– அரியலூர் அனல்
திருவாரூரில் 17.12.2016 அன்று திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இழிவுபடுத்தப்பட்ட பெண்ணினத்தை தூக்கி நிறுத்தவும் மனிதநேயத்தைக் காக்கவும் அறிவார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அதில் 17ஆவது தீர்மானம், “பெண்களை இழிவுப்படுத்தும் வேதம், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்களைத் தடை செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை அறிவுறுத்துகிறது.
இதுகுறித்தவற்றைப் பாடத் திட்டங்களில் இருந்து அறவே நீக்கி வைக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதற்கென வரும் ஆண்டில் மகளிரே முன்னின்று அத்தகைய பகுதிகளில் நகல்களை எரிக்கும் போராட்டத்தை அறிவிக்க கழகத் தலைவரை கேட்டுக்-கொள்கிறது’’ என்பதாகும்.
மாநாட்டில் இறுதியாக உரையாற்றிய கழகத் தலைவர் ஆசிரியரும், அதற்கான தேதியை அறிவித்தார்.
வீரத்தாய் மணியம்மையாரின் பிறந்த நாளில் மாதரை இழிவு செய்யும் மனுதர்மம் எரிக்கப்படும் என்று அறிவித்தார்.
திராவிடர் கழக பொதுக்குழுவில் தமிழ்நாட்டின் 10 இடங்களில் பெண்களே தலைமை ஏற்று நடத்தும் வகையில் இப்போராட்டம் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
அதற்கான வீராங்கனைகளின் பட்டியலைத் திரட்டும் பணியில் திராவிடர் மகளிர் பாசறை தோழர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் புன்னகை மருத்துவமனை சுயமரியாதைச் சுடரொளி பழனியப்பன் நினைவரங்கத்தில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்கவுரை கலந்துரையாடல் கூட்டம் 11.2.2017 காலை 10 மணிக்கு நடை-பெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்தில் நிறை-வேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம் 1: 4.2.2017 அன்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 2: திருவாரூரில் நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின் படியும், மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு தீர்மானத்தின்படியும் அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10ஆம் தேதி பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை எரிக்கும் போராட்டத்தை, பெண்களே முன்னின்று வெற்றிகரமாக நடத்திடும் வகையில் பெருவாரியான பெண்கள் பங்கேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 3: திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை அமைப்புகளின் சார்பில் மகளிர் கருத்தரங்கம், தெருமுனை கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், மகளிர் பயிற்சி வகுப்புகள், குடும்ப விழாக்களை அனைத்து மாவட்டங்களிலும் மகளிரே முன்னின்று நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 4: மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கழக நிகழ்ச்சிகளில் கழகக் குடும்பத்தில் உள்ள அனைத்து மகளிரும் கட்டாயம் பங்குகொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 5: எந்த ஒரு கொள்கையும் முழுவெற்றி பெற வேண்டும் என்றால் அது பெண்களிடம் சென்றால்தான் சாத்தியம்.
மனிதநேய கொள்கை, தந்தை பெரியார் கொள்கைகளை பெண்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் புதிய உறுப்பினர்களை பெருமளவில் சேர்ப்பது என முடிவு செய்யப்படுகிறது.
மனுதர்மம் எரிக்கப்படுவது இதுவே முதல் முறையல்ல. பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 1927 டிசம்பர் மாதத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வருண தர்மத்தைக் கண்டித்து எரித்து சாம்பலாக்கினார்.
17.5.1981 அன்று தமிழ்நாடெங்கும் திராவிடர் கழக மகளிரணியினர் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் எரித்தனர்.ஸீ