வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?

பிப்ரவரி 01-15

 

 

 

படித்தல்

“கற்றல் என்ற பொருளில் படித்தல் என்ற சொல் பண்டைத் தமிழ் நூல்களில் ஓரிடத்தும் காண இயலாது என்றும்,

பட் என்ற வடமொழி வேர்ச் சொல்லின் அடியாகப் பிறந்ததே அச்சொல் என்றும், இலக்கணச் சிந்தனை என்ற நூலின் 101ஆம் பக்கத்தில் திரு. எஸ். வையாபுரிபிள்ளை எழுதி உள்ளார். இதைத் தயை கூர்ந்து விளக்குக!’’ என்றும், திருமதி குன்றம் திரு. அ. கணபதி அவர்கள் நமக்கு எழுதுகின்றார்கள்.

படித்தல் என்பது கற்றல் என்ற பொருளில் அமைந்திருப்பதாக வையாபுரியார் எண்ணினார். ஆயினும் அதன் நேர் பொருளை அவர் உணர்ந்திருந்தார் என்று எண்ண முடியவில்¬. அதன் மேல் அவர் ‘பட்’ என்றதன் அடியாகவே படித்தல் வந்தது என்றார். செய்தி முதற்கோணல் முற்றும் கோணலாக முடிந்தது.

படித்தல் என்பதன்  பொருள் ஒன்று கண்டு அவ்வொன்றைக் கொள்ளல் என்பதேயாகும். எனவே படி என்றால், ஒன்று கண்டு அவ்வொன்றைக் கொள் என்பது பொருள். நீ அந்நூலைப் படி என்றால், நீ அந்நூலிலிருந்து ஒன்றைக் கண்டு அவ்வொன்றைக் கொள், மனத்துள் வை -என்பது அன்றோ பொருள்? இதில் வரும் ‘படி’ வடசொல்லடியா? அன்று! தூய தமிழ்ச் சொல்லே.

இதுவன்றி மிதித்தேறும் படி ஒன்று இருக்கிறது. அதுவும் ஒன்று கண்டு அவ்வொன்றை (அதாவது அதே போன்ற மற்றொன்றை) அடைத்தல் என்ற தொழிலே ஆகுபெயராயிற்று. அவ்வாறு வரும் ‘படி’யும் வடசொல்லாகிய ‘பட்’ என்றதன் தோற்றமா? அது தூய தமிழ்க் காரணப் பெயரே.

இனியும், பிடி என்பது உலகுக்குப் பெயராய் வரும், காரணம்? ஒருபால் ஒருவன் நடத்தலை-இருத்தலை மற்றொருவன் காணுகின்றான். அம் மற்றொருவன் அது கண்டு நடத்தலை, இருத்தலை மேற்கொள்கிறான். இதுவும் ஒன்று கண்டு அதைக் கொள்வது என்பதுதான். இது தொழிலும் ஆகுபெயராயிற்று.

மேலும், படிவம் என்றதில் வரும் படியை நோக்குக! இதில் படி என்றதே வேர்ச்சொல். ஒன்றைப் பார்த்து வார்ப்படம் செய்த மற்றோர் உருவம் என்பது அதனால் பெறப்படும். இதுவும் ஒன்று கண்டு அவ்வொன்றைக் கொள்வது தான்.

மற்றும், அப்படி இப்படி எனச் சுட்டை அடுத்து வருவனவும், எப்படி என வினாவை அடுத்து வருவனவும், வரும்படி இருக்கும்படி என வினையை அடுத்து வருவனவும் ஆகிய எப்’படி’யும் மேற்சொன்ன பொருளிலேயே அமைந்திருப்பதைக் கூர்ந்து நோக்குக!

கீழ்ப்படிதல் என்பதிலுள்ள படி, எப்படி என்று கேட்பின்-அதுவும் அப்பொருளிலேயே அமைந்திருக்கின்றது. என்னை?

ஆணையிட்டானிடம் ஒன்று கண்டு (அவன் படிந்து போதலை விரும்புகின்றதை) அதை மேற்கொள்ளுவதே கீழ்ப்படிதல் ஆகும் என்க.

படி என்பவை அனைத்தும் ஒரே பொருள் உடையவை என்பது கண்டோம். காணவே படி என்ற சொல், தமிழ் தோன்றிய நாள் தொட்டே தமிழிலக்கியங்களில் உண்டு என்பதும் கண்டோம்.

வையாபுரியார் தம் வாழ்வையே பார்ப்பனர் மெச்சிச் சலுகை தரவேண்டும் என்ற பிச்சைக்காரத்தனத்துக்கு அடகு வைத்தவர்.

இந்தப் படி என்பதையே வடவர் ப்ரதி என்றார்கள். படி என்பது மட்டுமன்று. தமிழே வடமொழியினின்று வந்தது என்று கூறித் தமிழர்களால் கான்று உமிழப்பட்டவர் அவர்.

இலக்கணச் சிந்தனை– -_ –சிந்தனை ஒன்று வையாபுரியார்க்குத் தனியாக உண்டோ? இல்லவே இல்லை. ஆனால் வையாபுரியாரிடம் ஓராற்றல் அமைந்திருந்தது. அது என்ன தெரியுமா?

தமிழையும் தமிழரையும் தமிழகத்தையும் ஆரியர்களுக்குக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் ஒரு கீழ்மைச் செயலைப் பின்பற்றவும் அவர் ஆட்களைத் தோற்றுவித்தார். தெ.பொ. மீக்கள் முதலிய எத்தனை பேர்கள் இந்த நாட்டில் இருக்கின்றார்கள் பாருங்கள்.

இது செயற்கரிய செயல்தானே! படி என்பது தூய தமிழ்க் காரணப் பெயர் என்பதில் எட்டுணையும் ஐயுற வேண்டா.

(குயில், குரல்: 2, இசை: 26, 5.1.1960)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *