மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகையுடன் சென்னை அய்.அய்.டி.யில். கோடை விடுமுறையில் மாணவர்களுக்குப் பயிற்சி!
சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை அய்.அய்.டி. பல்வேறு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கோடை விடுமுறையில் இங்கு பயிற்சி பெறலாம். பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கும் திறமை வாய்ந்த மாணவர்களுக்கு உயர் ஆராய்ச்சியில் ஆர்வமும் விழிப்புணர்வும் ஊட்டுவதற்காக பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக் காலத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மினி புராஜக்ட் செய்ய வேண்டும்.
மே 16ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. இந்தப் பயிற்சிக் கால அட்டவணையை தங்களது சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
இந்த இரண்டு மாத பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், அப்ளைடு மெக்கானிக்ஸ், பயோ டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், என்ஜினீயரிங் டிசைன், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், மெட்டலாஜிக்கல் அண்ட் மெட்டீரியல் என்ஜினியரிங், ஓசன் என்ஜினீயரிங் ஆகிய பொறியியல் துறைகளும் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய அறிவியல் துறைகளும் கலைப்புலம் மற்றும் சமூக அறிவியல் துறையும் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் துறையும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கின்றன. எனவே, பொறியியல், மேனேஜ்மெண்ட், அறிவியல், கலைப்புலப் பாடங்களைப் படித்து வரும் மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
பி.இ., பி.டெக்., பி.எஸ்சி (என்ஜினீயரிங்), ஒருங்கிணைந்த எம்.இ., எம்.டெக் படிப்புகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் திறமையான மாணவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்-பிக்கலாம். எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ. பாடப் பிரிவுகளில் முதலாண்டில் படிக்கும் திறமையான மாணவர்களும் சேர விண்ணப்பிக்கலாம். அதாவது, பல்கலைக்கழகத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள், கருத்தரங்குகளில் பங்கேற்பு, மேற்கொண்ட புராஜக்ட்டுகள், போட்டிகளில் பங்கேற்பு, விருது, கவுரவம் பெற்றது குறித்த தகவல்கள், கணித ஒலிம்பியாட் போட்டியில் ரேங்க்… இப்படி மாணவர்களின் திறமைகள் பற்றிய விவரங்-களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அய்.அய்.டி. மாணவர்கள் இந்தப் பயிற்சி பெற விண்ணப்பிக்க முடியாது.
சென்னை அய்.அய்.டி.யில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப வேண்டியதில்லை.
மாணவர்கள் படிக்கும் கல்வி நிலையங்களின் துறைத் தலைவரிடமிருந்து, கல்லூரியில் படித்துவரும் மாணவர் என்பதற்கான சான்றிதழையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விவரங்களுக்கு:https://sfp.iitm.ac.in/