பெண்களின் சுதந்திரமான பயணங்கள்

மார்ச் 01-15

 – எஸ்.மீனா சோமு

கல்லூரி முடித்த பின் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி எடுப்பதற்காக சென்னை வந்து, அதன்பின் வேலையில் சேர்ந்தது, இன்று வரை எனது பயணங்கள் பெரும்பாலும் தனித்தே அமைந்திருக்கின்றன. கல்விக்காக, பணி நிமித்தமாக இப்படித் தனித்துச் செல்லும் பயணங்கள் இன்றைய காலத்து பெண்களுக்கு இயல்பான ஒன்று தான். ஆனால் அவை பயணங்களா, அதுவும் சுதந்திரமான பயணங்-களா எனக் கேள்வி எழுப்-பினால், அவை பயணங்கள் தான், தனித்த பயணங்கள் தான்… ஆனால் சுதந்திரமான பயண-மென்று என்னால் வரையறை செய்ய முடியாது. அப்படி என்றால் சுதந்திரமான பயணம் என்றால் என்ன?

சிறு வயதில் பள்ளி படிக்கும் வரை, பள்ளி இறுதித்தேர்வு விடுமுறையில், ஒரு 2 மணி நேரம் பேருந்தில் பயணித்து தாத்தா வீட்டிற்குச் செல்ல வேண்டும், அப்போது பெரும்பாலும் தனித்து பயணித்ததில்லை, வீட்டிலிருந்து யாரேனும் அழைத்து கொண்டு போய் விடுவார்கள். அதுவே பெரியம்மா வீட்டிலிருந்து தாத்தா வீட்டிற்கு, 10-வது படிக்கும் அண்ணனோ தனியாக பேருந்தில் வருவார்கள். எங்காவது கிராமத்தில் பக்கத்து ஊரில் திருவிழா என்றால் அண்ணன் மட்டும் தனியாகச் செல்லலாம். ஆனால் நாங்கள், பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் வேடிக்கை காட்டிவிட்டு உடனே அழைத்து வந்து விடுவார்கள். அண்ணன் காலையில் வந்து கதை சொல்லுவார்கள், “கோயிலுக்குப் பக்கத்தில் நெல் அடிக்கும் களத்தில் படுத்துக் கொண்டு அன்னாந்து வானத்தை பார்த்ததாகவும் விடிய விடிய  வானவேடிக்கை நடந்தது என்றும் பூக்களாக வானத்திலிருந்து மத்தாப்பு சொரிந்தது அவ்வளவு அழகாக இருந்தது என்றும்…” இப்படி சிறுவயதிலிருந்து பெண்களுக்கான உலகம் சுதந்திரமான பரந்து விரிந்த வெளியாக இல்லை. அன்று சின்னப் பெண்ணாக ஏங்கியபடி அந்தக் காட்சியை கற்பனை செய்த பெண்ணாகிய என் உலகம் வளர்ந்தப் பின்னும் இப்படியாகவே இருப்பது தான் இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலையாக உள்ளது.

பெரும்பாலான பெண்களின் இருப்பு நான்கு சுவர்களுக்குள் சுருங்கியே இருக்கின்றது. அந்த நான்கு சுவர்களுக்குள் அவளது ஆளுமை, திறமை, வெளி, கற்பனை… என எல்லாமும் ஏதோ ஒரு விதத்தில் முடக்கப்படுகிறது. ஒரு ஜன்னலுக்குள் இருந்து வேடிக்கை பார்க்கும் மனநிலையில் பல இடங்களில் இருக்கிறாள். உண்மையில் இந்தச் சிறை, அவளது புறவெளியை மட்டும் சுருக்கவில்லை, அவளது அகவெளியையும் சுருக்குகிறது. ஒரு சார்பு நிலை உயிராகவே அவள் தன்னை வளர்க்க இந்தச் சமூகம் நிர்பந்திக்கிறது.

நான் சொல்வது ஒரு மிகையான ஒன்றாக உங்களுக்குத் தோன்றலாம். என் சக தோழிகளிடம் ஒரு கேள்வி கேட்டேன். அவர்களுடைய வாழ்நாளில் ஒரு சுதந்திரமான தனித்த பயணம் சாத்தியப்பட்டதா என. அலுவலக பணி நிமித்தமாக செய்யும் பயணமல்ல, விருப்பத்துடன் எங்கேனும் செல்ல முடிந்திருக்கிறதா என்று கேட்டேன். மூவரும் அரசாங்கத்தில் அதிகாரிகளாக இருப்பவர்கள். அவ்வாறு பயணித்ததில்லை, குடும்ப சூழலில் அவ்வாறு முடியாது எனச் சொன்னார்கள். சரி, ஆண்கள் நினைத்தால் தனியே சென்று கடற்கரையில் உட்கார முடியும், ஒரு பூங்காவில் பல மணிநேரம் உலவ முடியும், நினைத்த இடங்களுக்கு தனித்தோ நட்புகளோடோ பயணிக்க முடியும். அப்படியெல்லாம் வெளியில் பயணிக்க ஆசை உண்டா என்று கேட்டதற்கு… அனைவரும் ஒருமித்து, “ஆமாம் ஆசை இருக்கும் தான், எங்காவது போகனும் என்ஜாய் பண்ணனும் என நினைப்பதுண்டு. ஆனால் போக சாத்தியமில்லையே’’ என்றார்கள். எது தடை செய்கிறது? இந்த சமூகம்.

பாதுகாப்பு மட்டுமல்ல, இப்படிப்பட்ட சுதந்திரமான உணர்வே பெண்களுக்கு சாத்தியமில்லாத ஒரு கனவு. கனவில் மட்டுமே அவளால் இவ்வாறெல்லாம் யோசிக்க இயலும் என்பதுதான் பெரும்பான்மை பெண்களின் நிலையாக இருக்கிறது. “ஊர் சுற்றிப் புராணம்” என்ற ராகுல் சாங்கிரதயனின் புத்தகத்தைப் படித்த போது எனக்குள் இப்படிப்பட்ட சுதந்திரமான பயணங்களைச் சாத்தியப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்ற உறுதி எடுத்துக் கொண்டேன். முதலில் ஆசைப்படு என எனக்குள் ஆசைகளை நிரப்பிக் கொண்டேன். ஏனெனில் இந்தச் சமூகத்தின் வெளிகள் எனக்குமானவை. என் மீது இந்தச் சமூகம் வைக்கும் அழுத்தத்தால் _ தனியே ஒரு ஹோட்டலில் உணவு அருந்த நேரிடும் போதும், ஒரு டீக்கடையில் டீ குடிக்க நேரும் போதும்… இந்தச் சமூகம் என்னை கவனிக்கிறது என்ற பதட்டம் வருகிறது. அதை ரசித்து அனுபவிக்கும் மனநிலையில் இருந்து விடுபட்டு, ஏதோ தவறான ஒன்றை செய்வதாக இந்தச் சமூகம் அழுத்தித் தள்ள அவசரமாக அவ்விடத்தை விட்டு நகரும் மனநிலை தான் பெரும்-பாலானோர்க்கு ஏற்படும். அப்படி இருக்க ஒரு நெடும்பயணம், தனித்து தங்குமிடம் தேடல் என்பதெல்லாம் இந்தியப் பெண்ணுக்கு இன்னும் கிட்டாத விசயமாகவே உள்ளன.

ஆக ஒரு பெண்ணுக்கான சுதந்திரப் பயணம் என்பதை எவ்வாறு சாத்தியப்படுத்துவது? அது தேவை தானா? பெண் மீதான பாலியல் வன்கொடுமைகள் மிகுந்த காலத்தில் பெண்களுக்கு இது தேவையா என்றெல்லாம் பெண்களே யோசிப்பார்கள். முதலில் எப்படி சாத்தியப்படுத்துவது எனில், நம் சமூக வளர்ப்பில் உள் நுழைக்கப்பட்ட, நான்கு சுவர்களுக்குள் பாதுகாப்பு என்ற சிறைபட்ட மனநிலையை உடைக்கவேண்டும். வானம், காற்று, இந்த பூமியின் மலை, கடல் கட்டிடங்கள், கடைகள் எல்லாம் எனக்கானதும் என்ற உடைமையை கைக்கொள்ளவும் உரிமையை நிலை நாட்டவும் பெண்கள் பொதுவெளிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். இதைப் பெண்கள் முதலில் கூட்டமாக, அல்லது பெண்கள் துணையோடு செய்ய வேண்டும். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் அப்படியொரு முயற்சியை பெண்கள் அமைப்பு எடுத்துவருவதாக படித்தேன். அதாவது  பூங்கா, கடற்கரை  ஆகிய பொது இடங்களில்  போர்வையை விரித்து இரவு வெட்டவெளியில் தூங்குவது. இதன் மூலம் பெண்களுக்கும் இவ்விடங்களில் புழங்கும் உரிமையை நிலைநாட்டுவது, அல்லது அவ்வாறு இருக்கும் நிலையை சமூகத்தின் பார்வையில் சகஜமாக்குவது. இவ்வாறான போராட்டங்களின் மூலம் பொதுவெளிகளில் பெண்களின் தனித்த நடமாட்டங்களை உறுதி செய்வது.

நெடும்பயணம், வழித்தங்கல் ஆகியவற்றை முயற்சி செய்வது. பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, இதையெல்லாம் முதலில் பரிச்சார்த்தமாகவாவது செய்யும் துணிவு இருந்தால் தான் தனக்கான வெளியை பெண்கள் உறுதி செய்ய இயலும்.

அடுத்து இது தேவை தானா ? ஆம் தேவை தான். படிப்பு, பதவி மட்டுமல்ல பெண்களின் சுதந்திரத்தை உறுதி செய்வது. தன் வாழ்க்கையை அதன் அழகை முழுதுமாக அனுபவித்து வாழ அவளது பாலினம் எப்படி தடையாக இருக்கலாம். அவளது ஆளுமையை உறுதி செய்யவும் பெண்கள் ஆண்களோடு சமத்து-வத்துடன் வாழ அவளின் இருப்பு இந்த சமூகத்தில் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நீண்ட நெடும் பயணம் அதுவும் சுதந்திரமான நெடும்பயணங்கள் நோக்கி பெண்கள் நகரட்டும். அதுவே அவளுக்கான வாழ்க்கையின் அழகை முழுமையாக அனுபவித்து வாழும் வழி.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *