ஒருவந்தம்
இது வள்ளுவர் வெருவந்த செய்யாமை என்னும் அதிகாரத்தில்,
“வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லை கெடும்’’
என்ற குறட்பாவில் வந்துள்ளது, இக் குறட்பாவிற்கு உரை கூறவந்த பரிமேலழகர்.
ஒருவந்தம் (அரசன்) ஒரு தலையாக என்று கூறி அவரே, விரிவுரையில் ஒருவந்தம் ஏகாந்தம் என்பன ஒரு பொருட் கிளவி என்று குறித்தார்.
ஏகாந்தம் என்பதிலுள்ள ஒரு என்பதை ஏகம் என்றும் அந்தம் எனப் பிரித்துக் கொண்டதை வடசொல் என்றும் அவர் நம்மை எண்ணச் செய்கின்றார். ஒருவந்தம் என்பதை ஒரு+அந்தம் என்று பிரித்த இவர் ஒரு என்பதன் முன் உயிர் வந்தால், அந்த ஒரு ஓர் என்றாகி அந்தம் என்பதனோடு சேர்ந்து ஓராந்தம் என ஆகும் என்ற இலக்கணச் சட்டத்தையும் எண்ண-வில்லை. தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொல் என்று காட்டி வடமொழி யினின்றே தமிழ் வந்தது என்ற பொய்க் கொள்கையை நிலைநாட்டுவதிலே தம் கண்களையும் கருத்தையும் செலுத்துகின்றார்.
இச் செயல் அல்ல புரிவதாகும். ஆதலின் மேல் அறமும் தோன்றாது போனதில் வியப்பொன்றுமில்லை. ஒருவந்தம் என்பதை ஒரு+வந்த என்றே பிரிக்க வேண்டும் என்பதையும் வந்தம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதையும் ஈண்டு விளக்கப்படும்.
வெருவந்த செய்தொழுகும்……. என்று தொடங்கும் மேற்படி குறட்பாவின் ஒருவந்தம் என்பதை நோக்குமுன் மேல் வந்திருக்கும் வெருவந்தம் என்பதையும் நோக்க வேண்டும் வெரு+அச்சம், வந்த பலவின் பாலை வினையாலணையும் பெயர். அச்சம் அமைந்தவை (அஞ்சத்தக்க செயல்கள்) என்பது அதன்பொருள்.
மேற்படி அதிகாரம் ஒன்பதாம் குறட்பாவிலும் வெருவந்து வெய்து கெடும் என வந்திருப்பதும் நோக்குக. இங்கு வெருவந்து அஞ்சுதல் அமைந்து, (எனவே அஞ்சி) என்பது பொருள். இதில், வந்து வினையெச்சம். எனவே இதன் தொழிற்பெயர் எது? ஒருவந்தம் என்பது போலவே நமக்கு வெருவந்தம் என்ற தொடரும் கிடைக்கின்றது. எரிவந்தம் என்பதும் ஒன்று.
எனவே ஒருவந்தம் வெருவந்தம், எரிவந்தம் என்பனவற்றை நோக்குங்கால் வந்தம் என்பதே அன்ற அந்தம் என்பதை நாம் வலிந்து இழுத்துப் போர்த்துத் தொல்லையுற வேண்டாம். இனி வந்தம் என்பதைப் பற்றி ஆராய்வோம்.
வா என்ற முதனிலை வந்தான் என்னும் போது வ எனத் திரியும், வருகின்றான் என்னும் போது வரு எனத் திரியும். அதுபோல வந்தம் என்னும் தொழிற்பெயரில் வா என்பது வந்து எனத் திரிந்தது என உணர்தல் வேண்டும். இதில் அம் தொழிற்பெயர் இறுதிநிலை ஆட்டம் என்பதிற் போல.
இனி வெருவந்தம் ஒருவந்தம், எரிவந்தம் என்பவற்றில் வெருவரல் ஒருவரல், எரிவரல் (எரிவுவரல்) என்பவை காண்க. எனவே வெருவரல்-அஞ்சத் தகுந்தது. ஒருவரல்-தனித்தோற்றம் புகழ், உறுதி, எரிவரல்- எரிச்சல் அடைதல் என்பன பொருளாகக் கொள்க. எனவே ஒருவந்தம் என்பதைப் பரிமேலழகர் ஒரு அந்தம் எனப் பிரித்தது: பிழை என்பதும், ஒருவந்தம் என்பதில் உள்ள வந்தம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்று அறிக.
(குயில்: குரல்: 2, இசை: 22, 8.1.1959)
வேகம்
இது வடசொல்லன்று. வேகுதல், வேதல், வேக்காடு முதலியவை போலவே வேகம் என்பது தொழிற்பெயர்.
வே. முதனிலை, கு. சாரியை, அம் தொழிற்பெயர் இறுதிநிலை. தீயிற்படுதல் என்பது பொருள்.
தீப்பட்டான் மீள விரைதல் இயல்பு. அது பற்றி வேகம் விரைவையும் குறிப்பதாயிற்று. மனம் வேதலைக் குறிக்கையில் துன்பத்தையும் குறிக்கும். எனவே வேகம் தமிழ்க் காரணப் பெயரே.
(குயில்: குரல்: 2, இசை: 24, 22.12.1959)