கருணை மறவர் தந்தை பெரியார்

ஜனவரி 16-31

 

மனிதனின்
எந்த உரையாடலில் விடுதலையும்
விடுமுறை போடாத் தன்மானமும்
குனிவறியா
ஒளி படைக்கின்றனவோ
அந்த உரையாடலில்தான்
அவனுடைய தாய் மொழிச் சிறகுகள்
விண்ணின் விரிவோடு ஒப்பந்தம் போடும்.

அந்த உரையாடலைத்தான்
தந்தை பெரியார் முதன்முதலாய்த்
தமிழருக்காக நிகழ்த்தினார்.

அவர்
தமிழோடு நடத்திய
அத்தனையும் அக்கறைக் கலவரங்கள்;
உயர்வுகளை நோக்கித் தமிழனை, தமிழை,
உந்தித் தள்ளின.

இச்சகம் பேசிகளின்
ஒப்புக்கான உறவுகள் ஒதுங்கிநின்று
உள்ளுக்குள் வெந்தன.

தமிழ்ச் சொற்கள்
காவியங்களை, கதைகளை, பாடல்களை
எத்தனையோ வகைகளில்
எவ்வளவோ காலமாய்ச் சந்தித்திருக்கின்றன.

துணிவுமிக்க
வெட்டொன்று துண்டிரண்டு
வெப்ப நெருப்புப் பிம்பமான சிந்தனைகளைத்
தந்தை பெரியாரின்
அறிவுத் தாழ்வாரத்தில்தான் முதன்முதலாய்ச்
சந்தித்தன.

அறிவோடு
நட்புப் பாராட்ட முடிந்த அய்யா
அறியாமையின்
தேநீர் விருந்து அழைப்புகளை ஒருபோதும்
ஏற்க முடியவில்லை.
எப்படி முடியும் அது?

இருள் மண்டபத்தில்,
இரவு நடத்தும் நட்சத்திரத் திருவிழாவுக்கு
வருகை தர ஒப்புவானா சூரியன்?
ஒப்பினால்
பகல்களை யார் பயிரிடுவது?
பாதுகாப்பது?

எல்லையற்ற இரக்கத்தின்
திருஉருவம் பெரியார்!
அவருடைய ஆத்திரம், போராட்டம், புரட்சி
அனைத்துமே.

புதைகுழி விளிம்பிற்குத் தள்ளப்பட்ட
தமிழ்மானுடனைக்
காக்கத் துடித்த கருணையின்
வெளிப்பாடே அன்றி, வேறு என்ன?

பாலஸ்தீனத்தில் பிறந்திருந்தால்
அவர்
யாசர் அராஃபாத்துக்குத் தோளில்
துப்பாக்கி ஆகியிருப்பார்!
அல்லது
தந்தை பெரியார் தோளில் அராஃபாத்
துப்பாக்கியாகி பிருப்பார்.

ஆப்பிரிக்காவில் பிறந்திருந்தால்
நெல்சன் மண்டேலாவின் சிறைக்குப்
பக்கத்துச் சிறையில்
விடுதலை வேள்வி செய்திருப்பார்
அல்லது
அவருடைய சிறையிலிருந்தே போராடி
ஆப்பிரிக்காவையும் அவரையும்
விடுவித்திருப்பார்.

கருணை மறவர் பெரியார்
புலி தனது குட்டியைக் கவ்வுவதுபோலத்
தமிழர்களைக் கவ்வினார்.
பதிந்திருக்கலாம் பல்;
படிந்திருக்கலாம் சுவடு
தாய்ப்புலியின் பாதுகாப்பு நடவடிக்கை
அது!
தப்புத் தமிழன்தான் தவறென்று பேசுவான்.

வீடு, சொத்து, பதவி, சுகம்
எல்லாம் துறந்து
வெட்டவெளி வீதியில் நின்று
தனது வயது, தளர்ச்சி, நோய், வலி
எதையும் பொருட்படுத்தாது
தமிழனை மீட்கப் போராடிய பெரியாரை
முரட்டுச் சித்தர்கள் வழியில் வந்த
ஒரு
பகுத்தறிவு மகரிசி என்றால்
இல்லை என்று எந்த விரல்
எதிர்ப்புக் காட்டி நீளும்?

ஆயிரம் பல்லாயிரம் கண்ணாடிகளாகித்
தந்தை பெரியார்
முகத்தைப் பிரதிபலித்துத் தமிழர்கள்
அவருக்கு நன்றி சொல்லலாம்.

முகத்தைப்
பிரதிபலிப்பதை நிறுத்திவிட்டு
அவருடைய
அகத்தைப் பிரதிபலித்தால்
தமிழர்களுக்குத்
தந்தை பெரியார் நன்றி சொல்வார்.

ஈரோடு தமிழன்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *