செய்யக் கூடாதவை

பிப்ரவர் 16-28

பல் துலக்காமல் படுக்கக் கூடாது

பலரும் காலையில் மட்டும் உணவுக்கு முன் பல்துலக்கினால் போதும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இரவு உணவுக்குப் பின் பல் துலக்குவது கட்டாயம். காரணம், பகல் முழுக்க உண்ட உணவுத் துணுக்குகள், அழுக்குகள் பற்களிலும் இடுக்கிலும் இருக்கும். இரவு பல் துலக்காமல் தூங்கினால் இரவு முழுக்க அவை பல்லிலே இருந்து பாதிப்பை உண்டு பண்ணும். இரவு படுக்கும்போது நன்கு துலக்கிவிட்டால் இரவு பல் தூய்மையாக இருக்கும். காலையில் துலக்காமல் விட்டால்கூட அதிகம் பாதிக்காது. ஆனால், காலையிலும் துலக்க வேண்டும். இரவு துலக்குவதுதான் கட்டாயம். பல் துலக்கும்போது கீழ்ப்பற்களை மேல் நோக்கியும், மேல் பற்களைக் கீழ்நோக்கியும் தேய்த்து விளக்க வேண்டும். ஈறுகளில் அதிகம் தேய்க்கக் கூடாது. பல்லையும் மெதுவாகவே துலக்க வேண்டும்.

மரபுவழி மடமைகளைப் பின்பற்றக் கூடாது

மரபு வழியாக வரும் அறிவிற்கும், காலத்திற்கும் ஒவ்வா, தேவையில்லாவற்றைப் பின்பற்றாது தவிர்க்க வேண்டும். வளையல்காப்பு, மஞ்சள்நீர், காது குத்துதல், குடிபுகுதல் என்று எல்லாவற்றிற்கும் விழா நடத்திப் பொருளையும், காலத்தையும், உழைப்பையும் வீணடிக்கக் கூடாது.

அலகு குத்துதல், தீ மிதித்தல், பாலையும், பழத்தையும் பாழாக்குதல், உணவுப் பொருள்களை நீரிலும், நெருப்பிலும் போடுதல், தேங்காயை, எலுமிச்சையை, பூசணிக்காயைச் சாலையில் உடைத்துப் பாழாக்குதல், தலையில் தேங்காய் உடைத்து மூளை பாதிக்கும்படிச் செய்தல், பலி கொடுத்தல், சகுனம் பார்த்தல், சோதிடம் கேட்டல், குறி கேட்டல், சாமியாரிடம் சக்தியிருப்பதாய் ஏமாறுதல் என்று இவைகளைத் தவிர்த்து அறிவோடும், விழிப்போடும், மகிழ்வோடும் வாழ வேண்டும்.

நமது இரத்த வகையை அறியாமலிருக்கக் கூடாது

ஒவ்வொருவரும் தங்களுடைய இரத்த வகை என்ன என்பதைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். காரணம், நமக்கு எந்த நேரத்தில் இரத்தம் ஏற்ற வேண்டி நேரும் என்று சொல்ல இயலாது. எதிர்பாராத நேரத்தில் நடக்கும் விபத்தாலும், தாக்கும் நோயாலும் இரத்தம் உடனே ஏற்ற வேண்டி வரும்போது, இரத்தத்தைப் பரிசோதித்து இரத்த வகை அறிய காலதாமதம் ஏற்படாது தவிர்க்க இரத்த வகை முன்னமே சோதித்துத் தெரிந்து வைத்திருப்பது கட்டாயக் கடமையாகும். பிள்ளைகளுடைய இரத்த வகையையும் பெரியவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஜாதகம் குறித்து வைப்பதற்குப் பதில் இது போன்றவற்றைக் குறித்து வைக்க வேண்டும்.

சிறுநீரக நோயாளி, இதய நோயாளிகள் அளவிற்கு அதிகமாக நீர் அருந்தக்கூடாது

சிறுநீரக நோயாளிகளின் சிறுநீரகம் முன்னமே கழிவுகளை வெளியேற்றுவதில் சக்தியற்று இருக்கும். அளவிற்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், அதைச் சிறுநீராக வெளியேற்ற முடியாமல் சிறுநீரகமும் பாதிக்கப்படும், உடலும் பாதிக்கப்படும்.

இவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அளவோடு நீர் அருந்த வேண்டும். சிலர் சர்வரோக நிவாரணியாகத் தண்ணீரை ஒரே நேரத்தில் வயிறு முட்ட குடிக்கச் சொல்வர். அது தவறு. நல்ல உடல்நலம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீர் அருந்த வேண்டும். வெய்யில் காலத்தில் இன்னும் கூடுதலாக அருந்தவேண்டும்.

நோயாளிகள் மருத்துவர்கள் சொல்லும் அளவிற்கு அளவோடு நீர் அருந்த வேண்டும். இதய நோயாளிகள் எல்லாவற்றிலும் மருத்துவர் சொல்லும்படி நடந்தால் உயிருக்குக் கேடு வராது.

சலிப்பு வந்த நேரத்தில்கூட அலுத்துக் கொள்ளக் கூடாது

சிலர் எப்போது பார்த்தாலும் அலுத்துக் கொள்வார்கள். என்ன வாழ்க்கை! என்ன உலகம்! என்ன குடும்பம்! என்ன உறவு! இப்படி எதையெடுத்தாலும் விரக்தியோடு பேசுவர். நோயாளியைப் பதற்றமடையச் செய்து பாதிப்பை ஏற்படுத்தும். துணிவு தரும், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பேச வேண்டுமேயன்றி, எதிர்மறைக் கருத்துக்களை, பயமுறுத்தும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *