இந்தியாவில் வெறும் 5 விழுக்காடு பெண்-களுக்கு மட்டுமே கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. 80 விழுக்காடு பெண்கள் இன்றும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு கூட கணவரின் அனுமதிக்காக காத்திருக்கவேண்டிய அவலம் நிலவுகிறது,
இந்திய மனிதவளத்துறை கண்கானிப்பு அமைப்பு மற்றும் மேரிலாண்ட் பல்கலைக்கழகப் பொருளாதார பிரிவு இரண்டும் இணைந்து 2004_-05 மற்றும் 2011_-12 ஆண்டுகளில் இரண்டு பிரிவாக இந்திய பெண்கள் மற்றும் ஆண்களிடம் ஆய்வு நடத்தியது.
இந்தியா முழுவதும் நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் மாநிலங்களில் பல்வேறு பகுதிகளிலும், இந்திய யூனியன் பகுதிகளிலும் இந்த ஆய்வு நடத்தப் பட்டது. இந்த ஆய்வில் 34000 பெண்கள் கலந்துகொண்டனர். பெண்கள் சாதாரன தேவைகளைப் பெறும் உரிமைகளைக் கூட இன்றுவரை பெறவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 2005ஆம் ஆண்டு எடுத்த ஆய்வில் 74 விழுக்காடு பெண்கள் தங்களின் உடல் நலம் பேண சுகாதார மையங்களுக்குச் செல்வதற்குக்கூட கணவரின் அனுமதியைப் பெற்றுச் செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால், 10 ஆண்டுகள் கழித்தும் இந்த எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. 2015 ஆம் ஆண்டு 5 சதவீத பெண்கள் மட்டுமே இந்த உரிமையைப் பெற்றுள்ளார்கள். இந்த நிலை ஏன் உருவாகிறது என்பதைக் கண்டறிய பெண்களின் திருமண உரிமையை கணக்கில் எடுத்துக் கொண்டால் நன்கு புரியவரும். அதாவது 4.99 விழுக்காடு பெண்கள் மட்டுமே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, தாங்களே தங்களது கணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இது 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் நிலை ஆகும்
அதாவது 73 விழுக்காடு பெண்கள் தங்களது பெற்றோர்கள், தங்களின் உறவினர்கள் கூறும் கணவரை இணையராக ஏற்கும் கட்டாயத்தில் உள்ளனர். இவர்களின் உரிமையோ விருப்பமோ அல்லது ஆசைகளோ எந்த ஒரு இடத்திலும் பெற்றோராலோ அல்லது காப்பாளர்களாளோ கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. 22 விழுக்காடு பெண்கள் தங்களது உரிமைக்காக இறுதிக் கட்டம் வரைப் போராடி, தோற்று, தங்களின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் தேர்வு செய்யும் ஆணையே திருமணம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதில் வெறும் 5 விழுக்காடு பெண்கள் மட்டுமே தங்கள் உரிமையை மீட்டு சுதந்திரமாக தங்கள் கணவரைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்.
தாலிபான் மற்றும் மத்திய ஆசியாவின் தீவிர மதவாதக் குழுக்களின் ஆளுகைக்கு உட்பட்டப் பகுதிகளில், ஆண் துணை இல்லாமல் பெண்கள் தனியாக கடைக்குச் செல்லக்கூடாது, பள்ளிகளில் படிக்கச் செல்லக்கூடாது என்ற பல சட்ட-திட்டங்களை இயற்றியுள்ளனர் என்று கேள்விப்பட்டு வேதனைப்படுகிறோம். ஆனால், நம் நாட்டில் இதே நடைமுறை நூற்றாண்டு காலமாக நடப்பில் உள்ளது. 2005ஆம் ஆண்டு 44.8 விழுக்காடாக இருந்த இந்த நிலை 10 ஆண்டுகளுக்குப் பிறகு 58 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கால வளர்ச்சியிலும் இந்நிலை மோசமாகிறது என்பதையே இது காட்டுகிறது.
ஒரு பெண் கடைக்குச் செல்வதற்கு கணவனின் அனுமதி தேவை. அப்படியே கடைக்குச் செல்வதென்றால் கூட என்ன வாங்கவேண்டும் என்பதையும் கணவன் தான் தீர்மானிப்பான் என்ற நிலை இன்றும் உள்ளது. இதைவிட ஒரு பெண் தனக்கு ஏற்படும் உடல் பாதிப்பிற்கு மருத்துவமனைக்குச் செல்லவேண்டு மென்றால் கூட கணவனின் அனுமதிக்காக காத்திருக்கவேண்டிய அவலம் உள்ளது.
ஆய்வின் போது பெண்கள் தெரிவித்த கருத்துக்களின்படி, மருத்துமனைகளுக்குச் செல்ல சில நேரங்களில் வாரக்கணக்கில் கணவரின் உத்தரவிற்காக காத்திருக்கும் சூழல் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. முக்கியமாக மத்திய இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் 94 விழுக்காடு பெண்கள் கணவரின் கட்டளைக்காக காத்திருக்கின்றனர். மிசோராம் மாநிலத்தில் இந்த நிலையில் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இங்கு வெறும் 4.76 விழுக்காடு பெண்கள் மட்டுமே மருத்துவமனைக்குச் செல்ல கணவரின் ஆணையைக் கேட்டு காத்திருக்கின்றனர்.
மேலும் பெண்கள் சுதந்திரம் எந்த அளவு இந்தியாவில் பறிக்கப்படுகிறது என்றால் சுதந்திரமாக அவர்களால் தங்களுக்கு பிடித்தமான வேலைகளைக்கூட செய்ய முடியாது. அதாவது 27 விழுக்காடு பெண்கள் தங்களின் விருப்பத்திற்-கேற்ற வேலைகளைச் செய்ய அனுமதிக்கப்படாமல் கட்டாயப் படுத்தப்பட்ட வேலையில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். தெற்காசியாவில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. இதை இந்திய சமூக கலாச்சார அமைப்பு ஒன்று 2016-ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பில் தெரியவருகிறது.
பணிக்குச் செல்லும்பெண்கள் பணி நேரத்திற்குப் பின் சமையலறைப் பணியில் ஈடுபடுத்தப்-படுகிறார்கள். பணிக்குச் செல்லாதவர்கள் முழு நேரமும் சமையலறையில் தள்ளப்படுகிறார்கள். 50 விழுக்காடு வீடுகளில், கணவர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் தான் என்ன உணவு சமைக்க-வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். தனக்குத் தேவையானதை செய்து சாப்பிடக் கூட முடியாத அவலம்.
கல்வி மற்றும் விழிப்புணர்வு அதிகம் இருக்கும் தென் இந்தியாவில் பெண்களின் உரிமைகள் ஓரளவு பேணப்படுகின்றன. இது தந்தை பெரியார் செய்த பிரச்சாரத்தின் விளைவு.
ஆனால் வட இந்தியாவில் இந்த நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முக்கியமாக பெண்ணுரிமை மிகவும் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது, இங்கு 0.98 விழுக்காடு பெண்கள் மட்டுமே தங்களின் உரிமைகளை சுதந்திரமாக கூறும் நிலையில் உள்ளனர். இந்த மாநிலத்தில் இரண்டாவது முறையாக வசுந்தரா ராஜே என்ற பெண் முதல்வர் பதவியில் இருந்தும் இந்த நிலை. பஞ்சாப் மாநிலத்தில் 1.14 விழுக்காடு, பிகாரில் 1.19 விழுக்காடு பெண்கள் தங்களின் சுதந்திரத்தை நிலைநாட்டுகின்றனர். இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் 96 விழுக்காடு பெண்கள் சுதந்திரமாக தங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறார்கள் என்று கணக்கெடுப்பில் கிடைத்த புள்ளிவிபரம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதைத் தொடர்ந்து இதரவட-கிழக்கு மாநிலங்களான மிசோராத்தில் 88 விழுக்காடு, மேகாலயாவில் 76.9 விழுக்காடு பெண்கள் சுதந்திரமாகச் செயல்படும் நிலைக்கு வந்துள்ளனர்.
கணவரைத் தேர்ந்தெடுக்கும் நிலையிலும் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. 65 விழுக்காடு பெண்கள் திருமணத்தன்று தான் தங்களின் கணவர்-களைச் சந்திக்கும் அவலம் உள்ளது. பிகாரில் 94 விழுக்காடு பெண்கள் இன்றளவும் திருமணத்-தன்று தான் தங்களின் கணவரைச் சந்திக்கின்றனர். பெண்கள் அதிக உரிமையுடன் வாழும் சில இந்திய மாநிலங்களில் கூட திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் கணவரைச் சந்திக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். அதுவும் குடும்பத்தாரின் முன்னிலையில் தான் சந்திக்க முடியும் என்ற நிலையும் உள்ளது.
படித்த பெண்களும், படிக்காத பெண்கள் எந்த அளவிற்கு பாதிக்கபப்படுகிறார்களோ அதே அளவுக்கு பாதிக்கபடுகிறார்கள் என்பது வேதனைக்குரிய உண்மையாக உள்ளது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் இந்தியாவின் மக்கட் தொகைக் கணக்கெடுப்புப்படி ஆணுக்கு இணையாகப் பெண்கள் இருக்கின்றனர். அதாவது 1000 ஆண்களுக்கு 991 பெண்கள் என்ற விகிதம். ஆனால் இங்கு 7.57 விழுக்காடு பெண்கள் மட்டுமே சுதந்திரமாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.
பெண்கள் அதிகம் சுதந்திரமாக இருக்கும் மாநிலங்கள் என்று கருதப்படும் கோவா, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில், காரொல் வலாசோச் நடத்திய 30 ஆண்டுகால நீண்ட ஆய்வில், புதிய தலைமுறை பெண்கள் சமூகத்தில் தங்கள் உரிமைகளை மீட்க கற்றுகொண்டனர் என்றும், தங்களின் பலத்தை அவர்கள் புரிந்துகொண்டனர் என்றும் தெரிவித்துள்ளார். முக்கிய பெரிய நகரங்களில் தலைநகர் டில்லியில் 86.21 பெண்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். இவர்களில் 2.09 பெண்கள் மட்டுமே தங்கள் கணவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். அதே போல் மேகாலயாவில் 74.43 விழுக்காடு பெண்கள் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஆனால் இங்கே 76.9 விழுக்காடு பெண்கள் தங்கள் கணவரை தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றூள்ளனர்.
படித்த பெண்கள் அதிகம் உள்ள தலைநகர் டில்லியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை-களைச் செய்பவர்களிடம் நடத்திய விசாரனையில் பெண் அவ்வாறு உடை அணிந்திருந்தால், இது எங்களுக்கு பிடிக்கவில்லை, இப்படி அணிவது சமூக சீர்கேட்டை உண்டாக்கும், நான் அந்தப் பெண் அணிந்திருந்த ஆடையால் தான் ஈர்க்கப்பட்டேன், என்று கூறுகிறான். இங்கு குற்றச்செயலில் ஈடுபடுவர்களில் பெரும் பாலானோர் படித்த இளைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலாச்சாரம், பழக்கவழக்கம், கட்டுப்பாடு போன்ற காரணங்களால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்-படுகின்றனர்.