கே: “உடைபடும் தேசியத்தால் மட்டுமே உரிமைகளை மீட்டெடுக்க முடியும்’’ என்ற கொள்கை பற்றித் தங்கள் கருத்து என்ன?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
ப: ‘கடவுள்’ என்ற இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து வளர்த்துவிட்டிருப்பது போன்றதே ‘தேசியம்’ என்றுள்ள கற்பனையும்!
ஒரே நாட்டில் (பாகிஸ்தானில்) இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருந்தபோதுகூட ‘தேசியம்’ உண்மையாக இருந்திருந்தால் “வங்க தேசம்’’ உருதுமொழி ஆதிக்கம் _ வங்க மொழிக்கான உணர்வுகள்தானே அந்த ‘தேசம்’ பிறக்கக் காரணமானது _ இல்லையா?
எனவே இல்லாத ஒன்றை உடைப்பது என்பதுகூட ஓர் இனிய சொற்றொடர்தான்!
கே: தமிழரின் “தைப்புரட்சி’’யால் மீட்டெடுக்கப்பட்ட “சல்லிக்கட்டு’’ நிகழ்வுகளில் ஜாதி நுழையாமல் தடுக்க என்ன செல்லலாம்?
– ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி
ப: தமிழரின் பண்பாட்டு அடையாளம் என்பதை நிலைநிறுத்தி, குறுகிய வட்டாரங்களிலிருந்து விடுதலை செய்தாலே எளிதாக அது நடந்துவிடும்.
கே: சமூகப் பொருளாதார, அரசியல் துறைகளில் காவிகளுக்கும், கறுப்புச் சட்டைகளுக்கும் நடக்கும் ஆரிய திராவிடப் போராட்டத்தில் கறுஞ்சட்டைப் படைக்கு முழு வெற்றிக்கு காலக்கெடு உண்டா?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: போராட்ட வெற்றிகளுக்கு எப்போதுமே காலக்கெடு கிடையாது!
கே: உஞ்சவிருத்தி என்பதே பார்ப்பான் நம்மிடம் பிச்சை பெற்றதைக் காட்டுகிறது. அப்படிப்பட்டவன் நம்மை இழிந்தவர்கள் என்பது மோசடியல்லவா?
– பெரியார் திறலோன், பாண்டிச்சேரி
ப: உண்மைதான்; பெரும்பாலான நம் இன ஈனப் பிறவிகளுக்கு _ அவர்கள் பணக்காரராக பட்டம், பதவி பெற்றோர் ஆயினும் _ புரிந்து மான உணர்வுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்ள மறுக்கிறார்கள்.
கே: மற்றவர்களிடம் துளைத்து துளைத்து கேள்வி கேட்கும் ஊடகங்கள் எல்லாம் கேடி சாமியார் ஜக்கி வாசுதேவ் பற்றி கேள்வி கேட்காதது ஏன்? அவர் மோசடிகளைப் பேசாதது ஏன்?
– சி.பச்சையப்பன், காஞ்சி
ப: அவருக்கு எதிரான செய்திகளைக்கூடப் போடாமல் இருட்டடிப்புச் செய்து விடுகிற கொடுமையையும் நாம் பார்க்கிறோம். கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டளைக்குக் கீழ் ஊடகங்கள்!
கே: திருட்டு கஞ்சா விற்ற ஜக்கி வாசுதேவிற்கு இவ்வளவு கோடி சொத்துகள் வந்தது பற்றி வருமான வரித்துறை ஏதும் செய்யாதது ஏன்?
– வே.மாணிக்கம்வேல், வேலூர்
ப: பழைய ஆதிமூலத்திற்குச் _ சென்றால் எல்லாமும் நாறுமே! மத்தியில் உள்ள காவிக் கட்சியே அவர்களது காலடியில் அமர்ந்துள்ளதே!
கே: தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்கக் கூடாது என்ற கோரிக்கை சரியா?
– தி.நாராயணசாமி, அரக்கோணம்
ப: முற்றிலும் நியாயமானது! சட்டப்படி சரியானதும்கூட! பொது ஒழுக்கம் கருதி. 100 கோடி அபராதம், 4 ஆண்டு கடுங்காவல் பெற்ற முதல்வர் என்ற “பெருமை’’ எந்த முதல் அமைச்சருக்கும் கிடையாதே!
கே: ‘ஆரியம் ஆளணும், திராவிடம் அடிமையாய் இருக்கணும்’ என்று ஆர்.எஸ்.எஸ். கூட்டம் என்னதான் கூச்சலிட்டாலும் சுயமரியாதை உணர்வு நாடெங்கும் தெறிக்கிறதே?
– இல.சங்கத்தமிழன், செங்கை
ப: அதுதான் பெரியார் விதைத்திட்ட வீரியம் குன்றா விதைகளின் தாக்கம்!
கே: கார்ப்பரேட் சாமியார்களுக்கு எதிராக ஊடகங்கள் வாய் திறக்காத நிலையில் தற்போது ‘பூவுலகின் நண்பர்கள்’ போன்ற நூற்றுக்கணக்கான சூழலியல் பாதுகாப்பு அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளது எதைக் காட்டுகிறது?
– அயன்ஸ்டின் விஜய், ஆவடி
ப: உண்மையான சமூகநலப் பற்றாளர்-களுக்கு பஞ்சமில்லை என்று நம்மை ஆறுதல் கொள்ளச் செய்கிறது! தொடர்க அவர்களது தொண்டறம்!