அரியலூர் அனல்
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடூரங்கள் தொடர்ந்து அதிகமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2010ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக 32,712 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பகம் தெரிவித்துள்ளது.
அண்மையில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சிறுகடம்பூரில் நந்தினி என்னும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு பெண் இந்து முன்னணிக் காலிகளால் சீரழிக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 26 அன்று காணாமல் போன நந்தினி ஜனவரி 14ஆம் தேதியன்று கீழமாளிகைக் கிராமத்தில் பாழுங்கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப் பட்டுள்ளார். இதில் என்ன கொடுமையென்றால், சம்பந்தப்பட்ட இந்து முன்னணி பொறுப்-பாளனாகிய மணிகண்டன் என்ற ஆசாமி அப்பெண்ணைக் காதலிப்பதாக நடித்து, அந்தப் பெண்ணைக் கர்ப்பமாக்கி கொலை செய்துள்ளார்.
காவல்துறை மிகுந்த மெத்தனமாக செயல்பட்டது. 11 நாள்களுக்குப் பின் சடலம் கண்டெடுக்கப்பட்டு, 20 நாள்களுக்குப் பின்தான் காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தி.மு.க., கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
அதற்குப் பிறகுதான் 20 நாள்களுக்குப் பின் இந்து முன்னணி பொறுப்பாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறை இறங்கியுள்ளது. படுகொலைக்கு சூத்திரதாரி-யான மாவட்ட இந்து முன்னணி செயலாளர் படகுக் காரில் பந்தாவாக ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறாரே, அவர்மீது ஒரு தூசுகூடப் படாமல் காவல்துறை பாதுகாப்பதன் மர்மம் என்ன?
அவரது பேரை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கக் கூடாது என்று அதிகார மட்டத்தி-லிருந்து அழுத்தம் தரப்பட்டதாகத் தகவல். அவருக்கு சென்னையில் முக்கிய ஒரு பெரிய நிறுவனத்தில் சங் பரிவார் பரிந்துரையின் பேரில் பணி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்து முன்னணிக்காரர்கள் பொதுக்கூட்டம் போட்டு, ‘எங்கள்மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது’ என்று பச்சையாக உண்மைக்கு மாறாகப் பேசுகிறார்கள்.
கடந்த மாதம் 21ஆம் தேதி (21.1.2017) பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சென்று நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று உறுதி கூறியதோடு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் தந்துள்ளார்.
கடந்த 5ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் போராட்டம் நடத்தியுள்ளார்.
மதுரையில் 4.2.2017 சனியன்று கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில், நந்தினி படுகொலை குறித்து முக்கிய தீர்மானமும் நிறை வேற்றப்பட்டுள்ளது. வரும் 13ஆம் தேதி சம்பந்தப்பட்ட முக்கிய பகுதியான செந்துரை கிராமத்தில் கவுரவக் கொலை என்னும் ஜாதி வெறி எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்றும், அதில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்பார் என்றும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
தி.மு.க. செயலவைத் தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட நந்தினியின் இல்லத்திற்குச் சென்று (5.2.2017) ஆறுதல் கூறி வந்ததோடு மட்டுமல்லாமல், அரியலூரில் தி.மு.க. சார்பில் வரும் 10ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
குற்றத்தின் சூத்திரதாரியான இந்து முன்னணிப் பொறுப்பாளரைக் காவல்துறை கைது செய்துக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தத் தவறினால் விளைவுகள் மோசமாக இவர்களே காரணமாவர்!