புராணங்கள் வளர்க்கும் மூடநம்பிக்கைகள்!

ஜனவரி 16-31

தேவர்களின் காமவிகாரம்

அன்னை மணியம்மையார்

நமது இந்திய நாட்டின் ஜனத்தொகை 38 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்து சமயத் தேவர்களின் ஜனத்-தொகை 33 கோடி என்று புராணங்களும், இதிகாசங்களும் சொல்கின்றன. இந்த 33 கோடி தேவர்களின் வரலாற்றை, புராண இதிகாசங்கள் எழுதவில்லை. ஆனால், தேவர்கள் எனப்படு-வோரில் முக்கியமான ஒரு சிலரைப் பற்றி மாத்திரம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் விளக்கமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இவர்களின் யோக்கியதையைப் பற்றி ஆராய்-வதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

முதலில் சூரியன் என்னும் தேவனைப் பற்றி ஆராய்வோம். இந்தச் சூரியன் அந்த-கவகுஷணிம்சன் என்பவனுடைய மகளைப் புணர்ந்த சரித்திரம் புராணத்தில் கூறப்-பட்டிருக்கிறது. அவளுடைய பெயர் ஆனந்தை. சூரியன் இவள் மீது காமவிகாரங் கொண்டு புணர்ந்தான் என்றால் சூரியனுடைய யோக்கியதை எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள்! இரண்டாவதாகச் சந்திரன் என்னும் தேவனுடைய யோக்கியதையைப் பார்த்தால், அவன் தன் குருவாகிய பிரகஸ்பதி அல்லது  வியாழன் என்பவனுடைய மனைவி தாரை என்பவளைப் புணர்ந்து புதன் என்னும் ஒரு பிள்ளையையும் பெறும்படி செய்துவிட்டான். இக் கதை தாராசசாங்கம் என்னும் நாடகத்தில் நடித்துக் காட்டப்படுவதால் இங்கு விவரமாகச்  சொல்ல வேண்டிய அவசியமில்லை.

சந்திரனால் கற்பழிக்கப்பட்ட தாரையின் கணவனும் இனி தேவர்களுக்கெல்லாம் குரு என்னும் பெரிய உத்தியோகம் படைத்தவனு-மாகிய வியாழன் அல்லது பிரகஸ்பதி என்பவனுடைய யோக்கியதையைப் பார்ப்போம். இந்த தேவகுருவுக்கு உதத்தியர் என்னும் தமையன் ஒருவன் உண்டு. அவனுடைய மனைவி மமதை என்பவள். இந்த மமதை என்பவள் கர்ப்பமுற்றிருந்த சமயத்தில் ஒரு நாள் பிரகஸ்பதி அவளைப் பார்த்துவிட்டான். உடனே அவனுக்கும் காமவிகாரம் உண்டாகிவிட்டது. அவன் தன் _ தமையன் மனைவியாயிற்றே என்றும் பாராமல் கர்ப்பமா யிருக்கிறாளே என்றும் கவனியாமல் மிருகங்கள்கூட செய்யாத மிலேச்சத்தனமாக மமதையருகில் சென்று தனது காமவிகாரத்தைத் தெரிவித்து தன்னைக் கூடும்படி கேட்டுக் கொண்டான். அதைக் கேட்ட மமதை எனக்குப் பிள்ளையில்லா-விட்டால் உன்னைக் கூடி பிள்ளை பெற்றுக் கொள்ள சாத்திரம் சம்மதிக்கிறது. ஆனால், உன் அண்ணனைக் கூடி எனக்கு இப்போது கர்ப்பம் உண்டாயிருக்கிறது. ஆகையால், நான் உன் கருத்துக்கு இணங்க மாட்டேன் என்று பதில்  சொன்னாளாம்! ஆனால், காம விகாரங்-கொண்ட தேவகுருவா இவளைச் சும்மா விடுவான்? அவன் உடனே அவள் மேல்விழுந்து பலவந்தப் புணர்ச்சி செய்தானாம்! அந்தோ! கொடுமை! கொடுமை! தேவர்களின் குருவே இப்படிச் செய்தால் இவருடைய சிஷ்யதேவர்கள் என்னதான் செய்ய மாட்டார்கள்?

இனி, அக்கினி பகவான் என்னும் தேவனுடைய யோக்கியதையைக் கவனிப்போம். அக்கினி ஒருநாள் யமலோகத்துக்குப் போனானாம். அங்கே யமனுடைய மனைவி சாமளை என்பவள் வீட்டில் தனிமையா-யிருந்தாளாம். அவளைக் கண்ட அக்கினிதேவன் காமவிகாரங்கொண்டு அவள் அருகில் சென்று தனது காமவிகாரத்தை அவளுக்குத் தெரிவித்து தன்னைச் சேரும்படி வேண்டினானாம். உடனே சாமளை அக்கினியைப் பார்த்து, யமன் உன்னுடைய சிநேகிதன் அல்லவா? உன் சிநேகிதன் மனைவியாகிய என்னை நீ கற்பழிக்க விரும்பலாமா? என்று கேட்டாளாம். அக்கினிக்குக் காமப்பித்து உண்டாகி விட்டதால், அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் விருப்பத்தை நிறைவேற்றி என்னைக் காப்பாற்ற வேண்டுமென்று சொல்லி அவள் கால்களில் விழுந்து கெஞ்சினானாம்! உடனே அவள் அவன் விருப்பத்திற்குச் சம்மதிக்க இருவரும் கூடி சுகித்தார்களாம்! இந்தச் சமயத்தில் யமன் வீட்டுக்குள் வரவும் சாமளை பயந்து அக்கினியை விழுங்கி வயிற்றில் வைத்துக் கொண்டாளாம்! இன்னும் இக்கதை நீளமாகப் போகிறது. முக்கியமான பாகத்தைச் சொல்லி விட்டோமாகையால் இதனோடு நிறுத்திக் கொள்வோம்.

இனி, அக்கினி தேவனால் கற்பழிக்கப்பட்ட சாமளையினுடைய கணவனான யமன் என்னும் தேவனுடைய யோக்கியதையை ஆராய்வோம். இந்த நமன் என்னும் எமன் டிண்டியை என்பவருடைய மனைவி சாயை என்பவளைக் கண்டு மோகித்துக் காம விகாரங்கொண்டு அவளைச் சேர்ந்து கற்பழித்துவிட்ட செய்தி புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் தேவர்களுக்கெல்லாம் அரசனாகிய இந்திரன் யோக்கியதை எல்லோருக்கும் தெரிந்ததே.  அவன் கவுதமர் என்பவருடைய மனைவி அகலிகை என்பவளை வஞ்சகமாகப் புணர்ந்து கற்பழித்து விட்டான். இம்மட்டோ! தேவர்களுக்கும் அப்பாற்பட்ட பிரம்மா தன் மகள் பத்மை என்பவள் மீது காம விகாரங்கொண்டு அவளைப் புணர்ந்த கதையும், பிரம்மாவின் தந்தையான விஷ்ணு, சலந்தரன் என்னும் அசுரனுடைய மனைவிமேல் காம விகாரங்கொண்டு அவளை வஞ்சகமாகக் கூடி இன்புற்ற கதையும், சிவன் தாருகாவன ரிஷி பத்தினிகளைக் கற்பழிக்கும் பொருட்டு நிர்வாணமான கோலத்தோடு ரிஷி பத்தினி-களிடம் சென்ற கதையும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் மிக விரிவாகவும், தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இதனால் தேவர்கள் என்று சொல்லப்படு-வோரின் யோக்கியதை. தமையன் மனைவியைப் பலாத்காரமாகப் புணர்வதும், குரு பத்தினி-களுக்குப் புத்திரதானம் செய்வதும், சிநேகிதன் மனைவியை வஞ்சகமாகப் புணர்வதும், பிறர் மனைவியை இச்சித்து அணைவதும்தான் என்று புராணங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும் தெளிவாகத் தெரிய வருகிறது. வாசகர்களே! இவ்வளவு யோக்கியதையுடைய தேவர்கள் இந்து சமயத்தில் இருக்கும்போது இந்து சமயம் எவ்விதமாக மதிக்கப்படும் என்பதை யோசித்துப் பாருங்கள். காம விகாரங்கொண்டு திரியும் இத்தேவர்கள் சரித்திரங்களடங்கிய புராணங்-களையும், இதிகாசங்களையும் படிப்பதனாலும், கேட்பதனாலும் கடுகளவாவது ஆத்திக புத்தி உண்டாகுமா? கடவுள் பக்தி ஏற்படுமா? மோட்சம் கிடைக்குமா? அல்லது சன்மார்க்க புத்தியாவது உண்டாகுமா? இந்த ஆபாசம் நிறைந்த சாமிகளின் கதைகளைப் படித்தால் அறிவு விளக்கமுறுமா? தேசத்திற்கு நல்ல பெயர்தான் கிடைக்குமா? யோசித்துப் பாருங்கள்.

மிஸ் மேயோ போன்ற மேனாட்டுப் பெண்கள் இந்தியாவைப் பற்றியும், இந்து சமயத்தைப் பற்றியும் இழிவாக எழுதினார்கள் என்று முதலைக் கண்ணீர் விடும் சிகாமணிகள் இக்கதைகளையும் மோட்சம் சம்பந்தமான-தென்று ஒப்புக் கொள்கிறார்களா? இவ்வித ஆபாசக் கதைகள் நிறைந்த புராணங்களைக் காப்பாற்ற ஆத்திகச் சங்கங்களும், வைதீகக் கூட்டங்களும் இருக்க வேண்டுமா? இந்துக்களே, உலகத்தாரே! இக்கதைகளையும், புராணங்-களையும், தேவர்களையும் ஒப்புக் கொள்கிறீர்களா?

இன்னும் இக்கதைகளை மென்மேலும் ஆராய்ந்தால் தேவர்கள் என்று சொல்லப்-படுவதே கட்டுக்கதைகள் என்று நன்கு விளங்கும். எப்படி என்றால், பல நூற்றாண்டு-களுக்கு முன்னே இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்திருந்-தார்கள் என்னும் உண்மையைச் சரித்திரக்காரர்-களே எழுதியிருக்கிறார்கள். அக்காலத்தில் அறிவு வளர்ச்சியுறாத அவர்கள் கிரகங்களையும், பஞ்சபூதங்களையும், தெய்வங்களென்றும், தேவர்களென்றும் முட்டாள்தனமாக நம்பி அவற்றை வணங்கி வந்தனர். உதாரணமாக, சூரியன் ஒரு தேவன், சந்திரன் ஒரு தேவன், வியாழன் ஒரு தேவன் என்று. இவ்வாறு சூரியன், சந்திரன், வியாழன் முதலியவற்றைத் தேவர்-களாகவும், இடி மின்னல்களை உண்டாக்குகிற ஒரு தேவன் இருக்கிறான் அவனது பெயர் இந்திரன் என்றும், வானத்தில் காணப்படும் சூரிய, சந்திர கிரகங்களையும், நட்சத்திரங்-களையும், தேவர்களென்று நம்பி அவர்களுக்கு பெண்டாட்டி பிள்ளைகளைக் கற்பித்து விட்டதோடு அக்காலத்தில் ஆரியர்களுக்குள் இருந்த அயலான் மனைவியைப் புணர்வது முதலிய காம விகாரங்களை இந்தக் கிரகங்களுக்குக் கற்பித்துக் கதை எழுதி வைத்து விட்டார்கள். அவ்விதமே அக்கினி, வருணன், வாயு முதலிய பஞ்ச பூதங்களையும் தேவர்கள் என்று சொல்லி அவர்களுக்கும், மனைவி மக்கள் காம விகாரங்களைக் கற்பித்து எழுதி விட்டார்கள்!

வாசகர்களே! இவ்வாறு பஞ்சபூதங்களையும், கிரகங்களையும் அறியாமையினால் தேவர்கள் என்று எத்தனையோ காலத்துக்கு முன் ஒரு பைத்தியக்காரன் எழுதி வைத்து விடு-வானானால் அந்தப் புளுகுகளையெல்லாம் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டு இவ்வாபாசக் கட்டுக்கதைகளைப் படித்துக் கொண்டிருந்தால், அவனைப்போல சர்வ முட்டாள் எவனாவது இருப்பானா என்று கேட்கிறோம்.

இவ்விதக் காமவிகாரமுள்ள கட்டுக் கதைகளைப் படிப்பதைக் காட்டிலும் அராபிக் கதை, விக்கிரமாதித்தன் கதை, பஞ்சதந்திரக் கதை, தெனாலிராமன் கதைகளைப் படிப்போமானால் சற்று அறிவு வளரும். ஆனால், நமது நாட்டில் குருட்டு நம்பிக்கை வேரூன்றி யிருப்பதால் இந்த ஆபாசம் நிறைந்த புராணக் கதைகளைத் தெய்வீக சம்பந்தமான-தென்றும், மோட்சத்திற்கும், ஆத்மார்த்தத்-திற்கும், கடவுளுக்கும், மதத்திற்கும் சம்பந்தமுடையவை-யென்றும் ஜனங்கள் நினைத்துக் கொண்டிருப்பது மூடத்தனமல்லவா? இவ்வித ஆபாசக் கதைகள் வேறு எந்தச் சமயத்திலாவது  இருக்கிறதா? என்று சற்று எண்ணிப் பாருங்கள்.

– ‘குடிஅரசு’ (30.12.1944)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *