திராவிடர் கழகம் என்றாலே பறையன், பள்ளன் கட்சிதான்

மார்ச் 01-15

தருமபுரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வே.இராமசாமி (மூக்கனூர்பட்டி) அவர்களின் மகன் இரா.தமிழரசுக்கும் _ பாலசமுத்திரம் _ அண்ணா சோடா பேக்டரி உரிமையாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான எஸ்.பி.பெரியண்ணன் அவர்களின் மகள் பெ.தமிழ்ச்செல்விக்கும் வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா 30.03.1980 அன்று நடைபெற்றது. வெகு விமரிசையாக நடைபெற்ற இவ்விழாவில் நான் கலந்து கொண்டு வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியினை தலைமை தாங்கி நடத்திவைத்தேன்.

23.04.1980இல் துறையூர் தி.க. சார்பில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தில் ஏராளமான இளைஞரணி யினரும், தாய்மார்களும் கையில் தீச்சட்டியுடன் எழுச்சி பொங்க வந்தனர்.

குளித்தலை தோழர்கள் அரிவாள் மீது நின்று கொண்டும், அலகுகுத்தி அய்யா படம் அலங்கரிக்கப்பட்ட காவடி எடுத்துக்கொண்டும் வந்தனர்.

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை தோழர் உடல் முழுவதும் குண்டூசிகளை குத்திக்கொண்டு வந்தார்.

எல்லோரையும் திகைக்க வைக்கும்படி தோழர் மருது விமான அமைப்பில் அந்தரத்தில் தொங்கி உடல் முழுதும் அலகினை குத்திக்கொண்டு வந்தார்.

ஊர்வலத்தினை நான் கடைவீதியில் ஒரு இடத்தினின்று பார்வையிட்டேன். ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று பார்த்து வியந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

04.05.1980 அன்று திருச்சி பெரியார் மாளிகை ‘பெரியார் _ மணியம்மை மன்றத்தில்’ பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக, திருச்சி பெரியார் மாளிகையில் இயங்கிவரும் அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்தவரும் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் எழுத்தாளருமாகிய செல்வி தங்காத்தாள் அவர்களுக்கும் இராச்சாண்டர் திருமலை கழகபுரியைச் சேர்ந்தவரும் திருச்சி இருதயபுரம் கூட்டுறவு வங்கியின் எழுத்தாளருமான செல்வன் சின்னப்பன் ஆகியவர்களது வாழ்க்கை ஒப்பந்தம் மிகச் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

மண விழாவிற்கு ஏராளமான கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், நகர பிரமுகர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் ஆசிரியர், ஆசிரியைகள், நாகம்மை இல்லத்தைச் சார்ந்த குழந்தைகள் ஆகியோரும் குழுமியிருந்தனர்.

நாகம்மை இல்லத்தின் தாளாளர் புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினர்.

மணவிழாவிற்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளராகிய நான் தலைமை தாங்கி இவ்வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தினை நடத்தி வைத்தேன்.

09.05.1980 அன்று கோலார் தங்கவயல் தாழ்த்தப்பட்டோர் பேரவை சார்பாக பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 89ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நான் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்று விழாவில்  கலந்துகொண்டேன். விழாவில் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது:

“1959ஆம் ஆண்டு இதே ஊரில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் விழாவில் கலந்துகொள்ள தந்தை பெரியார் அவர்களுடன் நானும் வந்திருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

பஞ்சாபில் ஒரு ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகிக்க ஒப்புக்கொண்ட பாபாசாஹேப் அவர்கள் மாநாட்டு நிர்வாகிகளின் வேண்டுகோள்படி, மாநாட்டுத் தலைமை உரையை முன்கூட்டியே எழுதி அனுப்பினார். ஜாதி ஒழிய வேண்டுமானால்இந்துமதம் ஒழிந்தாக வேண்டும் என்ற கருத்தை அந்த உரையில் டாக்டர் அவர்கள் வற்புறுத்தி இருந்தார்கள். தலைமை உரையைப் படித்த மாநாட்டாளர்கள் அந்த பகுதியை நீக்கிவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

டாக்டர் அம்பேத்கார் அவர்கள், “நான் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க ஒப்புக் கொண்டது எனது கருத்துக்களை எடுத்துச் சொல்லத்தானே தவிர, தலைமை வகிப்பதால் எனக்குப் பெருமை ஏற்படும் என்பதால் அல்ல’’ என்று பதில் எழுதி அம்மாநாட்டுக்குக் தலைமை வகிக்க மறுத்துவிட்டார்.

அம்மாநாட்டுத் தலைமை உரையை டாக்டர் அம்பேத்கர் அவர்களிடம் பெற்று, “ஜாதியை ஒழிக்க வழி’’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து 1935இல் தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்டார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் பேரவை என்று பெயரிட்டுள்ளீர்கள். திராவிடர் கழகமே அந்தக் கழகம்தான். எங்கள் இயக்கத்தை ஆரம்பத்தில் என்ன சொல்லுவார்கள் என்றால் பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்றுதான் சொல்லுவார்கள்.

தோழர்களே ஜாதியை ஒழிக்க நாம் கடுமையான விலையைக் கொடுக்கத் தயாராக வேண்டும். ஆட்சிக் கட்டிலிலே வருபவர்கள் ஜாதியை ஒழிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

இந்திய அரசியல் சட்டத்திலே 17ஆவது விதியில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. 33 ஆண்டுகள் உருண்டோடி-விட்டன. தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதா?

தீண்டாமை ஒழிப்பு என்பதே பித்தலாட்டமாகும். ஜாதி இருக்கும்வரை தீண்டாமை இருக்கவே செய்யும். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டுமானால் முதலில் ஜாதியை ஒழித்தாக வேண்டும்.

இன்றும்கூட கிராமப்புறங்களில் தாழ்த்தப்-பட்டவர்களுக்கு ஒரு கிளாஸ் மற்றவர்களுக்கு ஒரு கிளாஸ் என்கிற நிலைமை டீக்கடைகளில் இருப்பதைக் காணலாம்.

உலகத்திலேயே எங்கும் இல்லாத ஜாதி இந்த நாட்டில்தான் உண்டு. அதுவும் உழைக்காதவன் மேல்ஜாதி, உழைக்கின்றவன் கீழ்ஜாதி என்கிற கொடுமை இந்த நாட்டிலேதான் உண்டு.

இதை மாற்ற எந்த ‘மகாத்மா’க்களும் முன்வர மாட்டார்கள். இங்கிலாந்து பாராளுமன்றத்திலே வின்ஸ்டன் சர்ச்சில் ஒருமுறை பேசினார்,

“ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களை இன்னும் தீண்டாதவர்கள் என்று சொல்லி ஒதுக்கி வைத்துள்ள உங்களுக்கு, இந்தியருக்கு சுயராஜ்யம் கேட்க என்ன உரிமை இருக்கிறது?’’ என்று கேட்டார்.

அன்று சர்ச்சில் கேட்ட கேள்வி இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலைமையை மாற்ற இன்னும் நாம் பேசிக்கொண்டேதான் இருக்க வேண்டுமா? இதுபோன்ற விழாக்களில் நாம் சிந்திக்க வேண்டிய இடம் இந்த இடம்தான்.

மனிதனுக்கு எந்தத் துன்பமும் இறந்தபின் தொடர்வதில்லை. ஆனால், இந்த ஜாதித் துன்பம் பிறவித்துன்பம் _ இறந்த பிறகும்கூடத் தொடரும் துன்பமாக இருக்கிறது.

சுடுகாட்டிலேகூட ஜாதி வந்து நிற்கிறது. இது பார்ப்பான் சுடுகாடு, பறையன் சுடுகாடு என்று இன்னமும் இருக்கின்றன.

இந்த லட்சணத்தில் நமக்கு தேசப்பற்று வேண்டும் தேசப்பற்று வேண்டும் என்று சிறுப்பிள்ளை போல் பாடம் சொல்லுகின்றார்கள்.

“அன்னியன் யார்?’’ என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லும் கருத்து இந்த இடத்திலே கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

‘என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்டவர வேண்டாம் என்பவனும், கிட்ட வந்தாலே, கண்ணில் பட்டாலே தோஷம் என்பவனும், நான் தொட்டதைச் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அன்னியனா? அல்லது “உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை, தொட்டாலும் பரவாயில்லை, நாம் எல்லோரும் சமம்தான்’’ என்று சொல்லுகின்றவன் அன்னியனா? என்பதை யோசித்துப் பாருங்கள்’’ என்று தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்கள்.

போலித்தனமான நாட்டுப்பற்றைவிட உண்மையான பற்றுதான் தேவை.

மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் டாக்டர் சம்பூர்ணானந்த் சிலையைத் திறந்து வைத்தார்.

விமானம் மூலம் வாரணாசிக்கு சிலையைத் திறக்க பாபுஜி வந்தபொழுது கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பாபுஜியின் ஜாதி பெயரைச் சொல்லி நீங்கள் எல்லாம் மந்திரியானால், எங்கள் செருப்புகளுக்கு யார் ‘பாலிஷ்’ போடுவது என்று குரல் கொடுத்தனர்.   இத்தகவலை ‘சண்டே’ ஏடு வெளியிட்டுள்ளது.

அது மட்டுமல்ல; பாபுஜி திறந்து வைத்த சிலையை அதற்குப் பிறகு கங்கை நீரைக் கொண்டு கழுவித் தீட்டுக் கழித்திருக்கின்றனர்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பாபுஜெகஜீவன்ராம் சிலையைத் திறந்ததால், அந்த சிலை தீட்டுப் பட்டுவிட்டதாம்.

இந்த செய்தியை அறிந்த மாத்திரத்திலேயே அதற்காகக் கொந்தளித்து எழுதியது ‘விடுதலை’ ஒன்றுதானே!

பாபு_ ஜெகஜீவன்ராம் யார்? சாதாரணமானவரா? இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்; அவர் விரல் சுட்டிய இடத்திலே இந்த நாட்டின் இராணுவம் விரைந்து செல்லும்.

அத்தகைய ஒருவருக்கு இந்த நிலை என்றால் என்ன அர்த்தம்? பதவி இருந்தாலும், பணம் இருந்தாலும், புகழ் இருந்தாலும்கூட, பிறப்பின் அடிப்படையிலே ஜாதி சாதாரணமாக ஒருவனின் தகுதி நிர்ணயிக்கப்படுகிற கொடுமை சரித்திரம் கேள்விப்படாத கொடுமையாகும். பொருளாதார பேதம் ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற காம்ரேடுகள் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்.

அதுவும் சிலையைக் கட்டியணைத்துக் கூடத் திறக்கவில்லை ஒரு பொத்தானை அழுத்தினார். மின்சார தொடர்பு காரணமாக சிலை மீது மூடியிருந்த திரை விலகியது. மின்சாரத்தின் மூலம் ஜாதி போகிறதா?

அண்மையிலேகூட பம்பாயில் காஞ்சி சங்கராச்சாரியார், “ஜாதித் தருமத்தைக் காப்பாற்ற வேண்டும். வருணாசிரமம்தான் இந்து மதம். இந்து மதத்தைக் காப்பாற்ற வருணாசிரமத்தைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று பச்சையாகச் சொல்லி இருக்கிறாரே.

ஜாதியை ஒழிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த இந்து மதத்தை ஒழித்துத் தானே ஆகவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களை ‘அரிஜன்’ என்று சொல்லிவிட்டால் போதுமா? அசல் ஏமாற்று மோசடி வார்த்தைதானே!

“Who Are Sudras?” என்ற நூலிலே அம்பேத்கார் அவர்கள், நம் நாட்டு வரலாறு மறைக்கப்பட்டு உண்மைக்கு மாறாக எழுதப்பட்டதற்குக் காரணம் வரலாறு எழுதியவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் என்பதால்தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

எனவே, நமது சமுதாய ஏற்றத்தாழ்வுக்கும் ஜாதி அமைப்புக்கும் மூலவர் பார்ப்பனர். மூல பலத்தோடு போர் புரிய வேண்டுமே தவிர, நமக்குள் அல்ல. தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளும் பல்வேறு பிரிவுகள் _ இவற்றையெல்லாம் மறந்து எதிரியை எதிர்க்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்கு சர்வபரித் தியாகம் செய்ய நம் இளைஞர்கள் முன்வர வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களை தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மட்டும்தான் தலைவர் என்று தயவுசெய்து சொல்லாதீர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் குரல் கொடுத்த தலைவர் அவர்.

நாம் ஆற்றவேண்டிய சமுதாயப் பணியை மறந்துவிடக் கூடாது. குறிப்பாக இளைஞர்-களுக்கு சமுதாயப் புரட்சியில் பெரும் நாட்டம் வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டு என்னுரையை நிறைவு செய்தேன்.

11.05.1980 அன்று ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்னை நாகம்மையார் நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்துகொண்டு நான் உரையாற்றினேன். அதில்,

“நமது நிறுவனத் தலைவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கைத் துணைவியராகவும், அய்யா அவர்களின் எழுச்சி மிகுந்த பொதுப்பணிக்கு உற்ற துணையாகவும் இயக்கத் தோழர்களின் தாயாகவும் இருந்த அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாள் இன்று.

இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபட்டதும் அதுவும் புரட்சிகரமான சமுதாய மாற்றப் பணிகளில் ஈடுபட்டது என்பதும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத ஒன்று!

அன்னை நாகம்மையார் அவர்கள் இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன் அத்தகைய பொதுப் பணியில் ஈடுபட்டார்கள், தந்தை பெரியார் அவர்களுக்குப் பெரும் ஊன்று-கோலாக இருந்தார்கள்.

அப்பழுக்கற்ற அன்னை நாகம்மையார் அவர்களின் பொதுத் தொண்டையெல்லாம் இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கும் பொதுவாழ்வில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு பொதுவாழ்வில் நிலவும் குறைபாடுகள் களையப்படுவதற்கு அவை பெரிதும் பயன்படும்.

Madras Presidency Who Is Who  என்ற புத்தகம் கேரளாவில் 1933ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது. அதில் அன்னை நாகம்மையார், தந்தை பெரியார், அய்யாவின் தங்கை கண்ணம்மையார் ஆகியோர் பற்றி சிறப்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

அவர்கள் எல்லாம் வாழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே இந்நூல் வெளிவந்து அவர்களைப்பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ள தானது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

19.1.1922 அன்று சங்கரன் நாயர் தலைமையிலே அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

ஒத்துழையாமை இயக்கம் பற்றி பிரச்சினை அப்பொழுது எழுந்தது. அதைத் தொடருவதா _ நிறுத்தி விடுவதா என்கிற பிரச்சினை. அப்பொழுது காந்தியார் சொன்னார், ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட வேண்டுமானால் ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்கள் கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அந்த இருவர் நாகம்மை-யாரும், கண்ணம்மையாரும் ஆவார்கள்.

மேலும், 1924ஆம் ஆண்டில் பெரியார் வைக்கத்திலே தீண்டாமையை எதிர்த்துப் போராடி கைது செய்யப்பட்டார். அந்தச் சந்தர்ப்பத்திலே நாகம்மையார் தொடர்ந்து போராட்டத்தை நடத்தினார்! என்ற இத்தகவல் புத்தகத்திலே விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகள் எல்லாம் இந்திய வரலாற்றிலே இடம்பெறாது; பாடத் திட்டங்களிலே இடம் பெறாது. காரணம் இவர்கள் பெரியார் இயக்கத்தோடு சம்பந்தப்-பட்டவர்கள். சரித்திரத்தை எழுதுவோர்களும் பெரும்பாலும் பார்ப்பனர்களே.

அய்யா அவர்களின் புரட்சிகரமான சிந்தனைக்கு வடிவமாக அன்னை நாகம்மை வாழ்ந்து காட்டினார்கள். ஆண்களைப் போலவே பெண்கள் உடை உடுத்தவேண்டும். தேவை இல்லாமல் 12 முழம், 16 முழம் என்று எதற்காக சுற்றிக் கொள்ளவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் கேட்பார்கள்.

அதனை ஏற்றுக்கொண்டு அன்னை நாகம்மையார் அவர்கள் வீட்டில் இருக்கும்பொழுது குப்பாயம் கட்டிக் கொள்வார்களாம்.

அந்தக் காலகட்டத்திலே உண்மையிலே இது ஒரு புரட்சிகரமான காரியமாகும். நம் நாட்டுப் பெண்கள் அன்னை நாகம்மையாரைப்பின்பற்ற வேண்டும். இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் புரட்சிகரமாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். அறுபதாண்டு காலம் உருண்டோடிவிட்ட நிலையில் இன்றுகூட நம் நாட்டுப் பெண்கள் புதிய சிந்தனை ஓட்டத்திற்கும் நடைமுறைகளுக்கும் ஒத்துவர மறுக்கிறார்கள் என்றால் இது ஒரு வேதனையான நிலையாகும்.

அன்னை நாகம்மையாரைப் பின்பற்றி நம் பெண்கள் சமுதாயம் திருத்தம் பெறவேண்டும். அவர்களைப் பற்றி ஏராளமான விவரங்களை நாட்டு மக்கள் மத்தியிலே எடுத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டேன்.

5.5.1980இல் ‘விடுதலை’யில் நான்காம் பக்கத்தில் ‘ஓய்வு வயது குறைப்பு’ குறித்து திராவிடர் கழகத்தின் தீர்மானத்தை  ‘சுதேசமித்திரன்’ பாராட்டி தலையங்கம் 13.5.1980 அன்று எழுதியிருந்தது. அதனை, ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். அதில்,

“அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 55ஆக குறைக்க வேண்டும் என்று திராவிடர் கழக மத்திய கமிட்டி நிறைவேற்றிய தீர்மானத்தை “இது ஒரு மெச்சத் தகுந்த துணிச்சலான செயல்’’ என்று சுதேசமித்திரன் (13.5.1980) ஏடு தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

“அரசியல் கட்சிகள் இந்த நல்ல காரியத்தை செய்ய மாட்டார்கள். அவர்களுடைய கவலையும் சிந்தனையும் ஓட்டுகள் பெறுவது பற்றியதாகும்’’ என்றும் தனது தலையங்கத்தில் அது குறிப்பிட்டுள்ளது.

இதுபற்றி சுதேசிமித்திரன் ஏடு எழுதியுள்ள தலையங்கத்தின் விவரம் வறுமாறு:

அரசு ஊழியர் பணிக்காலம் 55 வரை இருந்தது தவறா? ஓராண்டு காலமாக 58ஆக உயர்த்தியது சரியா?

மத்திய அரசு 58 வயது என்று நிர்ணயம் செய்திருந்ததை தமிழ்நாடு அரசு பின்பற்றியது என்ற வாதம் பொருத்தமானதா? அல்லது மத்திய அரசு 58 வயது என்று விதித்து இருப்பதுதான் நியாயமா?

இந்த வழியில் சிந்தனையும் செயல்பாடும் மிக முக்கியம். அபாயகரமான பிரச்சினை வேலையில்லாத் திண்டாட்டம் பூதாகரமாக தலைதூக்கிக் கொண்டிருக்கிறது.

58 வயது என்பதை மேலும் அதிகரிப்பதை சூழ்நிலை இடம் கொடுக்கும் ஆயின் இயன்ற அளவு உயர்த்தத் தடை சொல்வார் இருக்கப் போவது இல்லை.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 55 என்பது 125 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயம் செய்யப்பட்டது ஆகும். அது அப்போதைய நிலை படித்தவர் எண்ணிக்கை குறைவு.

முறைப்படி ஓய்வு பெற்றவர்களைக்கூட அரசாங்கம் ஆள் பற்றாக்குறையினால் மறு நியமனம் செய்ததும் உண்டு.

சென்னையைத் தவிர வெளிமாவட்டங்களில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டுமே கல்லூரிகள் மிகுந்து இருந்தன.

மகப்பேறு பெருகிவரும் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் பள்ளிகளும், கல்லூரிகளும் நாடு பூராவிலும் கிளை வெடித்துப் பரவலாயின. பல்லாயிரக்கணக்கில் படித்தோர் ஆண்டுதோறும் கல்லூரிகளில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டு வருகின்றனர்.

அவர்களுக்கு படிப்புக்கு வசதி செய்த அரசு, பிழைப்புக்கும் வழி செய்தல் கடமை. ஏற்கனவே அரசு பணிகளில் உள்ளவர்களுடைய ஓய்வு வயதை ஓரளவு குறைத்து நிர்ணயம் செய்து புதிதாக படித்து பரிதவித்து நிற்பவர்களுக்கு இடம் அளித்திருப்பின் அது விவேகம் நிறைந்த காலத்திற்கு ஏற்ற துணிச்சலான செயல்.

அரசு ஊழியர் தாமாகவே முன்வந்து ஒய்வு பெறும் வயது 55 போதும். இளம் தலைமுறையினருக்கு சில இடம் கொடுங்கள் என்று ஒரு போராட்டம் நடத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தினேன்.

மதச்சார்பற்ற நாட்டின் வானொலி மதப் பிரச்சார சாதனமாவது வருத்தத்தைத் தருகிறது என்று வானொலி நிலைய இயக்குநர் கந்தசாமி அவர்களைச் சந்தித்து நமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கழகப் பொதுச்செயலாளர் என்ற முறையில் 18.5.1980இல் நான் அளித்தேன்.

என்னுடன் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எஸ்.பி.தெட்சிணாமூர்த்தி, செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.பி.இராசமாணிக்கம், வ.ஆ.(வடக்கு) மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆம்பூர் ஏ.பெருமாள் தெற்கு மாவட்டத் தலைவர் வேல்.சோமசுந்தரம் மாநில மகளிரணி அமைப்பாளர் பார்வதி கணேசன் ஆகியோர் வந்தனர்.

இயக்குநர் திரு.கந்தசாமி அவர்களும், உதவி இயக்குநர் சந்திரமவுலி அவர்களும் வரவேற்றனர். உடன் வந்த தோழர்களை அவர்-களுக்கு நான் அறிமுகப்படுத்தி வைத்தேன்.

மனுவைக் கொடுக்குமுன் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டிய அவசியத்தைப் பற்றி இயக்குநருக்கு நான் விளக்கம் கொடுத்தேன்.

வானொலி இயங்கும்முறை எங்களுக்கு அறவே திருப்தி இல்லை. மதசார்பற்ற ஒரு அரசாங்கத்தின் நிறுவனம் முழுக்க முழுக்க மதப்பிரச்சார கூடமாக செயல்படுவது பெரிதும் வருந்தத்தக்கது. மதசார்பற்ற தன்மைக்கு நேர் விரோதமாகவே செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

பகுத்தறிவாளர்க்கும் பகுத்தறிவுச் சிந்தனைக்கும் இடம் அளிப்பது அரிதிலும் அரிதாக இருக்கிறது.

வானொலி இயங்கும் போக்கு பற்றி மத்திய தகவல் ஒலிபரப்புதுறை அமைச்சர் அவர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளோம்.

நாங்களும் வரி செலுத்துகிறோம். வானொலி சரியாக முறையாக இயங்க வேண்டும் என்று கேட்க எங்களுக்கு எல்லாவித உரிமையும் உண்டு.

ஒரு விஞ்ஞான சாதனத்தை அஞ்ஞானத்தைப் பரப்புவதற்காக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

கொளுத்தும் வெய்யிலிலும் ஆண்களும் பெண்களுமாக எங்கள் தோழர்கள் பல மைல்கள் நடந்து, எங்கள் கோரிக்கைகளைப் பிரசாரம் செய்து கொண்டு வந்திருக்கிறோம். இந்தப் பிரச்சினையில் பொதுமக்களின் கருத்தை உருவாக்குவதே எங்களது நோக்கம்.

இது ஏதோ திராவிடர் கழகத்துக்காரர்களின், பகுத்தறிவாளர் கழகத்தாரர்களின் கோரிக்கை என்று மட்டும் கருதிவிடாதீர்கள்.

இதில் எல்லாக் கட்சிக்காரர்களுடைய கோரிக்கைகளும் அடங்கி உள்ளன. அவர்களுடைய உணர்வுகள் எல்லாம் இதற்கு ஆதரவாகவே இருக்கின்றன. அண்மையில் புதுவையில் முன்னாள் அமைச்சர் வி.எஸ்.சுப்பையா அவர்களைச் சந்தித்தேன். இந்த வானொலி போராட்டத்திற்கு மிகவும் ஆதரவு தெரிவித்தார். நியாயமாக நடத்தவேண்டிய போராட்டம் என்றார். இந்த உணர்வுகளை யெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழின கலைஞர்களுக்கு வானொலியில் உரிய வாய்ப்புக் கொடுப்பதில்லை; முழுக்க முழுக்க பார்ப்பனர்களின் ஏகபோகமாக வானொலி செயல்படுகின்றது.

ஒவ்வொரு நாளும் சமஸ்கிருதத்தைப் பரப்புவதற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழ் வளர்ச்சிக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ ஒரு மணி நேரம் ஒதுக்கப் படுவதில்லை. அதற்கு வாய்ப்பே இல்லை.

இந்த நிலைகள் எல்லாம் மாற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்து.

இயக்குநர் திரு.கந்தசாமி அவர்கள் அப்பொழுது “We are responsible for public opinion” என்று குறிப்பிட்டார்.

அப்பொழுது உதவி இயக்குநர் சந்திரமவுலி அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு (Some years ago)   அய்யா அவர்களைப் பற்றி ஏ.எஸ்.கே. அவர்கள் வானொலியில் உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தோம் என்றார். உடனே நான்,

‘நீங்களே சில ஆண்டுகளுக்கு முன்பு என்றுதானே சொல்லுகிறீர்கள். சில ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நாத்திக கருத்துக்களுக்கு இடம் கிடைக்கிறது என்று நீங்களே ஒப்புக் கொள்கின்றீர்கள்!’ என்று குறிப்பிட்டேன்.

(நினைவுகள் நீளும்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *