தேசிய நதிநீர் ஆணையம் ஓர் ஏமாற்று!

ஜனவரி 01-15

 

 

 

-சரவணா இராஜேந்திரன்

இந்தியா என்பது நிர்வாகத்திற்காக ஒன்றிணைக்கப்பட்ட பல்வேறு இனம், மொழி, புவியியல் வேறுபாட்டுடன் கூடிய நிலப்பகுதிகளை ஒன்றடக்கிய ஒரு நாடு, சுதந்திரத்திற்கும் முன்பு ஆங்கிலேயர் காலத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வடகிழக்கே திபெத் பீடபூமிவரை இந்தியா பரந்து விரிந்திருந்தது. பிரிட்டிஷ் இந்தியா என்று அழைக்கப்பட்டபோதுகூட இந்தியாவில் மைசூரு, திருவாங்கூர், பரோடா, அய்தராபாத் உள்ளிட்ட பல்வேறு தனி ராஜ்யங்களாக இருந்த அவர்களுக்கு என்று ஒரு சட்டம், தனி நிர்வாகம் என அந்த குறுநிலப்பகுதிகள் ஒரு தனிநாடாகத் திகழ்ந்தன. இவ்வளவு பிரிவினைகளிலும் இந்திய தீபகற்பப் பகுதியில் பரந்த நிலப்பரப்புகள் வழியாக பாயும் ஆறுகளுக்கு எவ்வித சிக்கலுமில்லை.

சுதந்திரத்திற்குப் பின் நிர்வாகரீதியாக மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு சுயநலனுக்காக சில உள்ளூர் பிரமுகர்களின் தூண்டுதலின் பேரில் இனவாதம் ஆங்காங்கே தூவப்பட்டது. மிகவும் குறுகிய காலத்திலேயே இந்த இனவாதம் அரசியல் நடத்த முக்கிய ஒரு காரணியாகத் தெரிந்ததால் மிக விரைவிலேயே பிரமுகர்கள் தங்களை அரசியல் தலைவர்களாகக் காட்டிக்கொண்டு அரசியல் தளத்தில் உறுதிசெய்ய பல்வேறு சிக்கல்களை உருவாக்கினார்கள். அதில் முக்கியமான ஒன்று நதிநீர்ப் பிரச்சினை.

நதிநீர் என்பது முன்பு கூறியதுபோல் பரந்த நிலப்பரப்பில் பாய்ந்து அனைவருக்கும் பொதுவானதாகும், அரசியல் செய்ய இது ஒரு நல்ல தளமாக இருப்பதால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். சுதந்திரமடைந்த சில காலத்திற்குப் பிறகு நாடெங்கும் ஆற்று நீர்ப்பங்கீடு மாநிலங்களுக்கு இடையேயான தலையான சிக்கலாக உருவெடுத்தது.

இந்தச் சிக்கலுக்குத் தீர்ப்பாயம், விசாரணை, வழக்கு என்று இழுத்துக் கொண்டு போவதற்குப் பதிலாக நதிகளை தேசியமயமாக்குவது என்ற ஒரு கோரிக்கை வலுவடைந்து கொண்டிருந்தது. நதிகளை தேசிய மயமாக்குவது, நதிகளை இணைத்தல் போன்றவை சிக்கலுக்குத் தீர்வு காணும் என்றாலும், இவற்றை நடைமுறைப் படுத்த தன்னலமற்ற மத்திய அரசு தேவைப்படுகிறது.

இந்தியாவிலுள்ள நதிகளை இணைப்பது குறித்து கடந்த 163 ஆண்டுகாலமாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இதற்கானத் திட்டம் உருவாக்கப் பட்டது. 1834ஆம் ஆண்டு ஆங்கிலேயப் பொறியாளரான சர்.ஆர்தர் காட்டன் கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்தைத் தயாரித்தார். மேட்டூர் அணை உட்பட பல பெரிய அணைகளைக் கட்டியவரும் இவரே ஆவார்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இதற்கான திட்டவட்டமான முழுமையான முயற்சி என்பது – 1971-72ஆம் ஆண்டு பிரதமர் இந்திராவின் அமைச்சரவையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் கே.எல்.ராவ் அவர்கள் காலத்தில் செயல்திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. அவரது பதவிக் காலத்திற்குப் பிறகு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 1982ஆம் ஆண்டு தேசிய நதிநீர் ஆணையத்தைப் போன்று நீர்வள ஆய்வு நிறுவனம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியது. இந்த நிறுவனம், இங்குள்ள பல்வேறு  நதிகளை இணைப்பதற்கான வரைவுத் திட்டத்தை நீண்ட கள ஆய்விற்குப் பிறகு உருவாக்கியது.

முக்கியமாக மகாநதி-கோதாவரி, தபதி-பார்நதி, கோதாவரி-கிருஷ்ணா, மற்றும் நர்மதா போன்ற நதிகளை இணைக்கும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. இத்திட்டங்களை நிறை வேற்றுவதற்கான நிதிகள் ஒதுக்குவதிலும், பிராந்திய மக்களின் கடுமையான எதிர்ப்பின் பெயரிலும் இத்திட்டம் கிடப்பில் போடப் பட்டது. அதேபோல் வாஜ்பாய் அரசு பதவியில் இருந்த காலத்தில் கங்கை-காவிரி இணைப்புத் திட்டமும் பேசப்பட்டது. அதுவும் சில ஆண்டுகளிலேயே கிடப்பில் போடப்பட்டது.

நீர் வளம் நிறைந்த மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் ஓடும் நதிநீரை நீர்ப்பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்குக் கொடுக்க மறுக்கிறார்கள். நதிகளை இணைத்தால் நீர்வளமுள்ள மாநிலங்களில் அரசியல் செய்ய முடியாது என்ற சுயநல நோக்கில் ஒவ்வொரு மாநிலமும் தனது மாநிலத்தில் உற்பத்தியாகும் நீர் தனக்கு மட்டுமே சொந்தமானது. தனக்குப் போக எஞ்சிய நீரைத்தான் மற்ற மாநிலங்களுக்கு அளிக்க முடியும் என நினைக்கின்றன.

அதைச் செயல்படுத்தவும் முனைகின்றன. பல மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளின் நீரில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அத்தனைக்கும் உரிமை உண்டு. நதி எந்த மாநிலத்தில் எந்த அளவிற்கு ஓடிப் பாய்கிறது என்ற விகிதத்தில் நதிநீரைப் பகிர்ந்து கொள்வதே நியாயமான தாகும். குறிப்பாக அந்நதிகளின் கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் உண்டு என்கிற இயற்கை விதியை அல்லது பன்னாட்டு விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள இந்த மாநிலங்கள் கொஞ்சமும் தயாராக இல்லை. இந்த மனப்பான்மை கூட்டாட்சி அரசியலுக்கு  முற்றிலும் எதிரானது என்பதை உணரவே அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து கவலைப்படவே இந்த மாநிலங்கள் தயாராக இல்லை.

மழைமறைவு பகுதியில் உள்ள பெரும் நிலப்பகுதி தமிழகமாகும். தமிழகத்தில் பாயும்  காவிரி, பாலாறு  வைகை போன்ற பெருநதிகள் அண்டை மாநிலங்களான கர்னாடகா, கேரளா ஆந்திராவை நம்பி இருக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது.

நதிநீர்ப் பிரச்சினை தமிழகத்தில் நீண்ட காலமாக நீடிக்கிறது. இதில் காவிரிப் பிரச்சினை 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. உச்சநீதி மன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதித்து நிறைவேற்றுவதற்குக் கர்நாடகாவை ஆளும் இரண்டு தேசிய கட்சிகளுமே தொடர்ந்து மறுத்து வருகின்றன. மறுக்கும் கர்நாடகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக இருக்கிறது மத்திய அரசு.

உச்சநீதிமன்றம், நடுவர்மன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகள், அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றை மதிக்க மறுக்கும் மாநிலங்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு வழிகள் இருந்தும் மத்திய அரசு குறுகிய அரசியல் லாபத்திற்காக பாராமுகமாக இருந்து வருகிறது. இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தபோது, பல மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளின் நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் ஏற்படலாம் என்பதை உணர்ந்து 1956ஆம் ஆண்டு இரு சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.

நதிநீர் தாவா சட்டம், நதிநீர் வாரியச் சட்டம்

மாநிலங்களுக்கிடையே எழும் நதிநீர்ப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதற்கு முடியாமல் போனால் நடுவர் மன்றத்தை அமைத்து அதன் தீர்ப்பைப் பெறுவதற்கு நதிநீர் தாவா சட்டம் வழிசெய்கிறது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மதிக்கப்படாமல் போனால் சம்பந்தப்பட்ட நதிநீரை ஆளுமை செய்வதற்காக நதிநீர் வாரியம் அமைப்பதற்கு இரண்டாவது சட்டம் வழிவகுக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் 262ஆவது பிரிவுக்கு இணங்க இந்த நதிநீர் வாரியச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் பிரச்சினைக்குரிய நதிநீர் நிர்வாகத்தை ஏற்று நடத்த நதிநீர் வாரியம் ஒன்று அமைக்கப்படவேண்டும். ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் கடந்த 51 ஆண்டுகாலமாக எந்த நதிநீர்ப் பிரச்சினையிலும் நதிநீர் வாரியம் அமைக்கப்படவில்லை. இதுவரை பதவியில் இருந்த மத்திய அரசுகள் எதுவும் இச்சட்டப் பிரிவைப் பயன்படுத்தத் துணியவில்லை.  

மாநில அளவில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள நடுநிலையான அமைப்பு தேவை என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே உள்ள காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.

ஆனால், மத்திய பாஜக தலைமையிலான மோடி அரசு அதனைச் செய்யாமல் இழுத்தடித்து வந்தது. மேலும் உச்சநீதிமன்றம் மத்திய அரசை மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட முடியாது என்ற வாதத்தையும் வைத்தனர்.  காவிரியை வைத்து அரசியல் செய்யும் நோக்கில் தற்போது மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க ஏற்கனவே அமைத்துள்ள தீர்ப்பாயங்களை ஒன்றிணைத்து, ஒரே தீர்ப்பாயமாக மாற்ற மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி மாநிலங்களுக்கான நீர்ப் பங்கீட்டு தாவா 1956  சட்டத்தில் சிறிது மாற்றம் செய்து, அமர்வு ஒன்றையும் நியமிக்க உள்ளது.

வழக்கமாக உள்ள தீர்ப்பாயம் போல் செயல்படாமல், இந்த அமர்வானது ஒரு வழக்கை மட்டுமே விசாரித்து தீர்ப்பளிக்கும். அடுத்த வழக்கு வரும்போது வேறு அமர்வு அதை விசாரிக்கும் என நீர்வளத்துறை அமைச்சர் சாக்ஷி சேகர் கூறியுள்ளார். மேலும் இந்தத் தீர்ப்பாயத்துடன் ஒரு தீர்மானக் குழுவும் (ஞிவீsஜீutமீ ஸிமீsஷீறீutவீஷீஸீ சிஷீனீனீவீttமீமீ – ஞிஸிசி) அமைக்கப்படும். ஏதாவது ஒரு மாநிலத்தில் நதிநீர் தொடர்பான பிரச்சினை என்றால், இந்தக் குழு அதை விசாரித்து தீர்ப்பளிக்கும். அப்படி இந்தக் குழுவினரால் தீர்ப்பளிக்க முடியாத பட்சத்தில், தீர்ப்பாயம் அதை விசாரிக்கும் என சேகர் தெரிவித்துள்ளார்.

தற்போது காவிரி, மகாநதி, ரவி மற்றும் பியாஸ், வன்சாதரா மற்றும் கிருஷ்ணா நதிகளுக்கான 8 தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் கலைத்து விட்டு அந்தந்த மாநிலங்களில் என்ன முடிவு எடுத்தால் அது பாஜகவின் அரசியல் நலனுக்கு உகந்ததாக இருக்குமோ அதனை எடுக்கும் வகையில் நடவடிக்கையை மேற்கொள்ள விருப்பதகாவும் தெரிகிறது.

பல ஆண்டுகளாகப் போராடி, நீதிமன்றத்தில் வாதாடி தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டிய இறுதிநிலையில், மத்திய அரசு தன் கடமையைச் செய்யாது, சுயநல அரசியல் லாபத்திற்காகத் தமிழகத்திற்குத் துரோகம் இழைத்ததோடு, இவ்வளவு ஆண்டுகால முயற்சியின் பயன் தமிழ்நாட்டுக்குக் கிடைக்காது  செய்துள்ளது.

புதிய தீர்ப்பாயம் ஒன்றை நாடு முழுமைக்கும் அமைப்பது என்பது ஒரு ஏமாற்று வேலை! முதலில் தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி மத்திய அரசு தன் கடமையைச் செய்துவிட்டு, அதன்பிறகு நாடு முழுமைக்கும் எதை வேண்டுமானாலும் செய்யட்டும். அதற்கு மாறாக, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை அப்படியே போட்டுவிட்டு, புதிய முயற்சியில் இறங்குவது தமிழகத்திற்குச் செய்யும் துரோகமாகும். எனவே, மத்திய அரசு முதலில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி நீரைப் பங்கிட்டு அளிக்க வேண்டும்; இல்லையேல் தேசிய ஒருமைப்பாடு கேலிக்குரியதாகும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *