திருமணத்திற்கு முன் இரத்தப் பொருத்தம் அறிய வேண்டும்!

மார்ச் 01-15

 

 

 

– சிகரம்

கணவன் மனைவி இரத்தப் பொருத்தம் இல்லாமல் போனால் சில கேடுகள் வரும். எனவே, திருமணத்திற்குள் கணவன் மனைவியாக ஆகப் போகிறவர்கள் தங்களுக்குள் இரத்தப் பொருத்தம் சரியாக உள்ளதா? என்று சோதனைமூலம் அறிந்துகொள்ள வேண்டியது கட்டாயம்.

கணவனோ, மனைவியோ ஏ, பி, ஏபி, ஓ ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அதனால் குழந்தைகளுக்குப் பாதிப்பு உண்டாவதில்லை.

ஆனால், இந்த ரத்தப் பிரிவில் ‘பாசிடிவ்’, ‘நெகடிவ்’ உள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்குச் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்தப் பாசிடிவ் அல்லது நெகடிவ் என்பதை‘Rh factor’ என்கிறார்கள். இது ஒருவகைப் புரதம். இந்தப் புரதம் ரத்த அணுக்களில் இருந்தால் அது பாசிடிவ். இல்லையென்றால் அது நெகடிவ். ((Rhesus என்ற வகைக் குரங்கில் இது காணப்பட்டதால் Rh என்று குறிப்பிடப்படுகிறது).

கணவன் _ மனைவி இருவருக்குமே பாசிடிவ் வகை ரத்தம் என்றாலோ அல்லது இருவருக்குமே நெகடிவ் வகை ரத்தம் என்றாலோ பிரச்சினை இல்லை.

அதேபோல கணவனுக்கு ரத்தப் பிரிவு நெகடிவாக இருந்து மனைவிக்கு ரத்தப் பிரிவு பாசிடிவாக இருந்தால் அதனாலும் அவர்கள் குழந்தைக்கு எந்தச் சிக்கலும் நேர்ந்து-விடுவதில்லை.

ஆனால், கணவனுக்கு பாசிடிவ் ரத்தப் பிரிவு, மனைவிக்கு நெகடிவ் ரத்தப் பிரிவு என்றால் சிக்கல் தொடங்குகிறது.

மனைவியின் ரத்தப் பிரிவு நெகடிவ் என்றால் அவள் உடலில் குறிப்பிட்ட புரதம் இல்லை என்று அர்த்தம். ஆனால், அந்தப் புரதம் கணவனின் ரத்தத்தில் இருந்தால், விந்துவும் முட்டையும் சேரும்போது அந்தக் கருவின் ரத்தப் பிரிவு பாசிடிவாகவும் இருக்கலாம். நெகடிவாகவும் இருக்கலாம்.

கருவுற்ற காலத்தில் அம்மாவின் ரத்தமும், குழந்தையின் ரத்தமும் தனித்தனியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதாவது ஒவ்வொருவரின் ரத்த ஓட்டமும் தனித்தனி. அம்மாவின் உடலிலிருந்து சத்துகள் மட்டும் தொப்புள் கொடி வழியாகக் கருவை அடைகின்றன. அவ்வுளவுதான். எனவே, குழந்தை மற்றும் தாயின் ரத்தப் பிரிவுகள் வெவ்வேறாக (பாசிடிவ், நெகடிவ்) இருந்தாலும் அதனால் பாதிப்பு எதுவும் இல்லை.

ஆனால் பிரசவத்தின்போது (அதாவது தொப்புள் கொடியைத் துண்டிக்கும்போது) குழந்தையின் உடலிலுள்ள ரத்தம் தொப்புள் கொடியைத் தாண்டிச் சென்று அம்மாவின் ரத்தத்தில் கலக்கக் கூடும். இது மிக மிகக் குறைந்த ரத்தம்தான். இதனால் குழந்தைக்குச் சிக்கல் இல்லை.

ஆனால், அந்தக் குழந்தையின் ரத்தம் பாசிடிவாக இருந்து தாயின் ரத்தம் நெகடிவாக இருந்தால் தாயின் உடலில் சில மாற்றங்கள் உண்டாகும். ரத்தத்தில் ‘வெளிப்பொருள்’ வந்து சேர்ந்துவிட்டதாகக் கருதி அதைத் தாக்கு-வதற்கான பொருளை (இவற்றை antibodies என்பார்கள்) தாயின் உடல் உற்பத்தி செய்யும்.

அந்தத் தாய் இரண்டாவது முறை கருவுறும்போது சிக்கல் உண்டாகிறது. இப்போது அவள் உடலில் பாசிடிவ் ரத்தத்துக்கான எதிர்ப்பொருள்கள் உள்ளன. அவளது உடல் உற்பத்தி செய்யும் முட்டையிலும் இந்த எதிர்ப்பொருள் இருக்க வாய்ப்பு உண்டு. அந்த முட்டையுடன் கணவனின் விந்து இணையும்போது உருவாகும் கரு பாசிடிவ் ரத்தப் பிரிவைக் கொண்டதாக இருந்தால் அதற்குப் பல சிக்கல்கள் தோன்றலாம். காரணம் அதனிடமே எதிர்ப்புப் பொருள்கள் சேர்ந்துவிடுகின்றன. இதனால் கருவுக்கு ஆபத்து உண்டாகலாம். ரத்த சோகையிலிருந்து தொடங்கி குறைப் பிரசவம்வரை பல சிக்கல்கள் தோன்றலாம். அரிதான நிகழ்வுகளில் கருவில் உள்ள குழந்தையின் ரத்தத்தை மாற்றும் நிலைமையும் (Blood transfusion) உண்டாகலாம்.

இப்படி உங்கள் உடல், கருவுக்கு எதிராகச் செயல்படுவதைத் தடுக்க, மருத்துவர் சில ஊசி மருந்துகளைச் செலுத்துவதுண்டு.

நெகடிவ் ரத்த வகை கொண்ட தாய்க்கு பாசிடிவ் ரத்த வகைக் குழந்தை பிறந்தால், அந்தத் தாய்க்கு (அவள் உடலில் உள்ள மேற்படி எதிர்ப்புப் பொருள்களை அழிக்கும்-படியான) ஊசி மருந்தைச் செலுத்துவார்கள். அடுத்த குழந்தையைக் கருவுறும்போதும் நிறைய எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

பெரும்பாலும் (92_94%) நம் பெற்றோரின் ரத்தம்தான் நமது ரத்தப் பிரிவு நெகடிவா அல்லது பாசிடிவா என்பதைத் தீர்மானிக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்களின் ரத்தம் பாசிடிவ் பிரிவைச் சேர்ந்ததாக இருக்கிறது. இதற்குக் காரணம் உண்டு. அப்பாவிடமிருந்து ஒன்று, அம்மாவிடமிருந்து ஒன்று என்று இருவித  Rh தன்மை நம் உடலுக்கு வந்து சேர்கிறது.

இரண்டுமே பாசிடிவ் என்றால் உங்கள் ரத்தப் பிரிவும் பாசிடிவ். இரண்டுமே நெகடிவ் என்றால் உங்கள் ரத்தப் பிரிவும் நெகடிவ். அதேசமயம் ஒன்று பாசிடிவ், ஒன்று நெகடிவ் என்றால் உங்கள் ரத்தப் பிரிவு பாசிடிவாக இருக்கும். (ஏனென்றால் மரபணுவிலுள்ள பாசிடிவ் தன்மை அதிக சக்தி கொண்டது.)

கருவுற்ற எல்லாப் பெண்களுக்கும், கருவுற்ற தொடக்க காலத்திலேயே ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் ரத்தப் பிரிவு கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால், பல சமயம் அவர்களது கணவரின் ரத்தம் சோதிக்கப்படுவதில்லை. “உங்கள் கணவரின் ரத்தப் பிரிவு என்ன?’’ என்று வாய்வார்த்தையாய்க் கேட்கப்படுகிறது. இதில் பாசிடிவ், நெகடிவை மாற்றிச் சொன்னால் சிக்கல் நேரலாம். எனவே தெளிவு தேவை. ஸீ

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *