இயக்க வரலாறான தன்வரலாறு (169)

ஜனவரி 01-15

 

அய்யாவின் அடிச்சுவட்டில்…..

இயக்க வரலாறான தன்வரலாறு (169)

நிதி உதவிக்கு பொருளாதார வரம்பு வைத்தால் வரவேற்போம்!

அடுத்த இடியாய் ‘காலாவதி’ ஆணை

“பிற்படுத்தப்பட்டவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போதிய தகுதியில்லாமை காரணமாக அவ்விடங்களில் ஏதேனும் காலியானால் அவை அப்படியே வைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு எடுத்துச் செல்லப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்ற பழைய முறையை நீக்கிவிட்டு, காலியான இடங்கள் காலாவதியானவைகளாகக் கருதப்படும் என்று மற்றொரு ஆணையையும் தமிழக அரசு பிறப்பித்து, அதற்கு இரண்டு ஆண்டுகாலம் பின்னோக்கி அமலாகும் சக்தி (Retrospective effect) கொடுத்துள்ளதால், அதற்கும் சாத்தியமில்லையே! காமராசர் காலத்திலிருந்து ஆர்.வி. சுப்ரமணிய அய்யர் காலம்வரை கூட, பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இப்படி பறிபோனது இல்லை.

ரூ 9000 அரசு ஆணை எப்படி தீங்கோ அதைவிடப் பலமடங்கு தீங்கானது மேற்காட்டிய ஆணையும் ஆகும்.

எனவே இவ்விரண்டு ஆணைகளையும் தமிழக அரசு திரும்பப் பெற்றாக வேண்டும்.

பார்ப்பனர்களின் மூக்குச் சொறிதலுக்கும், பாராட்டுதலுக்கும் மயங்கிவிடக் கூடாது. 100க்கு 3பேர் வோட்டுதான் அவை. 100க்கு 97 பேர்களில் 70 சதவிகித பிற்படுத்தப்பட்டோர்கள் உணர்ச்சியற்ற கொழுக்கட்டைகள் அல்ல; அவர்கள் வோட்டுச் சாவடியை போராட்டக் களமாக நினைத்துதான் தமிழ்நாட்டில் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள், மறந்துவிட வேண்டாம்’’ என்பன போன்ற முக்கியமானவற்றைக் குறிப்பிட்டிருந்தேன்.

இதனைத் தொடர்ந்து வருமான வரம்பாணைப் பற்றிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நானும், தலைமை நிலையை செயலாளர் மற்றும் விடுதலை நிர்வாகி திரு.என்.எஸ்.சம்பந்தம் ஆகிய மூவரும் கலந்து கொண்டோம். அதில் நான் வருமான வரம்பானை குறித்தும் அதன் விளைவுகள், கேடுகள் குறித்தும் முக்கிய உரையாற்றினேன்.

அதில், வகுப்புவாரி உரிமை (கம்யூனல் ஜீ.ஓ.) என்பதற்கு முன் 1979 ஜூலை 1ஆம் தேதி வரை இருந்துவந்த நிலவரம் என்னவென்றால் எப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பு, மலைஜாதியினரை நிர்ணயிக்க சமூக, கல்வி நிலையை மட்டும் (Socially and Educationally Backward) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதோ அதே போல பிற்படுத்தப்பட்டவர்களை நிர்ணயிப்பதிலும் இருந்துவந்தது. ஆனால் ஜூலை 2ஆம் தேதி முதல் தமிழக அரசு பிறப்பித்த வருமான வரம்பு (ரூ9000 ஆணை) காரணமாக இதன் அடிப்படையே மாற்றப்பட்டுவிட்டது. ((The basic character of Communal G.O. has been altered.)

உலகில் எங்குமில்லாத ஜாதியும், ஜாதி தர்மமும் உள்ள ஒரு சமுதாயம் நமது சமுதாயம். சாதி தர்மப்படி, கல்வி உயர் சாதிக்காரர்கட்கு மட்டுமே உள்ள ஒரு தனிவாய்ப்பாகும் (Prerogative).  கீழ்ஜாதியினர் விரும்பினாலும் கல்வியைக்கற்கக் கூடாது என்பதே அந்த ஜாதி தர்மம் ஆகும். எந்த ஜாதிகாரணமாக கல்வி வாய்ப்புக்கள் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்ததோ, மிகப் பெரும்பாலான மக்களான அந்தக் ‘கீழ்ஜாதியினருக்கு’ அதே ஜாதி அடிப்படையிலே முன்னுரிமை கொடுத்தால்தான் நிரந்தர நியாயமாகும் என்பதே கம்யூனல் ஜீ.ஓ.வின் தத்துவம் ஆகும்.

இந்த அடிப்படையைத் தகர்த்து எறிவதாக அமைந்து விட்டது. தமிழக அரசின் 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணை. மேலும் வருமான (பொருளாதார) அளவுகோல் ஓர் நிலையான அளவுகோல் அல்ல; அது அடிக்கடி மாறக் கூடியது. கல்வி, சமூக பிற்படுத்தப்பட்ட நிலை (Socially and Educationally Backward)  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாறாத ஒரு நிலை. எனவேதான், இடஒதுக்கீட்டுக்கு இதை அளவுகோலாகக் கொண்டனர் அரசியல் சட்ட கர்த்தாக்கள், தந்தை பெரியார் அவர்களது சீரிய கருத்துரைப்படி.

என்ன அடிப்படை, என்றைக்கு அரசு ஆணையில் ரூ.9000 என்று நிர்ணயிக்கப்பட்டது என்பதைப் பல ஆண்டுகல்லூரித் தேர்வு சர்வீஸ் கமிஷன் வேலை வாய்ப்புப் பற்றி பல சர்வேக்கள் எடுக்கப்பட்டு இந்த முடிவுக்கு அரசு வந்ததா என்றால், அதற்குரிய ஆதாரம் ஏதும் கிடையாது, சட்ட நாதன் கமிஷன் பரிந்துரை என்பது சட்டபடி சரிதானா என்றால் இல்லை என்பதே நமது பதிலாகும்.

அந்தப் பரிந்துரையில் அத்தியாயம் 4இல் பக்கம் 49இல் முதல் பாராவில் மக்களில் பிற்பட்டோர் என்னும் பிரிவினை எந்த அடிப்படையில் நிர்ணயிப்பது என்பதை ஆராயும் பொறுப்பு இக்குழுவின் அலுவல் வரம்பிற்கு (Terms of Reference)  உட்பட்டதல்ல என்று கூறப்பட்டிருக்கிறதே.

அலுவல் வரம்புக்கு உட்படாத ஒரு பரிந்துரையை ஒரு அரசு ஏற்பதும் ஆணை பிறப்பிப்பதும் எப்படி சட்டப்படியும் நியாயப்படியும் சரியானதாகும்? மேலும் இவ்வாணை பற்றி இன்னும் தெளிவாக்க வேண்டுமென்பதற்காக கேள்வி பதில் வடிவத்தில் சில செய்திகளைத் தங்களது மேலான பார்வைக்கும் பரிசீலனைக்கும் வைக்க விரும்புகிறது திராவிடர் கழகம்.

கேள்வி: பிற்படுத்தப்பட்டோர் என்றால் யார்?

பதில்: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் கருத்துப்படி சமுதாய ரீதியிலும், கல்வி அடிப்படையிலும் பின்தங்கிய ஜாதியினர் பிற்படுத்தப்பட்டோர் ஆவர். தந்தை பெரியார் அவர்களின் இடைவிடாத கிளர்ச்சியினாலும் அதனால் ஏற்பட்ட மக்கள் எழுச்சியினாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட முதல் திருத்தத்தில் பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கு பெரியார் அவர்களின் இந்த வரையறைதான் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

கேள்வி: அந்த அரசியல் சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?

பதில்: குடிஜனங்களின் சமுதாயத்திலும் கல்வியிலும் பின்னடைந்துள்ள வகுப்பினருக்கும், தாழ்ந்தப்பட்ட வகுப்பினருக்கும், பழங்குடி மக்களுக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்காக அரசு எந்தச் சிறப்பு ஏற்பாடு செய்வதையும் இந்த விதியின் ஒரு பிரிவு அல்லது விதி 29இன் 2ஆவது உட்பிரிவு தடுக்காது என்பதுதான் விதி. (15)(4)க்கான முதல் அரசியல் சட்டத் திருத்தம் 1951 என்பது ஆகும்.

கேள்வி: அதன்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்த உரிமைகள் என்ன?

பதில்: கல்வி நிலையங்களிலும், உத்தியோகங் களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தது. 75 சதகிவிதம் இருக்கும் மக்கள் தொகைக்கு அவர்கள் விகிதாச்சாரப்படி இந்த ஒதுக்கீடு போதவே போதாது; என்றாலும், சுப்ரீம் கோர்ட்டின் ஒரு தீர்ப்பின்படி 49 சதவீதத்திற்கு மிகாமல் இடஒதுக்கீடு இருக்கலாம் என்பதால் பிற்படுத்தப் பட்டோருக்கு இன்னும் அதிகப்படுத்தலாமே என தந்தை பெரியார் அவர்கள் தி.மு.க. அரசிற்கு ஆலோசனை கூறினார்கள். அதன்படி தி.மு.க. ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதமும் கொடுக்கப்பட்டது.

கேள்வி: இப்போது அ.இ.அ.தி.மு.க அரசு பிறப்பித்துள்ள உத்தரவு என்ன?

பதில்: சமுதாய ரீதியிலும், கல்வி அடிப்படையிலும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் தான் பிற்படுத்தப்பட்டோர் என்ற தந்தை பெரியாரின் கருத்துக்கும் அரசியல் சட்டத் திருத்தத்திற்கும் முரணாக; இந்த அரசு பொருளாதார கண்ணோட்டத்தைப் புதிதாகப் புகுத்தி 9000 ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளைப் பெற முடியும். மற்றவர்கள் ஜாதியினால், கல்வியினால், பிற்படுத்தப்பட்டோர் ஆயினும் 9000 ரூபாய் ஆண்டு வருமானம் பெற்றால், பொதுப்போட்டியில்தான் (Open Competition) போட்டியிட முடியும் என்பதே புதிய அரசாணை ஆகும்.

கேள்வி: ஏழைகளாக உள்ள பிற்படுத்தப் பட்டோரின் நன்மைக்காகவே போடப்பட்ட இந்த உத்தரவை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?

பதில்: பிற்படுத்தப்பட்டோர்கள் என்ற ஜாதியினர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி பெற முடியாமல் உயர்ஜாதிக்கார பார்ப்பனர்களால் தடுக்கப்பட்டு வந்தவர்கள். எவ்வளவுதான் பொருளாதார ரீதியில் வசதி உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் இழிஜாதிக்காரர்கள்தான்; அதைத்தான் சமுதாய அடிப்படையிலான பிற்படுத்தப்பட்ட தன்மை Socially Backward   என்கிறோம்.

இவர்களுக்கு தந்தை பெரியார் அவர்களின் அயராத உழைப்பாலும், அரசியல் சட்டம் தந்துள்ள பாதுகாப்பினாலும், கிடைத்துள்ள உரிமையில் பொருளாதாரக் கண்ணோட்டம் குறுக்கிடவே முடியாது.

9000 ரூபாய் வருமானம் என்பது ஏழ்மையைக் குறிக்க என்ன அளவுகோல் என்பதே புரியவில்லை. 9000 ரூபாய் வருமானம் வந்தால் பணக்காரன். 8999 ரூபாய் வந்தால் ஏழையா? ஒரு விவசாயிக்கு இந்த ஆண்டு நல்ல விளைச்சலால் 9000 ரூபாய்க்கு மேல் வருமானம் வந்தால் இந்த ஆண்டு அவர் உயர்ந்த ஜாதி. அடுத்த ஆண்டில் விளைச்சல் பாதித்து வருமானம் குறைந்தால் அப்போது அவர் பிற்படுத்தப் பட்டவரா? சென்னையில் உத்தியோகம் பார்ப்பவர் வருமான அடிப்படையில் உயர்ந்த ஜாதியாகவும், அவரே காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டால் வருமான அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவராகவும் ஆகிவிடுகிறார்.

ஒரே குடும்பத்து அண்ணன் தம்பிகளில், அண்ணன் வருமானம் 9000 ரூபாக்கு குறைவாக இருப்பதால் அவர் பிற்படுத்தப்பட்டோர். அவர் தம்பிக்கு வருமானம் 9000 ரூபாய்க்கு அதிகமாக இருப்பதால் தம்பி உயர்ந்த ஜாதி ஆகிவிடும் அவலநிலையை இந்தப் புதிய அரசாணை உண்டாக்கியிருக்கிறது.

கேள்வி: சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப் பட்டோரான சவரத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, ரிக்ஷா தொழிலாளி ஆகியோ ரெல்லாம் இந்தப் புது உத்தரவுகளால் பயன் அடையமாட்டார்களா?

