தீப்தி ஸ்ரீகாந்த், விமானி ஆகவேண்டும் என்ற ஒரே நோக்கில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, இன்று “கமாண்டர்’ ஆகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளம் பெண்களுக்கு அவரின் சாதனை ஓர் உந்துசக்தி. கணவர் ஸ்ரீகாந்த்துடன் சென்னை மேடவாக்கத்தில் வசித்துவரும் அவர் தன்னைப்பற்றிக் கூறுகையில்,
“என் சொந்த ஊர் தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள போவன்பள்ளி. அப்பா ராஜேந்திரகுமார் டாக்டர், அம்மா ஜெயஸ்ரீ வக்கீல் என்றாலும், நாங்கள் வாடகை வீட்டில் வசித்த எளிமையான குடும்பம்தான். 1982 இல் நான் பிறந்தேன். சிறு வயதில் இருந்தே டாக்டராகணும் அல்லது வக்கீலாகணும் என்றுதான் எங்கள் வீட்டில் கூறிவந்தார்கள். அது எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது. அப்போது, ஏர்போர்ட் அருகில் எங்கள் வீடு இருந்தது. மொட்டை மாடியில் இருந்து பார்த்தால், விமானங்கள் பறந்து செல்வதும், தரையிறங்குவதும் நெருக்கமாகத் தெரியும்.
எல்லோரும் எதிர்த்தனர்:
அந்த விமானங்களைப் பார்க்கப் பார்க்க என் மனமும் விண்ணில் பறக்கத் தொடங்கியது. அந்த விமானங்களை நானே ஓட்டுவதுபோல் கற்பனை செய்வேன். ப்ளஸ்-டூ படித்தபோதுதான், “நாம் ஏன் ஒரு விமானி ஆகக்கூடாது..?’ என்ற சிந்தனை உருவாகி வலுப்பெற்றது. இதை வீட்டில் சொன்னபோது அப்படியோர் எதிர்ப்பு. அந்தப் படிப்புக்கு பணம் அதிகம் செலவாகும் என்பதுதான் பூதாகரமான பிரச்சினையாக முன்னின்றது. “அப்படியே படித்து முடித்தாலும், விமானம் ஓட்டும் வேலை உடனே கிடைத்துவிடும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. மாப்பிள்ளை தேடுவதும் கஷ்டம்; வீணாக ஆகாயக் கோட்டை கட்டவேண்டாம்’ என்று அப்பாவும், ஒட்டுமொத்த உறவினர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். என்னை உற்சாகப்படுத்த ஒருவரும் இல்லை
அம்மா மட்டும் ஆதரவு:
ஆனால், நான் பிடிவாதமாக விமானி ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். “ஒன்றைச் செய்ய விரும்புபவன் வழிகளைக் கண்டடைவான்; செய்யாமல் இருக்க விரும்புபவன் காரணங்களைக் கண்டு பிடிப்பான்’ என்ற பொன்மொழி எனக்காக எழுதப்பட்டதுபோல் தோன்றியது. ஆகாயத்தில் பறக்கவேண்டும் என்ற என் கனவு எப்படியும் நிறைவேறவேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தேன். என் மனதைப் புரிந்துகொண்டு, எனக்குப் பச்சைக்கொடி காட்டிய ஒரே ஒருவர் என் அம்மாதான். “எவ்வளவு கஷ்டப்பட்டாவது உன்னை விமானி ஆக்குகிறேன்” என்று சபதம் எடுத்தார்.
அப்போது ஆரம்பமானது வாழ்க்கையின் சுவாரஸ்யமான ஓட்டம். 5 ஆண்டு படிப்பு. அதிகாலை 4 மணிக்கு எழுந்து, 35 கி.மீ. தூரம் பயணித்து ஃப்ளையிங் கிளப்பை அடைய வேண்டும். விமானம் ஓட்ட ஒவ்வொரு முறையும் பணம் செலுத்தவேண்டும். வங்கிகளில் கல்விக்கடன் கேட்டோம். இந்தப் படிப்புக்குக் கிடைக்காது என்று கைவிரித்துவிட்டார்கள். என் அம்மா, பாதிக்கப்பட்ட அபலைகளுக்கு ஆதரவளித்து வந்ததன் மூலம், எங்கள் பகுதியில் ஒரு சமூக சேவகராகப் பிரபலமாகி இருந்தார். அவரது செல்வாக்கினால் கடன் கிடைத்தது. 5ஆண்டு படிப்புச் செலவைத் கணக்கிட்ட போது, முப்பத்தைந்து லட்சத்திற்கு மேலிருந்தது.
சாதனைப் பணி:
ஆண் விமானிகளும், பெண் விமானிகளும் சீருடை அணிந்துவிட்டால் ஒரே விதமான “பைலட்’ தான். ஆண்-பெண் பேதம், கரிசனம் எதையும் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு நொடியும் என்னை நானே ஊக்குவித்துக் கொண்டேன். விமானத்தை இயக்குவதில் பல சவால்கள், காற்றழுத்தம் உயர்வு-தாழ்வு, மேகக்கூட்டத்தில் இருந்து மின்னல் தாக்கும் அபாயம் போன்ற பல பிரச்சினைகள் உண்டு. விமானத்தில் ஏறிவிட்டால், தரை இறங்கும்வரை இமைப் பொழுதுகூட ரிலாக்ஸ் ஆக முடியாது. உடல் எடை, உணவு, உறக்கம் எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்.
1999ஆம் ஆண்டு டிசம்பரில் கமர்ஷியல் பைலட் லைசன்ஸ் கிடைத்தது. பெங்களூரில் என்டார்ஸ்மெண்ட் லைசன்ஸ் பெறுவதற்கான கட்டணம் ரூபாய் நான்கரை லட்சம் என்றார்கள். அதே லைசன்ஸ குறைவான கட்டணத்தில் ஆஸ்திரேலியாவில் பெற்றேன். கரீம் நகர் மாவட்டத்தில் முதல் பெண் விமானி நான்தான் என்பது பெருமைக்குரிய விஷயம். 2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் “இன்டர்நேஷனல் பைலட்’ ஆக “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ஸில் வேலை கிடைத்தது.
எதிர்த்தவர்களின் பாராட்டு:
முன்னர் ஊக்கக்குறைவு உண்டாக்கியவர்கள் எல்லாம், வேலை கிடைத்தபிறகு, “நினைச்சதை சாதிச்சிட்டாளே..!’ என்று கொண்டாட ஆரம்பித்தார்கள். செய்யும் தொழிலை மனப்பூர்வமாக நேசித்தால் வெற்றி நிச்சயம் என்பது என் வாழ்வில் நிரூபணம் ஆனது. பன்னாட்டு காப்புறுதி நிறுவனம் ஒன்றில் துணைத்தலைவராக இருக்கும் ஸ்ரீகாந்த் எனக்குக் கணவராக அமைந்தார். கணவரும், அவர் குடும்பத்தில் உள்ளவர்களும் என் அம்மாவைப் போன்றே என்னை ஊக்குவிப்பது எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பே.
நான் பயிற்சி பெற்ற காலத்தில் பெண் விமானிகளின் எண்ணிக்கை இரண்டு சதவீதமாக இருந்தது. இப்போது முப்பது சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நான் கோ-பைலட் ஆக எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தபின், இரண்டு ஆண்டுகள் “கமாண்டர்’ பயிற்சி மேற்கொண்டேன். அதில் தேர்ச்சிபெற்று 2015ஆம் ஆண்டு மே மாதம், “கேப்டன்’ ஆக பதவி உயர்வு பெற்றேன். எங்கள் குடும்பத்தில் யாரும் பணத்தின் பின்னால் ஓடமாட்டோம். என்னால் முடிந்த அளவு சம்பாதித்து, அம்மா பெற்ற கடன்களை அடைத்தேன்.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச்-8 மகளிர் தினத்தன்று, தெலங்கானா அரசு, “சிறந்த பெண் சாதனையாளர் விருது’ம், ஒரு லட்சம் ரூபாய் பரிசும் அளித்து கௌரவித்தது. நான் விருது பெற்றதில் என்னைவிட அதிகம் மகிழ்ச்சி அடைந்தவர் என்னை உருவாக்கிய அம்மாதான். அப்போது, அம்மாவின் கண்களில் பெருமிதம் மின்னியது. அந்த நிமிடங்கள் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிமிடங்கள்!” என்று தான் சாதித்ததை மற்றப் பெண்களுக்கு போதிப்பது போல் உணர்வுபொங்கக் கூறினார். சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு இவர் சரியான வழிகாட்டி.