Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வெல்லப் பொங்கலில் விழிப்பு பெறுவோம்!

எடையைப் பெருக்காமல்
ஏற்றதை உண்ணும்
எளியவன் அறிவாளி!

நூறாண்டு வாழ்வதற்கான
உணவுப் பட்டியல்…
நாட்காட்டிக்கு அருகில்
நாளும் தெரியுது!

விரைவு உணவை
வெறுத்து ஒதுக்கி
மரபு உணவை
மகிழ்ந்து உண்போம்!

நொறுக்குத் தீனி
சாவை அழைக்கும்
குறுக்குத் தடம்!

பசிக்கு உண்டவன்
ருசிக்குத் தின்றபோது
பிணி தொற்றிக் கொண்டது!
அலமாரிகளில் நிரம்பி இருக்கின்ற
மருந்துக் குப்பிகள்… மாத்திரைகள்…
தூக்கி எறிவோம்!

மதில் கட்டி அகழி வெட்டி
மனிதனைக் காக்கும்
மிளகும் தேனும்!

புத்தாடையை போடுவோம்
பொங்கல் நாளில்!
பழையவற்றைப் போடாதே
போகித் தீயில்!
பகுத்தறிவுத் தீயில் எரியட்டும்
மனுவும் கீதையும்!

மெல்லினம் வல்லினம்
உயர்ந்தவர் தாழ்ந்தவர்
சொல்லிய பேதம்
கெல்லி எறிவோம்!
சமத்துவம் பொங்க
சமவுரிமை ஏந்துவோம்!

கவிஞர் கண்ணிமை