சமூக, சட்ட வீரோதிக்கு பிரதமர் மோடி அங்கீகாரம்!

மார்ச் 01-15

 

 

 


ஈசா யோக பீடம் அமைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை 22.04.1990 தேதியிட்ட அரசாணை எண் நி.ளி.வி.ஷி.ழிளி.44/1990-இன் மூலம் மலைதளப் பாதுகாப்புக் குழுமத்தின் அதிகார வரம்பின் கீழ் உள்ளது. இந்தப் பிரிவின்படி அனுமதியின்றி விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றவோ, 300 சதுர மீட்டருக்கு மேல் எந்த கட்டடங்களும் கட்டவோ கூடாது. புதிய ‘லே-அவுட்டு’களை உருவாக்க முடியாது. மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனம், வருவாய், நகர் ஊரமைப்புத் துறை, பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரப் பிரிவு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வேளாண் பொறியியல், மின்சாரம், தீயணைப்பு, காவல், நெடுஞ்சாலை, உள்ளாட்சி, கனிம வளம் ஆகிய துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்றுகள் பெறவேண்டும்.

“மாவட்ட ஆட்சியரின்  அனுமதி கட்டாயம்’’

இதே போன்ற நிபந்தனைகள் வீட்டுவசதி மற்றும் நகர் வளர்ச்சித் துறையின் 24.03.2003 தேதியிட்ட அரசாணை எண். நி.ளி.வி.ஷி.ழிளி.49/2003 மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டுமான விதிகள் 1997இ-ன் விதி 25 பொதுப்பயன்பாட்டு கட்டுமானங்களுக்கு பஞ்சாயத்து செயல் அதிகாரி, நகர் ஊரமைப்புத் துறையின் ஆலோசனை இல்லாமல் அனுமதியளிக்கக்கூடாது என்கிறது. மேலும் விதி 4 (3) பொது வழிபாடு அல்லது மதப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயமாகும்.

ஆனால், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மலைப்பகுதியை ஈசாவின் ஜக்கி எந்த ஒரு அனுமதியும் பெறாமல் மலைகள் அனைத்தையும் பெயர்த்தெடுத்து ஆயிரக்கணக்கான சதுர அடியை ஆக்கிரமித்து விட்டார். இங்குள்ள கட்டடங்கள் மண்டபங்கள் எதுவும் மேலே குறிப்பிட்ட எந்த ஒரு அனுமதியையும் பெறாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

“சட்ட விரோத கட்டுமானப் பணிகள்’’

இது குறித்து  பொதுமக்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் புகார்கள்  வந்ததைத் தொடர்ந்து நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர் 05.11.2012 தேதியிட்ட ந.க.எண்1866/2012/கோ.ம.4 ஆணையின் மூலம் சட்ட விரோத கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். அதனை மீறி கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டதால் 21.12.2012 தேதியில் அதே ந.க.எண் 1866/2012/கோ.ம. 4 எண்ணிலும், 26.11.2014 தேதியில் ந.க.எண் 661/2014/கோ.ம.4 எண்ணிலும் தியானலிங்கம், சிவபாடம் போன்ற அதன் சட்ட விரோத கட்டடங்களை மூடி முத்திரையிடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

“அந்த இடத்தில் எந்த ஒரு செயற்கைக் கட்டடங்களும் எழுப்பக்கூடாது’’

மோடி திறக்கப்போகும் 112 அடி உயர ஆதியோகி சிலை எழுப்பும் இடத்திற்கும் சட்டப்படி எந்த ஒரு உரிமையும் கிடையாது, இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிகளின்படி அந்த இடத்தில் எந்தவித செயற்கைக் கட்டடங்களையும் எழுப்பக்கூடாது. இப்பகுதியில் பாய்கிற நீலியாறு, நீலியணை, ராஜவாய்க்கால், 187 ஏக்கர் பரப்புள்ள உக்குளம் ஆகியவை அனைத்தும்  சில ஆண்டுகளில் மாயமாகியுள்ளன.

*ஒலிமாசு ஏற்படாத அளவில் மகாசிவராத்திரி கொண்டாடப்பட வேண்டுமென உத்தரவு*!

ஒவ்வொரு ஆண்டும் விடிய விடிய நடந்தேறும் ஈஷாவின் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் மேலெழும்புகிற ஒலிமாசு வன உயிர்களின் இயல்பு வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கின்றன. அவை பீதியடைந்து மனித உயிர்களையும் குடியிருப்பு-களையும் தாக்குவது தொடர்-கதையாகிறது. 2013 இல் உயர்நீதிமன்றம் அப்பகுதி மனித வாழ்க்கைக்கும் வன உயிரின இயல்பிற்கும் பாதிப்பு ஏற்படாத அளவில் ஒலிமாசு ஏற்படாத அளவில் மகா சிவராத்திரி கொண்டாடப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது. வன உயிர்களின் இயல்பை பாதுகாக்க இது இரவு நேர நிசப்த மண்டலமாக அறிவிக்கப்-பட்டுள்ளது.  

“கொடூரமான ஒரு வேலையை ஈசாவின் ஜக்கி செய்துகொண்டுள்ளார்’’

எல்லாவற்றையும் விட வனவிலங்குகள் ஈசாயோக பீடம் அமைந்துள்ள பகுதிக்கு வரக்கூடாது என்பதற்காக நவீன அல்ட்ரா ஓசை எழுப்பும் கருவிகள் ஆங்காங்கே பொருத்தப்-பட்டுள்ளன, இதன் காரணமாக வனவிலங்குகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்-பட்டு அப்பகுதியின் வனவிலங்கு சங்கிலியே உடைந்து போகும் அளவிற்கு கொடூரமான ஒரு வேலையை ஈசாவின் ஜக்கி செய்துகொண்டுள்ளார். உயர்நீதிமன்றத்திலும், கோவை ஈஷா யோகா மய்யத்தின்மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நேரத்தில், ஒரு பிரதமரே அதனைப் புறந்தள்ளி சிலையைத் திறக்க வருவது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பு அல்லவா!

“அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம்’’

மேலும் பிரதமர் என்பவர் இந்திய அரசமைப்புச் சட்டப்படி, மதச்சார்பற்ற கொள்கையைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டியவர். இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட இந்து மதக் கடவுள் சிலையைத் திறக்க வருவது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமேயாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்ற செக்குலர் (மதச்சார்பின்மை) சோசலிஸ்டு என்ற மிக முக்கிய சொற்களை நீக்கி குடிஅரசு நாளில் விளம்பரம் செய்யவில்லையா?

உலகக் கலாச்சார விழா என்ற பெயரில் யமுனை நதிக்கரையில் கடந்த ஆண்டு மார்ச் 11 முதல் 13 வரை மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுக்கப்படவில்லையா? நிகழ்ச்சி நடத்திய சிறீ ரவிசங்கருக்கு அபராதம் விதிக்கப்பட வில்லையா?

சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எச்சரித்தும், பிரதமர் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்ற சட்ட விரோதங்கள் அரங்கேறினவே! இன்றைய பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு இந்து மத வெறித்தனத்தோடு எந்த விதிமுறைகளையும், சட்டங்களையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிக்கத் தயாராக இல்லை.

“பிரதமர் மோடிக்குக் கறுப்புக் கொடி’’

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் (24.2.2017) கோவையில் ஈஷா யோகா மய்யத்தில் குறிப்பிட்ட இந்து மதக் கடவுள் சிலையைத் திறக்க வருவது அப்பட்டமான சட்ட மீறலும், நீதிமன்ற தீர்ப்பு மீறலுமான, அப்பட்டமான முறைகேடான செயலாகும். இதனைக் கண்டிக்கும் வகையில் கோவை மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு சூலூர் விமானப்படை விமான தளம் அருகில் கறுப்புக் கொடி காட்டி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

*******

அரசுப் பணத்தைக் காணிக்கைத்

தருவது கண்டிக்கத்தக்கது!

தெலுங்கானா மாநிலம் உருவானதைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையானுக்கு 14.9 கிலோ எடையில் தங்க சாலிக்கிராமஹாரம், 4.65 கிலோ எடையில் 5 வரிசைகள் கொண்ட தங்க காசு மாலை ஆகியவற்றை காணிக்கையாக வழங்க உள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூ.5.5 கோடியாகும். இது இவரது சொந்தப் பணம் அல்ல. இதற்காக தெலுங்கானா அரசு கருவூலத்தில் இருந்து பணத்தைப்பெற்று தங்க நகைகள் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த நகைகள் இப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. அரசியல் சட்ட விரோதம். எடுத்த பிரமாணத்திற்கு விரோத அதிகார துஷ்பிரயோகம்.

அரசுப் பணத்தை ஏழுமலையானுக்குக் கொடுக்க இவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? தெலுங்கானா அமையக் காரணம் மக்கள் போராட்டமும் உயிர்த் தியாகமும் காரண-மில்லையா? ஏழுமலையான்தான் காரணமா?

 கி.வீரமணி, ஆசிரியர்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *