பள்ளி மாணவர்களுக்கான உணவுமுறை

மார்ச் 16-31

பள்ளி மாணவர்கள் கீழ்க்கண்டவாறு உணவு உண்பது சுறுசுறுப்பாகப் படிக்க உதவும். குறிப்பாகத் தேர்வுக் காலங்களில் இந்த உணவுமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

1.    சாப்பிட்டுக் கொண்டே படிக்கக் கூடாது. தண்ணீர், பழச்சாறு, மோர் போன்ற திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். தயிர் சாப்பிடுவது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.

2.    மூன்று வேளையும் அதிகமாக சாப்பிடும்-போது ரத்த ஓட்டம் மூளைக்குச் செல்லாமல், செரிமானத்திற்குப் பயன்படும். அதனால் மந்தநிலை ஏற்படும். அதனால் மூன்று வேளை உணவை 6 வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

3.    வைட்டமின் சி, பீட்டாகரோட்டின், ஒமேகா 3 மற்றும் ஃபோலிக் அமில சத்துகள் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவது நல்லது.

4.    எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், கொய்யா போன்றவற்றில் வைட்டமின் சி உள்ளது. பப்பாளி, கேரட், பரங்கிக்காய் உள்ளிட்ட மஞ்சள், ஆரஞ்சு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளில் பீட்டா கரோட்டின் சத்து இருக்கிறது.

5.    காராமணி, சோயா, உலர்ந்த பழங்கள், வெந்தயக்கீரை போன்றவற்றில் ஒமேகா 3 சத்து உள்ளது. கீரை வகைகள், ப்ரோக்கோளி மற்றும் பச்சை நிறமுள்ள பழங்கள், காய்கறிகளில் ஃபோலிக் அமிலச் சத்து உள்ளது. போலிக் அமிலம் சுரப்பதால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

6.    வைட்டமின் பி மற்றும் இரும்புச் சத்தும் மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பார்லி, மக்காச்சோளம், க்ரீன் டீ சாப்பிடலாம். க்ரீன் டீ மூளையைச் சுறுசுறுப்பாக்கும்.

7.    வாழைப்பழம் சாப்பிடலாம். வைட்டமின் சி உள்ள நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை பழச்சாறுகள் குடிப்பது உடலுக்கு வலிமை சேர்க்கும்.

8.    எக்காரணம் கொண்டும் தேர்வுநேர பரபரப்பில் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. அப்படி தவிர்க்கும்போது மறதி ஏற்படும். காலை உணவைச் சாப்பிட்டால் தான் மன அழுத்தம் குறையும்.    

9.    காலையில் சாப்பிட முடியவில்லை என்றால் இரு வாழைப்பழங்கள், கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிட்டால் அதுவே காலை உணவுக்கு நிகரானதாக இருக்கும்.

10.    பால், உலர்ந்த பழங்கள், சுண்டல் மற்றும் சிறுதானியங்களை எடுத்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடுகிறவர்கள் அதிகம் கொழுப்-பில்லாத மாமிச உணவைச் சாப்பிடலாம்.

11.    இரும்புச்சத்து, வைட்டமின் டி பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவை. அந்த மாதிரியான உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.

12.    ஒரு நாளைக்கு 2 முட்டை அவசியம். வாரத்திற்கு 3 முறை கீரைகள் சாப்பிடலாம். நிலக்கடலை, வெண்ணெய் நல்லது.

13.    தேங்காய் அதிகம் கலந்த உணவைச் சாப்பிட்டால், தூக்கம் வரும். தேர்வு நேரங்களில் டி.வி., மொபைல் போனை பார்க்கக் கூடாது.

14.    எண்ணெயில் பொறித்த உணவுகளையும், துரித மற்றும் செயற்கை உணவுகளையும் சாப்பிடக் கூடாது. பரோட்டா, சமோசா சாப்பிடக் கூடாது. வெளியில் விற்கப்படும் உணவைத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது. இறால் சாப்பிடக் கூடாது. பாக்கெட் உணவுகள் கூடாது.

15.    கேக், பிஸ்கட், குக்கீஸ், சர்க்கரை கலந்த செயற்கை உணவுப் பொருள்கள், செயற்கை குளிர்பானங்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மிளகைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

16.    உணவில் பச்சைமிளகாய், மிளகு கலந்து சமையல் செய்து கொடுக்கலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு நல்லது. தினமும் இரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். குளிர்பானங்கள் கூடாது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *