தடகளப் போட்டிகளிலும், படிப்பிலும் தனித்திறன் காட்டும் துர்கா ஒரு முன்மாதிரிப் பெண்!

மார்ச் 01-15

 

 

 

டினா துர்கா தடகள விளையாட்டுப் போட்டிகளில், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு பிரிவுகளில் விளையாடி தேசிய அளவில் பதக்கங்களைக் குவித்துவரும் இளம்பெண். அவர் தன் சாதனை பற்றிக் கூறுகையில்,

“நான் ரொம்ப உயரமா இருந்ததாலும் என்னோட காலில் பவர் இருப்பதாகவும் சொல்லி, விளையாட்டு ஆசிரியர் சந்திரா மிஸ் அடிக்கடி உற்சாகப்படுத்திக்கிட்டே இருப்பாங்க. அதனால்தான் நாம அத்லெட்டிக்ல இருக்கிற அனைத்துப் பிரிவுகளிலும் விளையாடி செயிக்கணும்ங்குற ஆர்வம் வந்துச்சு. அதனால எல்லாத்திலுமே ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டே இருப்பேன். அதனால்தான் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுல ஹெப் அத்லெட்டிக் விளையாடிக்கிட்டிருக்கேன். இதுல 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடை தாண்டி ஓடுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் என ஏழு பிரிவுகள் வரும். இது, எல்லாத்திலேயுமே விளையாடி ஜெயிக்கிறது கஷ்டம். ஆனா, எல்லாவற்றிலும் விளையாடணும்னு ப்ராக்டிஸ் பண்ணினேன்.

ரெண்டாவது படிக்கும்போது பள்ளிப் போட்டியில் கலந்துக்கிட்டு முதல் இடத்தை பிடிச்சாலும் என்னோட அப்பா _ அம்மா அதைப் பெரிசா கண்டுக்கல. ஆனாலும் தொடர்ந்து விளையாடிக்கிட்டிருந்தேன். ஐந்தாவது படிக்கும்போது, எங்க ஸ்கூலுக்கு கோவை அத்லெட்டிக் கோச் சீனிவாசன் சார் வந்திருந்தாரு. அப்போ, நடந்த ஓட்டப் பந்தயத்துல என்னைப் பார்த்துட்டு, பிரமாதமா ஓடுறீங்க நல்ல ஸ்டாமினா இருக்குன்னு பாராட்டியது மட்டுமில்லாம உங்கப் பொண்ணுக்கு விளையாட்டுல நல்ல எதிர்காலம் இருக்கு பயிற்சிக்கு அனுப்புங்கன்னு அப்பா _ அம்மாகிட்ட சொல்லிட்டுப் போனார்.

இப்படிப் பலரது பாராட்டுகள், என்னுடைய ஆர்வம் இதையெல்லாம் பார்த்த என்னோட பெற்றோர், சீனிவாசன் சார்கிட்ட பயிற்சிக்கு அனுப்பினாங்க. அவர்கிட்ட இருக்கும்போது ஓட்ப் பந்தயத்துக்கான பயிற்சிகள் மட்டும்தான் எடுத்துக்கிட்டிருந்தேன். அப்போதே, மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் விளையாடி முதல் பரிசுகளை வாங்கியிருக்கேன்.

அதுக்கப்புறம் ஏழாவது படிக்கும்போது நிஜாமுதீன் சார்கிட்ட பயிற்சிக்குச் சேர்ந்தேன். அவர், ஆசிய கோல்டு மெடலிஸ்ட். கடந்த வருடம் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிக்குகூட அவர்தான் பயிற்சியாளர். நிஜாமுதீன் சாரிடம் பல நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். அப்போதான், நான் எல்லாத்திலேயுமே ஆக்டிவ்வா பயிற்சி எடுக்கிறதைப் பார்த்துட்டு பாராட்டியவர் இனிமே, ஓட்டப்பந்தயம் மட்டுமில்ல, எல்லாத்திலேயும் நல்லா ப்ராக்டிஸ் பண்ணுமான்னு ஊக்கப்படுத்தினார். அதுக்கப்புறம், ஓட்டப்பந்தயத்தில மட்டுமில்ல, எல்லாப் போட்டிகளிலும் கலந்துக்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகள்ல பதக்கங்களைக் குவிச்சேன்’’. 2013ஆம் ஆண்டு மாநில அளவில் நடந்த எனது முதல் போட்டியிலேயே நீளம் தாண்டுதலிலும் தடைத்தாண்டி ஓடுதலிலும் இரண்டு வெண்கலம் வென்றதோடு, அதே ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான போட்டியில் 1 தங்கமும், 1 வெள்ளியும் வென்றேன். அதில் பதக்கம் பெற்றதால் உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான அத்லெட்டிக் போட்டியில் 5ஆவது இடமும் பெற்றேன்.

2014ஆம் ஆண்டு மதுரையில் நடந்த தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்று கொச்சினில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர் ஒட்டப்பந்தயம் என மூன்று ஈவண்ட் உள்ள ட்ரை அத்லெட்டிக்கில் தங்கப்பதக்கம் வென்றேன். 2015ஆம் ஆண்டு மாநில அளவில் நடந்த போட்டியில் வெண்கலப் பதக்கமும், அதே ஆண்டில் ராஞ்சியில் தேசிய அளவில் நடந்த போட்டியில் 5ஆவது இடமும், 2016ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த தேசிய அளவிலான அத்லெட்டிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றேன்’’ என்று கூறும் துர்கா வறுமைச் சூழலிலும் இவற்றைச் சாதிப்பதுதான் தனிச்சிறப்பு.

“என்னோட அப்பா வெள்ளிங்கிரி நகை பட்டறைக் கடையில் வேலை பார்க்கிறார். எப்போதாவதுதான் கடையில் வேலை இருக்கும். என்னோட தங்கச்சி தன்யதுர்காவும் என்னை மாதிரியே விளையாட்டுல ஆர்வம் ஏற்பட்டு பாக்ஸிங், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்காக போயிட்டு இருக்கா. எங்க ரெண்டு பேருக்கான செலவை சமாளிக்க முடியாம அப்பா நகைப் பட்டறையில் வேலை இல்லாதப்போ பார்ட் டைம் வேலையெல்லாம் பார்த்து, எங்களை படிக்க வைக்கிறதோட விளையாட்டுல சாதிக்கணும்ங்கிறதுக்காக இரவு பகலா உழைக்கிறார். பலமுறை வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும் நடக்கும் போட்டிக்குப் போக பணம் இல்லாம எங்க பள்ளியே எனக்கு ஸ்பான்ஸர் பண்ணி உதவிட்டு வருது. எல்லா இடத்துக்கும் என் அம்மாதான் என்னை கூட்டிப் போயிட்டு வர்றாங்க.

 நாங்க ஸ்போர்ட்ஸ்ல ஈடுபட ஆரம்பச்சதிலிருந்தே அப்பாவும் எங்களோடு அதிகாலையிலேயே எழுந்து பயிற்சிக்குக் கூட்டிட்டுப் போய் விட்டு ஊக்கப்படுத்துவாரு. அவங்களோட தியாகத்துக்காகவே நான் ஆசிய சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்று ஒலிம்பிக்கிலும் சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு. ஹெப் அத்லெட்டிக்ல மைக்ரோ செகெண்ட் போனாலும் பாயிண்ட் போய்டும். அதனால ரொம்ப கவனமா விளையாடணும். கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், டெல்லி போன்ற மாநில வீரர்கள்தான் என்னை மாதிரியே எல்லா ஈவண்ட்லயும் கலந்து பதக்கங்களை குவிச்சிட்டு வர்றாங்க.

10ஆவது படிக்கும்போது, பயிற்சியில் கீழே விழுந்து காலில் சவ்வு கிழிந்து நடக்கவே முடியாத நிலைமையெல்லாம் உண்டாச்சு. எங்க அப்பா, அம்மாவோட ஊக்கத்தாலதான் இப்போ திரும்பவும் விளையாடிக்கிட்டு வர்றேன். என் கனவும் அவங்க கனவும் சீக்கிரம் நிறைவேறும்’’ என்று நம்பிக்கையுடன் பேசுகிறார். துர்கா விளையாட்டில் மட்டும் அல்லாமல் 10ஆம் வகுப்பில் 434 மதிப்பெண்கள் எடுத்து படிப்பிலும் சாதனை புரிந்துள்ளார். தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் துர்கா, பயிற்சி, படிப்பு என்று இரண்டிலுமே கவனம் செலுத்தி வருகிறார். இரண்டிலும் சாதிப்பார்! வாழ்த்துக்கள்!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *