Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அய்யாவின் அடிச்சுவட்டில் இயக்க வரலாறான தன்வரலாறு(174)

அரசின் துப்பாக்கியை விட பெரியாரின் பேனா வலிமையானது!

1980இல் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் தலைமைக்கும் நமது அன்பான வாழ்த்துகளை நாம் தெரிவித்துக் கொண்டோம். அதன் அடிப்படையில் 03.06.1980 அன்று ‘விடுதலை’யில் இரண்டாம் பக்கத்தில் “மக்கள் தீர்ப்பும் நமது கணிப்பும்’’ என்ற தலைப்பில் நீண்டதோர் அறிக்கையை வெளியிட்டு இருந்தோம். அதில், தமிழ்நாட்டின் பண்பாடு, தமிழர்களின் தனித்தன்மை, பாரம்பரியம்- _ இவைகள் காக்கப்பட வேண்டும் என்பது ஆட்சிக்கு வருபவர்களது முக்கிய லட்சியமாகவும் கவலையாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

ஆட்சியைக் கலைத்தவுடன் ஒரு மாத அளவில் தேர்தல் நடந்திருந்தால்கூட இத்தகைய “வசதி’’ அவர்களுக்கு கிடைத்திருக்காது. 3 மாத இடைவெளி, ஜனாதிபதி (கவர்னர் ஆட்சி) ஆட்சியின் பல செயல்கள், மின்வெட்டு, சர்க்கரை விலை உயர்வு, விலைவாசி ஏற்றம், சிமெண்ட் தட்டுப்பாடு போன்ற பலவும் தி.மு.க. _ இ.காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராய் மக்கள் ஓட்டளிக்க உதவிற்று என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இறுதியாக, “மேட்டுக்குடியினரான’’ பார்ப்பனர்கள் இத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் அணிக்கு வாக்களிக்காமல் அ.தி.மு.க. அணிக்கு கட்டுப்பாடாக அளித்தனர். ஒரு சில பார்ப்பனர்கள் நிறுத்தப்பட்ட இடங்களில் கூட அவர்களை வெற்றிபெற வைக்க பார்ப்பனர்கள் தயாராக இல்லை. காரணம் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமை-யில் ஆட்சி அமைந்தால், “ஒரு சூத்திர மக்களுக்கான ஓர் சூத்திர அரசாக’’ அமைந்துவிடுமோ என்ற அவாளது அச்சம்தான். திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சி வந்தால் தங்களுக்கு மிகவும் சாதகமான ஆட்சியாக இருக்கும் என்று நம்பி கட்டுப்பாடாக வோட்டளித்தனர்.

மேலும், அண்ணா அரசு என்று கூறப்படும் ஓர் அரசில் பார்ப்பனர் ஒருவர் (பி.க்ஷி.ஹண்டே) அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவது அண்ணாவுக்கும் அவர் காட்டிய நடை-முறைக்கும் இழைக்கப்படும் துரோகம் என்பதையும் அ.தி.மு.க. அரசுக்குச் சுட்டிக்-காட்டினேன்.

தமிழர்களை நம்பிக் கெட்டவர்கள் உண்டு என்றாலும், “பார்ப்பனர்களை நம்பி வாழ்ந்தவர்கள் எவரும் இல்லை’’ என்று அந்த அறிக்கையில் மிகவும் தெளிவாகச் சுட்டிக் காட்டினேன்.

அன்றே, தி-.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தேன். அதில், பதவிச் சிம்மாசனத்தில் இருந்தாலும், இல்லா விட்டாலும் மக்களின் இதயச் சிம்மாசனத்தில் நீங்காத இடம் பெற்ற எதிர்நீச்சல் வீரர் கலைஞர் அவர்கட்கு நமது உளப்பூர்வ வாழ்த்துகள் என்று குறிப்பிட்டேன்.

இதனை எழுதி முடித்த இரண்டு நாட்கள் கழித்தே, “மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு’’ அய்யங்கார் பார்ப்பன தினசரி (03.06.1980) அன்று தீட்டியுள்ள தலையங்கத்தில் அவாள் கருத்தை அப்படியே கக்கி விட்டது! அதனைக் கண்டித்து 05.06.1980 அன்று ‘விடுதலை’யில் நீண்டதோர் விரிவான அறிக்கையை எழுதினேன். அதில், எக்கட்சி எப்பதவியில் இருந்தாலும் இன உணர்வுக் கயிற்றால் தங்களையே கட்டிக்கொண்டு நிற்கும் பார்ப்பனர்களைப் பார்த்து புத்தி கொள்முதல் இனியாவது பெறமாட்டீர்களா? என்று தமிழர்களுக்கு உணர்த்தினேன்.

இதற்கு எடுத்துக்காட்டாக, சென்னையில் எம்.ஜி.ஆர் மந்திரிசபை பதவி ஏற்கும் நாளில் ஒட்டப்பட்ட ஒரு சுவரொட்டியின் வாசகம் என்ன தெரியுமா?

நசுக்கப்படும் சமுதாயத்தின் உற்ற துணைவன்
நாடோடிகளின் மன்னன்! வீரியத்துடன்
ஆரியத்தை அரவணைக்கும் அண்ணாவின் தம்பி
உன் வெற்றி வாழ்க! வளர்க!

முத்து வெங்கட்ராமன்,
ஆரியத் தலைவர்,

அகில இந்திய நசுக்கப்படும் சமுதாய அமைப்பு

என்று அந்தச் சுவரொட்டியில் இடம் பெற்றிருந்ததை அறிந்து நான் ‘விடுதலை’யில் இரண்டாம் பக்கத்தில் 11.06.1980 அன்று “நமது கழகத்தை எதிர்நோக்கியுள்ள பெரும்பணி’’ என்ற தலைப்பில் நீண்டதோர் தலையங்கத்தை எழுதியிருந்தேன். அதில் இதனைக் கண்டித்து பல்வேறு சம்பவங்களை விளக்கியிருந்தேன்.

9000 ரூபாய் வருமான வரம்பை நீக்கியும், பிற்பட்டோர் இடஒதுக்கீட்டை 50%ஆக உயர்த்தியும் எம்.ஜி.ஆர் ஆட்சி இட்ட ஆணையை மறுபரிசீலனை செய்து நீக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் கோரிக்கை வைத்தனர்.

பார்ப்பனரின் பசப்பு நிறைந்த சூழ்ச்சிக் கோரிக்கையை ஏற்கக் கூடாது. அவர்களின், “கண்ணி வலை’’யில் சிக்கித் தவறு செய்யக் கூடாது என்று எம்.ஜி.ஆர்.அய் கேட்டுக் கொண்டேன்.

நெல்லையில் 13.07.1980 அன்று, “பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு’’ மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், “பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடு’’ _ ஏன்? நடத்தப்படுகிறது என்பதனைக் கழகத் தோழர்களின் முக்கிய கவனத்திற்கு _ கருத்திற்கு அதனை விளக்கி 17.06.1980 அன்று ‘விடுதலை’யின் இரண்டாம் பக்கத்தில் அறிக்கையில், நீதிக்கட்சி ஆட்சி, தந்தை பெரியார் அவர்களது இடையறாத 75 ஆண்டு காலத் தொண்டு இவைகளின் பலனாய்க் கடந்த சில ஆண்டுகட்கு முன்பு வரை; பார்ப்பனரல்லாதார் ஓரளவு கல்வி, உத்தியோக வாய்ப்புகளைப் பெற்றனர் என்றாலும், மீண்டும்அவசரகால நிலையாலும், எம்.ஜி.ஆர் ஆட்சியாலும் பார்ப்பன ஆதிக்கம் புத்துயிர் பெற்று வருகிறது என்பதைத் தமிழக மக்களுக்கு உணர்த்தினேன்.

மதுரை மாநகர் விளாங்குடி ஆலவாய் நகர் ஆசிரியர் குடியிருப்புப் பகுதியில் கழகத் தோழர் ஜி.அழகுமலை அவர்களால் கட்டப்பட்ட புதிய இல்லத் திறப்பு விழா 08.06.1980 அன்று நடைபெற்றது. விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். இந்த நிகழ்ச்சி ஒரு தேவையான நிகழ்ச்சியா என்றுகூட நினைக்கலாம். இதை ஒரு பகுத்தறிவுப் பிரச்சார நிகழ்ச்சியாகத்தான் தோழர்கள் ஏற்பாடு செய்தார்கள். நமது திருமணங்களும் அப்படித்தான் என்பதைத் தெளிவுபடுத்தினேன்.

அய்யா பெரியார் அவர்களின் அயராத உழைப்பால், ஆயிரக்கணக்கான ஆண்டு ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, இழிவு நீங்கி உரிமை பெற்றுள்ளோம். அதை மீண்டும் பறிக்க ஆரியர் சூழ்ச்சி செய்வதால் நாம் விழிப்போடு ஒற்றுமையாய் அதை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

விழாவில், மாநில என்.ஜி.ஜி.ஓ. சங்கத் தலைவர் சிவ.இளங்கோ, புதிய இல்லத்தைத் திறந்து வைத்தார்கள். இந்த விழாவிற்குத் தலைமையாசிரியர் சோனைமுத்து தலைமை ஏற்றார். தோழர் ஜி.அழகுமலை அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். விழாவில் ஏராளமான கழகத் தோழர்கள், தோழியர்கள் உள்படப் பலரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.

15.06.1980 அன்று நீடாமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். கூட்டத்திற்கு அருமை நண்பர் மேல்தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தினுடைய துணைச் செயலாளர் சுப்பிரமணியம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். விழாவில் நான் உரையாற்றும் போது, பார்ப்பனர்கள் பிறப்பிலேயே ஆதிக்கவாதிகள், அவர்களின் பிடியிலிருந்து தந்தை பெரியாரின் உழைப்பால் பார்ப்பனரல்லாதார் பெற்ற மீட்சி, எழுச்சி, உயர்ச்சி பற்றியும் இன்னும் நாம் பெற-வேண்டியவை பற்றியும் அதற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் விளக்கினேன்.

24.06.1980அன்று “அ.இ.அ.தி.மு.க. தோழர்களின் சிந்தனைக்கு…’’ என்ற தலைப்பில் முக்கியமான பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தி அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையில்,
ஒரு பார்ப்பனரும் வடநாட்டவரும் “திடீர் லாட்டரி பிரைஸ்’’ விழுந்தவர்களைப் போல் எம்.பி. ஆகியுள்ளனரே, அவர்களுக்கு அ.இ.அ.தி.-மு.க. எம்.பி.க்கள் ஆக என்ன தகுதி என்பதே ‘திராவிடப் பாரம்பரியத்தில்’ உள்ள நம்மைப் போன்றவர்கள் கேள்வியாகும்.

திராவிடப் பாரம்பரியத்தை கருணாநிதி அடகு வைத்து விட்டார். அதை எப்போதும் காப்பதுதான் எங்களின் ஒரே பணி என்று சட்டமன்றத் தேர்தலில் தோள் தட்டியவர்கள் இப்படியா நடந்துகொள்வது?

இனி அ.தி.மு.க. என்றால் அண்ணா தி.மு.க. என்பதற்குப் பதிலாக அக்கிரகார தி-.மு.க. என்பது அல்லவா ஆகிவிடும். அக்கழகத்தில் உள்ள கொள்கையுள்ளம் படைத்த அருமைச் சகோதரர்கள் நீங்கள் கொஞ்சம் உரக்கச் சிந்தியுங்கள் என்று இடித்துரைத்தேன்.

13.7.1980 அன்று மாலை நெல்லை நகரில் நடைபெற்ற மிகப்பெரும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு பேசினேன்.

“தோழர்களே! தந்தை பெரியார் தோன்றி பார்ப்பனரல்லாத மக்களுக்காகப் பாடுபடுகின்ற வரை நம் நிலை என்ன? அரசாங்க பதிவேடுகளில் எல்லாம்கூட ‘சூத்திரர்’ என்றுதான் குறிப்பிட்டார்கள்.
பச்சையப்ப முதலியார் என்ற தமிழர் கல்வி நிறுவனங்களை உண்டாக்கினார். அந்த பச்சையப்பர் கல்லூரியிலேகூட தாழ்த்தப்பட்ட நம் சகோதரன் உள்ளே நுழையமுடியாத நிலை. முஸ்லீம், கிருத்தவன், தாழ்த்தப்பட்டவன் ஆகியோர் இந்துக்கள் அல்ல என்று காரணம் சொல்லப்பட்டு, அத்தகைய மாணவர்களுக்கு, பச்சையப்ப முதலியார் என்ற இந்து மதத்தவரால் உண்டாக்கப்பட்ட கல்லூரியில் இடம் கிடையாது என்று முறை வகுத்து வைத்திருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கூட இந்து இல்லையா என்ற பிரச்சினை எழுந்தபொழுது தாழ்த்தப்பட்டவர்கள், அவர்ணஸ்தர்கள். ஆகவே, அவர்கள் இந்துவாக இருக்க முடியாது என்று காரணம் கூறப்பட்டது.
தந்தை பெரியார் குரல் கொடுத்த பிறகுதானே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முஸ்லீம்களுக்கும், கிருத்தவர்களுக்கும் இடம் கிடைத்தது. ஆரிய பார்ப்பனர் ஆதிக்கம் தகர்ந்தது. இது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆனால், பார்ப்பனர்கள் மீண்டும் ஆதிக்கத்தை உருவாக்கப் பார்க்கின்றனர். எஞ்சி இருக்கும் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பார்க்கின்றனர். அத்தகைய ஆதிக்கத்தை இனியும் அனுமதிக்க முடியாது என்கிற இலட்சிய உரிமைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் பணியைத்தான் திராவிடர் கழகம் தற்போது செய்து கொண்டு இருக்கிறது.

இன்றைக்கும் அய்.பி.எஸ். பதவிகளை எடுத்துக்கொள்ளுங்கள். அய்.ஏ.எஸ். பதவிகளை எடுத்துக் கொள்ளுங்கள், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளை எடுத்துக் கொள்ளுங்கள், மத்திய அரசுத் துறைகளை எடுத்துக் கொள்ளுங்கள், அங்கெல்லாம் பார்ப்பனர் ஆதிக்கம்தானே கொடிகட்டிப் பறந்துகொண்டு இருக்கிறது. யாராலும் இல்லை என்று மறுக்க முடியுமா?

தமிழ்நாடு உயர்நீதிமன்றத்திலே 25 நீதிபதிகள் இருக்கிறார்கள் என்றால், நூற்றுக்கு மூன்று என்கிற அவர்களது சதவிகிதப்படி பார்த்தால் ஒன்றுகூட வரமுடியாது. ஆனால், எத்தனை மடங்கு அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்? இது ஆதிக்கம் அல்லவா?

வன்முறை இயக்கமாக திராவிடர் கழகத்தைக் காட்ட வேண்டும் என்று பார்ப்பனர்கள் பார்க்கின்றார்கள். வன்முறை மீது தந்தை பெரியாருக்கு எப்பொழுதும் நம்பிக்கை இருந்ததே கிடையாது. துப்பாக்கிகளின் சக்தியைவிட அய்யா அவர்களின் எழுத்துக்-களுக்கு வலிமை உண்டு. அய்யா அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் நாம். பிரச்சாரத்தின்-மூலம் மக்கள் கருத்தை உருவாக்க நம்மால் முடியும்.

ஒரு வீரமணியைக் கைது செய்து விடுவதாலேயே இந்த இயக்கம் நின்று விடுமா? குரல் ஓய்ந்து விடுமா? அப்படி கைது செய்யப்பட்டாலும், சாகடிக்கப்பட்டாலும்  “ஆயிரம் ஆயிரம் வீரமணிகள்’’ வெளிவரு-வார்கள். ஒவ்வொருவரும் “வீரமணி’’யாகத்தான் உருவாவார்கள்.

பார்ப்பன ஆதிக்கம் என்பது இன்று எல்லா துறைகளிலும் பரவிக் கிடக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும். 100க்கு 3 பேராக இருக்கும் ஒரு சமுதாயம் 97 பேர் இடங்களை உத்தியோகத்துறையிலே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. கலைத் துறையிலே தொழில் துறையிலே, பத்திரிகைத் துறையிலே, இசைத் துறையிலே இப்படி எல்லாத் துறைகளிலும் அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இந்து சமயத் தோழர்களே ஒன்று சேருங்கள்’’ என்று எழுதியிருக்கிறாயே! பார்ப்பனர்களுக்கு ஆபத்து என்றவுடன் ‘இந்து’ சமுதாயத் தோழர்கள் ஒன்றுசேர வேண்டுமோ! சரி; ஒன்று சேருங்கள்! திராவிடர் கழகத்தின் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டை எதிர்ப்பதற்குத் தான் ஒன்றுசேர வேண்டுமோ! கோயில் கருவறைக்குள் மணி அடிப்பதற்கு இந்து சமுதாயத்தினர் ஒன்று சேர்ந்தால் நீ உள்ளே அழைத்துப் போகத் தயாரா? அதற்குத் தயாரா? உனக்கு தைரியமிருக்குமானால் வா!

எங்களைக் கலவரம் செய்வதற்கு என்னுடைய சகோதரனை என்னுடைய சகோதரனுடன் மோதவிடுவதற்கு இந்து சமுதாயத்தை அழைக்கிறாயா? வா! தாக்கு! பரவாயில்லை; எங்களைச் சாகடி! பரவாயில்லை.

எங்களுடைய ரத்தத்திற்குப் பிறகாவது எங்களை கருவறைக்குள் அழைத்துப் போக  தயாரா?
தி.க.வை கலைக்கத் தயார்!

ஜாதியே வேண்டாம்; இதோ எங்கள் இந்து சமயப் பழக்க வழக்கத்தை நிறுத்திவிட்டோம்; பூணூலை எடுத்துவிட்டோம்! ‘சந்தியா வந்தனத்தை’ நிறுத்திவிட்டோம்; ஒருமைப் பாட்டைப் பேசுவோம் என்று சொல்வதற்கு பார்ப்பனர்களே நீங்கள் தயாரா?

சாதியை ஒழிப்பதற்கு தயாரா? வா!

அப்படியானால் திராவிடர் கழகத்தையே கலைக்க நாங்கள் தயார்!” என்று பேசினேன்.

எனது உணர்ச்சிமிகு உரையைக் கூடியிருந்த லட்சோபலட்சம் மக்கள் வெள்ளம் அமைதியோடும் _ உணர்ச்சியோடும் கேட்டுக் கொண்டிருந்தது. ஊசி விழுந்தால் சத்தம் கேட்கக்கூடிய அளவுக்குக் கூட்டத்தில் அமைதி நிலவியது! கட்டுப்பாடு மிக்க அந்த உணர்ச்சிபூர்வமான கூட்டம் _ உரை கேட்டு உணர்ச்சிப் பிழம்பாகியது!

நான் மேலும் பேசுகையில், “இந்த மாநாட்டின் நோக்கம் சமுதாயத்திலே ஒரு ‘Friction’ ஏற்படுத்துவதற்கு அல்ல; ஒரு பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் மோதலை ஏற்படுத்துவதற்கு அல்ல. நீண்ட காலமாக நெடுங்காலமாக இருக்கும் ஆதிக்க உணர்வைச் சாய்க்க வேண்டும் என்பதற்கே இம்மாநாடு!

ஆளை அடிப்பதற்கு அல்ல மாநாடு! ஆதிக்கத்தைச் சாய்ப்பதற்கே!

எது நடந்தாலும், நிச்சயமாக ஒரு தமிழன் இன்னொரு தமிழனோடு மோதமாட்டான்; மோதவேண்டிய கட்டம் வந்தாலும், மோத வேண்டிய இடம் எது? என்று எங்களுக்குத் தெரியும்! எங்களது இனப் பகைவர்களிடம்தான் மோதுவோம்!

ஒன்றே ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆத்தூரிலே தந்தை பெரியார் அவர்கள் சட்ட வரம்புக்குட்பட்ட கத்தியை ஒவ்வொரு திராவிடர் கழகத் தோழரும் பாதுகாப்புக்காக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் போட்டிருக்கிறார்கள். எனவே, தோழர்களே தற்காப்புக்காக இன்று முதல் அதை புதுப்பியுங்கள். புதுப்பியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்தப் பார்ப்பனர் பிரச்சினையை பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி முடிவதற்கு முன்பே தீர்த்துவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த நாடு ‘பார்ப்பன நாயக’த்தின் கொடுமையின் கீழ் அவதிப்பட நேரிடும் என்று தந்தை பெரியார் அவர்கள் 1925ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் எச்சரித்ததாக ‘இந்து’ நூற்றாண்டு விழா மலரிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. தந்தை பெரியாரே ஆங்கிலத்தில் ஒரு சொல்லை உருவாக்கி ‘பிராமினோகிரேசி’ என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பார்ப்பன நாயகத்துக்கு வித்திடக் கூடாது என்பதற்குத் தானே இந்த மாநாடு!

சன்னியாசியாகப் போகக் கூட சூத்திரனுக்கு உரிமை இல்லை என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வந்திருக்கிறது-. இதைவிடக் கொடுமை என்ன?

பார்ப்பனரல்லா தமிழர்களே! நீங்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், இன உணர்ச்சி பெற்று, ஆதிக்கத்தை எதிர்த்து உரிமைக்காக ஒன்று திரளுங்கள்! பார்ப்பனர்களுக்கு “கருவேப்பிலை’’ ஆகாதீர்கள்.

துப்பாக்கியும் பேனாவும்

அரசாங்கத்தின் துப்பாக்கியைவிட பெரியாரின் பேனாதான் இந்தச் சமுதாயத்திலே வலிமை வாய்ந்ததாக இருந்திருக்கிறது. அதைத்தான் மீண்டும் சொல்கிறேன். கழகத் தோழர்களே எவ்வளவு நாளுக்கு பொறுமை என்று எண்ணாதீர்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது தவறல்ல. அதே நேரத்தில் கோழைகள் என்பதற்கு அடையாளமல்ல. ஏன் அவசரப்பட வேண்டும்? இனிமேல் பார்ப்பனரல்லாத மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். முடிவு பார்ப்பனர் கையிலே இருக்கிறது. நீ எப்படி நடந்து கொள்ளப் போகிறாய்? புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளப் போகிறாயா?

நாடு முழுவதும் இருக்கிற எங்கள் தொகை 97 சதவீதத்திலே 7 சதவீதம் உணர்ச்சி உடையவனாக இருந்தால்கூட அவன் விடுகின்ற மூச்சுக் காற்று உங்களை அலாக்காக எங்கோ தூக்கிக் கொண்டுவிடும். இதற்கெல்லாம் ஆளாகாதீர்கள். சமத்துவம், சகோதரத்துவம் இவற்றிற்குத்தான் மீண்டும் வாதாடுகிறோம். கோழைத்தனத்தால் அல்ல.

மேற்கு வங்கத்திலே!

மேற்கு வங்கத்தைப் பாருங்கள் என்று சொல்கிறார்களே _ அந்த மேற்கு வங்கத்திலே ஜோதிர்மாய்பாசு ஆண்டு கொண்டிருக்கிற வங்காளத்திலே 172 ஏம்.எல்.ஏ.க்கள், தாழ்த்தப்-பட்ட  மலைவாழ் மக்கள் இருக்கிற-போது ஒரு தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏ.வைக்கூட அமைச்சராக்கவில்லை _ அந்த அமைச்சரவையிலே! இது எவ்வளவு பெரிய கொடுமை?

உரிமைக்குரல் கொடுப்பதிலே எங்கள் உயிர்மூச்சு அடங்குமானால், அடங்கட்டும்!’’ என்று உணர்வுபொங்கக் கூறினேன்.

மாநாட்டுச் சிறப்பு:

“பார்ப்பன ஏடுகளை வாங்குவீர்களா’’ என்று நான் கேட்டபோது, வாங்க மாட்டோம்; வாங்க மாட்டோம் என்று முழக்கமிட்டனர். தாய்மார்களும் ஏராளமான அளவில் திரண்டு வந்திருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

வீடுகளின் மாடிகள் மீதும் ஏராளமான மக்கள் அமர்ந்து உரையைக் கேட்டனர்!

நெல்லை கழக வரலாற்றில் எழுச்சி அத்தியாயத்தை இம்மாநாடு உருவாக்கிவிட்டது!

நெல்லை முழுதும் கருஞ்சட்டை மயமாகவே காணப்பட்டது!

இன எதிரிகளான பார்ப்பனர்கள் _ மாநாட்டு எதிர்ப்புச் சுவரொட்டிகளை ஒட்டாத இடமே இல்லை; நாளேடுகளில் மாநாட்டை எதிர்த்து முழுப் பக்க விளம்பரமே தந்திருந்தனர். சுவர்களில் மிகவும் தரக்குறைவான மொழிகளில் கழகத்தைப் பற்றி எழுதியிருந்தனர்! எதிரிகளின் இந்த எதிர்ப்பு, மாநாட்டுக்கு நல்ல விளம்பரத்தைத் தேடித் தந்துவிட்டது!

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடு காலை 10 மணி அளவில் தொடங்கி, மாலை 4 மணி வரை தொடர்ந்து நீடித்தது. கடும் வெய்யிலிலும், மண்டபத்துக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான தோழர்கள் அமர்ந்து உரையைக் கேட்டனர். மண்டபம் நிறைந்து வழிந்தது!
மா

நாடு முடிந்தவுடனேயே ஊர்வலம் துவங்குவதற்கான ஏற்பாடுகளும் துவங்கி-விட்டன. 4-.35 மணிக்கே ஊர்வலம் அணிவகுத்து நின்றுவிட்டது! ஊர்வல மாட்சியைக் காண 4 மணிக்கே வீதிகளில் பொதுமக்கள் திரண்டு நின்றனர்.
(நினைவுகள் நீளும்)