நூல்:
நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்
ஆசிரியர்: டாக்டர் அம்பேத்கர்
மொழிபெயர்ப்பு: தாயப்பன் அழகிரிசாமி
வெளியீடு: தலித் முரசு,
எஸ் – 5, மகாலட்சுமி அடுக்ககம்,
26/13, குளக்கரை சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034.
பேசி:- 044 28221314
விலை: 150
பக்கம்: 175
“டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய முதல் பத்தாண்டு கால சமூகப் போராட்டத்தினூடே தலித் மக்களின் சமூக, கல்வி, அரசியல் சூழல்களை ஆய்வு செய்வதற்காக, அம்மக்களுக்கான ஒரு மாநாட்டை மகாராட்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள இயோலா என்ற இடத்தில் ஏற்பாடு செய்தார். இம்மாநாட்டிற்கு முந்தையநாள் (12.10.1935) நாசிக் வந்திறங்கிய அம்பேத்கர் அங்கு ஒரு நூலகத்தைத் திறந்து வைத்தார்.
அடுத்தநாள் (13.10.1935) காலை இயோலா சென்ற போது இயோலா நகராட்சி மன்றத்தில் பேசிய அம்பேத்கர், “தீண்டத் தகுந்த (சாதி இந்துக்கள்) மக்களுடைய மனநிலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்ற முடிவுக்குத் தான் நாம் வரவேண்டியிருக்கிறது. நம்முடைய தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகும்கூட அவர்கள் நம்மோடு அன்பாக நடந்து கொள்ளத் தயாராக இல்லை. எனவேதான் நாம் தற்சார்புடன் நம் முன்னேற்றத்திற்காகப் போராடுவதுடன் இந்துக்களிடமிருந்து தனித்து நிற்போம் என்றும் முடிவெடுக்கிறோம்” என்றார்.
அன்று மாலை தொடங்கி இரவு 10 மணி வரை, இயோலாவில் நடைபெற்ற மாநாட்டில் ஆண்களும் பெண்களுமாய் ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் மக்கள் பங்கேற்றனர். மத்திய மாகாணம் மற்றும் அய்தராபாத்தில் இருந்தும் பல்வேறு பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இம்மாநாட்டிற்குத் தலைமை ஏற்ற அம்பேத்கர், ஒன்றரை மணி நேரம் ஆவேசமாக உரை நிகழ்த்தினார். ஆனால் இவ்வுரையின் முழு வடிவம் எங்கும் காணப்படவில்லை. அம்பேத்கர் பேசியதன் முக்கிய சாரமான நான்கு வரிகள் மட்டுமே இயோலா மாநாட்டு உரையாக இதுவரை பேசப்பட்டு வந்திருக்கிறது.
இன்று வரை எம்மொழியிலும் முழு உரை கிடைக்காத நிலையில், திரு. பகவான்தாஸ் அவர்கள் தொகுத்த ஒரு நூலில் இவ்வுரையின் புகழ் பெற்ற அந்த நான்கு வரிகள் மட்டுமல்லாது, கூடுதலான சில பகுதிகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளதை இங்கு வெளியிடுகிறோம்.
நாம் நமது உரிமைகளைப் பெற நடத்திய முயற்சிகளை சாதி இந்துக்கள் – நாம் அவர்களின் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் – நாடெங்கும் எத்தனைக் கொடூரமாக சிதைத்தார்கள் என்பதை குறிப்பிடவே எனக்கு வேதனையாக உள்ளது. குறிப்பாக, காலாராம் கோயில் நுழைவு இயக்கமும், ராம் ராத் ஊர்வலமும் இன்று ஒன்றுமில்லாமல் போய்விட்டன. இவற்றிற்காக நாம் செலவழித்த நேரம், பணம் மற்றும் முயற்சிகள் அனைத்துமே வீணாகிவிட்டன என்பதை நான் தற்போது உணர்கிறேன். எதிர்காலத்தில் இந்த சிக்கல்கள் மீண்டும் எழாமல் இருக்க நாம் இது குறித்து ஒரு முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது என நான் நினைக்கிறேன்.
நாம் அனுபவித்த இயலாமைகள், நாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்த அவ மானங்கள் அனைத்துமே நாம் இந்து மதத் தின் உறுப்பினர்களாக இருந்ததால்தான். நாம் அந்த சமூகத்திலிருந்து வெளியேறி நமக்கு சம நிலையும் பாதுகாப்பும் தரக் கூடிய, நம்மை நியாயமாக நடத்தக் கூடிய ஒரு புதிய நம்பிக்கையைத் தழுவுவது மேலானது இல்லையா?
இந்து மதத்துடனான உங்கள் தொடர்பை துண்டித்துவிட்டு வேறு ஏதேனும் மதத்தைத் தழுவுங்கள் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். ஆனால் அப்படியான புதிய நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்கள். நம்மை சரி சமமாக நடத்துவதும், நமக்கு சமமான நிலையும், வாய்ப்புகளும் வழங்குவது எவ்விதத் தடையுமின்றி அதில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதா என்பதையும் கவனியுங்கள்.
கெடுவாய்ப்பாக, நான் ஓரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்து விட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன்: நான் ஒர் இந்துவாக சாகமாட்டேன்.
(ஜிலீus sஜீஷீளீமீ கினீதீமீபீளீணீக்ஷீ – ளிஸீ க்ஷீமீஸீuஸீநீவீணீtவீஷீஸீ ஷீயீ பிவீஸீபீuவீsனீ ணீஸீபீ சிஷீஸீஸ்மீக்ஷீsவீஷீஸீ ஷீயீ ஹிஸீtஷீuநீலீணீதீறீமீs, க்ஷிஷீறீ. 4 – ஙிலீணீரீஷ்ணீஸீ ஞிணீs, ஜீ. 106-108)
17.5.1936 கொடூரமான கோட்பாட்டிற்குள் ஏன் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?
பம்பாயில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யாண் என்ற இடத்தில் 17.5.1936 அன்று அம்பேத்கர் தலைமையில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பங்கேற்க 150 கிராமங்களிலிருந்து மக்கள் திரண்டு வந்திருந்தனர். அன்று மாலை 3 மணிக்கு கல்யாண் ரயில் நிலையத்தில் அம்பேத்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் நிலையத்திலிருந்து மாநாட்டுப் பந்தல் வரை 4 ஆயிரம் மக்கள் பேரணி போல அம்பேத்கரை ஆரவாரத்துடன் அழைத்துச் சென்றனர். அம்மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரை.
உங்கள் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் மதமாற்றம் அவசியம். மதமாற்றம் பற்றிய என் கருத்துகளைக் கேட்பதற்காக நீங்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். எனவே அது தொடர்பான செய்திகளை சற்று விளக்கமாக எடுத்துரைக்க வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன். சிலர் அடிக்கடி இந்தக் கேள்வியைக் கேட்பார்கள். ‘நம்முடைய மதத்தை நாம் ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்?’ உடனே எனக்கு ஓர் எதிர்க் கேள்வி கேட்க ஆவல் எழும் – ‘நம்முடைய மதத்தை நாம் ஏன் மாற்றிக் கொள்ளக் கூடாது?”
என் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளின் ஊடாக ஏன் மதமாற்றம் அவசியம் என்பதை விரிவாகக் கூற விரும்புகிறேன். அப்போதுதான் நான் ஏன் மதமாற்றத்தை வலியுறுத்துகிறேன் என்பதை நீங்களும் விளங்கிக் கொள்ள முடியும். அது போன்ற நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கை யிலும் நடத்திருக்கலாம். என் வாழ்வில் நடந்த நான்கைந்து நிகழ்வுகள் என் மனதில் ஆழமானவடுவை ஏற்படுத்தி – இந்து மதத்தை உதறிவிட்டு – வேறு மதத்திற்கு மாறும் முடிவுக்கு என்னைத் தள்ளின. அவற்றிலிருந்து இரண்டு அல்லது மூன்றினை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் மோவ் (விலீஷீஷ்) என்ற ஊரில் பிறந்தேன். என் தந்தை ராணுவப்பணியில் சுபேதாராக இருந்தார். அப்போது நாங்கள் படைவீரர்கள் குடியிருப்பில் வசித்து வந்ததால் அதைத் தாண்டி வெளி உலகத்தோடு அவ்வளவாக தொடர்பு இருக்காது. அதனால் தீண்டாமை பற்றிய எந்தவொரு அனுபவமும் எனக்கு இருந்த தில்லை. எங்கள் தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, நாங்கள் சதாரா என்கிற ஊருக்கு மாறிப்போய் விட்டோம். எனக்கு அய்ந்து வயதாக இருக்கும் போதே என் தாயார் இறந்து விட்டார். சதாரா மாவட்டத்திலுள்ள கோரெகான் என்ற ஊரில் பெரும் பஞ்சம் வந்தது. அதைச் சமாளிப்பதற்காக அரசாங்கம் ‘நிவாரணப் பணி’ என்ற திட்டம் ஒன்றைத் தொடங்கியது. அதன் மூலம் பெரிய தண்ணீர் தொட்டி ஒன்றைத் தோண்டினார்கள். அதில் வேலை செய்ய வேண்டிய கணக்காளராக என் தந்தை நியமிக்கப்பட்டார். அவர் கோரெகானிலேயே இருக்க வேண்டியதாயிற்று. நாங்கள் நான்கு குழந்தைகளும் சதாராவிலேயே தங்கிவிட்டோம். சதாராவில் வாழ்ந்த அந்த நான்கு அய்ந்து ஆண்டுகளும் அரிசி மட்டுமே எங்கள் உணவு. சதாராவிற்கு வந்த பிறகுதான் தீண்டாமை என்றால் என்ன என்று உணரத் தொடங்கினோம்.
எங்கள் முடிகளை வெட்ட எவருமில்லை
என்னை முதலில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது எதுவென்றால் எந்த ஒரு முடிவெட்டுபவரும் எங்களுக்கு முடிவெட்ட மறுத்தது தான். அது எங்களை மிகவும் பாதித்தது. என்னுடைய சகோதரி, அவர் இன்னமும் உயிரோடு இருக்கிறார்; அவர்தான் எங்கள் வீட்டுத் திண்ணையில் என்னை உட்கார வைத்து எனக்கு முடிவெட்டி விடுவார். அந்த ஊரில் எத்தனையோ முடிவெட்டுபவர்கள் இருந்தும் எங்கள் முடிகளை வெட்ட யாருமே ஏன் முன்வரவில்லை என்பது எனக்குப் புரியவேயில்லை.
இரண்டாவது நிகழ்வும் அதே காலகட்டத்தில் நடந்ததுதான். எங்கள் தந்தையார் கோரெகானிலிருந்து எங்களுக்கு கடிதங்கள் அனுப்புவார். எங்களை கோரெகானுக்கு வரும்படி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். கோரெகானுக்கு தொடர்வண்டியில் (ஜிக்ஷீணீவீஸீ) போகப் போகிறோம் என்கிற நினைப்பே என்னை உற்சாகமடைய வைத்தது. காரணம் அதுவரை நான் தொடர்வண்டியைப் பார்த்ததே இல்லை. எனது தந்தை அனுப்பிய பணத்தைக் கொண்டு நல்ல உடைகளைத் தைத்து அணிந்து கொண்டு, நான் என் சகோதரர் மற்றும் என் சகோதரியின் மகன் எல்லோரும் கோரெகானுக்குப் புறப்பட்டோம்.
நாங்கள் புறப்பட்டு வரும் முன்பே ஒரு கடிதம் மூலம் எங்கள் தந்தைக்குத் தெரிவித்திருந்தோம். ஆனால் அவருடைய பணியாள் ஒருவரின் கவனக்குறைவால் அந்தக் கடிதம் அவரை சென்றடையவில்லை. எங்களை அழைத்துச் செல்ல என் தந்தை பணியாள் யாரையாவது அனுப்பி வைப்பார் என்ற நம்பிக்கையில் நாங்கள் போய்க் கொண்டிருந்தோம். தொடர் வண்டியிலிருந்து இறங்கிய பிறகு தான் பார்க்கிறோம்; எங்களை அழைத்துச் செல்ல யாருமே வரவில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை. சற்று நேரத்தில் தொடர்வண்டி நிலையத்திலிருந்த எல்லோரும் போய் விட்டிருந்தார்கள். நாங்கள் மட்டும் தனியாக நடைமேடையில் நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்கே வந்த நிலைய அதிகாரி நாங்கள் யார், என்ன சாதி, எங்கு போக வேண்டும் என்பதையெல்லாம் விசாரித்தார்.
நாங்கள் மகர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னதைக் கேட்டவுடன் அவர் அதிர்ந்து போய் ஓர் அய்ந்தடி பின்னால் சென்றுவிட்டார். ஆனாலும் எங்களின் உடைகளைப் பார்த்து பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று முடிவு கட்டி, எங்களுக்கு ஏதாவது மாட்டுவண்டி ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். ஆனால், நாங்கள் மகர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் எந்த வண்டிக்காரரும் எங்களை வண்டியில் ஏற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. பொழுது இருட்டிக் கொண்டிருந்தது. ஆறு அல்லது ஏழு மணி வரை எங்களுக்கு ஒரு வண்டியும் கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு வண்டிக்காரர் எங்களைத் தன்னுடைய வண்டியில் ஏற்றிக்கொள்ள ஒப்புக் கொண்டார். ஆனால் எங்களை உட்கார வைத்து, தான் வண்டியோட்ட முடியாது என்று கறாராகக் கூறிவிட்டார். நான் ராணுவப் பகுதியில் இருந்த காரணத்தினால் வண்டியோட்டுவது எனக்கு சிரமமான காரியமல்ல; அதற்கு நாங்கள் ஒப்புக் கொண்ட உடனேயே அவர் வண்டியைக் கொண்டு வந்தார். நாங்கள் குழந்தைகள் அனைவரும் கோரெகானுக்குப் புறப்பட்டோம்.
கிராமத்துக்குச் சற்று தூரம் முன்னதாக ஓடை ஒன்று ஓடியது. வழியில் வேறு எங்கும் தண்ணீர் கிடைக்காது என்பதால் வண்டிக்காரர் எங்களை அங்கேயே உணவைச் சாப்பிட்டுவிடுமாறு கூறினார். அதற்கேற்ப நாங்களும் வண்டியில் இருந்து இறங்கி அங்கேயே உணவருந்தினோம். ஓடை நீர் மாட்டுச் சாணம் கலந்து ஒரே கலங்கலாக இருந்தது. அதற்குள் வண்டிக்காரர் வேறொரு இடத்திற்கு சென்று உணவருந்தி விட்டு திரும்பி வந்தார். மீண்டும் பயணப்பட்டோம். வெளிச்சம் மறைந்து இருள் கவ்வத்தொடங்க, வண்டிக்காரர் அமைதியாக வண்டியில் ஏறி எங்களோடு அமர்ந்து கொண்டார். விரைவில் கும்மிருட்டாகிவிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வெளிச்சமோ, மனிதர்களோ தென்படவில்லை. பயம், தனிமை, இருட்டு எல்லாம் ஒன்று சேரவே அழத் தொடங்கிவிட்டோம். நேரம் நள்ளிரவைக் கடந்து விட்டது. பயத்தில் நடுங்கிக் கொண்டே இருந்தோம். கோரெ கான் போய்ச் சேருவோமா என்ற அளவிற்கு அச்சத்தில் உறைந்து கிடந்தோம்.
சுங்கச்சாவடி ஒன்றை அடைந்தவுடன் நான் வண்டியில் இருந்து குதித்து அங்கிருந்த பணம் வசூலிப்பவரிடம் அங்கு பக்கத்தில் ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று கேட்டேன். நான் அவரிடம் பெர்ஷிய மொழியில் பேசினேன். எனக்கு பெர்ஷிய மொழி தெரியும் என்பதால் அவருடன் பேச எனக்கு எந்தத் தடங்கலும் இருக்கவில்லை. அவர் மிகச் சுருக்கமாக அங்கிருந்த மலையைச் சுட்டிக்காட்டி அங்கே கிடைக்கும் என்றார். எப்படியோ அந்த இரவை மலை பொந்துகளுக் கிடையே கழித்துவிட்டு விடிந்த பிறகு மீண்டும் கோரெகானுக்கு பயணப்பட்டோம். ஒருவழியாக அடுத்த நண்பகலில் அலுத்து களைத்து கோரெகான் போய் சேர்ந்தபோது உடம்பில் பாதி உயிர் தான் இருந்தது.
எனக்கு வாடகைக்கு வீடு தர மறுத்தார்கள்
மூன்றாவது நிகழ்வு, நான் பரோடாவில் பணிபுரிந்த போது ஏற்பட்டது. பரோடா அமைச்சகம் வழங்கிய உதவித் தொகையைப் பெற்று நான் வெளிநாடு சென்று படித்தேன். இங்கிலாந்தில் இருந்து திரும்பிய பிறகு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, பரோடா சமஸ்தானத்தில் பணி செய்ய வந்தேன். பரோடாவில் தங்க எனக்கு வீடே கிடைக்க வில்லை. அந்த பரோடா நகரத்தில் எனக்கு வீடு வாடகைக்குத் தர எந்த இந்துவோ, முஸ்லிமோ தயாராக இல்லை. எங்குமே வீடு கிடைக்காத நிலையில் பார்சிகளுடைய தர்ம சத்திரத்தில் தங்கலாம் என்று முடிவு செய்தேன். என்னுடைய அமெரிக்க மற்றும் இங்கிலாந்து வாழ்க்கை முறை என் உடலுக்கு நல்ல நிறத்தையும் தோற்றப் பொலிவையும் வழங்கி இருந்தது. அடல்ஜி சொராப்ஜி என்ற பார்சி பெயரை வைத்துக் கொண்டு அந்த தர்ம சத்திரத்திலேயே தங்கினேன். பார்சி மேலாளர் மாதம் 2 ரூபாய் வாடகைக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் வெகு விரைவில் வணக்கத்திற்குரிய பரோடா மகாராஜா கெய்க்வாட் அவர்கள், ஒரு மகர் சிறுவனை தன்னுடைய சமஸ்தானத்தில் பணிக்கு அமர்த்தியுள்ளார் என்ற செய்தி பரவியது. அதைத் தொடர்ந்து நான் வேறொரு பெயரில் பார்சி தர்ம சத்திரத்தில் தங்கிக் கொண்டிருந்த செய்தியும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
சத்திரத்தில் தங்கிய இரண்டாவது நாளில் என்னுடைய காலை உணவை முடித்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பிய போது, பதினைந்து இருபது பேர் கொண்ட பார்சி கும்பல் ஒன்று கையில் கம்புகளோடு வந்து நெருங்கி என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டி நீ யார் என்று கேட்டார்கள். நான் சொன்னேன், நான் ஓர் இந்து. அவர்களுக்கு அந்த விடை நிறைவளிக்கவில்லை. கோபத்தோடு என்னைத் தகாத வார்த்தைகளில் திட்டி உடனடியாக என்னுடைய அறையை காலி செய்ய உத்தரவிட்டார்கள். என்னுடைய சமயோசித புத்தியும் அறிவுக் கூர்மையும் அந்தச் சூழலை சமாளிப்பதற்கான பலத்தை எனக்கு கொடுத்தன. இன்னும் ஒரு எட்டு மணி நேரம் மட்டும் அங்கு தங்கிக் கொள்ள அனுமதி அளிக்குமாறு பணிவோடு கேட்டேன். அன்று நாள் முழுக்க நான் வசிப்பதற்கான ஒரு வீட்டைத் தேடி அலைந்தேன். தோல்விதான் கிட்டியது.
சாத்தானின் மதத்தில் இருக்க வேண்டுமா?
தலை சாய்த்து உறங்க ஓரிடம் இல்லை. என் நண்பர்கள் சிலரை கேட்டுப்பார்த்தேன். என்னை அவர்களோடு தங்க வைக்க முடியாது என்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக்கழித்தார்கள். நம்பிக்கை அனைத்தும் சிதைந்து சோர்ந்து போனேன். அடுத்து என்ன செய்வது? எந்த முடிவையும் என்னால் எடுக்க முடியவில்லை. களைத்துப் போனவனாய் மனச்சோர்வோடு ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்தேன். கண்களில் இருந்து நீர் தாரையாக ஓடுகிறது. வீடு கிடைப்பதற்கான எந்த நம்பிக்கையும் எனக்கு தென்படவில்லை. வேறு வழியில்லை, வேலையை விட்டு வெளி யேறுவதைத் தவிர. பணியில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு அன்றிரவே பம்பாய்க்கு தொடர் வண்டியில் ஏறிவிட்டேன்.
என் வாழ்வில் நிகழ்ந்த மோசமான நிகழ்வுகளைப் போல உங்களில் பலரும் சகிக்க முடியாத துன்பங்கள் பலவற்றை வாழ் நாளில் கடந்து வந்திருப்பீர்கள். நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். மனிதத் தன்மையை தொலைத்துவிட்ட, உங்களை மதிக்காத, பாதுகாக்காத, மனிதனாகக் கூட நடத்தாத ஒரு சமூகத்திற்குள் வாழ்ந்து கொண்டிருப்பதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? மாறாக, அந்த சமூகம் உங்களை அவமானப்படுத்தி, இழிவுபடுத்தி, உங்களை காயப்படுத்தக் கிடைக்கும் எந்த ஒரு தருணத்தையும் தவறாமல் பயன்படுத்திக் கொள்கிறது. குறைந்தபட்ச சுயமரியாதையும் கண்ணியமும் உள்ள எவரும் இந்த சாத்தானின் மதத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். அடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுபவர்கள் மட்டுமே இந்த மதத்தில் இருப்பார்கள்.
என்னுடைய தந்தை மற்றும் முன்னோர்கள் எல்லாம் தீவிரமான இந்துக்கள். ஆனால் அதே இந்து மதம் விதித்த கட்டுப்பாடுகளால் அவர்களால் கல்வி கற்க முடியவில்லை. அந்த மதம் அவர்களை ஆயுதம் ஏந்த அனுமதிக்க வில்லை. இந்து மதத்தில் இருந்தால் சொத்து சேர்ப்பது கூட முடியாத காரியம். இந்து மதத்திற்குள்ளேயே ஒட்டிக் கிடந்ததால் என் தந்தையால் இந்த மூன்றையுமே பெற முடியவில்லை. எனக்கு சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் இந்து மதம் விதித்த கட்டுப்பாடுகளால் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பே எனக்கு இல்லாமல் போய் விட்டது. ஆனால் இப்போதைய என்னுடைய நிலையில் என்னால் கல்வி கற்க முடியும். சொத்து சேர்க்க முடியும். ஆயுதங்களும் ஏந்த முடியும்.
கொடூரமான கோட்பாடு
இந்து மதம்தான் உங்கள் முன்னோர்களை இழிவான வாழ்க்கைக்குத் தள்ளி அனைத்துவிதமான அவமானங்களையும் அவர்கள் மீது சுமத்தி, அவர்களை வறுமையிலும் அறியாமையிலும் சிக்க வைத்தது என்ற உண்மை கண் முன் இருக்கையில் இன்னும் எதற்காக அந்த கொடூரமான கோட்பாட்டிற்குள் சிக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்? உங்கள் முன்னோர்களைப் போலவே நீங்களும் அவமானங்களையும் தாழ்வையும் இழிவையும் ஏற்றுக் கொள் வீர்களேயானால் நீங்கள் வெறுக்கத்தக்கவர் ஆவீர்கள். உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள். உங்களை கை தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்.
மேற் சொன்ன காரணங்களால்தான் நமக்கு மத மாற்றம் என்பது அவசியமாகிறது. இப்படியே தொடர்ந்து இந்து மதத்திற்குள்ளேயே உழன்று கொண்டிருந்தால் அடிமை என்பதைக் கடந்து அடுத்த நிலைக்கு உங்களால் போக முடியாது. தனிப்பட்ட முறையில் என்னைப் பொருத்தவரை எனக்கு எந்தத் தடையும் இல்லை. நான் தீண்டத்தகாதவனாகவே தொடர்ந்து இருந்தாலும் ஓர் இந்து அடையக் கூடிய எந்த நிலையையும் அடைய எனக்கு எந்தத் தடையும் இல்லை. நான் இந்துவாக இருக்கிறேன் – இல்லை என்பதெல்லாம் என் நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. என்னால் உயர் நீதிமன்ற நீதிபதியாக முடியும்; சட்ட மன்ற உறுப்பினராக முடியும்; ஏன் அமைச்சராகவே கூட ஆக முடியும். ஆனால் உங்களுடைய விடுதலைக்காகவும் வளர்ச்சிக்காகவுமே மதமாற்றம் என்பது எனக்கு கட்டாயமாகப் படுகிறது.
இழிவோடும் தாழ்வோடும் தொடரும் நம் வாழ் நிலையானது ஒரு பொன்னுலகாக மாற வேண்டுமானால் கண்டிப்பாக மதமாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. உங்கள் நிலையை மேம்படுத்துவதற்கு நல்ல நண்பர்கள் மற்றும் நலம் விரும்புவோரின் உதவியும் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிட்டும் என்று நான் நம்புகிறேன். உங்களை மேம்படுத்த உடனடியாக நான் மதமாற்றத்தைத் தொடங்கியாக வேண்டும். என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்போ முன்னேற்றம் பற்றிய அக்கறையோ எனக்கு சிறிதளவும் கிடையாது. நான் இன்று எதைச் செய்தாலும் அதை உங்களுக்காக, உங்களுடைய நன்மைக்காகவே செய்கிறேன். நீங்கள் என்னை ஏதோ கடவுளைப் பார்ப்பதைப் போல் பார்க்கிறீர்கள். நான் கடவுள் அல்லன். உங்களைப் போல நானும் ஒரு மனிதன். அவ்வளவே. என்னிடம் இருந்து உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டுமோ அனைத்தையும் செய்ய நான் அணியமாய் இருக்கிறேன். நம்பிக்கை இழந்து முற்றிலும் தாழ் வுற்றுப் போன நிலையில் இருந்து உங்களை விடுவிக்க உறுதி எடுத்து இருக்கிறேன். இவை எதையும் என்னுடைய தனிப்பட்ட நன்மைகளுக்காக செய்யவில்லை. கரம் கொடுத்து உயர்த்தி உங்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாய் பயனுள்ளதாய் மாற்ற தொடர்ந்து போராடுவேன். உங்கள் கடமைகளை உணர்ந்து நான் காட்டும் பாதையில் நீங்கள் பயணிக்க வேண்டும். அந்தப் பயணம் உளப்பூர்வமானதாக இருக்குமேயானால் – கடினமல்ல – உங்கள் இலக்கை நீங்கள் அடைவீர்கள்.
‘ஜனதா’ மராட்டிய இதழில் 23.5.1936 அன்று வெளியிடப்பட்டது. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்.107-112.
(தொடரும்…)