கடவுளுக்குக் கல்தா!

ஜனவரி 16-31

உயிரற்ற குச்சியப் பொருளிலிருந்தே உயிர்களை உருவாக்க முடியும் என்று டாக்டர் வென்ட்டர், டாக்டர் கிளயர் ஃப்ராசர் கண்டுபிடித்த செய்தி ஏற்கனவே வெளியில் வந்து பிற்போக்குவாதிகளை வெலவெலக்கச் செய்தது.

புதிய மனித குலத்தைப் பூக்க வைக்கப் போகும் இந்தச் “சுடச்சுடச்” செய்தி பல முகாம்களை அதிர வைக்கும் என்பதில் அய்யமில்லை.

கடவுள்தான் மனிதனைப் படைத்தார்; அதுவும் தன் விலா எலும்பிலிருந்து படைத்தார்; முகத்திலிருந்தும், தோளிலிருந்தும், இடுப்பிலிருந்தும், பாதங்களிலிருந்தும் படைத்தார் என்று கதைவிட்டு மாபெரும் மனித குலத்தைச் சுரண்டிக் கொழுத்த கும்பல் இப்பொழுது ஒரு பக்கத்தில் தம் மூளைகளைக் கசக்கிக் கொண்டிருக்கும்.

இங்கிலாந்து நாட்டில் இயங்கும் கிறிஸ்துவ அமைப்புச் சார்பில், அதன் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் ஜென்கின்ஸ் கூறி இருக்கும் செய்தி இன்றைய நாளேடுகளில் வெளிவந்துள்ளது.

“நாங்கள் விஞ்ஞானத்துக்கு எதிரியல்ல. இருந்தாலும் இப்போதைய கண்டுபிடிப்பால், மனித இனத்தின் அடிப்படை இயல்புகள் மாறிப் போய்விடும். நாம் விரும்பிய வண்ணம் குழந்தைகள் பெற முடியும். கருவிலேயே ஒரு குழந்தையின் அம்சங்கள் சரி பார்க்கப்படும். அதில் ஏதேனும் குறையிருந்தால் கருவிலேயே அது அழிக்கப்பட்டுவிடும். மொத்தத்தில் இந்தக் கண்டுபிடிப்பால் கடவுளுக்கு வேலையில்லாமல் போய்விடும்” என்று கூறியுள்ளார்.

ஒப்புதல் வாக்குமூலம் மத முகாமிலிருந்தே வந்துவிட்டது. இது பகுத்தறிவுவாதிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிதானே!
‘விடுதலை’ 29.6.2000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *