– தொகுப்பு : க.பூபாலன், சிங்கப்பூர்
கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் உரை
அனைவருக்கும் வணக்கம்! நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபொழுது, பெரியாரும், எம்.ஆர்.இராதா அவர்களும் பட்டுக் கோட்டையில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டபொழுது, பட்டுக்கோட்டை வீதி முழுவதும் அலைந்து திரிந்தேன்.
அதற்குப் பிறகு பல கூட்டங்களில் கலந்து கொண்டேன்.
திராவிடர் கழகக் கூட்டங்களுக்குச் செல்லும் பொழுதெல்லாம், எனக்கு ஒரு பயன் கிடைக்கும். அங்கே புத்தகங்களை வைத்திருப்பார்கள். தி.மு.க. மாநாடாக இருந்தாலும் சரி, திராவிடர் கழக மாநாடாக இருந்தாலும் சரி, முதலில் புத்தகங்களைத்தான் அவர்கள் வைத்திருப்பார்கள்.
அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி கூறும்பொழுது, தென்னாட்டு இங்கர்சால், கரிபால்டி, பெர்னாட்சா என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், நான் இங்கர்சாலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அவரைப் பற்றி நான் படித்ததில்லை.
அங்கே ஒரு புத்தகம் எனக்குக் கிடைத்தது. கடவுள் என்கிற தலைப்பிலுள்ள புத்தகம். இங்கர்சால் ஒரு பாதிரியாருடைய மகன். எமர்சன்கூட அப்படித்தான். ஆனால், அவர் களுடைய வீட்டில் நாள்தோறும் இறைவனைப் பற்றிப் போதித்தார்கள்; ஆனால், இவர் இறைவன் இல்லை என்று தெளிவாகச் சொன்னார்.
பெரியார் உறுதியோடு இருந்தார்; பன்மையோடு இருந்தார் என்று சொன்னார்கள். அவர் உண்மையாக இருந்தார். அவர் உண்மையைப் பேசினார் அவ்வளவு தான். கடவுள் இல்லை என்றார், அதில் மாற்றுக் கருத்தே இல்லை.
பெரியார் அவர்கள் இன்றைக்கு அவரவருடைய பார்வையில், ஒரு ஊறுகாயாக இருக்கிறார். தொட்டுக் கொள்கிறார்கள். எனக்குப் பெரியாரால் நன்மை; எனக்குப் பெரியாரால் நன்மை என்று சொல்கிறார்கள். சிந்தனையுடை யவர் பெரியார். அவருடைய சிந்தனையில் தெளிவாக இருக்கிறார்.
கடவுள் இல்லை என்று சொல்கின்ற நாத்திகர்களால் இந்த உலகத்தில் வன்முறை இல்லை.
நாட்டில் நடைபெறுகின்ற வன்முறைகள் எல்லாம் கடவுள் இல்லை என்று சொன்ன நாத்திகர்களால் இல்லை என்பதில் தெளிவு பெறவேண்டும். அந்தத் தெளிவுகூட இல்லாமல், நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம்.
கடவுள் இருக்கு என்பவர்களால்தான் வன்முறை நடைபெறுகிறது. உயிரிழப்பு, பேரிழப்பு எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் உரையாற்றினார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தமிழறிஞர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களின் உரை
பெரியார் அன்பர்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்று சிங்கப்பூரர்களுக்கு இந்தப் பிறந்தநாள் விழாவில் ஒரு சிறப்பு இருக்கிறது. நேற்று சிங்கப்பூரின் தந்தையாக இருக்கக் கூடிய லீகுவான் யூ அவர்களுடைய பிறந்தநாள். இன்று தமிழர்களுடைய தந்தையாக இருக்கின்ற பெரியாருடைய பிறந்தநாள்.
புகுந்த வீட்டுத் தந்தை, பிறந்த வீட்டுத் தந்தை என்று சொல்கிறோம் அல்லவா அதுபோன்று இரு தந்தையினுடைய பிறந்த நாள்களைக் கொண்டாடுகின்றோம்.
கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி அன்று நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவர்கள் ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்கள். பெரியார் மறைந்தார்; பெரியார் வாழ்க! என்ற அண்மையில் வெளியிட்ட புத்தகத்தைக் கொடுத்தார்.
அந்தப் புத்தகத்தில் அவருடைய முன்னுரையில் எழுதியிருக்கிறார், இங்கிலாந்தி லுள்ள அரச பரம்பரையில் உள்ளவர்கள் யாராவது இறந்தால்,
The King is dead; Long live the king என்று சொல்வார்களாம். ‘அரசர் இறந்தார்; அரசர் பல்லாண்டு வாழ்க’ என்று வாழ்த்துவார்களாம்.
இறந்தவர்களை எப்படி வாழ்த்துவது என்கிறபோது, அரசர் என்கிற தனிமனிதர் இறந்தார். அரசமைப்பு என்ற ஒன்று இருக்கிறதல்லவா, அது பல்லாண்டு வாழ வேண்டும் என்பது போல்.
அது போன்று, பெரியார் அவர்கள், அண்ணா அவர்கள் இறந்த போது, அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க! என்று வாழ்த்தினாராம்.
எனவே, தனிமனிதர்கள் மறையலாம்; ஆனால், அவர்களுடைய கோட்பாடுகள், சித்தாந்தங்கள் என்றும் வாழவேண்டும் என்று காட்டுகின்ற வகையில், பெரியார் மறைந்தார்; பெரியார் வாழ்க! என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் உருவாகியிருக்கிறது.
அந்தப் புத்தகத்தில், பெரியாருடைய மறைவின் போது, யார் யாரெல்லாம் பங்கேற்றார்கள்; யார் யாரெல்லாம் உரையாற்றினார்கள் என்கிற தகவல்கள் எல்லாம் பதிப்பித்திருக்கிறார்கள்.
தொண்டு செய்து பழுத்த பழம் என்கிற பாடலைப் பற்றிச் சொல்லும் பொழுது, முதல் இரண்டுவரி, தனிமனிதருடைய மறைவைப் பற்றி உள்ளது. அடுத்த இரண்டுவரி, அவருடைய சித்தாந்தத்தைப் பாட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று எழுதியிருக்கிறார்கள்.
எனவே, பெரியார் மறைந்தார் என்றாலும், அவருடைய உடல்மறைந்தது என்று சொன்னாலும், அவருடைய கோட்பாடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது தொடர்ந்து வாழும். அதற்குத் துணையாக நமக்கு ஒரு பெரிய மனிதர் கிடைத்தார்; அவர்தான் வீரமணி அய்யா அவர்கள். அவருடைய முயற்சியினால், பெரியார் இன்று உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அதைத் தவிர பெரியார் உலகம் என்ற ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில், பெரியாருடைய சிந்தனைகளையெல்லாம் ஒருமித்துக் கொண்டு வர முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள்.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில், பெரியாரைத் துணைக்கோடல். அதுபோல, பெரியாரைப் பிழையாமை என்று இருக்கிறது. பெருமை என்கிற ஒரு அதிகாரமும் இருக்கிறது.
இந்த மூன்று அதிகாரங்களையும் நாம் பார்த்தோமேயானால், அண்மைக் காலத்தில் வாழ்ந்த நம்முடைய ஈ.வெ.ரா. பெரியாரையும், திருக்குறளில் சொல்லக்கூடிய பெரியார் என்பதையும் இணைத்துப் பார்த்தால், மிகப் பொருத்தமாக இருப்பதைப் பார்க்கலாம்.
முதலில் பெரியார் யார்? என்கிற கேள்வியை கேட்டால், திருவள்ளுவர் சொல்கிறார், செயற்கரிய செய்கின்றவர் பெரியார் என்று.
பெரியார் என்ன செயற்கரிய செயலைச் செய்தார் என்றால், நாமெல்லாம் இந்த நிலையில் இருக்கிறோம் அல்லவா, இது தான் செயற்கரிய செயலாகும். இதைவிட செயற்கரிய செயலைச் சொல்ல முடியாது.
இந்த நிலைக்கு நாம் வந்திருக்கிறோம் என்று இங்கே உரையாற்றினார்கள் அல்லவா, அவர்கள் அனைவரும் இதனை ஒப்புக் கொண்டவர்கள். எல்லோரையும் இந்தப் பெருநிலைக்குக் கொண்டு வந்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் பெரியார் அவர்கள் தான். இல்லாவிட்டால், ஒரு சமூகம்தான் உயர்ந்தநிலையில் இருந்தது; மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்த நிலையில்தான் இருந்தோம்.
ஆனால், அவர்களைவிட, நாம் உயர்கின்ற அளவிற்குச் செய்த பெருமை பெரியார் அவர்களுக்குத்தான் உண்டு.
அடுத்ததாக, திருக்குறளில் பெருமை என்கிற அதிகாரத்தை எடுத்துக்கொண்டால், பணியுமாம் என்றும் பெருமை.
பெருமைக்கு அடையாளமே பணிவுதான். இங்கே உரையாற்றிய பலர் அய்யாவைப் பற்றியும், திரு.வி.க.வைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்கள்.
சின்னபையனாக இருந்தாலும், பெரியார் அய்யா அவர்கள், வாங்க, போங்க! என்றுதான் சொல்வார். யாரையும், வாடா, போடா! என்று சொல்கிற வழக்கமே கிடையாது. அதுதான் அவருடைய பண்பாடாகும். எனவே, அந்தப் பெருமை என்பது பணிவு. பணிவுக்கு எடுத்துக்காட்டு யார் என்று சொன்னால், பெரியார் அய்யா அவர்களைக் குறிப்பிடலாம்.
அடுத்தாக, பெருமை என்பதற்கு இன்னொரு இடத்தில், பெருமிதமின்மை என்பதாம்.
எதையும் தான்தான் செய்தேன் என்ற ஒரு நினைப்பு இருக்கக்கூடாது. பெரியார் அவர்கள் உரையாற்றிவிட்டு, நான் சொல்கிறேன் என்பதால், நீங்கள் அதனை ஏற்கவேண்டும் என்பதல்ல; நீங்கள் சிந்தித்துப்பார்த்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் அடிக்கடி வலியுறுத்துவார் அய்யா அவர்கள்.
ஒருவர் தகுதி உடையவரா? தகுதி இல்லாதரவா? என்பதை எப்படி முடிவு செய்யலாம் என்றால், தக்கார், தகவிலர் என்பது அவரவருடைய எச்சத்தால் காணப்படும் என்கிறார் திருவள்ளுவர்.
தகுதி உடையவரா? தகுதி இல்லாதவரா? என்பதை அவர் விட்டுச் சென்றதை வைத்துப் பார்க்க வேண்டும் நாம்.
நாம் எல்லாம் இன்றைக்கு இப்படி நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்பது ஒன்று.
இரண்டாவதாக, தக்கார், தகவிலர் எச்சம் என்பதற்குப் பொதுவாக, பிள்ளைகள் என்ற பொருளில் பரிமேலழகர் உரை எழுதினார். ஆனால், பின்னே வந்த உரையாசிரியர்கள், பிள்ளைகள் அல்ல; அவர்கள் விட்டுச் சென்ற அனைத்து நூல்களாக இருக்கலாம்; கொள்கை களாக இருக்கலாம் என்று சொன்னார்கள்.
அந்த அடிப்படையில் பார்த்தீர்களேயானால், பெரியார் எவ்வளவு தத்துவராக வாழ்ந்திருக் கிறார்கள் என்பதற்கு, தாய் தந்தையற்றவர்களை யெல்லாம் தன்னுடைய பிள்ளைகளாகக் கருதினார். எனவே, அவருடைய கொள்கைகள், அவருடைய நிறுவனங்கள், அவர்விட்டுச் சென்ற அனைத்துமே அவர் மிக்கத்தகுதி உடையவர் என்பதை வலியுறுத்துகின்றன.
பெரியாரைத் துணைக் கோடல் என்பதில் திருவள்ளுவர்,
“அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்’’ (குறள் 443)
நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், செயற்கரிய செய்த பெரியார் அவர்களை நம்முடைய உறவினராகக் கொள்ளல் வேண்டும்.
உறவினராகக் கொள்ள வேண்டும் என்றால் என்ன அர்த்தம் என்றால், அவரோடு சம்மந்தம் செய்து கொள்வதல்ல. அவருடைய கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.
அரியவற்றுளெல்லாம் அரிது அதுதான். அந்த இடத்தில், திருவள்ளுவர் அவர்கள், பெரியார் என்ற சொல்லை, அரசனுக்கு ஏற்ற பெரியார் என்று சொன்னாலும் கூட, அந்தத் திருக்குறள் அனைத்தும் இன்றும் நமக்குத் தொடர்புடை யனவாக இருக்கின்றன.
“உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.’’ (குறள் 442)
பெரியோர் என்ன செய்வார்கள் என்றால், வந்திருக்கின்ற நோயைப் போக்குவார்கள்; நோய்வராமல் தடுப்பார்கள். இதைத்தான் நம்முடைய ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள், நமக்கு நோயாக இருந்த தீண்டாமை, ஜாதி வேறுபாடு களையெல்லாம் நீக்கினார். இனிமேலும் வராமல் இருப்பதற்கான தொலைநோக்குச் சிந்தனை செய்தார்.
அடுத்ததாக,
திருவள்ளுவரின் திருக்குறளுக்கு இருக்கின்ற பெருமை என்னவென்றால், வடிவச் சுருக்கம்; கருத்துப் பெருக்கம்.
எதையும் சுருக்கமாகச் சொன்ன திருவள்ளுவர், கல்வியை வலியுறுத்துகின்ற பொழுது, நான்கு அதிகாரங்களைச் சொன்னார்.
கல்வி, கல்லாமை, அறிவுடைமை, கேள்வி என்கிற நான்கு அதிகாரங்கள்.
அது போன்று, பெரியாரை நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்காக இரண்டு அதிகாரம். பெரியாரைத் துணைக் கோடல் என்கிற அதிகாரமும், பெரியாரைப் பிழையாமை என்கிற அதிகாரமும்.
பெரியாரைத் துணைக் கொள்வது என்பது முக்கியமான ஒன்று. அது அரசனுக்காகச் சொல்லப்பட்டாலும், இந்தக் காலத்தில் நமக்கு ஏற்புடையதாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
“பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.’’ (குறள் 892)
“எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத் தொழுகுவார்’’ (குறள் 896)
தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழமுடியும். ஆற்றல்மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பிப் பிழைக்க முடியாது.
நம்மைவிட பெரியார், பெரியவர் அவரை நாம் தலைவராகக் கொண்டு ஒழுக வேண்டும் என்பதை திருக்குறளிலிருந்து நாம் பார்க்கின்றோம்.
“உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்’’
(குறள் 160)
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
நம்முடைய ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் போன்று, எவ்வளவு பேர் திட்டினாலும், அழுகிய முட்டையைத் தூக்கி எறிந்தாலும், செருப்பைத் தூக்கி எறிந்தாலும் பொறுத்துக் கொள்கின்ற பெரியார் அவர்கள், உண்ணாது நோற்பார் பெரியாரைவிட இன்னாச் சொல் நோற்பார் என்பவர் பெரியார்தான்.
அடுத்ததாக ஒன்று, அவ்வையாரிடம் சென்று பெரியவர் யார் என்று கேட்டார்களாம்.
அவ்வையார் அவர்கள், புராணக் கதைகளை யெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியாக தொண்டறம் பெருமை சொல்வதும் பெரிதே என்றாராம்.
பெரியார் அவர்கள் நமக்கு வலியுறுத்திய ஒன்று தொண்டறம் என்பதுதான். அந்தத் தொண்டறத்தை வலியுறுத்திய பெரியார் அவர்களை நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.
பெரியார் அய்யா அவர்களுக்கு அய்.நா. மன்றம் யுனெஸ்கோ,
புதிய உலகின் தொலைநோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி
Periyar the Prophet of the new Age;
The socrates of South East Asia;
Father of the social reform movement
and arch enemy of ignorance;
Superstitons; meaningless customs and base manners.
என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தது.
இத்தகைய பேராற்றல் உடையவர் பெரியார் அவர்கள் ஆவார்கள்.
(தொடரும்…)