பதில்: எழுதப்படிக்கத் தெரியாத தற்குறிகளான இந்தத் தொழிலாளிகள் தங்கள் தொழிலின் மூலம் வரும் கூலிக் காரணமாக 9000 ரூபாய் வருமானம் உள்ளவர்களானால், அவர்களுடைய பிள்ளைகள் முதல் தலைமுறையாக படிக்கப் போகிறவர்கள் கூட பொதுப்போட்டியில்தான் போட்டியிட வேண்டும். யாரோடு? பல தலைமுறைகளாக படித்து முன்னேறிய உயர்ஜாதிக்காரர் வீட்டுப் பிள்ளைகளோடு 51 சதவீத ஒதுக்கீட்டில் போட்டியிட்டு இடம்பெற முடியுமா? பொருளாதார வரம்பு நிர்ணயம் செய்வதால் எப்படி பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பது புரிகிறதல்லவா? இவர்களில் யாருக்காவது அரசு நடத்தும் பரிசுச் சீட்டில் முதல் பரிசு விழுந்து அதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.9000 வருமானம் கிடைத்து விட்டால் அவர்களின் பிற்பட்ட தன்மை போய்விடுமா?

கேள்வி: 31 சதவிகிதம் பிற்படுத்தப் பட்டோருக்கான இடங்களில் கைவைக்க வில்லையே?

பதில்: 31 சதவிகித இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட (Minimum)  குறைந்தபட்ச இடங்களே தவிர அதுதான் அவர்களுக்கு உரிய(Maximum) உச்சம் என்றாகி விடாது.

பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கே சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப் பட்டவர்கள் என்பதுதான் வரையறையே ஒழிய பணக்காரன் ஏழை என்ற சொல்லுக்கே அங்கு இடமில்லை.

உயர் ஜாதியினரில் ஏழைகள் உண்டே தவிர தற்குறி எவருமில்லை.

பிற்படுத்தப்பட்டோரில் பணக்காரர்களே கூட தற்குறிகளாக உள்ளனர்.  31 சதவிகித இடங்களுக்கு போட்டியிடும் மாணவர்களோ உத்தியோகத்திற்கு போட்டியிடுபவர்களோ ரூ.9000 ஆண்டு வருமானம் காரணமாகவே அவர்கள் அந்த உரிமையை இழந்து போட்டியிட வேண்டியவர்கள் ஆவதோடு, மற்ற முன்னேறிய ஜாதியோடு போட்டியிட முடியாமல் தங்களுக்குரிய வாய்ப்பை இழந்து விடுகின்றனர். உதாரணாமாக, சென்ற ஜூன் மாதத்தில் நடந்த இன்சினீயரிங் கல்லூரி களுக்கான மாணவர்கள் தேர்வில் மொத்தம் விண்ணப்பித்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 4537. இவர்களில் ரூ.9000க்கு குறைவாக ஆண்டுவருமானமுள்ள விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 1795 ரூ.9000க்கு அதிகமாக ஆண்டு வருமானமுள்ள விண்ணப்பித்த பிற்படுத்தப் பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2742.

இந்த 2742 மாணவர்களும் இந்த வருமான வரம்பாணையால் பிற்படுத்தப்பட்டவர்களா யிருந்தும், திறந்த போட்டிக்குத் தள்ளப்பட்டனர். இந்த  2742 மாணவர்களில் திறந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 தான். மீதமுள்ள 2618 மாணவர்கள் ரூ.9 ஆயிரம் ஆணையால் அதில் பலருக்குத் தகுதிகளிருந்தும் தேர்ந்தெடுக்கப்படாமல் தள்ளப்பட்டு விட்டனரே? இதற்கு யார் பொறுப்பு?

கேள்வி : ஏழை பிற்படுத்தப்பட்டவன் படிக்க வேண்டாமா?

பதில்: ஏற்கனவே சொன்னோம், சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட அனைவருக்கும் உரிமை வேண்டும் என்பதை. ஏழைகள் என்போர் 31 சதவீதத்தில் மாத்திரமல்லாமல் எஞ்சிய 18 சதவீதத்திலும், 51 சதவீதத்திலும் இருக்கிறார்களே ஏழைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருக்குமானால் திறந்த போட்டிக்கான 51 சதவிகித இடங்களில் பிற்படுத்தப்பட்டவர், முற்பட்ட ஜாதியினர் தாழ்த்தப்பட்டோர் ஆகியோரில் ஏழைகளுக்கு தனியாக சில இடங்களை ஒதுக்குவதற்கு நாம் தடையாயில்லை.

