கடல் கடந்து இளைய தலைமுறையிடம் தந்தை பெரியாரின் தாக்கம்

பிப்ரவரி 01-15

 

 

 

நான் எப்படி பெரியார் அவர்களைச் சந்தித்தேன் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்,

1947ஆம் ஆண்டில் நான் திருவாரூரில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது கலைஞர் அவர்களுடைய உரையைக் கேட்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அந்த உரையின் மூலமாகத்தான் பெரியார் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

அதற்குப் பிறகு நான் கொரடாச் சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்தேன். அப்பொழுதுதான் கம்யூனல் ஜி.ஓ. வந்ததினால், எங்களுடைய பள்ளிக் கூடத்திற்கு விடுமுறை விட்டார்கள்.

அப்பொழுதும் பெரியாரைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். நான் படித்த பள்ளியில் பி.சி.கணேசன் என்கிற விஞ்ஞான ஆசிரியர் அவர்கள், இங்கர்சாலைப் பற்றியும், சாக்ரடீசைப் பற்றியும் சொல்லி, பெரியாரை அறிமுகப்படுத்தினார்.

இப்படி பெரியாரைப் பற்றிய சிந்தனை படிப்படியாக வளர்ந்து கொண்டே வந்தது. பிறகு, நான் பெரியாரை எப்பொழுது சந்தித்தேன் என்றால்,

என்னுடைய அறைத் தோழனாக இருந்த ஒருவருக்கு பெரியார் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அவர் என்னுடைய நண்பராக இருந்ததினால், அவரை வாழ்த்திப் பேசுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதுதான் பெரியாரை நான் முதன் முதலில் சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது.

என்னுடைய வாழ்த்துரையில்,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோன் என்கிற திருக்குறளைச் சொல்லி, அது போன்று வாழவேண்டும் என்று வாழ்த்துரையில் சொன்னேன்.

பெரியார் அவர்கள் உரையாற்றும் பொழுது, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் என்று பேராசிரியர் அவர்கள் இங்கே சொன்னார்கள். எப்படி வாழ்வது என்பது பற்றி நான் சொல்கிறேன் என்று, திருக்குறளை எடுத்துக் காட்டி உரையாற்றினார். அப்பொழுதுதான் பெரியாரைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. பிறகு, இரண்டு, மூன்று இடங்களில் பெரியாரின் உரையைக் கேட்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

என்னுடைய தந்தையார் பெரிய வைதீகக் குடும்பத்தைச் சார்ந்தவர். ஒரு முறை பொங்கல் நாளன்று ஒரு நண்பர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதனைப் பிரித்துப் பார்த்த என்னுடைய தந்தையார், அதில் பெரியாருடைய படம் இருந்ததைப் பார்த்து விட்டு, பையன் கெட்டுப் போய்விட்டான் என்று சொல்லி, திருவாரூர் கொரடாச் சேரியில் படித்துக் கொண்டிருந்த என்னை திருக்காட்டுப் பள்ளியில் படிக்கவைத்தார்.

அங்கே சர்.சிவசாமி அய்யர் பள்ளிக் கூடத்தில் 10 மற்றும் 11 ஆவது வகுப்பு படித்தேன். ஏற்கனவே எனக்கு பெரியார் பற்றிய ஊற்று வந்ததினால், சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், பிராமணர் பிள்ளைகளைவிட நாம் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்கிற ஊக்கம் வந்தது. ஒரு வேகம் வந்தது. அங்கே பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவரும் அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான். அங்கே நான் போட்டி போட்டுக் கொண்டு படித்து மதிப்பெண்ணும் வாங்கினேன்.

8 ஆம் வகுப்பு வரை கொரடாச் சேரியில் படிக்கின்ற பொழுது இந்தியில் மூன்று வகுப்புவரை தேர்வு பெற்றிருந்தேன்.

திருக்காட்டுப்பள்ளிக்கு வந்தவுடன், பெரியார் இயக்கம், இந்தி எதிர்ப்பு இயக்கம் தொடங்கியவுடன், இந்தி புத்தகத்தைக் கொளுத்தினேன். அதன் பிறகு நடந்த இந்தித் தேர்வில், வினாத் தாளை அப்படியே எழுதினேன். அதற்கான பதிலை எழுதவில்லை. அந்தத் தேர்வில் 23 மதிப்பெண் மட்டும் பெற்றேன்.

இதனால் என்னாயிற்று என்றால், தஞ்சை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று பரிசு வாங்கக் கூடிய வாய்ப்புபோயிற்று. ஆனால் ஞி.ணி.ளி அலுவலகம் சென்று போராடி அரசாங்கம் இந்தியை சேர்க்கவில்லை அதானால் நீங்கள் இந்தியை சேர்க்காமல் என்னுடைய மதிப்பெண்கள் அடிப்படையில் எனக்கு முதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கூறி பரிசு பெற்றேன்.

பிறகு அய்யா வீரமணி அவர்களோடு தொடர்பு கிடைத்தது. எனக்கு பெரியார் விருது கொடுத்தார்கள் இங்கே. பெரியாரைப் பற்றி நிறைய நான் தெரிந்து கொண்டேன். தவறாமல் விடுதலை படிக்கின்ற வாய்ப்பு. பெரியார் பற்றிய புத்தகங்களை நிறையப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

சென்ற ஆண்டு நம்முடைய பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பாக ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிடுகின்ற வாய்ப்பைக் கொடுத்தார்கள்.

அடுத்ததாக இந்தப் பெரியார் சமூக சேவை மன்றம் எதிர்காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று சில யோசனைகளைக் கேட்டார்கள். அது பற்றி இங்கே உரையாற்ற வேண்டும் என்று பூபாலன் அவர்கள் சொன்னார்.

சிங்கப்பூரில் பெரியாருடைய பணியை எப்படி பரப்பலாம். பெரியாருடைய கொள்கைகளை ஒரு அரசியல் நோக்கோடு பார்ப்பதை விட, பெரியாருடைய கொள்கைகளில் பிடித்தது எது?

அரசியலில் நுழைந்தால், கொள்கைகளை விட்டுக் கொடுக்கக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. பெரியார் அவர்கள், கடைசி வரை தேர்தலில் நிற்பதே கிடையாது. அரசியல் வாழ்க்கையே எனக்கு வேண்டாம்; எவ்வளவு பெரிய பெரிய பதவிகள் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொன்னவர். கடைசி வரையில் ஒரே கொள்கையில் நிற்க முடிந்தது. ஒழுக்கத்தை வலியுறுத்த முடிந்தது.

ஏனென்றால், ஓட்டுக்காக ஒழுக்க நிலையிலிருந்து வழுவ வேண்டிய சூழ்நிலை அரசியல்வாதிகளுக்கு ஏற்படுகிறது. அந்தச் சூழ்நிலையிலிருந்து பெரியார் அவர்கள் விலகி, அரசியலே வேண்டாம்; சமூக சீர்திருத்தம்தான் எனக்கு வேண்டும் என்ற கோட்பாட்டில் நின்று, நம்மை உயர்நிலைக்குக் கொண்டு வந்தவர் பெரியார் அவர்கள்.

அந்த அடிப்படையில், சிங்கப்பூர் சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று பார்க்கின்ற பொழுது,

பெரியாருக்கும் – சிங்கப்பூருக்கும் இருக்கின்ற தொடர்புகளை ஆவணப்படுத்துகின்ற முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்காக பெரியாருடைய தாக்கம் சிங்கப்பூரில் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொரு முறையும் வலியுறுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். அதை எப்படி செய்யலாம் என்றால், கருத்தரங்கங்கள் நடத்தலாம்; ஆங்கிலத்தில் பலவற்றைப் பேசலாம். இப்படி ஆவணப்படுத்துகின்ற முயற்சி ஒன்று. இது இறந்தகாலத் தொடர்பு.

அடுத்ததாக நிகழ்காலத் தொடர்பு என்றால், சமூக சீர்திருத்தம், ஜாதி ஒழிப்பு – சிங்கப்பூரில் பெரும்பாலும் ஜாதி கிடையாது. ஆனால், இரண்டு சூழ்நிலைகளில் ஜாதி வருகிறது. ஒன்று, இறப்பு அறிவிப்பு செய்யும் பொழுது, ஜாதி பெயரைப் போடுகிறார்கள். அடுத்ததாக, திருமணம் செய்யும் பொழுது அந்தந்த ஜாதியைப் பார்க்கிறார்கள்.

இதை எப்படி நாம் குறைப்பது என்கிற முயற்சியில் இறங்க வேண்டும். இறந்த பிறகு எதற்காக ஜாதி பெயரைப் போடுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

எனவே, அந்த இறப்பு அறிவிப்புகளில் ஜாதி பெயரைப் போடுவதும், திருமணத்திற்காக அந்தந்த ஜாதிகளைச் சேர்ந்தவர்களை இணையராகத் தேடுவது.

அடுத்ததாக, ஜோதிட நம்பிக்கை. திருமணத்திற்காக ஜாதகம் பார்க்கின்ற நிலைமை இன்னமும் சிங்கப்பூரில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஜோதிடம்தனை இகழ் என்று பாரதியார் சொல்கிறார்.

எனக்குக் கூட கடவுள் நம்பிக்கை இருந்தாலும் கூட, ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஜோதிடத்தை எதற்காகப் போய் துருவித் துருவி ஆராய்கிறார்கள் என்று தெரியவில்லை.

கலப்புத் திருமணம் நடைபெற்றால்தான், ஜாதி ஒழியும். அதிலொன்றும் சந்தேகமில்லை. அந்தக் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்-கலாம்.

அடுத்ததாக, தமிழ்ப் பெயர்கள். பொதுவாக நம்முடைய சமூகத்தில் பெயர்கள் எல்லாம் எப்படி இருக்கின்றன. என்பது உங்களுக்குத் தெரியும். தமிழ்ப் பெயர்கள் வைப்பதற்கு இந்த மன்றம் துணையாக இருக்கலாம்.

சில இடங்களில், சமூகப் பணிகள் என்று சொல்கின்ற போது, நம்முடைய காலஞ் சென்ற அதிபர் எஸ்.ஆர்.நாதன் அவர்கள், கோவில்-களில் சமூகப் பணிகள் செய்ய வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்துகின்றவர்கள். அவரோடு உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, பெரியாரைப் பற்றி அவருக்கு என்னென்ன சிந்தனைகள் என்பது பற்றி நான் பலமுறை பேசியிருக்கிறேன்.

பலமுறை பெரியாருடைய வழியிலேயே நிற்கின்றவர் அவர். ஆனால், அதனை வெளியில் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் இருந்தார். ஆனால், அவரிடம் தனிப்பட்ட முறையில் உரையாற்றும் பொழுது, பெரியாரைப் பற்றி அவருக்கு எவ்வளவு உயர்ந்த கருத்துக்கள் இருந்தன என்பதை நான் உணர்ந்தேன்.

மூவாரில் ஆதிதிராவிடச் சங்கம் என்ற ஒன்றை வைத்ததைப் பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார். அதைக்கூட அவருடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார்.

நாம் அடிக்கடி வலியுறுத்துவது கல்வித்-தேவை. எல்லாத் தலைவர்களும் வலியுறுத்தினாலும், நாமும் வலியுறுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இவையெல்லாம் இப்பொழுது செய்ய வேண்டியதாகும்.

எதிர்காலத்தில் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம் தொழில் நுட்பத்தில் எல்லோரும் ஈடுபடவேண்டும். அதைத் தவிர பெரியாருடைய கொள்கைகளை இணையத்தின் வழியாகவும், தொழில் நுட்பத்தின் அடிப்படையிலும் நம்முடைய மாணவர்களிடம் பரப்புவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

இது போன்று நம்முடைய பெரியார் நற்பணி மன்றம் எதிர்காலப் போக்குகளை மாற்றிக் கொண்டு செயல்பட்டால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்றுகூறி, இந்த வாய்ப்பினை வழங்கிய கலைச்செல்வன் அவர்களுக்கும், பூபாலன் அவர்களுக்கும் நன்றி கூறிமுடிக்-கின்றேன்.

                நன்றி, வணக்கம்!

– இவ்வாறு பெரியார் விருது பெற்ற பேராசிரியர் முனைவர்சுப.திண்ணப்பன் அவர்கள் உரையாற்றினார்.

மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம்

அனைவருக்கும் வணக்கம்

பெரியார் என்று ஒருவர் இல்லையென்றால் இந்த தமிழ் சமூதாயமே கிடையாது.

ஒரு இனம் அடிமை பட்டு இருந்ததை மீட்டு சுயமரியாதையுடன் வாழ வேண்டும், மானமும். அறிவும் மனிதனுக்கு அழகு என்று கூறி படாதபாடு பட்டு அவர் வாழ்ந்த காலத்திலே வெற்றி கண்டவர்.

வரலாற்றில் யாரும் செய்யாத ஒன்றை பெரியார் செய்திருக்கிறார். அதற்குக் காரணம் என்னவென்றால் அந்த உண்மை, அந்தத் துணிவு, யாருக்கும் வராத துணிவு தந்தை பெரியாருக்கு வந்தது.

என்னைப் பொருத்த வரையில்  நான் தமிழ் நாட்டில் பிறக்கவில்லை. நான் பிறந்தது  சிங்கையில். என்னுடைய தகப்பனார் தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்.அவருடைய பெயரில் பின்னாடி சாதிப் பெயர் இருக்கும்  ஆனால் என் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் இல்லை.

ஜாதி இருந்தது என்றால் அந்த இனம் முன்னேறுவது ரொம்ப ரொம்ப சிரமம்.

எனக்கு பெரியாரை அறிமுகப்படுத்தியது யார் என்று சொன்னால் எனது மாமனார் பெரியார் பெருந்தொண்டர், சொற்கொண்டல் முருகு.சீனிவாசன் அவர்கள்தான்.

பெரியாரை பயன்படுத்தி முன்னேற வேண்டிய நாடு தமிழ்நாடு. ஆனால் இன்னும் முன்னேறமல் இருக்கிறது வருத்தமாக இருக்கிறது.

என்னுடைய சீன நண்பர் அவர்கள் கூட சொன்னார் இந்தியாவில் ஜாதிப் பாகுபாடு இருக்கும் வரையில் இந்தியா முன்னேற்றம் அடைவது சிரமம்.

மேலும் பகுத்தறிவு, மனிதப் பண்புகளைப் பற்றி பேசி பெரியாரின் பிறந்த நாள் விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார். 

இனி வரும் ஆண்டுகளில் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களுக்கும், பெரியார் சமூக சேவை மன்றம் விழா எடுக்கும் என்ற அறிவிப்பினைச் செய்து தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.

(நிறைவு)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *