தேசியவாதம் என்னும் தீங்கு

பிப்ரவர் 16-28

சரவணா இராஜேந்திரன்

2014-ஆம் ஆண்டு மோடி தேர்தல் பிரச்சாரத்தின்போது நேரடியாகவே தெரிவித்த கருத்து என்னவென்றால், “நான் ஒரு இந்து, இந்துத்துவக் கொள்கைகளை கடைபிடிப்பேன். என்னுடைய பார்வையில் இந்துத்துவம் மிகவும் சரியானது’’ என்பதாகும். ஏற்கனவே வடக்கில் காவிகளின் வெறிப்பேச்சால் மூளை மழுங்கி இருந்தவர்களுக்கு மோடியின் இந்தப் பேச்சு இனி இந்தியாவை இந்துமக்களைக் காப்பாற்ற வந்த “மசீகா’’ என்று நினைத்துவிட்டனர்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘இந்து தேசியவாதம்’ என்னும் பேச்சுக்களால் மக்கள் படும் துன்பம் சொல்லி மாளாது. உண்மையில் ‘இந்து தேசியவாதம்’ என்பது ‘ஒரு குறுகிய ஜாதிய வெறிக்களம்’ என்றுதான் நேரடிப் பொருள் கொள்ளவேண்டும். மோடியின் இந்த மதவெறிப் பேச்சின் விளைவுதான் கடந்த 2 ஆண்டுகளாக நாடெங்கும் நடந்துவரும் ஜாதிய வன்முறைகள், மதரீதியான மோதல்கள் என்பது தெளிவாக விளங்கும்.

தேசியவாதம் என்பது குறுகிய பிராந்திய வாதம் என்பதும், உலக வரலாற்றில் வென்றதாக எந்த ஒரு ஆசிரியரும் எழுதவில்லை. கடந்த நூற்றாண்டின் மிகபெரிய எடுத்துக்காட்டாக இட்லரையே எடுத்துக் கொள்ளலாம். ‘ஜெர்மனியருக்கு ஜெர்மனி’ என்ற ஒரு மயக்க வார்த்தையைக் கூறி பெருவாரியான ஜெர்மனிய மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தார். தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு முழு நாட்டையே காவு கொடுத்து உலகையே இன்னலுக்கு ஆளாக்கியது இட்லரின் ஜெர்மனி என்னும் தேசியவாதமே ஆகும்.

இட்லரின் தேசியவாத மனஓட்டத்தை ஒட்டியே மோடியின் தேசியவாதக் கொள்கையும் உள்ளது. 2014-ஆம் ஆண்டு ஆசியப் பிராந்தியத்திற்கு ஒரு மோசமான ஆண்டாகவே மலர்ந்துவிட்டது. அன்றிலிருந்து மதவாதம், வேலையின்மை, ஏழ்மை மற்றும் தொழிற்சாலை முடக்கம் என்ற நிலை இன்றும் தொடர்கிறது. அதேபோன்று வெளியுறவுத் துறையிலும் இந்தியா மோசமான ஒரு நிலையை எடுத்துள்ளது. அருகில் உள்ள நாடுகளுடன் சுமூகமான உறவை வளர்ப்பதைத் தவிர்த்து நேரடியாக மோதல் போக்கை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். சீனா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்துக் கொண்டு, முதலாளித்துவக் கொள்கைகளையே மூலதனமாகக் கொண்ட அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வருகிறார். இதுநாள்வரை நட்பு நாடாக இருந்த ருஷ்யா மற்றும் பல்வேறு அய்ரோப்பிய நாடுகள் மதவெறிக் கொள்கையால், இந்தியாவின் நட்புறவை புறந்தள்ளிவருகின்றன.

தற்போது அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிலையும் இதுபோன்று தான். அவரும் தேசியவாதம் பேசிக்கொண்டு தேர்தலைச் சந்தித்தார். பொதுவாக அமெரிக்கர்கள் தேசியவாதம் பேசினால் அங்கு வெறும் 13 விழுக்காடு மக்கள் தொகையே   அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள். அந்த மண்ணின் மைந்தர்களின் நிலையோ பரிதாபகரமானதாக உள்ளது. அமெரிக்க அரசு அவர்களைக் காட்சிப் பொருளாக்கி, அவர்களை நகரங்களை விட்டு தூரக் கிராமங்களில் வசிக்கவைத்துவிட்டது வேலை தேடி நகரங்களுக்கு வரும் அமெரிக்க பூர்வீக குடிகளுக்கு யாரும் குடியிருக்க இடம் தருவதில்லை, அமெரிக்க பொருளாதாரத் தலைநகர் நியூயார்க்கில் சாலை ஓரம் மற்றும் கைவிடப்பட்ட தொடர்வண்டி சுரங்கங்களில் 8000-த்திற்கும் மேற்பட்ட அமெரிக்க பூர்வீக குடிகள் வசிக்கின்றனர். எப்படி இங்கே ஆரியர்கள் இம்மண்ணின் மைந்தர்களாகிய திராவிடர்களை சூழ்ச்சியால் பிரித்து ஆள்கிறார்களோ அதே போல் அங்கும் அம்மண்ணின் மைந்தர்களை பொருளாதாரத்தில் முன்னேறவிடாமல் செய்து அவர்களை ஏழைகளாகவே வைத்துள்ளது அமெரிக்க அரசு.

அமெரிக்காவின் 62 விழுக்காடு மக்கள் அய்ரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து குடியேறியவர்கள் ஆகும். ஆசியாவில் இருந்து சமீபகாலமாகச் சென்றவர்கள் அனைவரையும் சேர்த்தால் 87 விழுக்காட்டினர் அந்நியர்களே ஆவார்கள். தேசியவாதம் பேசிக்கொண்டு இருக்கும் டோனால்ட் டிரம்ப் கூட கிழக்கு அய்ரோப்பிய நாட்டில் இருந்து குடியேறியவர்தான். டிரம்ப் தேசியவாதம் பேசிக் கொண்டு இருக்கும்போது அமெரிக்காவின் ‘த மெயில்’ என்ற இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் அமெரிக்காவின் 87 விழுக்காடு மக்கள் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று புள்ளி விபரத்துடன் வெளியிட்டுள்ளது. அப்படி இருக்க டிரம்பின் இந்த தேசியவாதம் என்பது வெறும் போலியான ஒன்றாகும்.

தேசியவாதம் பேசி நாசாமாகிக்கொண்டு இருக்கும் இன்னொரு வல்லரசு நாடு ரஷ்யாவாகும். விளாடிமிர் புதின் தன்னுடைய அரசியல் பலத்தை நிரூபிக்க தேசியவாதம் பேசத்துவங்கினார். அதிகாரத்தில் இருக்கும் போது தேசியவாதம் பேசத்துவங்கியதால் மக்களும் பேசா மடந்தையாகிப் போனார்கள். ஏற்கனவே பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் ருஷ்யா நாட்டில் மக்கள் கிளர்ச்சி ஏற்படாமல் இருக்க இந்த தேசியவாதம் என்ற இனிப்பு தடவிய மயக்க மருந்தைக் கொடுத்து மயக்கி வைத்துள்ளார். இவரது தேசியவாதம் உக்ரைனில் குடியிருக்கும் பரம்பரை ரஷ்யர்களுக்கு பேராபத்தாக மாறிவிட்டது. புதின் தேசியவாதம் பேசிக்கொண்டு ருஷ்யருக்கே முன்னுரிமை என்று கூறியதால் ருஷ்ய மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் உக்ரைன் இனத்தவர்களுக்கு சிக்கல் ஆரம்பிக்க, அதன் எதிரொலியாக உக்ரைனில் இருக்கும் ருஷ்யர்கள் மீது தொடர் தாக்குதல் நடந்துவருகிறது.

பட்ட காலிலே படும் என்பதுபோல், வரும் 2017-ஆம் ஆண்டு நடைபெறும் பிரென்சு தேர்தலில் மரைன் லெபென் என்ற தீவிர வலதுசாரி சிந்தனையுடையவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இவர் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக அமெரிக்காவில் வசிக்கும் பிரென்சு மக்களை வாக்களிக்க நேரடியாக அறிக்கை விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனி மனித ஆசாபாசம், விருப்பு வெருப்பு போன்றவற்றிற்கு உலக அரசியல் பலியாகி வருகிறது. ஆச்சரியப்படும் வகையில், அய்க்கிய நாடுகள் அவையின் புதிய தலைவர் அண்டோனியோ கட்ரீஸ் தீவிர தேசியவாத ஆதரவாளர் என்பது மேலும் கவலைக் குரியதாக உள்ளது. புவியியல்ரீதியாக பல நாடுகளைக் கொண்ட கண்டங்கள் பிரிந்தன. நாடுகள் எல்லாம் பல இன, மத மக்களைக் கொண்டவை. அப்படி இருக்க எந்த நாடு எந்த ஒரு தனி மனிதனுக்கும் சொந்தமானதல்ல, இதைத்தான் எம்பாட்டன் 3000- ஆண்டுகளுக்கு முன்பே “யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்று  பாடினார். 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *