Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெண்ணியத் திரைப்படங்கள் பெண்ணியம் பேசுகின்றனவா?

 – கீதா இளங்க்கோவன்

சமூகத்தின் சமகாலப் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாமல் சினிமா பிரதிபலிக்கும். பிற்போக்குத்தனமான, வணிக நோக்கில் எடுக்கப்படும் படங்களும், அவற்றை விரும்பும் வணிக விரும்பிகள் நிறைந்திருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்றைய பிரச்சினைகள் பதிவாகியிருக்கின்றன. வேலை வாய்ப்பு, பெண் கல்வி, தேர்தல் அரசியல், புரட்சி அரசியல் என வணிக வெற்றிக்காகவாவது இக்கருத்துகள் பேசப்பட்டிருக்கின்றன.

அப்படிக் கடந்த ஆண்டில் வணிக நோக்கில் வெற்றி பெற்ற பல படங்கள் பெண் குறித்துப் பேசியதைப் பார்க்க முடிந்தது. அல்லது இப்படங்கள் பெண்கள் குறித்து பேசுகின்றன என்று பரவலாக விளம்பரம் செய்யப்பட்டது. தனித்து வாழும் பெண், தனித்துவமாக வாழ நினைக்கும் பெண், அவர் எதிர்கொள்ளும் சமூகத்தின் பார்வை என புதிய கோணங்களில் இக்கதைகள் அமைந்திருந்தன. இத்தகைய படங்களில் சிலவற்றை விமர்சனப் பார்வையோடு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன்.

இறைவி (தமிழ்): இறைவி, பெண் பார்வையிலோ பெண்ணிய நோக்கிலோ எடுக்கப்பட்ட படமல்ல. ஆனால், இதில் வரும் சில பெண்களும், அவர்கள் எழுப்பும் கேள்விகளும் இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திலும் வந்ததில்லை. அந்த வகையில் இந்தப் படத்தை துணிச்சலான முயற்சியாகப் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் கார்த்திக் சுப்புராஜ் அன்ட் டீம்!

குறிப்பாக தனித்து வாழும் பெண். தனித்து வாழும் பெண்களை, அவர்களின் பாலியல் உணர்வுகளை, படத்தில் மட்டுமல்ல பொதுவெளியில் கூட எந்த ஊடகமும் பேசியதில்லை. `என் கணவனுடன் சேர்ந்து என் காதலும் இறந்துவிட்டது. உன்னுடனான உறவு, உடல்ரீதியானது மட்டுமே, உன்னைக் காதலிக்கவும் கல்யாணம் செய்து கொள்ளவும் என்னால் முடியாது என்று தன் நிலையை, உறவிலிருக்கும் ஆணிடம் சொல்லும் பெண் பாத்திரம் யதார்த்தம். இதனை சமுதாயம் எந்தப் `பெயரிட்டு அழைத்தாலும் தனக்கு சரியென்று படுவதைச் செய்யும் துணிச்சலும், மற்றவர் உரிமையில் தலையிடாமல், தன் உரிமையில் யாரும் தலையிட அனுமதிக்காமலும், தன் வாழ்க்கையை தான் தீர்மானிக்கும் தெளிவும் அருமை!

ரொமான்ஸை எதிர்பார்த்து, ஆயிரம் கனவுகளுடன் திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண். `உன்னுடன் வாழ்கிறேன், காதலிக்க முடியாது என்று முரட்டுத்தனமாக மறுக்கும்-கணவன், கர்ப்பிணியான தன்னைப் பற்றி கவலைப்படாமல் கொலை செய்துவிட்டு சிறைக்குப் போனாலும், தன்னைக் காதலிப்பதாக சொல்லும் ஆணை ஏற்கத் துணிவில்லை, எந்தமுடிவும் எடுக்க முடியாமல் சூழ்நிலைக் கைதியாக அதன் போக்கில் வாழ்க்கையைத் தொடரும் இவள் சராசரிப் பெண்களின் பிரதிநிதியாக இருக்கிறாள். நன்கு படித்து வேலைக்குப்போனாலும், குடித்துவிட்டு தினமும் ரகளை செய்யும் கணவனை விட்டுப் பிரிவதா வேண்டாமா என்ற முடிவை எடுக்க முடியாமல் கடைசி வரை அந்த மேட்டுக்குடிப் பெண் திணறிக் கொண்டே இருக்கிறாள்.

இறைவி, சில  Women–களின் கதை என்று போடுகிறார்கள். ஆனால், படம் முழுவதும் ஆண்களின் ஆக்கிரமிப்பு தான், அவர்களின் வன்முறையும் அடாவடியும்தான். அவர்களுக் கிடையே, பெண்கள் மங்கலாகத் தெரிகிறார்கள். அவர்களின் குரல் பலவீனமாக ஒலிக்கிறது. சரி, இப்போதைக்கு கேட்கவாவது செய்கிறதே என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியது தானோ… —

பின்க் (இந்தி)

ஒரு பெண்ணிடம் ஆண் அத்துமீறுகிறான். அதைப் பற்றி அந்தப் பெண் புகார் செய்யும்போதும், வழக்கு நடக்கும்போதும் ஆண்தரப்பு முன்வைக்கும் வாதங்கள் என்னென்னவாக இருக்கும்? அவள் அணியும் உடை சரியில்லை, இதற்கு முன்பு அவளுக்கு பிற ஆண்களுடன் உறவு இருந்திருக்கிறது, அவள் எதற்கு ஆணுடன் அந்த இடத்துக்குப் போகிறாள், குடித்திருக்கிறாள், அவள் வீட்டுக்கு ஆண்கள் வந்து போகிறார்கள், அவள் நடத்தை சரியில்லை, அவள் பாலியல் தொழிலாளி… இத்தியாதி… இத்தியாதி…

‘பிங்க்’ படத்தின் பலம் -_ இது எல்லாம் இருந்தாலும், தன்னுடன் உறவு கொள்ள முயலும் ஆணிடம் அந்தப் பெண் `முடியாது’ என்று சொன்னால் அதன் பொருள் `முடியாது’ என்பது மட்டும்தான் என்று பொட்டில் அடித்தமாதிரி சொல்வது.

பெண்களின் நோக்கில் படம் பயணிக்கிறது. அவர்களது இயலாமை, அவர்களது இயல்பான சந்தோசங்களை வக்கிரமாக சித்தரித்து கரித்துக் கொட்டும் சமுதாயம், அவர்கள் மேல் திணிக்கப்படும் குற்றவுணர்வு… எல்லாவற்றையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். பல இடங்களில் பின்னணி இசை இல்லாத வெற்று மௌனம் எழுப்பும் உணர்வுகள் ஏராளம்.

மீனலாக வரும் தப்ஸியின் நடிப்பும், வடகிழக்குப் பிராந்தியப் பெண்ணின் பிரச்சினையைச் சொல்லும் ஆன்ட்ரியாவின் தவிப்பும் இயல்பு!

மீனலின் தோழியாக வரும் Falak ஃபலக் கதாபாத்திரமும் அழுத்தமானது. ஃபலக்காக வரும் கீர்த்தி குல்கர்னி நடிப்பு அற்புதம். மீனலும், ஆன்ட்ரியாவும் போலீஸுக்குப் போகும் முடிவெடுக்க, ஃபலக் ராஜ்வீரிடம் ஸாரி கேட்டு சமாதானமாகப் போகலாம் என்கிறார். தானே அவனிடம் போனில் பேசுகிறார். ஸாரி கேட்டு சமாதானம் செய்ய, மீனலை கேவலமாகப் பேசுகிறான் ராஜ்வீர். ஃபலக் வெகுண்டெழுந்து, `என் தோழியை இழிவு செய்ய நீ யார்? தப்பு செய்தது நீ, மீனலை கேவலப்படுத்த உனக்கு எந்த உரிமையுமில்லை. சட்டப்படி உனக்கு தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்று கோபமாகப் பேசும் காட்சியில் தோழியின் மாண்பைக் காக்க அவள் பக்கம் நிற்கும் ஃபலக்கின் உறுதி, அவளைப்புரிந்து கொண்டு மெலிதாக புன்னகைக்கும் மீனல் என்று அந்தக் காட்சி அழகு!

நீதிமன்றக் காட்சியில், நீங்கள் மூவரும் பணம் வாங்கிக் கொண்டுதானே அந்த ரிசார்டுக்குப் போனீர்கள் என்று திரும்பத் திரும்ப எதிர்தரப்பு வழக்கறிஞர் பொய்க்குற்றம் சாட்ட, ஒரு கட்டத்தில் கோபத்தில் வெடிக்கிறார் ஃபலக். `ஆமாம், பணம் வாங்கிட்டுத்தான் போனோம். ஆனால், பாலியல் தொழிலாளியானாலும் முடியாது என்று சொல்லும் பெண்ணை ஒரு ஆண் எப்படி வற்புறுத்த முடியும்?’ என்று கேட்கும் காட்சி முகத்தில் அறைந்து புரியவைக்கிறது, தன் உடல் மீதான பெண்ணின் உரிமையை. இந்தக் காட்சியில் கீர்த்தியின் நடிப்புஅபாரம்!

இந்திய ஆண், அயல்நாடு போய் பெரிய படிப்பெல்லாம் படித்தாலும் பெண்ணின் மீதான அவன் பார்வை பிற்போக்குத் தனமாகத்தான் இருக்கிறது. ராஜ்வீரின் பிற்போக்குத்தனத்தை வெளிக் கொண்டுவரும் வழக்கறிஞர் தீபக்கின் சாதுரியமும், வாதமும்  அதன் மூலம் உண்மையை உணர வைக்கும் உத்தியும் பிரிலியண்ட்! அமிதாப்பின் முகபாவங்கள், உடல் மொழியில் அத்தனை யதார்த்தம். நுணுக்கமான நடிப்பில் அசர வைக்கிறார் மனிதர்.

ஆணாதிக்க சமுதாயம் பெண்ணையும், அவள் மீதான வன்முறையையும் எப்படிப் பார்க்கிறது, எப்படிப் பார்க்கப்பட வேண்டும் என்று பார்வையாளனுக்கு சொல்லித் தருகிறது `பிங்க் படம். வெல்டன்! இயக்குனர் அனிருத்த ராய் சௌதிரிக்கும், மொத்த படக் குழுவினருக்கும் அன்பான கைகுலுக்கல், இந்தியத் தோழிகளின் சார்பாக!

டியர் ஜிந்தகி (இந்தி)

 

கௌரி ஷிண்டே  (`இங்கிலிஷ் விங்கிலிஷ்’ இயக்குனர்) இயக்கியுள்ள `டியர் ஜிந்தகி’ என்ற இந்திப் படத்தில் தனது காதல் உறவுகளை தேர்ந்தெடுப்பதில், அதை பேணுவதில் கதாநாயகி கைராவுக்கு (அலியா பட்) சிக்கல் வருகிறது. எப்போதும் ஒருவித பாதுகாப்பின்மை யுடனும், தவிப்புடனும் இருக்கிறாள். திரைப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டுமென்பது அவள் கனவு, அதற்கான முயற்சிகளில் பல தோல்விகள், பெற்றோருடனும் ஒட்டுதல் இல்லை. தனது மனச்சிக்கல்களை அடையாளம் கண்டு உளவியல் மருத்துவரான ஜஹாங்கிரின் (ஷாருக்கான்) உதவியை நாடுகிறார். ஜஹாங்கிர், கைராவின் உளவியல் தடுமாற்றங்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவரை இயல்பான சந்தோசமான பெண்ணாக உணர வைப்பதுதான் மொத்தக் கதையும்.

கதாநாயகி இந்தத் தலைமுறைப் பெண். காதல் உறவுகளையும், அதன் பிரிவையும் எதிர் கொள்வதில் அவளுக்கு வரும் கலாச்சாரத் தயக்கங்கள்.. தனக்கு வரும் ஒளிப்பதிவு வாய்ப்பு திறமையால் வருகிறதா, தன் அழகினால் வருவதா என்ற குழப்பம்.. உளவியல் மருத்துவரின் உதவியை நாடும் தெளிவு.. என்று படம் பயணிக்கிறது. தீவிரமான மனநோய் களுக்குத்தான் மனநல மருத்துவரை அணுக வேண்டும், மற்றவைகளை நாமே பார்த்துக் கொள்ளலாம் என்ற பொதுபுத்தியிலிருந்து மாறுபட்டு, இளம் பெண் தனக்கு ஏற்படும் மனக் குழப்பங்களுக்கும் மருத்துவரின் உதவியை தாராளமாக நாடலாம், சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று ஆரோக்கியமாக வழிகாட்டுகிறது `டியர் ஜிந்தகி. முடிவில் அவள்  சிறப்பான ஆவணப்படமொன்றை இயக்கி அனைவராலும் பாராட்டப் படுகிறாள். அந்த விழாவிற்கு அவளது மூன்று முந்தைய காதலர்களும் வந்து, அவள் வெற்றிக்கு கைகுலுக்கி புன்னகையுடன் வாழ்த்து தெரிவிப்பது அருமை!

டங்கல் (இந்தி)

 

அமிர்கான் நடித்த `டங்கல் படம், காமல்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு  தங்கப் பதக்கம் வாங்கித் தந்த முதல் வீராங்கனை கீதா போகத்தின் சாதனையை நாடறியச் செய்துள்ளது. அதற்கு அமிர்கானுக்கு நன்றி! மற்றபடி படம் முழுக்க கீதாவின் அப்பா மகாவீர் சிங் போகத்தின் மல்யுத்த காதல், தனக்கு மகன் பிறந்து மல்யுத்தத்தில் சாதிக்க வேண்டும் என்ற அவா, வேறு வழியில்லாமல் மகளை பயிற்றுவிப்பது என்று `ஆண் ஈகோ தளத்திலேயே செல்கிறது. பெண்  சமத்துவம், பெண் நோக்கு என்ற எதுவும் படத்தில் தென்படவில்லை.