அட்ஷய திருதியை

ஜனவரி 16-31

ஆசையைத் தூண்டி மக்களைச் சுரண்டும் நவீன மூடநம்பிக்கை

வை.கலையரசன்

இந்து மதமும் அதன் அடிப்படையில் அமைந்த கதைகளும், மக்களை ஏமாற்றவும், சோம்பேறிகள் ஆக்கவும் படைக்கப் பட்டிருக்கின்றன எனத் தந்தை பெரியார் கூறினார்.

நவீன அறிவியல் காலத்திலும் படிக்காத பாமரர்கள், பகுத்தறிவற்ற படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், பதவியை நாடும் அரசியல்வாதிகள், பேராசை கொண்ட பணக்காரர்கள் முதலியவர்களை இதிகாச, புராணக் கதைகளைக் காட்டி மதவாதிகளும், ஜோதிடர்களும், சாமியார்களும் ஏமாற்றுவது தொடர்வது பரிதாபத்திற்கு உரியதாகவும் வருந்தத்தக்கதாகவும் இருக்கிறது. அதில் ஒன்றுதான் ‘அட்சய திருதியை’ எனும் ஏமாற்று. இது அண்மையில் சில ஆண்டுகளாக பிரபலம் ஆக்கப்படும் நகைப்புக்கு உரிய ஒரு கூத்து. ஆசை வயப்பட்டவர்களுக்குப் பேராசையைத் தூண்டும் ஓர் அற்புதமான மூடநம்பிக்கைக் குளிகை இது
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் நாள் அட்சய திருதியை எனப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் ஆண்டு-முழுவதும் தங்கம் குவிந்துகொண்டே யிருக்கும் என்பது ஒரு மூடநம்பிக்கை. இந்த நவீன மூடநம்பிக்கையைப் பரப்பி பாமர மக்களைச் சுரண்டிக் கொழுக்கின்றனர் நகை வியாபாரிகள்.

அம்மன் கழுத்திலிருந்து தாலி விழுந்து-விட்டது அதனால், அனைவரும் மஞ்சள் கயிறு வாங்கி படைக்கவேண்டும் என்று ‘புருடா’ விடுவது; பஞ்சாங்கத்தில் ஆண்களுக்கு ஆண்டு பலன் சரியில்லை. எனவே, எல்லா ஆண்களும் சகோதரிகளுக்கு பச்சை புடவை வாங்கித் தரவேண்டும் என்பது; எல்லோரும் ஐந்து மிட்டாய்களை வாங்கி படைக்க வேண்டும் என்பது போன்ற வதந்திகளை அவ்வப்போது பரப்பிவருவதுபோல, இது ஆண்டுதோறும் மக்களை மடையராக்க நுழைக்கப்பட்ட ஒரு மூடநம்பிக்கை. உண்மை பரப்பவேண்டிய ஊடகங்கள் பொறுப்பற்று இதை விளம்பரப்படுத்துகின்றன.

இதற்கு கூறப்படும் புராணக்கதைகள் பல உண்டு. ஊருக்கு ஊர் ஊத்தை வாயர்கள்  உளறுவதற்குப் பெயர்தானே புராணப் புழுதியும், மதக் கருத்துக்களும்.

பூலோகத்தைப் பிரம்மன் படைத்த நாள்தான் இந்நாள், ராமன் வாழ்ந்த திரேதாயுகம். இந்த நாளில்தான் பிரம்மாவால் படைக்கப்பட்டதாம்.

“வறுமையில் வாடியவன் குசேலன். அவனுக்கு 27 பிள்ளைகள். வறுமையைப் போக்கிக் கொள்ள அவன் நண்பன் கண்ணனை நாடிச் சென்றான். கண்ணனுக்கு மிகவும் விருப்பமான அவலைக் கொண்டு சென்று கொடுத்தான். அந்த அவலை அவன் தின்று முடித்தபோது குலேசன் வீடு குபீர் மாளிகையாக காட்சி அளித்தது, அவனின் மனைவி நகைக் காய்ச்சி மரமாகக் காட்சி அளித்தாள், செல்வம் கொழித்த அந்த நாள் தான்  அட்சய திருதியையாம்.

27 பிள்ளைகளைப் பெற்ற குசேலனுக்கு 20 வயதுக்கு மேற்பட்ட ஏழு தடியன்கள் இருக்க மாட்டார்களா? இந்த ஏழு தடிப் பசங்களை வீட்டில் வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இது போலிருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகி இருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்கு கடவுள் செல்வம் கொடுக்கலாமா?’’ என்று அறிவார்ந்த கேள்வியைக் கேட்டவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். (பொன்னி பொங்கல் மலர் 1948).

அஷ்டலட்சுமி, தான்ய லட்சுமி அவதாரம் எடுத்த நாள் தான் இந்த அட்சய திருதியையாம். இப்படிப் பற்பல அண்டப் புளுகு மூட்டைகள். இவையெல்லாம் சொன்னவர்கள் யார்? கடவுளே சொன்னாரா, அவரே எழுதி  வைத்தாரா? என்று யாரும் கேள்வி கேட்டு விடாதீர்கள்! அப்படிக் கேட்டால் அவர்கள் நாத்திகர்கள், நாக்கில் புற்று வந்து சாவார்கள் என்று சபிப்பார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்புவரை பெரிதாக்கப்-படாத இம்மூடநம்பிக்கை கடந்த சில ஆண்டுகளாக நகைக் கடைக்காரர்களால் வேகமாக நாளிதழ்களில் விளம்பரம் பக்கம் பக்கமாக கொடுக்கப்படுகிறது. தொலைக் காட்சிகளில் கேட்கவே வேண்டாம். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை கவர்ச்சியாய் காட்டப்படுகிறது.

சதுரங்க வேட்டை படத்தில் வருவதுபோல, ஆசையை மட்டும் தூண்டிவிட்டால் எத்தகைய மட்டமான பொருளையும் விற்றுத் தீர்த்துவிடலாம். விளம்பரத்தைக் கவர்ச்சியாய் செய்தால், ‘மேகி’ ஆனாலும், ‘மோடி’ ஆனாலும் பாமர மக்களால் நம்பப்படுவர்!

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் – இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ எச்) கூறும் நிலையில், இதுபோன்ற அட்சய திருதியைகளை தடை செய்வதுதானே நல்லதோர் அரசின் கடமையாக இருக்க முடியும்?

அட்சய திருதியையில் ஒரு குன்றிமணி அளவு தங்கத்தையாவது – கடன் பட்டாகிலும் வாங்க வேண்டுமாம். அப்படி வாங்கினால், ஆண்டு முழுவதும் செல்வலட்சுமி அவர்கள் வீட்டில் தாண்டவமாடுவாள் என்னும் நம்பிக்கையில் கடன் வாங்கியாவது தங்கம் வாங்குகிறார்கள்; அன்று வாங்கிய தங்கத்தை அடகு வைத்துதான் தங்கம் வாங்குவதற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் கொடுமைதான் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது.

வியாபாரிகள் அட்சய திருதியைப் பற்றி பக்கம் பக்கமாக விளம்பரங்கள் செய்வதால் மக்கள் நகைக்கடைகளில் குவிய ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கூத்து கடந்த 10 ஆண்டுகளாகத்தான், களைகட்டி நிற்கிறது. 2011ஆம் ஆண்டில் 700 கிலோ, 2012இல் 720 கிலோ, 2013இல் 1100 கிலோ, 2014இல் 1500 கிலோ, 2015இல் 2500 கிலோ என நகைக்கடைகளில் விற்பனையானது. 2016இல் 3200 கிலோ தங்கம் விற்பனை ஆனதாக நகைக்கடை உரிமையாளர் சங்கப் பொறுப்பாளர் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்தார்.

அட்சயதிருதியில் தங்கம் வாங்கினால் தங்கம் குவியும் என்று எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது? ஆதாரம் உண்டா?

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கியவர்கள் வீட்டில் தங்கம் குவிந்தது என்பதற்கு சான்று உண்டா, புள்ளி விவரம் தரமுடியுமா?

அதுவும் தங்கத்தின் விலை நாளும் ராக்கெட் வேகத்தில் விர்ரென்று ஏறிக்கொண்டு இருக்கிறது. அட்சயதிருதியில் நகை வாங்கியவன், அடுத்து நகைக்கடைக்கே போக முடியாமல் பணமில்லாமல் நிற்பதுதானே உண்மை நிலை!

அட்சய திருதியை என்று சொல்லி அந்நாளில் தங்கத்தை வாங்கினால் க்ஷேமம் என்று நகை வியாபாரிகள் பாமர மக்களின் மூக்கைச் சொறிந்து விடுகிறார்கள். ஆதாயம் இல்லாமலா ஆற்றைக் கட்டி இறைப்பார்கள்? சில இடங்களில்  அட்சய திருதியை என்று விளம்பரம் செய்து, நகை வியாபாரிகள் போலியான நகைகளை மக்கள் தலையில் கட்டுகிறார்கள். -மத நம்பிக்கைகள் சுரண்டலின் சூட்சமம்தான் என்பதற்கு இந்த அட்சய திருதியை திருக்கூத்து ஒன்று போதாதா? 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *