Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஒரே ஒரு நாட்டில் ஒரே ஒரு குடும்பம்!

குட்டி நாடு என்றால்கூட குறைந்தது ஒரு லட்சம் குடிமக்களாவது வசிப்பார்கள்.  ஆனால், ஒரேயொரு குடும்பத்திற்கென்று ஒரு நாடு இருக்கிறது. அதுவும் கடலின் நடுவே.

அந்த நாடு நிலப்பரப்பில் சிறு தீவு கூட கிடையாது.  கடலில் ஒரு பிரமாண்ட சுமைதாங்கியில் அந்த நாடு இருக்கிறது.   தற்சமயம் உலகில் 196 நாடுகள் உள்ளன. உலக  வரைபடத்தில் புள்ளியாகக்கூட காண்பிக்க முடியாத எள்ளின் மூக்களவுள்ள இந்த நாடு, 197ஆவது நாடு என்ற  அங்கீகாரம் பெற வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து கடற்கரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் கடலில் செயற்கையாக ஏற்படுத்தப்-பட்ட சுமைதாங்கி வடிவில் நிற்கும் ஒரு பாலத்தை ஸீ லேண்ட் (Sea Land)  என்று ஆசையாகப் பெயரிட்டு அழகு பார்த்திருப்பவர் ராய் பேட்ஸ்.

ராய் ஒரு ஆர்வத்தில் நாடு என்று சொன்னாலும் தலைவலி என்னவோ இங்கிலாந்திற்குதான். ஸீ லேண்ட் பற்றி  கேள்விப்படும்  எல்லா  நாடுகளுக்கும் இப்படி  ஒரு நாடா? என்று குழப்பமோ குழப்பம். தேசிய கீதம், கொடி, சின்னம், அஞ்சல் தலை, அரசாங்க முத்திரை, நாணயம் என ஒரு நாட்டின் அங்கீகாரத்திற்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கி, அதை இங்கிலாந்து அரசிற்கும் அனுப்பி-வைத்து, உரிமை கொண்டாடத்  தொடங்கினார். அத்துடன் ஸீ லேண்ட்டை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் எனக்  கேட்டு, இங்கிலாந்து  நீதிமன்றத்திலும் சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து இந்தச் சுமைதாங்கியை  தனது உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்று ராய் பேட்ஸ் போராடி வருகிறார்.

ஸீ லேண்ட் தோன்றியது எப்படி?

இரண்டாம் உலகப்போரின்-போது,  ஹிட்லரின் ஜெர்மனி படைகள் இங்கிலாந்தை கடல்வழி தாக்க முற்படும் முயற்சிகளை முறியடிக்க, எதிரிப்படையின் நடவடிக்கை களைக் கண்காணிக்க, இங்கிலாந்து அரசு கடலில் செயற்கையாக  ஒரு  காவல் மாடம்  இந்தச் சுமை தாங்கியில் அமைத்தது.

பிரமாண்ட இரண்டு இரும்புத்  தூண்-களைக்  கொண்ட  ராணுவக் கப்பலை இங்கிலாந்து கடல் எல்லைக்கு அப்பால் 12 கி.மீ. தூரத்தில் கடலில் மூழ்கச் செய்தனர்.

கடல் நீர் மட்டத்திலிருந்து வெளியே தெரியும் இரண்டு தூண்களை இணைத்துத் தளம், இருப்பிடம் உருவாக்கி ஜெர்மன் படைகள் இங்கிலாந்தைத் தாக்க வருவதைக்   கண்காணிக்க இந்த இரும்புக் கட்டடத்தை  இங்கிலாந்து ராணுவம் பயன்படுத்தி வந்தது.  எல்லா ராணுவத் தளவாடங்களையும்  வைக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும்  இந்த முகாமில் வசதிகள் இருந்தன.

ஜெர்மனி படையின் நீர்மூழ்கிக் கப்பல்-களுக்கு இந்த இரட்டைக் கோபுரத்து தூண்கள் சிம்ம சொப்பனமாக விளங்கின. அவை அந்தப் பக்கம் வரவேயில்லை. 1960 வரை இந்தத் தளம் அனாதையாகக் கிடந்தது. சிறிது நாளில் இந்தக் கோபுரம் கடல் கொள்ளையர் களுக்குப் புகலிடமானது. சில ஆண்டுகளில்  கடல் கொள்ளையர்களின் கொட்டம்  அடக்கப்-பட்டது.

ராய் பேட்ஸ் 1967ஆம் ஆண்டு இந்த  கோபுரத்தில் மகனுடன் குடியேறினர். ராய் பேட்ஸ்ஸுக்கு வானொலி அலைவரிசைகளை  நிர்வாகம் செய்வது கையாளுவது அத்துப்படி. அதிகாரப்பூர்வமற்ற வானொலி அலைவரிசை-களை திருட்டுத்தனமாக கையாண்டதிற்காகப் பலமுறை சிறைவாசம் கிடைத்திருக்கிறது.

சிறையில் இருந்த போது, கடல் கொள்ளை யர்கள் கோபுரத்தைக் காலி செய்வதை அறிந்து,  விடுதலையானதும் முதல் நடவடிக்கையாக அந்தக் கோபுரத்தில் குடியேறினார்.

குடியேறிய சில மாதங்களில், குடும்பத்தினரைத் தன்னுடன் கோபுரத்தில் சேர்ந்து வாழ அழைத்துக் கொண்டார்.

திடீரென்று அவருக்கு என்ன  தோன்றியதோ, அவர் வசிக்கும் கோபுரத்தை ‘தனி நாடு’ என அறிவித்தார். இங்கிலாந்து அரசு அவரையும், குடும்பத்தையும் அந்தப் பகுதியி-லிருந்து வெளியேற உத்தரவிட்டது.  கோபுரம் அமைந்திருப்பது, சர்வதேச கடல்பகுதி  என்பதால், சர்வதேச அமைப்புகளின் உதவியை ராய் நாடினார்.

சர்வதேச அமைப்பின் ஆலோசனையின்படி, இங்கிலாந்து நீதிமன்றம் 1987இல் இரண்டு முரண்பட்டத் தீர்ப்புகளை வழங்கியது. ராய்யின் நல்வாய்ப்பு, அந்தத் தீர்ப்புகள், பிரச்னையின் இழுபறிக்குக் காரணமாக அமைந்து விட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இங்கிலாந்தை  எதிர்த்து நிற்கும் ராய், தனது 92 வயதில் ஸீ லேண்ட்டிலிருந்து வெளியேறி, இங்கிலாந்தில் குடிபுகுந்துள்ளார். தற்சமயம்,   ராய்யின் மகன் மைக்கேல் வழக்கை நடத்திக்  கொண்டிருக்கிறார்.