அண்ணா இடத்தில் உள்ள சிறப்பு என்ன? இந்தியாவிலேயே அண்ணா சாதித்ததைப் போல எவருமே சாதிக்கவில்லையே! அதுபோல் ஒருவர்கூடத் தோன்றவில்லையே! மனிதனுக்கு அறிவுதான் முக்கியமே தவிர, சாஸ்திர, சம்பிரதாயங்கள் தேவையில்லை என்று சொன்னவர். அதன்படி நடந்து காட்டியவர் அண்ணா ஆவார்கள், ஜாதி இல்லை; கடவுள் _ மதம் _ சாஸ்திரம் _ காந்தி _ காங்கிரஸ் _ பார்ப்பான் ஒழிக்கப்பட வேண்டுமென்பதற்காக 1926இல் தோற்றுவிக்கப்பட்டது சுயமரியாதை இயக்கமாகும்.
அதுவரை சகலமும் பார்ப்பான் என்றுதான் இருந்தது. இந்தக் கொள்கையோடு அந்தக் காலத்தில் இயக்கம் ஆரம்பித்தபோது எங்கள் மீது செருப்பு – கல் – சாணியெல்லாம் விழும். ஓட ஓட அடிப்பார்கள். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்து வந்ததால்தான் இன்றைய தினம் அந்தக் கருத்துள்ள ஆட்சியே அமையும்படியான நிலை ஏற்பட்டு விட்டது. ஒரு நாட்டையே திருப்பி அந்தக் கொள்கையுள்ள ஆட்சி அமையும்படியாயிற்று.
இந்தியாவிலேயே இப்படிப்பட்ட நாத்திக ஆட்சி கடவுள் – மத – சாஸ்திர சம்பந்தமற்ற ஆட்சி எங்குமே இல்லையே. இப்போது தெரியுமே அண்ணாவின் சிறப்பு. துருக்கியில் கமால்பாட்சா ஆட்சிக்கு வந்தபோது அரசு அலுவலகங்களில் எதற்காக குரான் வாசகங்கள் என்று அழிக்கச் சொன்னார்? அதுபோன்று அண்ணா அவர்கள் அரசு அலுவலகங்களிலிருந்து கடவுள் படங்களை அகற்ற வேண்டுமென்று உத்தரவிட்டார்.
மனிதனுக்கும், கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்பதை விளக்கும் வகையில் சுயமரியாதைத் திருமணத்தைச் சுட்டபூர்வமாக்கினார். ஆட்சியில் நானே இருந்தால்கூட செய்யமுடியாத காரியங்களை யெல்லாம் அண்ணா அவர்கள் செய்திருக்கிறார்கள். புதிய கருத்துகளைப் பரப்பி புதிய உலகத்தை உண்டாக்கியவர் அண்ணா ஆவார்கள். நாங்கள் எல்லாம் ஒன்றாகத் தொண்டாற்றியவர்கள்.
– ’விடுதலை’ 29-05-1970