கார்ப்பரேட்டுகளை வளர்த்து, கல்வி வளராது தடுக்கும் பா.ஜ.க ஆட்சி

மார்ச் 16-31

வி.குமரேசன்

மத்தியில் மதவாத பி.ஜே.பி. ஆட்சி வந்தது முதல் மக்கள் நலத்திட்டங்களை முடக்கி, வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறது. குறிப்பாக மக்களின், இளைஞர்களின், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படையான கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து வருகிறது.

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேட்டின் ஆய்வுக் கட்டுரை இதோ:

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை வாயிலான கல்வித்துறைக்கான மொத்தச் செலவினங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகின்றன.

2013_-2014ஆம் ஆண்டுக்கான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பாக வெளியிட்ட கடைசி நிதிநிலை அறிக்கையில் மொத்தச் செலவினங்களில் கல்விக்கான ஒதுக்கீடு 4.57 விழுக்காடு அளவில் இருந்தது. பின்னர் அந்த ஒதுக்கீடு தொடர்ந்து இறங்குமுக நிலையில் நீடிக்கிறது. 2016_-2017ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் திருத்திய மதிப்பீட்டின்-படி கல்விக்கான ஒதுக்கீடு 3.65 விழுக்காடாகக் குறைந்துள்ளது.  நடப்பு ஆண்டிற்கான அறிக்கையில் மதிப்பீட்டு முதலீடு சிறிதளவே கூடுதலாகியுள்ளது (3.71 விழுக்காடு).

பன்னாட்டு நிதிநிலை பற்றிய ஆய்வறிஞர்கள், கல்விக்கான நிதி ஒதுக்கீட்டின் அக்கறை வலுவினை அறிந்து கொள்ள நாட்டின் மொத்த உற்பத்தியில் கல்விக்கான பங்கு எவ்வளவு உள்ளது என்பதையே அளவுகோலாகக் கருதுகின்றனர். அந்த அளவுகோலின்படி

2013_-14ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தியில் கல்விக்கான பங்கு 0.63 விழுக்காடு என்ற நிலையிலிருந்து 2017_-2018 ஆண்டுக்கான முன்னோட்ட அறிக்கையின்படி 0.47 விழுக்காடு எனக் குறைந்துள்ளது.  மனிதவள மேம்பாட்டுத் துறைக்கான நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8 விழுக்காடு அதிகம் என உள்ளது.  இது ஒரு புள்ளிவிவர தோற்றப்பிழையே தவிர உண்மையில் ஒதுக்கீடு அதிகரிக்கவில்லை. ஓராண்டில் உயர்ந்த பணவீக்க அளவிலான 5-6 விழுக்காடு, நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உயர்வினை சரிசமன் செய்து உண்மையில் கல்விக்கான நிதிச் செலவின உயர்வு எதுவும் இல்லை என்ற நிலையினை உருவாக்கியுள்ளது.

2016_-2017ஆம் ஆண்டு முதல் முக்கிய துறை களுக்கான மத்திய அரசின் திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தத்தின்படி மேனிலை மற்றும் உயர்கல்விக்கான நிதி முதலீடு குறைந்துள்ளது. 14ஆம் நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி நேரடி நிதி மாற்றங்கள் (direct transfers) அதிகரித்து வருகின்றன. இந்தப் பரிந்துரை அமலாக்கத்தின் மூலம் மத்திய அரசின் மேனிலை, உயர் கல்வி வளர்ச்சித் திட்டங்களான ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் மற்றும் ராஷ்ட்ரிய உச்தர் சிக்ஷா அபியான் ஆகியவற்றிற்கு, 2015_-2016ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட முதலீட்டு அளவான 7 விழுக்காடு நிலையிலிருந்து குறையும் நிலை ஏற்பட்டுள்ளது!

மேற்குறிப்பிட்டவை வெறும் எண்கள் சார்ந்த புள்ளி விவரம் மட்டுமல்ல; ‘‘அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும்; தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்.’’ இந்தச் சீரிய நடவடிக்கைகளுக்காகப் பொதுச் செலவினங்களில் கல்விக்கான அளவு அதிகப்பட வேண்டும் என்பதன் முக்கியத்து-வத்தை உணர்த்திடும் நிலையும் புள்ளி விவரத்தில் உள்ளடங்கியுள்ளது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், 6- முதல் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் ஆரம்பக் கல்வி பெறும் வகையில் அரசின் திட்டங்கள் தீட்டப்பட்டது பாராட்டத்தகுந்ததாக இருந்தது. அந்த ஆட்சிக்குப் பின்னர் வந்த ஆட்சிக்காலத்தில் இந்தக் கல்வி வளர்ச்சியில் சிறிதளவு அக்கறையே காட்டப்பட்டது. அதனால் கல்வி வளர்ச்சியானது சீர்குலைவு அடைந்திடும் நிலை உருவானது.  பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் மொத்த விகிதம் (Gross Enrolment Ratio -_ பள்ளிக் கூடத்தில் ஒரு நிலையில் படிக்கும் மாணவர்-களின் எண்ணிக்கை, அந்த வயதில் நாட்டில் உள்ள மொத்தப் பிள்ளைகள் எண்ணிக்கையில் உள்ள அளவு) சீர் குலைந்து வருகிறது. தொடக்கக் கல்வி பெறும் மாணவர்களின் அளவானது உயர் மேனிலைக் கல்வி பயில வரும் நிலையில் 54 விழுக்காடாகக் குறைந்து விடுகிறது. தோராயமாகச் சொல்வதானால், தொடக்கக் கல்வி பெற்று வரும் மாணவர்கள் சரி பாதியினர் மட்டுமே, உயர் மேனிலைக் கல்வி கற்க வருகின்றனர். மீதிப் பாதியினர் கல்விக் கூடங்களை விட்டு விலகி விடுகின்றனர். இப்படி கல்வி கற்பதிலிருந்து ஒதுங்குபவர்கள் 3.5 கோடிப் பிள்ளைகள் ஆவர். உயர்கல்வி கற்பதிலிருந்து ஒதுங்கும் நிலைமை இதைவிடப் படுமோசம். 18 முதல் -23 வயது வகையினரில் 24 விழுக்காட்டினர் மட்டுமே உயர்கல்வி பயில முடிகிறது. இப்படி உயர் கல்வி பெறுபவர்களில், தொலைதூரக் கல்வி பெறுபவர்களும்  உள்ளடக்கம்.

முன்னேற்றமடைந்த நாடுகளில் மாணவர் சேர்க்கையின் மொத்த விகிதம் 50 விழுக்காடு அளவிற்கு நெருக்கமாக உள்ளது. எனவே இந்த நாட்டில் 7.1 கோடி இளைஞர்கள், இன்னமும் உயர் கல்வியினை எட்டா நிலையில்தான் உள்ளனர் எனும் அவல நிலை நீடிக்கிறது.

மாணவர் சேர்க்கை விகிதம் தலித் மற்றும் பழங்குடி மரபின சமுதாயத்தினரிடம் மிகவும் குறைவு. ஆனால் அந்தச் சமுதாய மாணவர்கள் பள்ளியிலிருந்து விலகிடும் விகிதம் அதிகமாக உள்ளது. அப்படி ஒதுங்கிடும் பிள்ளைகளைக் கல்வித் திட்டங்களின்மூலம் சென்றடைய வேண்டும்.  பள்ளிக் கட்டமைப்பு வசதியும், கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்.  தொண்டு செய்திடும் அமைப்புகளோ, கார்ப்பரேட்  நிறுவனங்களோ இந்த அவல நிலையினை அகற்றி விட முடியாது.  மத்திய அரசோ, சர்வ சிக்ஷா அபியான் கல்வித் திட்டத்திற்கு வெறும் 4 விழுக்காடு அளவு நிதி ஒதுக்கீட்டையே அதிகரித்து உள்ளது.

கல்விப் பிரச்சினை இத்துடன் முடிந்து விட வில்லை.  கல்வி பயிலும் வயதினர் அனைவரும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்க்கப்பட்ட பிறகும், அவர்களை பயிற்றுவிக்க நல்ல, உரிய கல்வி பயின்ற  ஆசிரியர்களின் தேவை அதிகமாக உள்ளது.

தற்சமயம், நாட்டில் 86 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 15 லட்சம் உயர் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே உரிய கல்வியினை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை, உருவாக்கிட கல்வி வசதிமிக்க ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தேவைப்-படுகின்றன. ஆனால் அதற்கான நிதி ஆதாரம் உள்ளதா?

மேலும் கல்வி பற்றிய ஒரு பிரச்சினை 2010ஆம் ஆண்டிலிருந்து நீடிக்கிறது. கட்டாயக் கல்விச் சட்டமானது, மாணவர் -ஆசிரியர் விகிதம் மற்றும் கட்டட மற்றும் உபகரண கட்டமைப்புகளை அடிப்படை கட்டாய விதிகளாக வலியுறுத்து-கிறது. மொத்தக் கல்விக் கூடங்களில் 10 விழுக்காடு அளவில்தான் இந்த கட்டமைப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படுவதாக ஓர் ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது. இதர கல்விக் கூடங்களையும் கட்டாயக் கல்விச் சட்ட விதிமுறைகளின் கீழ் கொண்டுவர அதிக அளவில் நிதி ஆதாரம் தேவைப்படுகிறது.

கல்விக்கான விளிம்பு மற்றும் குடும்பச் செல வீனங்களால் நாட்டின் கல்வி முறை ஆட்டம் கண்டு வருவது அதிகரித்து வரும் நிலையில் கல்வியின் தரம் வேகமாகக் குறைந்து வருகிறது. மொத்த மாணவர்களில் கால் பகுதியினர் தனியார் பயிற்றுவித்தலை (Private tuitions) நம்பி உள்ளனர். கல்வி முறையானது நிதிப் பற்றாக்-குறையினால் வாடும் நிலை தொடருமானால் அது ஒரு பேரழிவினை உருவாக்கிடும் என்பது மட்டும் உறுதி.

ஆதாரம்: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா,
பிப்ரவரி 6, 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *