மூடநம்பிக்கை முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முதல் எதிரி!

ஜனவரி 16-31

மஞ்சை வசந்தன்

மூடநம்பிக்கை என்ற சொல்லாட்சி நுட்பமான பொருளைத் தன்னுள் அடக்கிய அர்த்தமுள்ள வார்த்தை! மனிதன் பலவற்றை நம்புகிறான். அப்படியிருக்க சிலவற்றை மட்டும் எப்படி மூடநம்பிக்கை எனலாம் என்று சிலர் கேட்கின்றனர். இன்னும் சிலர் உங்களுக்கு அது மூடநம்பிக்கையாக இருக்கலாம்; எங்களுக்கு அது சரியான நம்பிக்கையே என்கின்றனர்.

இதில் உன் நம்பிக்கை, என் நம்பிக்கை என்று எதுவும் இல்லை. எது சரியான நம்பிக்கை என்பதே கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.

ஒரே கருத்து ஒருவருக்குச் சரியாகவும் இன்னொருவருக்குத் தப்பாகவும் இருக்கவே முடியாது. ஒன்று அக்கருத்துச் சரியானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தப்பானதாக இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருப்பதாய்ச் சொல்வது சரியல்ல.

தேன் இனிக்கும் என்பது சரி. அதைக் கசக்கும் என்பவன் வாய்தான் குற்றமுடையதாக இருக்க முடியும். தேன் சுவையில் மாற்றம் இல்லை என்பதே உண்மை.

இந்த இரண்டில் எது சரியென்று அறிய அத்தேனை பலர் சுவைக்கத் தந்து அறியலாம்; எறும்பு, ஈ மொய்ப்பதைக் கொண்டு அறியலாம்; உறுதி செய்யலாம். ஆக, எது சரி என்பது பகுத்தறிவின் மூலமே பரிசோதனையின் மூலமே அறிய முடியும்; உறுதிசெய்ய முடியும்.

பகுத்தறிதல் என்பது ஒரு கருத்தை ஒளிவுமறைவுஇன்றி வெட்டவெளிச்சமாய் பகுத்தல், ஆய்தல், அறிதல். எனவேதான் பகுத்தறிந்து உண்மை காணும் அறிவைப் பகுத்தறிவு என்கிறோம்.

மூடநம்பிக்கையென்பது அப்படியே ஏற்றல். ஏன்? எப்படி? என்று ஆராயாமல், உண்மை அறியாமல், சரியா? தப்பா என்று பகுத்து அறியாமல் ஒப்புதல்.

ஆராயாமல் அப்படியேற்பதால் அங்கு வெளிப்படைத் தன்மை இல்லை. அங்கு அவன் அறிவு மூடப்படுகிறது. எனவேதான் அது மூடநம்பிக்கை எனப்படுகிறது.

பூனை குறுக்கே வந்தால், விதவை எதிரே வந்தால், கெட்டது; சுமங்கலி எதிரே வந்தால், பால்காரன் எதிரே வந்தால் நல்லது என்று கருத்து சொல்லப்படும்போது அதை அப்படியே நம்பி ஏற்று செயல்பட்டால் அது மூடநம்பிக்கை.

பூனையும் விதவையும் குறுக்கே வந்தபோதெல்லாம் நல்லதே நடக்கவில்லையா? சுமங்கலியும், பால்காரனும் எதிரே வரும் போதெல்லாம் கெட்டதே நடக்கவில்லையா? என்று பல நிகழ்வுகளை ஆராய்ந்து உண்மை கண்டால் அது பகுத்தறிவு.
இந்த அடிப்படையை புரிந்து ஏற்றாலே மூடநம்பிக்கை குடிகொள்ள வாய்ப்பே இருக்காது.

மூடநம்பிக்கை ஏன் கூடாது?

சரி. ஏன் ஒரு கருத்தை, ஒரு நம்பிக்கையை சரியா தவறா என்று பகுத்தாராய வேண்டும்? அப்படியே ஏற்றால் என்ன? என்று சிலர் கேட்கலாம். எந்தவொன்றும் சமுதாயத்திற்கு, தனி நபருக்கு இழப்பு, கேடு பயக்காத வரையில் அது எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால், அதுவே, பல வகையிலும் கேடு பயப்பதாயின் அதைக் கண்டிக்க வேண்டியதும் களைய வேண்டியதும் கட்டாயக் கடமையாகும்.

மூடநம்பிக்கையின் கேடுகள்:
ஆதிக்கம் செலுத்த:

ஒருவன் வசதியாயும், ஒருவன் வறுமையிலும் வாழும்போது, இது ஏன் என்று கேள்வி கேட்டால், இது கடவுள் விதித்த விதி! என்று சொன்னவுடன் ஏழை சமாதானம் அடைகிறான்.

நீயேன் உயர்ந்த சாதி? நான் ஏன் தாழ்ந்த சாதி? என்று கேட்டால், அது கடவுளால் படைக்கப்பட்டது என்று பதில் சொன்னவுடன் கீழ்சாதிக்காரன் ஏற்றுக் கொண்டு அமைதியாகி விடுகிறான்.

இங்கு இந்த மூடநம்பிக்கை, உயர்சாதிக்காரர்களும், செல்வந்தர்களும் கீழ்ச்சாதிக்காரனை, ஏழையை ஆதிக்கம் செலுத்தப் பயன்படுகிறது.

இந்த இரண்டு குறித்தும் பகுத்தாய்ந்து கேள்வி கேட்டால், கடவுள் என்னை மட்டும் ஏன் அப்படிப் படைக்க வேண்டும் என்று கேள்வி கேட்டுத் தெளிவு பெற்றால், ஒடுக்கப்பட்டோரின் உணர்வும், எழுச்சியும், ஆதிக்க சக்திகளுக்கு எதிராய் எழும். அதைத் தடுக்கவே, மூடநம்பிக்கைகள் ஆதிக்கச் சக்திகளால் திணிக்கப்படுகின்றன..

சுரண்ட:

பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு மூடச் சடங்குகளை உண்டாக்கி, அதன்மூலம் பார்ப்பனர்கள் சுரண்டி வருவாய் ஈட்டி, உழைக்காமல் உண்ணுகின்றனர்.

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரைச் சுரண்ட பல்வேறு மூடச் சடங்குகளைப் பயன்படுத்துகின்றனர்.

சம்பாதிக்க:

சோதிடன், மந்திரவாதி, இராசிக்கல் விற்பவன், வாஸ்து வல்லுனன் என்று பலபேர் சுகமாக பொருளீட்ட இந்த மூடநம்பிக்கை களைப் பரப்பி, ஏய்த்துப் பிழைக்கின்றனர்.

 

அச்சுறுத்த:

ஆரிய பார்ப்பனர்கள் தாங்கள் சிறுபான்மையினராய் இருப்பதால், மண்ணின் மைந்தர்களான திராவிடரான பெரும்பான்மை யினரை அடக்கி ஆள, உடல் வலிமையால் முடியாது என்பதால், அச்சுறுத்தி அதன் வழி அடக்கி ஆள மூடநம்பிக்கைகளை உருவாக்கி, கற்பித்து, ஏய்க்கின்றனர்.

முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடை:

மூடநம்பிக்கைகள் தனிப்பட்ட மனிதனின், குடும்பத்தின், சமுதாயத்தின், நாட்டின், உலகின் முயற்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக அமைகின்றன.

ஆற்றலுள்ள ஓர் இளைஞனின் ஜாதகத்தைப் பார்க்கும் சோதிடன், உனக்கு படிப்பு வராது; நீ மர வியாபாரம் செய்தால் இலாபம் கிடைக்கும் என்று கூறிவிட்டால், நன்றாகப் படிக்கக் கூடிய மாணவனின் முயற்சி, முன்னேற்றம் இதன்மூலம் பாதிக்கப்பட்டு, அவன் வாழ்வே தடம் புரண்டுவிடுகிறது.

தேர்வு நன்றாக எழுதும் அளவிற்கு தன்னைத் தயார் செய்து கொண்டு செல்லும் மாணவன் சகுனம் சரியில்லையென்றவுடன் மனம் சோர்ந்து போகிறான். தான் இந்தேர்வில் தேர்ச்சி பெற மாட்டோம் என்று முடிவு கட்டி விடுகிறான். தேர்ச்சி பெற வேண்டிய ஒரு மாணவனின் தன்னம்பிக்கையைக் குலைத்து அவன் வாழ்வின் முன்னேற்றத்தைக் கெடுத்தது இந்த மூடநம்பிக்கை.

அதேபோல், இராகு காலம், எமகண்டம், சோர வேளை யென்று பல மூடநம்பிக்கை களைப் புகுத்தி ஒரு நாளைக்கு பல மணி நேரத்தைப் பாழாக்குவதன் மூலம் நாடு முழுவதும் கணக்கற்ற உழைப்பு நேரம் பாழடிக்கப்படுகிறது. இதன் மூலம் தனிநபர் முன்னேற்றமும், நாட்டின்முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது.

சேதம், பாழ்:

பூசணிக்காயை சாலையில் போட்டு உடைக்கும் மூடநம்பிக்கையினால், உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியதும் பல்வேறு மருத்துவப் பலனளிக்கக் கூடியதுமான பூசணிக்காய் புழுதியில் பாழாக்கப்படுகிறது.

சிதறு தேங்காய் என்ற மூடநம்பிக்கையின் மூலம் தேங்காய் பாழாகிறது.

எலுமிச்சை பழம் வாகனங்களில் கட்டவும், சக்கரத்தில் நசுக்கப்படுவதன் மூலமும் பாழாக்கப்படுகிறது.

கடவுள் சிலையில் கணக்கற்று பாலும், தேனும், பழங்களும் கொட்டி பாழாக்கப்-படுகின்றன. யாகத் தீயில் உணவுப் பண்டங்கள் கொட்டி எரிக்கப்படுகின்றன. நாடு முழுக்க இப்படிப் பாழாக்கப்படும் பொருட்களைக் கணக்கிட்டால் அது பல ஏழைகளின் பசியாற்றப் பயன்படும். ஆனால், பசிக்கின்ற ஏழையை பரிதவிக்க விட்டுவிட்டு பாழாகக் கொட்டுவது மூடத்தனத்தால் மும்முரமாய் நடைபெறுகிறது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக வீணடிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, இது ஒரு சமுதாய எதிர்ச்செயல்; பொருளாதார குற்றச் செயல்.

அப்பாவிகள் தண்டிக்கப்படுதல்:

ராசி, அதிர்ஷ்டம் போன்ற மூடநம்பிக்கை களால் ஏதும் அறியாதவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு பெண் ஒரு வீட்டிற்கு மருமகளாய் வந்த பின் ஏதாவது அக்குடும்பத்தில் கேடு வந்துவிட்டால் அக்குடும்பத்தில் உள்ள அனைவருமே அப்பெண்ணைத் திட்டித் தீர்ப்பர். கரித்துக் கொட்டுவர். “இவ வந்த இராசிதான் இப்படியானது’’ என்று இடித்துப் பேசுவர். இதனால் சில பெண்கள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதுகூட உண்டு.

நரபலி என்ற மூடநம்பிக்கையில் அப்பாவிக் குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்லப் படுகிறார்கள்.

நலக்கேடு:

கையிலே முடிகயிறு, தாயத்து கட்டுவதன் மூலம் உடலில் அழுக்குச் சேர்ந்து உடல்நலம் கெடுகிறது.

விரதம் என்ற மூடநம்பிக்கையால் தேவையற்று பட்டினி கிடப்பதன் மூலம் உடல் நலமும், உள்ள நலமும் கெடுகிறது.
குறிப்பிட்ட நேரத்தில் பிள்ளை பிறந்தால் நல்லது என்று, இயற்கையான பிறப்பை செயற்கையாக்குவதன்_மூலம், முன்னதாகவோ, பின் தள்ளியோ அமைப்பதன்_மூலம், தாயின் உடல் நலமும், சேயின் உடல் நலமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

சுகாதாரக்கேடு:

போகியில் எரிக்க வேண்டும், தீபாவளியில் வெடிக்க வேண்டும் என்ற மூடநம்பிக்கையால், காற்றும், நீரும், மண்ணும் பெரிதும் மாசடைந்து பாழாவதோடு, மனிதர்கள் மற்றும் உயிரினங்-களுக்கும் ஏராளமான கேடுகள் உருவாகின்றன. அதேபோன்று ஆயிரக்கணகில் மூடநம்பிக்கை விழாக்களில் கூடுவதன் மூலம் சுகாதாரக் கேடும், நோய் தொற்றும் ஏற்படுகின்றன.

தன்னம்பிக்கை பாதிப்பு:

மூடநம்பிக்கைகள் பெரும்பாலும் தனி மனிதனின் தன்னம்பிக்கையைச் சீர்குலைத்து, தொடர்பில்லா ஒன்றின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.

பெயரை மாற்றுதல், எண்ணை மாற்றுதல், வீட்டை மாற்றுதல், நிறத்தை மாற்றுதல், வாகனத்தை மாற்றுதல் என்று பலவற்றை மாற்ற முனைவதன் மூலம், தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை குலைய, முயற்சி தடைபட, வளர்ச்சியும் கெடுகிறது.

ஆக்கத் திட்டங்கள் கெடுதல்:

சேது சமுத்திரத் திட்டம் என்ற மகத்தான வளர்ச்சித் திட்டம் மதவாதக் கும்பலால், இராமர் பாலம் என்ற மூடநம்பிக்கையைக் காரணம் காட்டி முடக்கப்பட்டு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இருக்கும் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு, எதிர்காலத்தில் மூடநம்பிக்கையை விலக்கி, அறிவோடு சிந்தித்து, சரியானதை கண்டு, முயற்சித்து முன்னேற்றம் காண்பதுதான் அறிவுள்ள மனிதர்க்கு அழகு!

மூடநம்பிக்கைகளின் பாதிப்பை தொலைநோக்கோடு உணர்ந்தே தந்தை பெரியார் அவர்கள் அவற்றை ஒழிக்க கடுமையாய்ப் பாடுபட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *