ஆண்களுக்கு நிகராய் ஆடும் சிலம்பச் சகோதரிகள்

மார்ச் 01-15

பொதுவாக பெண்கள் என்றால் மென்மையானவர்கள், வலுவற்றவர்கள் என்னும் கருத்து ஆணாதிக்க மதங்களால் பரப்பப்பட்டு வந்துள்ளது. சமீபகாலம்வரை கிராமங்களில் 15 வயது பெண் குழந்தைக்கு துணையாகவும் பாதுகாப்பாகவும் 8 வயது சிறுவனை அனுப்புவதைப் பார்த்திருக்கிறோம்.

மனுதர்மம் ஆனாலும், வேறு மத நூல்கள் ஆனாலும் பெண்களை இழிவுபடுத்தியும், ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் என்றும் கூறி மக்களின் மூளையில் அப்படியே பதிவு செய்துள்ளன.

ஆண்களுக்கு கிடைத்த கல்வி வாய்ப்புகள் கிடைக்க வெகுகாலம் போராட வேண்டி-யிருந்தது. அதுபோலவே பெண்கள்  இசை, நாட்டியம், நடனம் என்று மட்டுமே தங்கள் திறமையைக் காட்டிவந்த காலத்தில் தந்தை பெரியார் அவர்கள், “பெண்களுக்கு குஸ்தி போன்ற உடற்பயிற்சிக் கலைகளையும், ஆயுதப் பயிற்சியையும் கொடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் வெற்றிபெற்று வருவதைக் காண்கிறோம். ஆனாலும், பெண்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல்வேறு அறைகூவல்களை சந்திக்க வேண்டியுள்ளது என்பதை அண்மையில் வரும் செய்திகள் உணர்த்து-கின்றன.

அண்மையில் திருவாரூரில் நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில், “பள்ளிகளில் பெண்களுக்கு யோகாவிற்கு பதில் வீரவிளையாட்டுகளையும், கராத்தே, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளையும் அவசியம் கற்றுத்தர வேண்டும்’’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆண்களுக்கு பெண்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை சிறப்பாக நிரூபித்து வருகின்றார்கள் சிலம்பாட்ட சகோதரிகளான சந்தியாவும், சூரியாவும். 2002இல் திருச்சியில் நடந்த சர்வதேச சிலம்பாட்டப் போட்டியில் முதலிடத்தை சந்தியாவும், இரண்டாம் இடத்தை சூரியாவும் பெற்றனர்.

தற்போது சிலம்பம் பயிற்றுனராக உள்ள சந்தியா எம்.சி.ஏ. முடித்த முதுகலைப் பட்டதாரி. சிலம்பத்தை நான்கு இடங்களில் மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார். இவர் சிலம்பக் கலையில் அபாரத் திறமையுடன் குழந்தைப் பருவத்திலேயே சாதனை படைத்தவர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சார்ந்த இவர் 7ஆம் வகுப்புப் படித்தபோதே மூத்த வீரர்_வீராங்கனைகளுக்கு சவால் விடும் அளவிற்குத் திகழ்ந்தவர். 1998ஆம் ஆண்டில் ஆற்காட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றார்.

தொடர்ந்து 1999ஆம் ஆண்டில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர், 2000ஆம் ஆண்டில் விருதுநகரிலும், 2001ஆம் ஆண்டில் மதுரையிலும், முதலிடம் பெற்றதைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற மெடிக்கல் சர்வதேச போட்டியில் 20 கிலோ எடைப் பிரிவில் முதலிடமும், 2003ஆம் ஆண்டு மதுரையில் 25_30 கிலோ எடைப் பிரிவில் முதலிடமும் பெற்றுள்ளார். இதே பிரிவில்  2004இல் நாகர்கோயிலிலும் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்றார். மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தவர். திருச்சியில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் முதலிடம் பெற்றார்.

2005 மற்றும் 2009 வேலூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் வென்றுள்ளார். 2010 இல் திருவண்ணா-மலையிலும் 2011 இல் குண்டூரிலும் தேசிய அளவில் வென்றுள்ளார். தொகுத்துக் கூறினால் மாவட்ட அளவில் 24 முறையும், மாநில அளவில் 11 முறையும், தேசிய அளவில் 3 முறையும் சர்வதேச அளவில் ஒரு முறையும் வெற்றிகளைக் குவித்தவர்.

அவரிடம் தொடர்புகொண்டபோது, “சிலம்பம் என்பது ஒரு மரபு சார்ந்த அற்புதமான கலையாகும். ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் அனைவரும் கற்க வேண்டும். மற்ற விளையாட்டுகளில் காட்டும் ஆர்வத்தைவிட சிலம்பத்தில் அரசு அதிக ஆர்வம் காட்ட வேண்டும். குறிப்பாக பள்ளிகளில் இதனை ஒரு முக்கிய விளையாட்டாக அங்கீகரித்து பிரபலப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் தமிழ்நாட்டின் பாரம்பரிய வீரக் கலையான சிலம்பம் உலகமெங்கும் பரவும்.

ஜல்லிக்கட்டு உரிமைக்காகப் போராடி அதுகுறித்து மக்கள் கவனத்தை ஈர்த்தது போல் நம் பாரம்பரிய வீரக்கலையையும் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.

சர்வதேச அங்கீகாரம் கிடைத்து, ஒலிம்பிக்கில் இது சேர்க்கப்பட வேண்டும். அதுவே நமக்குப் பெருமை அளிக்கும்.  அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் நிச்சயம் நம் நாடு பல்வேறு பதக்கங்களைக் குவிக்க முடியும்’’ என்றார்.

இவரது தங்கை சூர்யாவும் இளம் வயது முதலே சிலம்பத்தில் கலக்கி வருகிறார். தற்போது பொன்னேரி உலகநாதன் நாராயணசாமி கல்லூரியில் எம்.ஏ. படித்துக் கொண்டிருக்கும் இவர் பீகார் உள்பட எட்டு இடங்களில் நடந்த தேசிய போட்டிகளில் தொடர்ந்து தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்றுத் திகழ்கிறார். சர்வதேச அளவில் ஒருமுறை இரண்டாம் இடம்.

அவரிடம் பேசியபோது, “பெண்கள் எல்லோரும் இந்தக் கலையோட அடிப்படையை யாவது கற்றுக்கொள்வது அவசியம். இது தற்காப்புக்காக மட்டுமல்ல, தன்னம்பிக்கை ஊட்டும் கலையும்கூட’’ என்று தெரிவித்தார்.

இளம் வயதிலேயே தந்தையை இழந்த சிலம்பம் சகோதரிகள் இருவரும் தாயாரின் ஊக்கத்தை மிகப் பெரியதாகக் கருதுகின்றனர். அவர்களின் தாயார் கைவினைப் பொருள்களை குடிசைத் தொழிலாக செய்து வருகிறார். இவர்களது தாய்மாமாவான ஹரிதாஸ் அவர்களை பயிற்றுநகராகக் கொண்ட பொன்னேரி சுப்பிரமணி ஆசான் சிலம்பக் கூடத்தால் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

கையில் ஆயுதம் இல்லாமல் தற்காப்புப் பயிற்சி செய்வது, 5 பக்கமிருந்து 32 பேர் ஒரே நேரத்தில் தாக்க வந்தாலும் தடுப்பது, சுற்றி அடிப்பது, தீப்பந்தம் கொண்டு வியத்தகு செயல்களை நிகழ்த்துவது, மான்கொம்பு சண்டை, சுருள்வாள் வீசுவது, கத்திச்சண்டை, டயர் போன்ற வட்டமான பொருள் எரியும்போது அதனைச் சுழற்றி விளையாடுவது என்று பல்வேறு வீரக்கலைகளிலும் கரை கண்டவர்களாக விளங்குகின்றனர்.

ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டையும் பயின்று வருகின்றனர். இவர்களைப் பார்த்து இன்னும் ஏராளமான பெண்கள் சிலம்பம் பயிலுகின்றனர்.

– வை.கலையரசன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *