மொழிகள் வழங்குவது வாயினால். பல சொற்கள் சேர்ந்தே மொழி. சொற்களை ஒவ்வொன்றாய் வழங்காதுவிட்டால் பின்பு மொழியும் வழக்கற்றொழியும். எழுத்து வடிவிலிருப்பது மட்டும் மொழிவழக்கன்று. கோதியம் (Gothic), இலத்தீன், சமற்கிருதம், முதலிய வழக்கற்ற மொழிகளெல்லாம் எழுத்து வடிவில் இன்னுமுள. ஆரியச் சொற்களைத் தேவையின்றிக் கலந்ததினால் அவற்றின் நிலையிலிருந்த திரவிடச் சொற்களெல்லாம் வழக்கிறந்தும் மறைந்தும் போய்விட்டன. இலக்கியமுள்ள மொழியானால் வழக்கற்ற சொற்கள் இலக்கியத்திற் போற்றப்பட்டிருக்கும்.
அஃதில்லாததாயின் மீட்பற இறந்தொழியும். வருஷம், வார்த்தை, வியாதி, வீரன், வேதம் வைத்தியம் முதலிய வடசொற்கள் முறையே ஆண்டு, சொல், நோய், மறவன் அல்லது மழவன், மறை, மருத்துவம் அல்லது பண்டுவம் முதலிய தென்சொற்களை வழக்கு வீழ்த்தியுள்ளன. இலக்கியமில்லாத வடநாட்டுத் திரவிட மொழிகளோ, ஆரியச் சொற் கலப்பால் திரிந்தும் மறைந்தும் வருகின்றன. கோண்டி (Gondi), பத்ரி (Bhatri), மால்ற்றோ (Malto), போய் (Bhoi) முதலிய திரவிட மொழிகள் மெள்ள மெள்ள ஆரிய மயமாவதை அல்லது மறைந்து போவதைப் பண்டிதர் கிரையர்சன் 1906 ஆம் ஆண்டே தமது இந்திய மொழியியல் அளவீடு என்னும் நூலிற் கூறியுள்ளார். தமிழை ஆரியத்தினின்று விலக்காவிட்டால், சிறிது சிறிதாய்த் தெற்கே தள்ளிப்போய் இறுதியில் தென்மொழி தென்புலத்தார் மொழியாகிவிடும். இதுவே ஆரியர் விரும்புவது.
செந்தமிழும் கொடுந்தமிழும் சேர்ந்ததே தமிழாதலானும், தமிழல் – திரவிட மொழிகளெல்லாம் பழைய கொடுந்தமிழ்களே யாதலானும், திரவிடரெல்லாம் ஒரு குலத்தாரேயாதலானும், ஆரியக் கலப்பின்றி அவர் பேசும் சொற்களும் இயற்றிய நூல்களும் திரவிடமேயாதலானும், எல்லாத் திரவிட மொழிகளும் சேர்ந்தே முழுத் திரவிடமாகும். திரவிட மொழிகள் பலவாயினும், அவற்றுள், தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்னும் நான்குமே சிறந்தனவாகும்.
திரவிடர்க்குச் சிறப்பாகவுரிய தூய பழைய பல துறைப்பட்டஉயர்நிலை இலக்கியம் தமிழிலேயே யிருத்தலானும், தமிழல் திரவிட மொழிகளில் உள்ள இலக்கியங்கள் பிற்பட்டனவும் பலதுறைப்படாதனவும் பெரும்பாலும் ஆரியச் சார்புள்ளனவும் கழக நூல்நிலைக்குத் தாழ்ந்தனவுமாயிருத்தலானும் ,தமிழரல் திரவிடரெல்லாம் தத்தம் இலக்கியத்தைப் போன்றே பிற திரவிட இலக்கியங்களையும் பேணுவதுடன் தமிழிலக்கியத்தையே சிறப்பாகப் பேணிக் கற்றற்குரியர்.
தமிழில் வழங்காத சில தூய, சிறந்த திரவிடச் சொற்கள் பிற திரவிட மொழிகளில் வழங்குதலின், தமிழரும் பிற திரவிட மொழிகளைப் பேணிக் கற்றற்குரியர். திரவிட மொழிகளிலுள்ள திரவிடச் சொன்னூற்கலை யனைத்தும் திரவிடரெல்லார்க்கும் பொதுவுடைமையென்றறிதல் வேண்டும்.
தமிழும் பிற திரவிடமும் முறையே இலக்கியத்திலும் சொல்லிலும் ஒன்றுக்கொன்று உதவும் நிலை தாயும் மக்களும் போல ஆதலின், தமிழரல் – திராவிடர் இனிமேலாயினும் ஆரியச் சார்பை இயன்றவரை அகற்றிவிட்டுத் தமிழைத் தழுவுவாராக.
ஆரியக் கலப்பினாலேயே மாபெருந் திரவிட நாடு சீர்குலைந்து சின்னபின்னமாய்ச் சிதைந்து கிடக்கின்றதென்க. வைத்தூற்றி (Funnel), எனும் மலையாளச் சொல்லும், கெம்பு என்னும் கன்னடச் சொல்லும், எச்சரிக்கை என்னும் கன்னட தெலுங்குச் சொல்லும் தமிழுக்கு இன்றியமையாதனவே. தெவுக்கொளற் பொருட்டே. (தொல்.345)
செய்யுன்னோன் (செய்நன்) என்னும் மலையாளச் சொல்லையும், தெகு (தெவு) என்னும் கன்னடச் சொல்லையும், அட்ட (அட்டை) என்னும் கன்னட தெலுங்குச் சொல்லையும்,1 அறியும்போதே, அச் சொற்கட்குத் தமிழிற் கூறும் பொருள் நன்றாய் விளங்குகின்றது; வழுவுந் தெரிகின்றது.
1. அட்டையாடல் என்னுந் தொடரில், அட்டை யென்பது தலையில்லா முண்டத்தைக் குறிக்கும். அட்ட அல்லது அட்டெ என்னும் கன்னட தெலுங்குச் சொல்லுக்கு இதுவே பொருள்.
– திராவிட மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்