நீட் தேர்வு கூடவே கூடாது!

ஜனவரி 01-15

 

நீட் தேர்வு கூடவே கூடாது! தமிழக அரசு ஜெயலலிதா அவர்கல் வழியில் நிலையாய் உறுதியாய் நிற்க வேண்டும்! 

– மஞ்சை வசந்தன்

‘நீட்’ தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட மாணவர்களை, ஒட்டுமொத்த கிராமப்புற மாணவர்களை, தமிழ்வழி படிக்கும் மாணவர் களை, மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் கற்கும் மாணவர்களை கடுமையாய் பாதிக்கும் என்பதோடு, அவர்கள் அறவே மருத்துவக் கல்வி பயில முடியாத நிலையை உருவாக்கும் என்பதை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூகநீதியில் அக்கறையுள்ளவர்கள், அரசு என்று அனைத்துத் தரப்பினரும் உள்ளத்தில் கொண்டு, அதை அறவே அகற்றும் வரைப் போராட வேண்டியது கட்டாயக் கடமையாகும்.

‘நீட்’ தேர்வு அறிவிப்பு வந்தவுடனே தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொதித்தெழுந்து, அது எப்படியெல்லாம் மேற்குறிப்பிட்ட மாணவர்களைப் பாதிக்கும், அவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியாமல் தடுக்கும் என்பதைத் தெளிவாக விளக்கி, விடுதலையில் எழுதினார். தமிழகமெங்கும் பிரச்சாரங்கள் செய்தார். அதன் விளைவாய் தமிழகமெங்கும் விழிப்பும், உணர்வும், எதிர்ப்பும், கிளர்ச்சியும் ஏற்பட்டது. ஊடகங்கள், குறிப்பாகத் தொலைக்காட்சிகள் இதையே விவாதப் பொருளாக்கி விரிவாக விவாதித்தனர்.

அதன் ஒட்டுமொத்த விளைவாய் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், நுழைவுத் தேர்வு கூடாது என்பதை மத்திய அரசிடம் உறுதியாய் எடுத்துக் கூறி வலியுறுத்தினார். அதற்குப் பயன் கிடைத்தது. தமிழகத்திற்கு மட்டும் அந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால், அது நிரந்தரத் தீர்வு ஆகிவிடாது என்பதால், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி புதிய கல்விக் கொள்கையையும், நீட் தேர்வையும் எதிர்த்து ஒழிக்க போராட வேண்டியதின் கட்டாயத்தை வலியுறுத்தினார்.

அனைத்து அரசியல் கட்சிகளும், தொண்டு அமைப்புகளும், அரசும் எதிர்ப்பதோடு பெற்றோர், ஆசிரியர், மாணவர் என்ற முத்தரப்பு எதிர்ப்பு இந்தப் பிரச்சினையில் கட்டாயம் என்று தீர்மானிக்கப் பட்டு, அதன்படி ஆசிரியர், மாணவர், பெற்றோர் கூட்டம் கூட்டப்பட்டு, எதிர்ப்பு மாநாடு திருச்சியில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, அதன்படி திருச்சியிலும் மாபெரும் கண்டன ஊர்வலமும், மாநாடும் எழுச்சியுடன் நடந்தது.

ஆனால், அந்த மாநாடு நடக்கும் வேளையில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இல்லாத இழப்பு ஏற்பட்டது. என்றாலும், அந்தக் கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள், சமூகநீதியைப் பொறுத்தவரை ஜெயலலிதா வழியில் உறுதியுடன் நின்று சமூகநீதி காப்போம் என்று உறுதியளித்தார்கள். ஆனால், தமிழகக் கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராசன் அவர்கள், நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது தமிழக அரசின் நிலைப்பாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதைக் கண்டித்துப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், “நாங்கள் நீட் தேர்வை ஆதரிக்கவில்லை. நீட் தேர்வு வந்தால் மாணவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அப்படிச் சொன்னேன் என்றார்.” இது சரியான பதிலாக இல்லை என்பதால், அமைச்சருக்கு கடும் கண்டனம் மீண்டும் தெரிவிக்கப்பட்டது.

இச்சூழலில், மத்திய அரசு நீட் தேர்வு தமிழிலும் எழுதலாம் என்று அறிவிப்பு கொடுத்தது. இது சூழ்ச்சி அறிவிப்பு என்பதை அறியாத சிலர் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

“பந்தியிலே உட்காராதே என்னும்போது, இலை பொத்தல்” என்று கூறியவனைப் போல, நீட் தேர்வே வேண்டாம் என்ற நிலையில், அதைத் தமிழில் எழுதலாம் என்று அறிவிப்பது கேலிக்குரியது அல்லவா?

இதை நன்கு உணர்ந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “தமிழில் எழுதினாலும் ‘நீட்’ தேர்வு வேண்டாம்!” என்று 10.12.2016 விடுதலையில்அறிக்கை ஒன்றை விரிவாக எழுதினார்கள். அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் போல அ.இ.அ.திமு.க. அரசு உறுதியாய் இருக்க வேண்டும். புதிய முதல்வர் மாண்புமிகு பன்னீர் செல்வம் அவர்கள் சமூகநீதி காத்து, நல்ல தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

“மாநில அரசு நடத்தும் பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு, சி.பி.எஸ்.இ. என்னும் உயர்தட்டு – அகில இந்திய பாடத் திட்டத்தில் ஒரு தேர்வை நடத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத – கடைந்தெடுத்த அநீதியல்லவா?

இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வியா இருக்கிறது? இல்லை என்கிறபோது குறிப்பிட்ட ஒரு பாடத் திட்டத்தின் அடிப்படை யில் தேர்வை நடத்துவது – அதுவும் மத்திய அரசே இப்படி நடந்துகொள்வது சரியானது தானா? மத்திய அரசு என்பது குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு, குறிப்பிட்ட பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு மட்டுமே வசதி செய்து கொடுக்கும் ஒரு முகவரா? நடுநிலை தவறிய இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த நீட் தேர்வின்மூலம் பிளஸ் டூ தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியவர் களுக்கு இடம் கிடைக்கக் கூடும். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர் களுக்கு வாய்ப்புக் கிடைக்காமலும் போகக் கூடும். இது மாணவர் கள் மத்தியில் பிளவையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடியது அல்லவா?

கடந்தஆண்டுநடைபெற்றஅகிலஇந்திய நுழைவுத்தேர்வுமிகவும்கடினமாகஇருந்தது என்று பொதுப்படையாகவே மாணவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனரே!

கடந்த ஆண்டு தேர்வில் மருத்துவக் கல்லூரி யில் இடம்பெற்ற கிராமப்புற மாணவர்களின் சதவிகிதம் எவ்வளவு? திறந்த போட்டியில் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மாணவர்கள் பெற்ற இடங்கள் எத்தனை? சதவிகிதம் எவ்வளவு? என்கிற புள்ளி விவரத்தை அறிவிக்க மத்திய அரசு தயார்தானா?

2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப் பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள்பற்றிய புள்ளி விவரத்தைத் தெரிந்து கொண்டால், பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டால், யாருக்கு வாய்ப்பு என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ளலாமே!

பொதுப் போட்டிக்கான மொத்த இடங்கள் 884.

இதில் பிற்படுத்தப்பட்டோர் 599.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159

தாழ்த்தப்பட்டோர் 23

அருந்ததியர் 2

மலைவாழ் மக்கள் 1

இசுலாமியர் 32

மற்ற ஜாதியினர் 68

(பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதாரில் உயர்ஜாதியினர்)

200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மூன்று பேரும் பிற்படுத்தப்பட்டவர்களே!

இந்த நிலை நீட் தேர்வுமூலம் நீடிக்குமா?

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கிராமப்புறங் களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 60 சதவிகிதம் வரை இடங்கள் கிடைத்துள்ளன.

பெரும்பாலும் முதல் தலைமுறையாகப் படித்த இவர்களின் இந்த வாய்ப்பு மறுக்கப்பட வேண்டுமா?

இன்னொரு முக்கியமான கருத்து. நுழைவுத் தேர்வு என்பது மருத்துவப் பட்டத்திற்கான தேர்வு அல்ல. மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கான தேர்வே! மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெற்றால் தான் வெற்றி பெற முடியும்;  பட்டங் களையும் பெற முடியும்.

இதனை மறைத்துவிட்டு, மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு தகுதி – திறமை வேண்டாமா? என்று கேட்பது பிரச்சினையைத் திசை திருப்புவதாகும்” என்று மிகத் தெளிவாக விளக்கி தமிழக அரசு செய்ய வேண்டிய கடமையை அறிவுறுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, பிரதமரைச் சந்தித்த தமிழக முதல்வர், ஏ.பன்னீர்செல்வம் அவர்கள், “நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு தேவை!” என்று ஒரு கோரிக்கையை கீழ்க்கண்ட வாறு வைத்தார்.

“தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக் கொள்கையானது மிகவும் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. இதில் தகுதி நுழைவுத் தேர்வை நுழைப்பது, கிராமப்புற மாணவர்களுக்கு அநீதியை இழைப்பதாகும். தமிழ்நாட்டுக்கு விதி விலக்கு அளிக்கப்பட வேண்டும். மேலும், கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் தேசிய தகுதித் தேர்வைக் கொண்டு வரும் திட்டத்துக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது” என்று அவர் பிரதமரிடம் கோரியிருந்தார். (விடுதலை, 20.12.2016)

பொறியியல் படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வு என்ற புதுக்கரடி:

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கூடாது என்று நாம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், பொறியியல் படிப்பிற்கும் நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு கொண்டுவர மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்திருப்ப தாய் அறிவிப்பு 22.12.2016 அன்று வெளிவந் துள்ளது, வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

மாநில உரிமையைப் பறிக்கும் சூழ்ச்சி:

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதன் பாதக விளைவுகளை நாம் தொடர்ந்து அனுபவித்து வரும் சூழலில், கல்வியை ஒட்டுமொத்தமாக மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு செல்லும் சூழ்ச்சியாகவும், ஒடுக்கப் பட்ட மாணவர்களை உயர்கல்விகளில் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சியாகவும் இவற்றை மத்திய மதவாத அரசு செய்து வருகிறது.

உயர் வர்க்கத்திற்கு உரியதா மருத்துவமும், பொறியியலும்?

நாம் முன்னமே சொன்னதுபோல, கிராமப்புற மாணவர்கள், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மாணவர்கள், மாநில கல்வி வாரியத்தில் பயிலும் மாணவர்கள் அறவே பொறியியல், மருத்துவக் கல்வி பயில முடியாத நிலையை உருவாக்கி, உயர் ஜாதியினரும் பணக்காரர்களும் மட்டுமே கற்கக் கூடிய கல்வியாக அவற்றை மாற்றி யமைக்க மதவாத மோடி அரசு முயலுகிறது என்பதையே இது உணர்த்துகிறது.

தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் இந்த ஆபத்தை, கேட்டை உணர்ந்து, தீவிரமாகப் போராடி இப்பேராபத்தை முறியடிக்க வேண்டும். இதற்கான முயற்சியைத் தமிழகத் தலைவர்களும், தமிழக அரசும் முன்னெடுக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *