கடவுள்களின் வயிற்றைக் கிழித்துப் பிறக்காமல்
வியர்வையும் புன்னகையும் கலந்த
மனித வயல்களிலிருந்து பிறந்த மொழி எனது தாய்மொழி.
என் மொழி எந்தக் கடவுளுக்கும்
குடியுரிமை கொடுத்ததில்லை
மதங்களின் நகல்விழாக்களில்
எனது மொழியின் பவளச்சுவடுகள் பதிவதில்லை
எனது மொழி இனத்தின் தோலாக இருக்கிறது
யுகங்களை ஜீரணிக்கும் திராணியோடு இருக்கிறது.
மொழியின் கண்கள் வழியாகத்தான் காலமும் பார்க்கிறது.
மொழியின் நிழலுக்குள்
நுழையும் போது
ஜாதிச் செருப்புகளைக் கழற்றிவிடுகிறோம்.
மதங்களின் மயிர்க்கற்றைகளை
படியவாரிக் கொள்கிறோம்.
மொழியின் வனங்களை
அசுத்தப்படுத்த அனுமதிப்பதில்லை யாரையும்.
இப்போதும் உணர்கிறேன்
ஒரு தாயின் அரவணைப்பை
தமிழ்ப் புத்தாண்டில்
****
அசரீரிகளாலும்
அவதாரங்களாலும்
தூர்ந்து போகாத ஆழங்களைக் கொண்டது
எனது மொழி.
எத்தனையோ மொழிகளின் உடல்களை காலத்தின் உப்புவாய்
தின்றிருக்கிறது.
ஆயிரக்கணக்கான
நூற்றாண்டுகளுக்கப்பால் பிறக்கும்
கவிஞனுக்கும் சேர்த்தே சுரக்கிறது
என் மொழியின் தாய்ப்பால்.
****
ஜாதிகள் வேறுவேறாக இருக்கிறது
மதங்கள் வேறுவேறாக இருக்கிறது
தேசங்கள் வேறுவேறாக இருக்கிறது
நிறங்கள் வேறுவேறாக இருக்கிறது
கடவுள்களோ குலதெய்வங்களோ வேறாக இருக்கிறது.
உங்களில் எந்த வடிவங்களுக்கும் பொருந்தாமல் நிற்கிறேன்.
எதிர்பார்க்கிறேன் உங்களை
உறவாடுகிறேன் உங்களோடு
என் பாடல்களோடு
உங்கள் உதடுகள் இணைகின்றன.
என் உணர்வின் இசையோடு
உங்கள் இதயங்கள் இணைகின்றன.
எல்லாவற்றையும் சாத்தியமாக்கும்
விடியற்காலை தமிழ்ப் புத்தாண்டாக வருகிறது
பொங்கல் திருநாளாகத் தொடர்கிறது.
அந்த நாளில் மட்டும்
நமது உணவு ஒரே அரிசியில்
சமைக்கப்படுகிறது.
நமது காய்கறிகள் ஒரே சுவையோடிருக்கின்றன.
தமிழகத்தில்
அமெரிக்காவில்
ஈழத்தில்
இங்கிலாந்தில்
கனடாவில் உலகமெங்கும் நடக்கிறது
தமிழினச் சங்கிலியின் உற்சவம்
எல்லா உதடுகளும்
ஒரே சொல்லை உச்சரிக்கிறது.
மொழியின் எல்லாக் கதவுகளையும் திறந்து காட்டுகிறது தை மாதத்தின் முதல் நாள்.
***
எனது தாய்மொழி எந்த மதத்திற்கும் உரிமையானதல்ல
எந்தக் கடவுளுக்கும் குத்தகை விட்டதில்லை
எந்த ஜாதியின் கொடுங்கரங்களுக்கும்
கட்டுப்படவேயில்லை.
அது, காற்றைப்போல
காலத்தைப் போல நகர்ந்து செல்கிறது.
அதன் ஆதி உதடுகளிலிருந்து
வழியும் நீரோடைகளில் மனிதனின் மணமிருக்கிறது.
அதன் ஆதிச் சித்திரத்தில்
விலங்குகளிருந்தன.
கடவுள்களே – நீங்கள்
எப்போது பிறந்தீர்களென்று என் தாய்மொழியிடம் கேளுங்கள்.
எல்லாவற்றையும் திறக்கும் சாவி
தமிழிடமிருக்கிறது.
அப்படித்தான் திறந்தோம்
வேதங்களின் உலகத்தை.
மனுவின் வக்கிரங்களை
இதிகாசங்களின் புளுகு மூட்டைகளை.
ஒளிந்து கொண்டிருந்த முப்பத்து முக்கோடி தேவர்கள்
பிதுர் உலகங்கள்
சொர்க்கம் நரகங்கள்
எல்லாம் ஓடிவிட்டன
என்மொழியை விட்டு
தையின் வெளிச்சம் பரவுகிறது
நிலம் புன்னகைக்கிறது
சரித்திரம் மீண்டும் விழித்துக்கொள்கிறது
காலம் – இன்னொரு பக்கத்தைப் புரட்டுகிறது.
தமிழினத்தின் கனவு தேசத்தில்
போராளியாக நிற்கிறது
எனது தாய்மொழி. அதன கையில் மீண்டும் ஒரு விதை.
– கோசின்ரா