சட்டம் சார்ந்தவற்றில் கூடுதலாக எதையும் நாம் சொல்லக்கூடாது
வழக்குகளில் சட்டம் சார்ந்த செய்திகள் சொல்லும்போது வழக்குக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சொல்ல வேண்டும். ஆர்வத்தால் அதிகம் சொல்ல நினைத்துக் கூடுதல் விவரங்கள் அளித்தால் அதில் எதிரிக்குத் தேவையான கருத்துக்கள் கிடைத்து-விட வாய்ப்புண்டு. எனவே, நம் கட்சிக்குத் தேவையானவற்றை வலுவோடு சொல்ல வேண்டும். கூடுதல் விவரங்களைத் தவிர்க்க வேண்டும்.
சான்றுரைப்பவர்கள் இதில் மிகச் சரியாக நடக்க வேண்டும். இல்லையென்றால் எதிரிக்குச் சாதகமாகும். ஆனால், வழக்கறிஞரிடம் சொல்லும்போது, எதையும் மறைக்காது சொல்ல வேண்டும். காரணம், நாம் தேவை இல்லையென்று சொல்லாமல் விடும் செய்தி வழக்கறிஞருக்கு மிகத் தேவையானதாக இருக்கும். நாம் எல்லாவற்றையும் சொல்லி-விட்டால் அவர் தேவையானதை எடுத்துக் கொள்வார்.
எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி நடக்கக் கூடாது
சிலர் வீடு, அலுவலகம், பொது இடம், உறவினர் வீடு என்று எல்லா இடத்திலும் ஒரே மாதிரி நடப்பர். அது மிகத் தவறு. இடம் அறிந்து அதற்கேற்ப தன் சொல்லையும், செயலையும் அமைத்துக் கொள்வதே பண்பட்டதன் அடையாளம்.
வீட்டில் மனைவியிடம் அவர்க்கேற்ப நடக்க வேண்டும்; பெற்றோரிடம் அவர்களுக்கு ஏற்ப நடக்க வேண்டும்; குழந்தைகளிடம் அவர்-களுக்கு ஏற்ப நடக்க வேண்டும்; அலுவலகத்தில் அதற்கேற்ற தோரணையுடன் நடக்க வேண்டும்; உறவினரிடம் அவர்களுக்கு ஏற்ப நடக்க வேண்டும். பொது இடங்களில் அதற்கேற்ப பழக வேண்டும். எல்லா இடத்திலும் ஒரே மாதிரி என்பது எந்திரத்தனம். சூழலுக்கும், ஆளுக்கும் ஏற்ப வாழ்வதே வாழுங்கலை!
தன் விருப்பப்படியே மனைவி நடக்க வற்புறுத்தக் கூடாது
மனிதர்கள் என்றால் அவரவர்க்கென்று தனிப்பட்ட விருப்பு,வெறுப்புகள், இரசனைகள், ஆர்வங்கள், இலக்குகள், ருசி, நட்பு, உறவு உண்டு. இதில் கணவன் தன் விருப்பப்படியே மனைவி நடக்க வேண்டும், தனக்குப் பிடிப்பவையே மனைவிக்கு பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது முழுக்க முழுக்க தப்பு; கண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.
கணவன் தன் உணவு, உடை, உறவு, நட்பு, நோக்கு, கொள்கை, ருசியில் எப்படி தன் விருப்பப்படித் தேர்வு செய்கிறானோ அதேபோல், மனைவிக்கும் உரிமை உண்டு என்பதைப் புரிந்து அதன்படி அவள் வாழ துணை நிற்க வேண்டும். குடும்பக் கட்டுக்குள் வந்துவிட்டதால், அவளை அடிமையாக எண்ணி நடத்துவது குற்றச் செயலாகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து வாழ வேண்டும்.
ஒருவர் உணர்வை மற்றவர் மதிக்க வேண்டும். நிறைவேற்ற வேண்டும். இல்வாழ்வின் இலக்கணம் அதுவே!
அடுத்தவர் வளர்ச்சியைத் தடுக்கக் கூடாது
பலர், தான் வளர்வது பற்றிக்கூட அதிகம் சிந்திக்காமல் அடுத்தவன் வளர்ச்சி பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அடுத்தவர் சிறப்பாக இருப்பதைப் பொறுக்க முடியாத அற்ப குணத்தின் வெளிப்பாடு இது.
தன் வளர்ச்சி, தன் குடும்ப வளர்ச்சி என்று சிந்தித்தாலும் முன்னேற, வளம் பெற, நலம் பெற, வளர்ச்சி பெற வாய்ப்பும் கிட்டும், வழியும் பிறக்கும். அதைவிட்டு, அடுத்தவர் வாழ்கிறாரே என்று வயிற்றெரிச்சல் கொள்வதால் என்ன பயன்?
அடுத்தவர் வளர்ச்சியைக் கண்டு வயிறு எரிவதற்குப் பதில் அவர் வளர்ச்சிக்கு உதவினால், அவர் நமக்கு உதவுவார். இதன் மூலம் ஒருவருக்கொருவர் உதவியும் கிடைக்கும், வளர்ச்சியும் கிடைக்கும்.
சிலர் அடுத்தவர் வளர்ச்சியை எப்படியெல்லாம் தடுக்க முடியுமோ அப்படி யெல்லாம் தடுப்பர். அதற்காக இரவு பகலாகச் சிந்தித்துச் செயல்படுவர். இதனால் இவருக்கு என்ன பயன்? அந்த முயற்சியை தன்னை உயர்த்த எடுத்தால் எவ்வளவு சிறப்பு. இவருக்கு உயர்வு கிடைக்கும். சிந்திக்க வேண்டாமா?
Leave a Reply