக்கு வழிக்கும் சிலர் இருப்பார்கள். அவர்கள் முரட்டுத்தனமாக வழக்கமாகச் செய்து மேலும் சிக்கலை உண்டு பண்ணிவிடுவர். அவர்களுக்கு உடலுறுப்புகள் பற்றியும், எலும்பு, நரம்புகள் பற்றியும் ஏதும் தெரியாது. கால் சுளுக்கினால் காலை தளர் நிலையில் மெல்ல உதறினால் சரியாகிவிடும். கையும் அப்படியே. கழுத்துச் சுளுக்கு இயல்பாகவே சரியாகிவிடும். மூட்டு நழுவி மேலேறிக் கொண்டால் கட்டாயம் மருத்துவரிடம் காட்டியே சிகிச்சை பெற வேண்டும். சுளுக்குப் பகுதியில் பனிக்(அய்ஸ்) கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *