Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

செந்தமிழச் சான்றோர் சித்தர்!

சித்தர்தம் பாடல் யாவும்
    சிந்தனை கருவூ லங்கள்;
நித்தமும் போற்றிக் கற்போர்
    மும்மலம் நீங்கப் பெற்றோர்;
பித்தமும் அகலும், பொய்மைச்
    சடங்குகள் பிடிவிட் டோடும்;
உத்தம குணங்கள் ஊன்றும்;
    உன்னதம் வாழ்வில் தோன்றும்!

சித்துக்கள் செய்தோர் அல்லர்;
    மக்களைத் திசைதி ருப்பும்
வர்த்தக தவவே டத்தில்
    வன்மங்கள் புரிந்தோ ரல்லர்;
முத்தியும் வேண்டார், சாதி
    மதங்களின் முடைய றுத்துச்
சித்தத்தை நேர்நி றுத்தி
    சிவமய மானோர் சித்தர்!

எதுதெய்வம்? அதுஎன் செய்யும்?
    இறையருள் என்ப தென்ன?
மதியிலா  மூடர்  தங்கள்
    மனத்திலும் பதிய, ‘வேதம்
கதைகட்டி, கானல் நீரைக்
    காட்டுவார் உமிழ்ந்த தென்று’
முதல்முதல் விளக்கம் தந்த
    முத்தமிழ் முனிவர் சித்தர்!

‘எக்கல்லில், சிலையில் தெய்வம்
    இருந்துங்கள் இன்னல் தீர்க்கும்?
ஒக்குமோ செம்பை வைத்து
    வடம்பிடித் துருட்டல் தேரில்?
தக்கதை விட்டுப் பொய்யைச்
    சாதிக்கும் அஞ்ஞா னத்தில்
சிக்கியே தவிக்கும் மக்காள்!
    சிந்தித்துப் பர்மின்’ என்றார்!

மக்கள்தம் பிணிக்கு நல்ல
    மருந்தினைக் கண்ட சித்தர்
அக்குவே றாணி வேறாய்
    ஆகத்தை அலசி ஆய்ந்து,
‘செக்குமா டென்றே நீங்கள்
    செகத்தில் வாழ்ந் தென்ன கண்டீர்?
பக்குவப் படாமல் மேன்மேல்
    பாவத்தைச் சுமக்கின்றீரே!’

‘ஆசையை அறுமின்; தூய
    அன்பினை விதைமின்; நெஞ்சில்
தூசினைத் துடைமின்; வாழ்வில்
    துன்பங்கள் தொலைமின்; மாய
பூசையை விடுமின்; ஞானப்
    பூரணம் அறிமின்; உள்ளத்
தீசனை உணர்மின்; ஞாலத்
    தின்பங்கள் பெறுமின்’ என்றார்!

வாழ்வினை வெறுத்தார் அல்லர்;
    மகிழ்ச்சியில் திளைத்தார் அல்லர்;
ஊழ்வினை விதிஎன் றொன்றை
    ஒப்புக்கும் ஏற்றார் அல்லர்;
தாழ்ந்துபின் சென்று பிச்சை
    தாமெடுத் துண்டார் அல்லர்;
ஆழ்ந்துசிந் தித்து வாழ்வின்
    உண்மையை அகழ்ந்தார் சித்தர்!

த.பூபாலன்