கடலூரில் 5-8-1979இல் தாங்கள் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின் போது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டிலிருந்து (1980-81) கல்வி நிலையங்களில் சேர்தல், வேலை நியமனம் போன்றவற்றில் உயர் ஜாதி வகுப்பினரிடையே பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு 51 சதவிகித பொதுக்கோட்டாவி லிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகித இடங்கள் ஒதுக்கப்படும் எனப் பேசியுள்ளதாக ‘அண்ணா’ இதழ் சென்னை 6-8-1979 அன்று முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

51 சதவிகிதத்தில் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றாலும் அந்த இடஒதுக்கீடு உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டுமே என்று தாங்கள் கூறியிருப்பது (பத்திரிகை தகவல் சாரியாக இருக்குமானால்) எந்த வகையில் நியாயம் என்பது எங்களுக்கு விளங்கவில்லை. சட்டப்படியும் இது சரியான நிலையில்லை என்பது எங்கள் கருத்து.

மேற்காட்டியவைகளோடு பிற்படுத்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்குப் பெருங் கேடாக, முட்டுக்கட்டையாக போடப் பட்டுள்ள  மற்றொரு ஆணை பற்றியும் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டும். வருமான வரம்பு ரூபாய் 9000 ஆணைக்கு மிகவும் தொடர்பானதாகும். அது தொடர்பானது தான் என்பதை அரசு ஏற்பதைப் போலவே தான், முதலில் இந்த ஆணையைப் பிறப்பித்த சிலவாரங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் போதிய தகுதி படைத்தவர்கள் கிடைக்காத காரணத்தால் காலியானால், அவை காலியாக வைக்கப்பட்டு அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லப்படாமல் காலாவதியானதாகக் கருதப்படும் என்று போடப்பட்டுள்ள மற்றொரு ஆணையாகும். எப்படியிருந்தாலும் 31 சதவிகிதத்திற்கு ஆபத்து ஏற்படவில்லையே என்று கூறிடும் வாதத்தைத் தெளிவான பொய்யாக்கி விட்டுள்ளது இவ்வாணை.

அக்கிரமம்

இவ்வாணையைப் பிறப்பித்தது மாத்திரமல்ல, இரண்டு ஆண்டுகள் முன்பிருந்தே செயல் படுத்துவது Retrospective Effect இன்னும் அக்கிரமமானதாகும். எனவே, கீழ்க்காணும் நிலைகளை திராவிடர் கழகம் தெரிவிக்கிறது.

1. வகுப்புவாரி உரிமையினால் அமைந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் (31 சதவீதத்தில் பொருளாதாரக் கண்ணோட்ட வருமான வரம்பு போடப்பட்டது ரத்து செய்யப்பட்டு பழைய நிலை (Status quo Ante)  நீடிக்க வேண்டும்.

2. பிற்படுத்தப்பட்டோடோருக்குள்ள ஒதுக்கீடு, போதிய தகுதியுள்ள நபர் அவ்வாண்டில் கிடைக்காததால் காலியாகும் இடம் காலாவதியாகும் என்ற ஆணையை ரத்து செய்து முந்தைய முறைபோல் இடங்கள் காலியானால் அடுத்த ஆண்டுகட்கு எடுத்துச் செல்லப்பட்டு (Carry Forward) பிற்படுத்தப் பட்டோருக்கு உரிமை கிடைக்கச் செய்ய வேண்டும்.

3.            ஏழைகளுக்கு வருமான அடிப்படையில் சலுகை காட்ட அரசு விரும்பினால் எல்லா ஜாதியினருக்கும் உரிய 51 சதவீத இடங்கள் உள்ள பொதுப் போட்டித் தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினை ஒரு வருமான வரம்பு வைத்து எல்லா ஜாதியிலும் உள்ள ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம். அதற்கும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டி, பொதுக்கருத்து அறிக்கை (Consonance) மூலம் முடிவுக்குக் கொண்டு வரலாம்.

4.            ஸ்காலர்ஷிப் தொகையை அரசு அளிப்பதற்குப் பொருளாதார வரம்பை வைத்து அதை குறைப்பதோ, கூட்டுவதோ அரசு செய்தால் அதை திராவிடர் கழகம் வரவேற்கும். ஆனால், அதையே கல்வி, உத்தியோக வாய்ப்புத் தேர்விலும் போட்டுக் குழப்பக் கூடாது.

மேற்கூறிய கருத்துக்களைத் தாங்கள் அருள்கூர்ந்து பரிசீலித்து தந்தை பெரியார் நூற்றாண்டு நினைவு விழா ஆண்டிலேயே அவர் கொண்ட வகுப்புரிமைக் கொள்கைக்கு விரோதமான ஆபத்தை களையுமாறு வேண்டிக் கொள்கிறோம் என்று விளக்கினேன்.

(நினைவுகள் நீளும்)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *