இளைஞர்களின் எழுச்சிப் போர் இன,மாநில உரிமைகள் மீட்கவே!

பிப்ரவரி 01-15


– மஞ்சை வசந்தன்

தமிழரும் தமிழும் தரணி முழுக்க வழங்கிய கொடைகள் ஏராளம். உலகில் மற்றவர்களெல்லாம், மொழியின்றி, விழிப்பின்றி, நாகரிக, பண்பாட்டு செழிப்பின்றி வாழ்ந்த காலத்திலே, வளமான மொழியையும், கூர்மையான அறிவு, கலை, இலக்கியம், மருத்துவம் என்று பல்துறை வளர்ச்சியும் பெற்று இயற்கையோடு இயைந்த பகுத்தறிவு வாழ்வு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் மட்டும் தன்னை ஒடுக்கிக் கொள்ளாது உலகின் பலப் பகுதிகளிலும் பரவி வாழ்ந்து, தங்கள் நாகரிகத்தை, பண்பாட்டைப் பின்பற்றினர். அவற்றின் எச்சப்பாடுகளை இன்றும் உலகின் பல பகுதிகளில் நாம் காண்கிறோம். குறிப்பாக, எகிப்து, மெசப்படோமியா, சுமேரியா, கிரேக்கம், இலங்கை, மலேயா போன்ற பகுதிகளில் அவர்களின் ஆட்சிப் பதிவுகள், மொழிப் பதிவுகள், நாகரிகப் பதிவுகள் நிறைய கிடைக்கின்றன.

தமிழர்கள் காதல், வீரம், மனிதநேயம், உலக நோக்கு, சமத்துவம், கொடையுள்ளம் என்ற பல பண்புக் கூறுகளைப் பெற்றிருந்தனர்.

வெறுங்கை என்ற தமிழரின் கலையே இன்றைக்கு “கராத்தே’’ ஆயிற்று. தமிழரின் மூச்சுப் பயிற்சியே ‘யோகா’ ஆனது. கிட்டிப்புள் கிரிக்கெட் ஆனது. சித்த மருத்துவம் ஆயுர்வேதமானது. தமிழரின் கணித அறிவை அடிப்படையாகக் கொண்டே பிதாகரஸ் தேற்றம் உருவாயிற்று. தமிழரின் இசையே கர்நாடக சங்கீதமானது. கட்டடக் கலை, அணைகட்டுதல், கப்பல் கட்டுதல் போன்றவற்றில் உலகில் முதன்முதலில் சாதனைப் படைத்தவர்கள் தமிழர்கள். அவர்களின் வீரம் சார்ந்த விளையாட்டுகளில் ஒன்றே சல்லிக்கட்டு.

சல்லிக்கட்டு: காளையை விரட்டித் திமிலைத் தழுவுதல் ஏறு தழுவுதல் எனப்பட்டது. (ஏறு என்றால் காளை). அதை மஞ்சுவிரட்டு என்றும் அழைத்தனர்.

அதன் வளர்ச்சியாய், காளை தழுவுதலில் பரிசுகள் கொடுக்கப்பட்டன. கூரிய காளையின் கொம்பில் பொற்காசுகள் அல்லது வெள்ளிக் காசுகளைக் கட்டி விரட்டிவிடுவர். அதை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்ட சல்லிக்காசுகளை வீரர் பெறுவர். காசுகளுக்கு ‘சல்லி’ என்று ஒரு பெயர் உண்டு. ”சல்லிக் காசு பொறுமா’’ என்ற வழக்கு இன்றும் உள்ளது.

சல்லிக்காசு கட்டப்பட்ட காளை என்பதால் சல்லிக்கட்டுக் காளை எனப்பட்டது. ஆரிய ஆதிக்கத்தின் பயனாய் “சுரம்’’ என்ற தூயத் தமிழ்ச் சொல் ஜூரம் ஆனதுபோல, ‘சல்லிக்கட்டு’ என்பது ஜல்லிக்கட்டானது.

பின்னர், ஜல்லிக்கட்டு போட்டியாக பரிமாணம் பெற்று பல காளைகள் அவிழ்த்து விடப்பட்டு, பல வீரர்கள் களம் இறங்கும் நிலை வழக்கில் வந்தது.

பாடி வாசல் எனும் வாடிவாசல்:

பாடி வீடு, பாசறை என்பது வீரர்களின் உறைவிடங்கள். அப்படி வீரம் பொருந்திய காளையும், இளைஞர்களும் போராடும் களம் என்பதால் அது பாடி வாசல் எனப்பட்டது. ‘ப’ என்பது தமிழில் ‘வ’வாகத் திரியும். பாலியம் வாலிபமாகத் திரிந்ததுபோல், கோபம், கோவமாகத் திரிவதுபோல் இதுவும் திரிந்தது.

பொங்கல் திருநாள் என்பது உழவுக்குத் துணை நிற்கும் காரணிகளுக்கு நன்றி சொல்லும் விழா. மழை, சூரியன், மாடு, உழைப்பாளி என்ற நான்கிற்கும் நான்கு நாள்கள். மழைப் பொங்கல் (போகி), சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழைப்பாளிப் பொங்கல் என்று நான்கு நாள்கள் கொண்டாடப்படுவதால், மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை விரட்டி மகிழ்வது விழாவாக்கப்பட்டது. அதனால்தான் பொங்கல் நேரத்தில் சல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

சல்லிக்கட்டுக்குத் தடை சரியா?

சல்லிக்கட்டுப் போட்டியில், பல இளைஞர்கள் உயிர் இழப்பதாலும், காயம் அடைவதாலும் அதை வீரமாகக் கருதி விளையாடலாமா என்ற பகுத்தறிவு சார்ந்த கொள்கையில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அது மரபு சார்ந்த நமது உரிமை என்பதால் அந்த உரிமையை மறுக்கும்போது அதை ஆதரிக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்.

கடவுள் இல்லை என்ற பகுத்தறிவுக் கொள்கை நமதாயினும், கோயிலுக்குள் நம் மக்களுக்கு உரிமை மறுக்கும்போது, நாம் அதற்காகப் போராடுவது போலத்தான் சல்லிக்கட்டின் உரிமைக்கு நாம் கடுமையாகப்  போராடுகிறோம்.

சல்லிக்கட்டில் மனிதர்களுக்குத்தான் தீங்கே ஒழிய மாட்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மாட்டைத் துன்புறுத்துவதாகக் கூறுவது வடிகட்டிய பச்சைப் பொய்.

நோயைப் பரப்பி மருந்துகள்மூலமும் மருத்துவமனைகள் மூலமும் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் கும்பல், நமது பொலிமாடுகளை அழித்து ஜெர்சி மாடுகளை நுழைத்து பால் உற்பத்தியில் கொள்ளை இலாபம் ஈட்டும், வஞ்சகச் சூழ்ச்சியே சல்லிக்கட்டுக்கு எதிரானச் செயல்பாடுகள்.

சல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகள் ஊர் ஊராகக் கொண்டு செல்லப்பட்டு, பசுவுடன் உடலுறவு கொள்ள வைக்கப்பட்டு, மாட்டினம் பெருக்கப்படும் முறை பல நூற்றாண்டுகளாக வழக்கில் உள்ளது. சல்லிக்கட்டை அழிப்பதன் மூலம், பொலி காளைகளை, நாட்டு மாடுகளை அழித்துவிட்டு, தங்கள் வணிகத்தைப் பெருக்க இவர்கள் முயற்சிக்கிறார்கள்.

நமது உயர்வான நெல்வகைகளை, காய்கறி பழ வகைகளையெல்லாம் அழித்து, சத்தற்ற, நோய் பரப்பும் வகைகளை உருவாக்கி, வளம், நலம் கெடுத்தவர்களின் அடுத்த முயற்சியே காளை இன அழிப்பு முயற்சி.

எனவே, சல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. மனிதர்க்கே பாதிப்பு உண்டு என்பதால், சல்லிக்கட்டை முறைப்-படுத்தி பாதுகாப்பாக நடத்த வேண்டுமே ஒழிய, அதைத் தடைசெய்வது மூட்டைப் பூச்சிக்காக வீட்டைக் கொளுத்தும் முட்டாள்தனத்தை, மோசடித்தனத்தை ஒத்ததாகும். நமது மரபை அழிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் முயற்சியாகும்.

எனவே, சல்லிக்கட்டு தடை நீங்கி, நடத்தப்பட வேண்டும் என்பதில் எந்த எதிர்ப்புக்கும், மறுப்புக்கும் இடமேயில்லை.

இளைஞர் எழுச்சி:

பொங்கல் நேரத்தில் சல்லிக்கட்டு நடத்தப்படாது தடுக்கப்பட்டது இளைஞர்-களைக் கோபம் கொள்ளச் செய்தது. பொங்கலுக்கு விடுமுறை இல்லை என்று மத்திய அரசு கூறியது அவர்களை மேலும் வேகப்படச் செய்தது.

தமிழர்களின் பண்பாட்டு அறிவியல், நாகரிகச் சிறப்புகளைக் கண்டு பொறாமை கொண்டு, தமிழன் மொழி, கலை, கல்வி என்று ஒவ்வொன்றிலும் கைவைத்து பறிக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசின் ஆரிய ஆதிக்க வழிச் செயல்திட்டங்கள் இளைஞர்களை கொதிப்படையச் செய்தன.

இலங்கையில் தமிழர்களை அழித்து, மீனவர்கள் உரிமையைப் பறித்தது, காவிரி நீரை தர மறுப்பது; புதிய கல்வி பெயரால் குலக்கல்வி, சமஸ்கிருதத்தைத் திணிப்பது; நீட் தேர்வு மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்பு பறிப்பது; என்று ஒவ்வொன்றாய் மத்திய அரசு செய்ய, அழுத்தி வைக்கப்பட்ட இளைஞர் உணர்வுகள், சல்லிக்கட்டு தடையென்னும் பொறியால் வெடித்துக் கிளம்பியது.

மொழிப் போரை மிஞ்சிய எழுச்சி:

1965வாக்கில் இந்திக்கு எதிராக மாணவர்கள் கொதித்ததெழுந்த எழுச்சியைப் போல பல மடங்கு எழுச்சியோடு மாணவர்கள் எழுந்தனர். இளைஞர்கள் இணைந்தனர். பொதுமக்கள் சேர்ந்தனர். தமிழகமே போர்க்களமானது. மாநில அரசும், மத்திய அரசும் நடுங்கின. மாணவர் எழுச்சிக்கு முன் எந்த ஆதிக்க சக்தியும், சூழ்ச்சியும் என்ன செய்ய முடியும்?

இத்தனை காலம் ஏதோ காரணங்களைச் சொல்லி இழுத்தடித்தவர்கள், இரவோடு இரவாக சட்டம் கொண்டுவந்து சல்லிக்கட்டுத் தடையை நீக்கினர். இளைஞர்களின் எழுச்சியும் உறுதியும், போராட்டமும் வென்றது.

உலகமே வியந்த ஒப்பற்ற அறப்போர்:

பல இலட்சக்கணக்கான இளைஞர்கள் ஒரே இடத்தில் சேர்த்து இரவுபகலாய் தங்கினாலும் ஒரு சிறு வன்முறையும், எல்லை மீறலும் இல்லை. பருவ வயதுடைய ஆணும், பெண்ணும் கலந்து இருந்தாலும், இரவு உறங்கினாலும் சிறு பண்பாட்டு மீறலும் இல்லை. கட்டுப்பாடு, வரலாறு காணா கண்ணியக் கட்டுப்பாடு! இளம் பெண்ணுக்கு இளைய ஆண்களே காவலாக நின்ற காட்சி உலகம் காணா ஒப்பற்ற மாட்சி! உலகே தமிழரின் பண்பாடு கண்டு வியந்தது! தமிழரைப் பின்பற்றுங்கள் என்று ஒவ்வொரு நாட்டிலும் சொல்லத் தொடங்கினர்.

ஆனால், இப்படிப்பட்ட பண்பட்ட போராட்டத்தை காவல்துறையினர் களங்கப்-படுத்தி, இளைஞர்களை, பொதுமக்களைத் தாக்கியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, தமிழர் விரோதச் செயலும் ஆகும். தன்னலமின்றி, தன்னெழுச்சியாக இளைஞர்கள் நடத்தியது இப்போராட்டம் என்பதால், அதில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிப்பதோடு, அதுசார்ந்த வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டும். ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., இந்துத்வா ஆட்கள் கூலிகொடுத்து ஆட்களை அமர்த்தி கலவரத்தைத் திட்டமிட்டு உருவாக்கியதாகக் கூறப்படுவதை காவல்துறை விசாரித்து, அவர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்த காவல்துறையினர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது வெறும் சல்லிக்கட்டுப் போராட்டம் மட்டும் அல்ல!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மாணவர்கள் இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம் தமிழரின் உரிமைகளை எவரும் பறிக்க முடியாது என்பதற்கான வரலாற்று நிகழ்வாக அமைந்து, நம்மை யெல்லாம் பெருமையும் மகிழ்வும் உணர்வும் கொள்ளச் செய்துள்ளது.

இன எதிரிகள் திரித்துக் கூறுவது போல இது வெறும் சல்லிக்கட்டுக்கான போராட்டம் அல்ல. சல்லிக்கட்டு தடை அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்ட ஓர் உடனடிக் காரணம்.

உண்மையில் மாணவர்களின் போராட்டம், தமிழரின் பறிக்கப்படும், மறுக்கப்படும் உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே என்பதை அவர்களே பல இடங்களிலும் தொலைக்காட்சி நேரலை வழியாகப் பதிவு செய்துள்ளனர்.

“எங்கள் போராட்டம் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக மட்டும் இல்லை. இந்தத் தமிழ் இனத்தின் உரிமைகள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். குறிப்பாக, காவிரிப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு எதிர்ப்பு, கீழடி அகழாய்வு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு, வறட்சி நிவாரணம் அளித்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்கு அழுத்தம் என்று பலவற்றையும் உள்ளடக்கியே இப்போராட்டம். ஜல்லிக்கட்டோடு எங்கள் போராட்டம் ஓயாது. எல்லா உரிமைகளையும் மீட்டெடுக்கும் வரை இப்போராட்டம் ஓயாது. தமிழர் உரிமையை பலவகையிலும் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசிற்கு எதிராகவே எங்கள் போராட்டம்’’ என்று அலங்காநல்லூர், சேலம், திருச்சி, சென்னை மெரினா என்று பல இடங்களிலும் மாணவர்கள் தொலைக்காட்சி நேரலையில் எழுச்சியோடு எடுத்துக்கூறியது, மாணவர்கள் சமூகப் பிரச்சினைகளில் கொண்டுள்ள தெளிவையும், அக்கறையையும், துடிப்பையும் தெளிவாகக் காட்டியது.

அதுமட்டுமன்றி, அரசியல்வாதிகளைப் போராட்டத்தில் கலக்கவிடாது, அரசியல் சாயம் பூசி மாணவர்கள் ஒற்றுமை சிதைந்து போகாமல், மிகவும் கவனமுடன் அவர்கள் இப்போராட்டத்தை நடத்தியது, அவர்களின் நுண்ணறிவையும் வியூகத் திறத்தையும் காட்டுகிறது.

எழுச்சிப் போர் என்றும் தொடரும்!

தன்னெழுச்சியாக தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய இப்போராட்டம், அமைப்பு ரீதியாக உருப்பெற்று, கோரிக்கைகளை முறைப்படுத்தி, போராட்டங்களை ஒழுங்குபடுத்தி, சரியான வழிகாட்டுதலில் நடத்தப்படும்போது, தமிழர்கள் உரிமைகள் நிச்சயம் மீட்டெடுக்கப்படும். தமிழர் உரிமைகளைத் திட்டமிட்டு பறிக்க நடக்கும் சதி முறியடிக்கப்படும் என்பதும் அந்தப் பெருமை இளைஞர்களைச் சேரும் என்பதும் உறுதி.

இன்று எழுந்துள்ள இந்த எழுச்சி மேலும் மேலும் வளர்க்கப்பட வேண்டும். அதற்கான செயல்திட்டங்களை இளைஞர்கள் வகுக்க வேண்டும். இளைஞர்களால் இது நிச்சயம் நடக்கும்! தமிழர் உரிமைகள் மீட்கப்படும், காக்கப்படும் என்பது உறுதி!

அடுத்தகட்டமாக நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், விவசாயிகள் துயர்துடைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், காவிரி நீரைப் பெறவும் என அடுத்தடுத்த உரிமைகளைப் பெற தங்கள் எழுச்சியை இளைஞர்கள் காட்ட வேண்டும்.

எடுத்த எடுப்பிலே போராட்டம் என்றில்லாமல், கோரிக்கை வைத்து, குறிப்பிட்ட காலத்தில் நிறைவேறவில்லை என்றால் எழுச்சியுடன் போராட வேண்டும்! நிறை-வேறும்வரை போராட வேண்டும்! இளைஞர்-களால் இன உரிமையையும், மாநில உரிமையையும் மீட்க முடியும்! மீட்பார்கள்!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *